Published:Updated:

பூங்காவிற்குள் ஒரு வீடு... அசத்தும் ஐ.டி இளைஞர்!

வீட்டுக்குள் பூங்கா
பிரீமியம் ஸ்டோரி
வீட்டுக்குள் பூங்கா

வீட்டுத்தோட்டம்

பூங்காவிற்குள் ஒரு வீடு... அசத்தும் ஐ.டி இளைஞர்!

வீட்டுத்தோட்டம்

Published:Updated:
வீட்டுக்குள் பூங்கா
பிரீமியம் ஸ்டோரி
வீட்டுக்குள் பூங்கா

வீட்டுத்தோட்டம், உடம்புக்கும் மனசுக்கும் ஆரோக்கியமா இருக்கு. எப்பவும் பசுமையான காய்கறிகளைப் பறிச்சு சாப்பிட முடியுது. வீட்டுத்தோட்டம் அமைச்ச பிறகு, மருத்துவச் செலவு குறைஞ்சுடுச்சு. தோட்டம் அமைக்க ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதற்கான நேரத்தையும் ஒதுக்கணும். வெறும் ஆர்வத்துல அமைச்சு, சரியான பராமரிப்பும் கண்காணிப்பும் இல்லைனா, அது சரியா இருக்காது” என்கிறார், சென்னையடுத்த திருவேற்காட்டைச் சேர்ந்த ஐ.டி(கணினி) இளைஞர் கார்த்திக். வீட்டுத்தோட்டத்தை ஆரம்பித்து தற்போது சிறிய பூங்காவையே உருவாக்கியிருக்கிறார். ஒரு காலை வேளையில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.

“1990-ம் வருஷம் இந்த இடத்தை வாங்கினோம். மொத்தம் 2 கிரவுண்டு (மனை). இதில் அரைக் கிரவுண்டில் வீடு கட்டியிருக் கிறோம். மீதி இடம் சும்மா இருந்தது. நான் ஐ.டி கம்பெனியில வேலையில இருக்கேன். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை இருக்கும். வேலையில இருக்குற அழுத்தத்தைப் போக்க வீட்டுத்தோட்டம் அமைக்கணும்னு முடிவு பண்ணினேன். அதுக்காகப் பசுமை விகடனில் வந்த கட்டுரைகள், வீடியோக்களை அதிகமாப் பார்த்தேன். கொஞ்சமா செடிகள் வளர்க்க ஆரம்பிச்சேன். பிறகு, இதை ஒரு பூங்காவா மாத்தினா என்னன்னு தோணிச்சு. அதுக்காகச் சென்னையில இருக்குற அண்ணா நகர், பள்ளிக்கரணை, தாமரைக்குளம் இடங்கள்ல இருக்குற பூங்காக்களை நேரில் போய்ப் பார்த்தேன். அந்தப் பூங்காக்கள்ல என்னென்ன செடிகளை எப்படிப் பராமரிக்கிறாங்கனு தெரிஞ்சுகிட்டேன். அதைப் பின்பற்றித்தான் என்னோட பூங்காவை வடிவமைச்சேன். இங்க 10 வகையான பழ மரங்கள், பூக்கள், மூன்று மீன் குட்டைகள், நடைபாதை, விளையாட்டு திடல்னு எல்லாத்தையும் அமைச்சிருக்கேன். இதைப் பூங்காவா மாத்துறதுக்கு எனக்கு 5 வருஷம் ஆச்சு” என்று முன்னுரை கொடுத்தவர் பூங்காவைச் சுற்றிக்காட்டினார்.

பூங்காவிற்குள் கார்த்திக்
பூங்காவிற்குள் கார்த்திக்

“பழ வகையில முள்சீத்தா, வாட்டர் ஆப்பிள், கொய்யா, வாழை, சப்போட்டா, பப்பாளி இருக்கு. செம்பருத்தியில என்கிட்ட 5 வகையான செடிகள் இருக்கு. வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், கொடி வகைகள் இருக்கு. இது எல்லாத்தையும் பல்லாவரம் வாரச் சந்தையிலதான் வாங்கிட்டு வந்தேன். இங்க செடிகள் எல்லாமே மேட்டுப்பாத்தி முறையிலதான் வெச்சிருக்கேன். இது செடிகளைப் பராமரிக்க உதவியா இருக்குது. அதேபோல மரம், செடிகளுக்கு எப்பவுமே மூடாக்கு போடுறேன். இது தண்ணீர் சிக்கனத்துக்கு உதவியா இருக்கிறதோடு களைகளையும் குறைக்குது. வீட்டோட ஓட்டு மேல வெத்தலை கொடி பரவ விட்டிருக்கேன். பக்கத்துல வீட்டு விசேஷங்களுக்காக வாழை இலை, வெத்தலை வாங்கிட்டுப் போவாங்க.

மீன் தொட்டி
மீன் தொட்டி

கத்திரி, பச்சை மிளகாய், அவரை, தக்காளி, புதினா, வெண்டைக்காய்னு இப்போ காய்கறிச் செடிகள் காய்ச்சு முடிஞ்சிருக்கு. இனிதான் புதுசா செடிகள் வைக்கணும். இயற்கையான காய்கறிகளைச் சமைச்சு சாப்பிடும்போது இருக்குற ருசியே தனி. மாதுளை, வாழை, மூலிகைகள், கீரைகள், மலர்கள் என எல்லாமே இங்க இருக்கு. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கிச் செடிகளைப் பராமரிக்கிறேன். அதனால, உடம்பு ஆரோக்கியமா இருக்கு. செடிகளோட நேரம் செலவழிக்கிறப்போ மனசும் அமைதியாகிடுது. உடம்புக்கு வர்ற சின்னச் சின்ன வியாதிகளுக்கு மூலிகைகளைப் பறிச்சு கஷாயம் போட்டுக் குடிச்சு சரிபண்ணிக்குவேன். நஞ்சான உணவைச் சாப்பிடுறதைத் தவிர்க்கணும்னா அதுக்கான முதல் படி வீட்டுத்தோட்டம்தான்’’ என்றவர் ஓர் இடத்தில் அமர்ந்தார். நம்மையும் அமரச் சொன்னவர் தொடர்ந்து பேசினார்.

