Election bannerElection banner
Published:Updated:

ஈரோடு: கரும்பு விவசாயத்தில் கலக்கும் ஐ.டி இளைஞர்!

தியானேஸ்வரன்
தியானேஸ்வரன்

`ரெண்டு மணி நேரம் வயல்ல இறங்கி வேலைபார்க்குறப்ப மனசு அவ்வளவு ரிலாக்ஸாக இருக்கு.’

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா கருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தியானேஸ்வரன் (29). பாரம்பர்யமான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு பெங்களூருவில் உள்ள பிரபலமான ஐ.டி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கொரோனா சூழலால் வொர்க் ஃப்ரம் ஹோமில் வேலை பார்த்து வருபவர், தினமும் சில மணி நேரங்களை ஒதுக்கி விவசாயம் செய்து அசத்தி வருகிறார்.

தியானேஸ்வரன்
தியானேஸ்வரன்

விஷயமறிந்து தியானேஸ்வரனைச் சந்தித்தோம். ``வொர்க் ஃப்ரம் ஹோம்ங்கிறதால கடந்த 4 மாசமா வீட்லதான் இருக்கேன். விவசாயக் குடும்பமான எங்களுக்கு சொந்தமாக 6 ஏக்கர் நிலம் இருக்கு. பருவமழை ஆரம்பிச்சதும் பார்த்துக்கலாம்னு நிலத்துல எந்த விவசாயமும் செய்யாம, அப்பா சும்மாவே வச்சிருந்தாரு. எனக்கு வேலை நேரம் போக, நிறைய டைம் இருந்தது. அந்த நேரத்தை ஏதாவது பயனுள்ளதாக மாத்தணும்னு நினைச்சேன். விவசாயம் தெரிந்த நண்பர்கள்கிட்ட விஷயத்தைச் சொன்னப்ப, `பெரிய ரிஸ்க் இல்லாம கரும்பு பயிரிடலாம்’னு ஐடியா கொடுத்தாங்க.

அப்பாகிட்ட என்னோட ஆசையைச் சொல்ல அவரும் க்ரீன் சிக்னல் கொடுத்தார். உடனே எங்க நிலத்துல கரும்பை நட்டு, சொட்டுநீர்ப் பாசன வசதியைச் செஞ்சேன். தினமும் காலையும் மாலையும் நேரம் ஒதுக்கி வயல்ல இறங்கி வேலை செய்றேன். நான் நட்ட பயிர் விளைஞ்சு வர்றது பாக்குறப்ப மனசுக்கு அவ்ளோ சந்தோஷமாக இருக்கு” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``என்னதான் எங்களை மாதிரியான இளைஞர்கள் விவசாயம் செய்ய ஆர்வமாக இருந்தாலும், விவசாய சூழல் சிக்கலானதாக இருக்கு. அதிக செலவு, குறைந்த வருமானம், கூலியாட்கள் கிடைப்பதில் சிக்கல், நியாயமான விலை கிடைக்காதது என விவசாயம் செய்வது இன்றைக்கு பெரும் சவாலாக இருக்கு. 5 ஏக்கருக்கும் குறைவாக இருக்கும் விவசாயிகள், பெரிதாக லாபம் பார்க்க முடியாத சூழல். விவசாயத்துல இறங்கி பார்த்தாதான் அதுல என்னென்ன சிக்கல்கள் இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியுது.

ஈரோடு: முன்னணி நிறுவனத்தில் வேலை; பார்ட்டைமாகக் கிழங்கு விவசாயம்! - அசத்தும் ஐ.டி இளைஞர்

நான் ஊர்ல இருக்க வரைக்கும் என்ன சிரமமாக இருந்தாலும், இந்த விவசாயத்தைப் பார்ப்பேன். அதுக்கப்புறம் என் அப்பா கையில கொடுத்துடுவேன். தினமும் ரெண்டு மணி நேரம் வயல்ல இறங்கி வேலை பார்க்குறப்ப கிடைக்குற சந்தோஷமே இப்போதைக்கு எனக்கு போதுமானது. இன்றைய இளைஞர்கள் ஒருமுறையாவது வயல்ல இறங்கி விவசாயம் செஞ்சிப் பார்க்கணும். அப்போதான் விவசாயிகளுடைய சிரமம் புரியும் ” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு