Published:Updated:

குற்றாலம் குறும்பலாவும் சர்க்கரை நோய்க்கு அருமருந்தும்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

குற்றாலம் குறும்பலாவும் சர்க்கரை நோய்க்கு அருமருந்தும்!

மாத்தியோசி

Published:Updated:
மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

"பழகியவர்களுக்குப் பலாப்பழம் கொடுத்தால் உறவு முறிந்துவிடும்!’’

பல ஆண்டுகளுக்கு முன்பு இப்படிச் சொன்னார், நண்பர் ஒருவர். ஆந்திராவும் தமிழ்நாடும் கைகுலுக்கிக் கொள்ளும் தமிழ்நாட்டின் எல்லையில் உள்ள ஊர் அது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, அந்தப் பகுதியில் மா மரங்களும், காவிரி டெல்டாவுக்குப் போட்டிப் போடும் அளவுக்கு நெற்பயிர்களும் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை சாகுபடி செய்திருந்தார்கள்.

அந்த விவசாய நண்பர், முன்னோடி யாவனர். தன் தோட்டத்தில் வித விதமான பழ மரங்களை வைத்திருந்தார். பேசிக் கொண்டிருக்கும்போது, மரத்திலேயே பழுத்த ஒரு பலாப்பழத்தை அறுத்து வந்து கண் முன்னே வெட்டி, சாப்பிடக் கொடுத்தார். அதிகபட்சம் மூன்று கிலோகூட இல்லாத குறும்பலா அது. மூர்த்தி சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரிதாக இருந்தது. தேன்போல இனித்தன பலாச்சுளைகள். இது போன்ற சுவையை, குற்றலாம் பகுதியில் சாப்பிட்டுள்ளேன். இது குற்றாலம் பலாவா? என்றேன்.

‘‘அட, கண்டுபுடிச்சிட்டிங்களே... குற்றாலம் போகும்போது வாங்கி வந்த பலா ரகம்தான்’’ என்றார். சந்திப்பு முடிந்து கிளம்பும்போது, உடன் வந்த நண்பர், ‘‘அந்தக் குற்றாலப் பலாப்பழம் வீட்டுக்கு வேணும். பணம் கொடுக்கிறேன்’’ என்றார்.

‘‘இங்கேயே சாப்பிடுறதுன்னா சொல்லுங்க, எவ்வளவு வேணும்னாலும் கொடுக்கிறேன். வீட்டுக்கு மட்டும் கொடுக்க மாட்டேன். பழகினவங்களுக்குப் பலாப்பழம் கொடுத்தால் உறவு முறிஞ்சிடும்னு சொல்வாங்க சார்’’ என்றார்.

பலாப் பழத்தைக் கேட்டவர் பகுத்தறிவு வாதி. அங்கிருந்து புறப்பட்டது முதல் சென்னை வந்து சேரும் வரை, அந்தப் பலாப்பழ விவசாயியைத் திட்டித் தீர்த்தார். அப்படிச் சொல்லியதற்குப் பின்னால், ஏதாவது காரணம் இருக்கும். அதன் விளக்கம் அவருக்குச் சொல்லத் தெரியவில்லை என்று சமாதானப்படுத்தினேன்.

இங்கே இப்படி என்றால், பலா விளையும் பண்ருட்டி பகுதிகளில் வேறு மாதிரியாக உள்ளது.

பலா மரம்
பலா மரம்


‘‘ஒவ்வொரு வருஷமும் சொந்தக்காரங்களுக்கும் நண்பர்களுக்கும் பலா பழம் கொடுக்கிறது, எங்களோட பழக்கம். ஒரு வருஷம் பலா பழத்தைக் கொடுக்க மறந்துட்டா, ரொம்பவும் வருத்தப்படுவாங்க. சிலர், கோபத்துல முகம் கொடுத்து பேசக்கூடமாட்டாங்க. அதனால, பலாப்பழம் மரத்துல இருக்கும்போதே, யாரு, யாருக்கு கொடுக்கணும்னு மனசுக்குள்ள பட்டியல் போட்டு வெச்சுடுவேன். எங்க பகுதியில பலாப்பழம் கொடுக்காம இருந்தாதான் உறவு முறிஞ்சுடும்’’ என்கிறார் முன்னோடி பலா விவசாயி ஹரிதாஸ்.

இவரது பண்ணையில் உள்ள ஒரு மரத்தைத் தாய் மரமாகக் கொண்டுதான் பாலூர்-2 என்ற சிறந்த பலா ரகத்தைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள்.

பலா என்றவுடன் பலருக்கும் பண்ருட்டிதான் நினைவுக்கு வரும். எனக்கோ குற்றாலம்தான் கண்ணில் தெரியும். ஒரு முறை ஊடக பயிற்சி வகுப்புக்குக் குற்றாலம் சென்றிருந்தேன். குற்றாலம் அருவி எந்த அளவுக்குப் பெயர் பெற்றதோ, அந்தளவுக்கு அங்கு விளையும் பலாவும் பெயர் பெற்றது. அங்குள்ள குற்றாலநாதர் கோயிலின் இறைவன் பெயரே, குறும்பலா நாதர். கோயிலின் தல விருட்சம் குறும்பலா என்பதால், இறைவனுக்கும் அப்பெயர் வந்தது என்கிறார்கள்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு


இந்தக் கோயிலுக்கு வந்த திருஞானசம்பந்தர்,

‘நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த

நம்பானம்மை

ஆட்பலவுந் தானுடைய வம்மா னிடம்போலும்

அந்தண்சாரல்

கீட்பலவுங் கீண்டுகிளை கிளையன் மந்திபாய்ந்

துண்டுவிண்ட

கோட்பலவின் றீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங்

குறும்பலாவே.’

என்று பதிகம் பாடியுள்ளார். பிறைமதியை முடியில் சூடித் திருநீற்றுப் பொடியணிந்த இறைவன் உள்ள, அழகிய குளிர்ந்த மலைச் சாரலில் பலா மரங்கள் உள்ளன. பெண் குரங்குகள் அந்தப் பலா மரத்தின் மீது ஏறிப் பழங்களை உண்கின்றன. உண்ணும்போது பலாச்சுளைகள் தவறிக் கீழே விழுந்துவிடுகின்றன. ஆண் குரங்குகள் அவற்றை மகிழ்வோடு எடுத்து உண்டு இன்புறுகின்றன என்பதே இந்தப் பாடலின் பொருள். தேவாரத்தில் இரண்டாம் திருமுறையில், இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது.

முக்கனிகளில் ஒன்றான பலா, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மண்ணில் உள்ளது என்கிறார்கள். இலக்கியங்களிலும் பலாவின் பெருமை பேசப் பட்டுள்ளது. அருகில் உள்ள இலங்கை மக்கள் வாழ்விலும்கூட பலா மரங்கள் பதிந்துள்ளன.

“ ‘பதிஎழு அறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் மாநகர்’ என்று மதுரையை இளங்கோவடிகள் வர்ணிப்பார். மதுரையைவிட்டு ஒருவரும் புலம்பெயர்வது இல்லை. அப்படிச் சிறப்பான ஊர். அதுபோலத்தான் இலங்கையில் உள்ள கொக்குவிலும் ஒருகாலத் திலிருந்தது. அங்கேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து, அங்கேயே நிறைவாழ்வு வாழ்ந்து மடிந்த மக்கள். அதிகாலையில் ஆண்கள் வயலுக்குச் செல்ல, பெண்கள் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டு நடுவிலே பூ வைப்பார்கள். பூ இருந்தால், வீட்டிலே கன்னிப் பெண் திருமணத்துக்குக் காத்திருப்பதாக அர்த்தம். எங்கள் வீட்டில் 17 விதமான மாமரங்களும் பலவகைப் பலா மரங்களும் இருந்தன. பழத்தை வைத்து மரத்தை அறியும் திறமை எங்களுக்கு இருந்தது’’ என்கிறார் பிரபல எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.

பலா
பலா

இப்போது இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதுபோல, 1977-ம் ஆண்டு கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது இலங்கை மக்களின் உயிரைக் காப்பாற்றிய ஒரே உணவு, வீட்டுக்கு வீடு பழுத்துக் கிடந்த பலாப் பழங்கள் தான் என்கிறது வரலாறு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பலா மரங்களைப் பார்க்க முடியும். அங்கு பலாவைச் சக்கை என்று அன்போடு அழைக்கிறார்கள். பலாவில் பல பாரம்பர்ய ரகங்கள் இங்கு உள்ளன. புதிய ரகங்களை உருவாக்கும் விஞ்ஞானிகள் குற்றாலம், கன்னியாகுமரி பலா வகைகள் மீதும் கவனம் செலுத்தலாம்.