பூங்கா
பூங்கா

‘‘இன்னைக்கு வீட்டுக்குத் தேவையான காய்கறியைச் சின்ன இடத்தில விளை விக்கிறோம். வீட்டுத்தோட்டம்ங்கிறது நம்மகிட்ட முன்னால இருந்த ஒண்ணுதான். இன்னைக்கு நகரமயமான சூழல், இடம் இல்லாத காரணத்தால வீட்டுத்தோட்டம் பெரும்பாலான இடங்கள்ல இல்லாம போயிடுச்சு. வீட்டோட மொட்டைமாடியில் தோட்டம் அமைக்கும் முறை இன்னைக்குப் பிரபலமாகியிருக்கக் காரணம் அதுதான்னு நினைக்கிறேன். என்னைப் பொறுத்த வரைக்கும் இடம் இல்லைனா, மாடியிலதான் தோட்டம் அமைச்சிருப்பேன். இடம் இருந்ததால பூங்கா மாதிரி வீட்டுத்தோட்டம் அமைச்சிருக்கேன். வீட்டுத்தோட்டத்துல உபயோகப்படுத்துற உரங்கள் உயிர் உரங்களாகவும், இயற்கை உரங்களாகவும் இருக்குறது நல்லது.

எனக்குச் சின்ன வயசுல இருந்தே மீன்களை வளர்க்குறதுல ஆர்வம் அதிகம். ஆனா, சின்ன கண்ணாடித் தொட்டியில வளர்த்தா பராமரிக்கிறது கொஞ்சம் கஷ்டம். அதனால 6 அடி நீளம், 3 அடி அகலம், 4 அடி ஆழத்துல ஒரு தொட்டியை அமைச்சிருக்கேன். காலையில எப்பவும் மீன்களுக்கு உணவு கொடுத்திடுவேன். நான் வெளியூருக்குப் போயிட்டாலும், தொட்டியில இருக்குற பாசிகளை மீன்கள் சாப்பிடும். காலையில எழுந்து பூங்காவுல நடக்குறது, மீனைப் பார்க்குறதுனு வழக்கமா செய்வேன். செடிகளுக்குச் சமையல் கழிவுகளை உரமா கொடுக்குறேன். பூச்சித்தாக்குதலுக்கு இஞ்சி-பூண்டு கரைசல் பயன்படுத்துறேன். அதிகமா பூச்சித் தாக்கினா, அந்தச் செடியோட பாகங்களை அப்புறப் படுத்திடுவேன். பூங்காவுக் குள்ள அங்கங்க உக்காறதுக்குக் கல் இருக்கைகள் (ஸ்டோன் பெஞ்ச்) அமைச்சிருக்கேன்’’ என்றவர் அங்கிருந்த கிணறுப் பக்கம் நம்மை அழைத்துச் சென்றார்.

கிணறு
கிணறு
பூங்காவிற்குள் ஒரு வீடு... 
அசத்தும் ஐ.டி இளைஞர்!

‘‘இது வீட்ல இருக்குற பழைய கிணறு. இதுல இப்போ 6 அடியில தண்ணி இருக்குது. இதுக்கு காரணம் மழைநீர் சேகரிப்பு மூலமா மழைநீரை மறுசுழற்சி செய்து கிணத்துல விடுறதுதான். கிணத்துல இருந்து 2 அடி தள்ளி... வட்டமா 3 அடிக்குக் குழி எடுத்தேன். அந்தக் குழியோட அடிப்பாகத்துல இருந்து அரையடி உயரத்தில 2 அங்குல பைப்பு ஒண்ணை பொருத்தினேன். அதோட இன்னொரு முனையைக் கிணத்துல இணைச்சிட்டேன். குழியில 3 அடி உயரத்துக்குக் கூழாங்கற்களை நிரப்பியிருக்கேன். இப்படி வெச்சிருக்குறதால மழைநீர், சுத்தமாகி கிணத்துல விழும். இப்படித் தண்ணீர் கிணத்துக்குள்ள இருக்குறதால நீர்மட்டமும் உயருது. கிணத்துல தண்ணி இல்லாதப்போ போர்வெல் போடலாம்னு நினைச்சேன். அதுக்கான செலவு 1,50,000 ஆகும்னு சொன்னாங்க. அதனால மழைநீர் சேகரிப்பு முறை அமைச்சேன். கிணத்துல தண்ணியும் வந்துச்சு, 1,50,000 ரூபாயும் மிச்சமாச்சு. ஏற்கெனவே கிணத்துல இருந்த அடைச்ச ஊற்றுகளும் இப்போ சரியாகிடுச்சு. இந்தத் தண்ணீரைத்தான் குடிநீர் உட்பட எல்லாத் தேவைகளுக்கும் பயன்படுத்துறோம். செடிகளை வளர்க்க ஆரம்பிச்சேன். இப்போ பூங்கா, மழைநீர் சேகரிப்பு வரைக்கும் வந்துருக்கு” என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
கார்த்திக்,
செல்போன்: 98405 07124.

கட்டுரையை வீடியோ வடிவில் காண இந்த க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்யவும். அல்லது இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.

பூங்காவிற்குள் ஒரு வீடு... 
அசத்தும் ஐ.டி இளைஞர்!