Published:Updated:

``விவசாயிகளுக்கு லாபம் தருவது சிறுதானியங்கள்தான்!" - அமைச்சர் கே.என்.நேரு

நிகழ்வில் பேசும் அமைச்சர் நேரு
News
நிகழ்வில் பேசும் அமைச்சர் நேரு

நவதானியங்கள் என்று சொல்லப்படுகிற சிறுதானியங்கள், பயறு வகைகளை உற்பத்தி செய்வது மிகவும் எளிதானது. விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் லாபம் தருகிற ஒரே விவசாயம் குறுகிய கால பயிர் சாகுபடிதான்...

``விவசாயிகளுக்கு லாபம் தருவது சிறுதானியங்கள்தான்!" - அமைச்சர் கே.என்.நேரு

நவதானியங்கள் என்று சொல்லப்படுகிற சிறுதானியங்கள், பயறு வகைகளை உற்பத்தி செய்வது மிகவும் எளிதானது. விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் லாபம் தருகிற ஒரே விவசாயம் குறுகிய கால பயிர் சாகுபடிதான்...

Published:Updated:
நிகழ்வில் பேசும் அமைச்சர் நேரு
News
நிகழ்வில் பேசும் அமைச்சர் நேரு

சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 21-ம்தேதி நடைபெற்றது. இவ்விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள், ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியபோது, ``இந்தப் பட்டு வளர்ப்பு விவசாயத்தை நானும் செய்திருக்கிறேன். ஆனால், அந்தக் கூண்டு வளர்த்து எடுப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்ததால் அதை விட்டுவிட்டேன். மேடையில் இருக்கிற நானும், சிவலிங்கம், செல்வா கணபதி போன்றோரும் தீவிரமான விவசாயிகள். எங்களுடைய பயிர் என்பது மத்திய கால பயிர். ஆனால், இதிலேயே குறுகிய கால பயிர் ஒன்று இருக்கிறது. 90 நாள்களில் விளைந்துவிடும். வானம் பார்த்த பூமியில் விழுகிற மழை நீரின் மூலம் இது விளைந்துவிடும். நவதானியங்கள் என்று சொல்லப்படுகிற சிறுதானியங்கள், பயறு வகைகளை உற்பத்தி செய்வது மிகவும் எளிதானது. விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் லாபம் தருகிற ஒரே விவசாயம் குறுகிய கால பயிர் சாகுபடிதான்.

அமைச்சர் நேரு
அமைச்சர் நேரு

தானியங்களை பயிர் செய்யும்போது ஒரே ஒரு களை எடுத்து விட்டால் போதும். பயிர் தானாக முளைத்து வந்துவிடும். இதில் பூச்சிமருந்து அடிக்கிற வேலை, உரம் போடுகிற வேலை ஒன்றுமேயில்லை. இதெல்லாம், 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தமாதிரி விவசாயம்தான் பிரதானமாக இருந்தது. பருவநிலை மாறுபாடு காரணமாக மழை சரியான நேரத்தில் பெய்யாத காரணத்தால், வானம் பார்த்த விவசாயம் தவறிப்போனது.

அதன் பிறகு, கிணற்று நீர் பாசனத்துக்கு வந்தார்கள் விவசாயிகள். இப்போது போர்வெல் பாசனம் செய்துகொண்டிருக் கிறார்கள். கலைஞர் இலவச மின்சாரம் தந்த பிறகு விவசாய உற்பத்தி இன்னும் பெருகியது. மிளகாய், மல்லி, மக்காச்சோளம், பருத்தி என்று பல பயிர்கள் வந்துவிட்டன. உரம் போடுகிறோம், இயற்கை உரம் இல்லாமல் மருந்து அடிக்கும் காரணத்தால் இயற்கை விவசாயம் பொய்த்துவிட்டது. குறிப்பாக, நெல் விவசாயம் மிக உயரிய செலவு வந்துவிட்டது. நெல் விவசாயத்தில் ஆள் பற்றாக்குறை காரணமாக உபகரணங்கள் தருகிறார்கள். அதை வைத்து மட்டுமே வேலை செய்ய முடியாது. மம்முட்டி புடிச்சு அண்ட வெட்டிதான் விவசாயம் செய்ய வேண்டும்.

அதற்கு ஆள் அவசியம் தேவை. நாத்து நட, நாத்து பறிக்க ஆட்கள் நிறைய தேவைப்படும். ஆட்களுக்காக வேண்டிய செலவு நிறைய ஆகிறது. இந்த அரசாங்கம் மட்டும் நெல்லை வாங்கவில்லை என்று சொன்னால் விவசாயிகளுக்கு மிகவும் கஷ்டமான நிலை வந்துவிடும். எனவே, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விவசாயம் செய்ய பழகுங்கள். ஏன் நான் இவ்வளவு தூரம் சொல்கிறேன் என்று சொன்னால் வந்திருக்கிற விவசாயிகளுக்கு இந்த உபகரணங்களை தந்து, ஒரு காலத்தில் நாங்கள் விவசாயம் செய்கிற போதெல்லாம் புல் இவ்வளவு முளைக்காது, களையும் இவ்வளவு வராது. ஆனால் இப்போது களை வருவதற்கு கணக்கு வழக்கே இல்லை. அதற்கு களை வெட்ட வேண்டும் என்று சொன்னால் அதற்கு செலவாகிற நிலம், நிறைய கூலி வருகிறது.

பட்டு வளர்ப்பு
பட்டு வளர்ப்பு

எனவே, இந்த மாதிரி நவீன உபகரணங்களை வைத்து, விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு நாம் இன்று தள்ளப்பட்டு இருக்கிறோம். இதைக்கூட ஓரளவு வளர்கிற களையைத்தான் நீங்கள் எடுக்க முடியும். அதுக்கு மேல் வளர்ந்தால் அந்த இயந்திரத்தை ஓட்ட முடியாது, ஓட்டினால் பயிர் வீணாகிவிடும்.

ஏனென்றால், அதற்கு இலைதான் உணவு. இதை வந்திருக்கிற விவசாயிகளுக்கு சொல்லிக்கொள்கிறேன். இவ்வளவு தூரம் ஆதரித்து செய்வது பெரிய மகிழ்ச்சி. விவசாயிகள் இருந்தால் தான் இந்த நாடு சிறப்பாக இருக்க முடியும். மத்திய அரசு சொல்கிறது, இந்த வருடம் ஜிடிபி 7.8-ல் இருந்து 8 சதவிகிதம் உயரும் என்கிறார்கள். ஜிடிபி என்றால் statistics துறை ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இருக்கிறார்கள். இதன் அதிகாரிகள்தான் கணக்கு எடுக்கிறார்கள். இந்த ஆண்டு எவ்வளவு சதவீதம் மழை பெய்து இருக்கிறது? எவ்வளவு பயரிட்டு இருக்கிறார்கள்? உணவு தானியம் எவ்வளவு பயிரிட்டு இருக்கிறார்கள்? அங்கு இருக்கிற உற்பத்தி எவ்வளவு? தொழிற்சாலை மூலமாக எவ்வளவு உற்பத்தி செய்து இருக்கிறார்கள்? இதைக் கணக்கிட்டு அதை வைத்துதான் இந்திய பொருளாதாரம் இந்த அளவுக்கு இருக்கிறது என்று நிர்ணயம் செய்கிறார்கள். எனவே, அனைத்துக்கும் அடிப்படையே விவசாயம்தான்.

நீங்கள் எதைச் செய்தாலும் விவசாயம் இல்லை என்றால் உண்ண உணவு இருக்காது, பணத்தை எல்லாம் திங்க முடியாது, உணவை தான் திங்க முடியும், இவ்வளவு சொல்வதற்குக் காரணம். அரசாங்கம் இன்று நிறைய நிதி உதவி தந்து கொண்டிருக்கிறது. நெல்லை வெளியே விற்க வேண்டும் என்றால் நெல்லை 800 ரூபாய்க்கு மேல் விற்க முடியாது, ஆனால் அரசின் மூலம் 1,100 ரூபாய்க்கு விற்க முடியும். கரும்புக்கு மானியம் தருகிறார்கள். ஒரு முறை திருச்சியிலே ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் முதலமைச்சர் கலைஞரைப் பார்த்துக் கேட்டார். `நீங்கள் முட்டை போடுகிறீர்கள். ஆனால், முட்டை சாப்பிடாத சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு வாழைப்பழம் தாருங்கள்?’ என்று உடனடியாக உத்தரவு போட்டார் `வாழைப்பழம் ஒவ்வொரு மாணவணுக்கும் கொடுக்க வேண்டும்’ என்று. சொல்வதற்கு காரணம் விவசாயிகள் விளைவிக்கிற பொருளை ஓரளவுக்காவது அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

அமைச்சர் நேரு
அமைச்சர் நேரு

இப்பொழுது கூட பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் சொன்னார் நிறைய உதவிகளை பட்டு விவசாயிகளுக்கு தருகிறோம் என்று. ஆனால், இவர்கள் உற்பத்தி செய்கிற கூடுகள், நூற்பாலைகள் இல்லாத காரணத்தால் கர்நாடகாவிற்கு சென்று கொண்டிருக்கிறது. இப்போது ஒன்றிய அரசின் மூலமாக 3 -ல் 2 பங்கு உதவிகளை அவர்கள் தந்து, ஒரு பங்கு நாங்கள் செய்து நூற்பாலைகள் செய்து, இங்கு இருக்குற விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்குற பணியை இந்த துறையின் சார்பாக செய்ய இருக்கிறோம் என்று சொன்னார்கள். அமைச்சர் அன்பரசனின் தொழில் நெசவு தொழில் தான். அவர் வீட்டில் நெசவு இருக்கிறது. எனவே, இத்துறைப் பற்றி நன்கு அறிந்தவர். இங்கு வந்திருக்கிற விவசாயிகள் பட்டு வளர்ப்பில் உள்ள திட்டங்கள், மானியங்களைப் பயன்படுத்தி கொள்ள வேண்டி, கேட்டுகொள்கிறேன்” என்றார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி நாகராஜனிடம் பேசியபோது, ``இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. நிறைய பயனுள்ள தகவல்களை அதிகாரிகளும் அமைச்சர்களும் பகிர்ந்துகொண்டனர்" என்றார்.