அப்படியே கொஞ்சம் கேரளா பக்கம் சென்றால், பலாவைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுகிறார்கள்.

‘வேணுமேங்கில் சக்க’ (வேரின் மேலும் காய்க்கும்! ‘வேண்டும் என்றால் பலா, கிளையில் மட்டுமல்ல வேரிலும் காய்க்கும்’ விடாமுயற்சி உள்ளவர்கள் எப்படியும், வெற்றி பெறுவார்கள் என்பதைக் குறிக்கும் மலையாளப் பழமொழி இது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நம்முடன் இணைந்திருந்த கேரள மக்களின் நாடி நரம்பெங்கும் பலா கலந்துள்ளது.

சக்கை எரிசேரி, சக்கை உலர்த்தியது, சக்கை தோரன், சக்கை வெவிச்சது, சக்கை பாயசம், சக்கை நெய் அப்பம் எனப் பலவிதங்களில் பலாவை ருசித்துக் கொண்டாடுகிறார்கள்.

பலாவைப் பற்றி உலாவும் வாட்ஸ் அப் தகவல் உங்கள் கண்ணிலும் பட்டிருக்கும். பிரதமர் மோடியிடம், மலையாளம் கலந்த ஆங்கிலத்தில் பலாவின் பயன்கள் பற்றி ஒருவர் பேசுவார். அவர் பெயர் ஜேம்ஸ் ஜோசப். 2013-ம் ஆண்டு, பாதிரியார் ஒருவர், தான் அரிசி உணவுக்குப் பதிலாகப் பச்சைப்பலாவை உட்கொண்டதால் தனக்குச் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்ல அதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறார். இதன் பிறகு, பை நிறைய பணம் கொடுத்த மைக்ரோசாஃப்ட் பணியை உதறிவிட்டு, பலாக்காயிலிருந்து மாவு தயாரிக்கத் தொடங்கிவிட்டார்.

பலா
பலா

2019-ம் ஆண்டு மே மாதம் தொடங்கி, 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 18 முதல் 60 வயதான சர்க்கரை நோயாளிகளை இரண்டு குழுக்களாகப் பிரித்தார்கள். ஒரு குழுவினருக்கு, மருந்துகளுடன் பச்சைப் பலா மாவு ஒரு நாளில் 30 கிராம் அளவில் உணவாகக் கொடுக்கப்பட்டது. மற்றொரு குழுவினருக்கு மருந்துகள் மட்டுமே கொடுக்கப்பட்டது. இதன்பின் தொடர் சர்க்கரை அளவு பரிசோதனைகளும், மூன்று மாத கட்டுப் பாட்டைக் காட்டும் HbA1c அளவின் பரிசோதனை களும் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆய்வின் இறுதியில், பலா மாவை உணவில் உண்ட சர்க்கரை நோயாளிகளுக்கு, உணவுக்கு முன் மற்றும் உணவிற்குப் பின் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்தது. HbA1c பரிசோதனையிலும் அது உறுதியாகவே தெரிந்தது. இந்த ஆய்வின் முடிவை அமெரிக்க டயாபடிஸ் அசோசியேஷனுக்கும், இன்னும் பல அமைப்புக்கும் அனுப்பி வைத்ததுடன், நம் பிரதமர் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளார் ஜேம்ஸ் ஜோசப்.

அண்மையில் பிரபல சித்த மருத்துவர் கு.சிவராமனுடன் பேசும் போது, பலா பக்கம் பேச்சு திரும்பியது ‘‘சர்க்கரை அளவு அதிகமாக இருந்த நோயாளிகளுக்கு, பலாக்காய் பவுடரை, சப்பாத்தி , தோசையில் கலந்து சாப்பிடக் கொடுத்தேன். சில வாரங்களில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்துவிட்டது. நம்மைப் பயமுறுத்தும் பல நோய்களுக்கு விலை உயர்ந்த மருந்து, மாத்திரைகளை விட, நம் உணவுகளே அருமருந்தாக உள்ளன...’’ என்றார். வீட்டுக்கு வீடு, சர்க்கரை நோயாளிகள் உருவாகி வரும் இந்த காலத்தில், பலா மீது மேலும் மரியாதைக் கூடியது.