பிரீமியம் ஸ்டோரி
‘பட்ட காலிலேயே படும்’ என்பது பலா விவசாயிகளுக்கு கச்சிதமாகப் பொருந்தும்போலிருக்கிறது. கடந்த வருடம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பலா விவசாயிகள், இந்த வருடம் கொரோனாவால் நஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் பலாப்பழம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு, நெடுவாசல் என புதுக்கோட்டையில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவில் பலா சாகுபடி செய்யப்படுகிறது. புதுக்கோட்டை பலாப்பழங்களுக்கு வெளிமாநிலங்களில் தனி மவுசு நிலவுகிறது.

“மார்ச் முதல் ஏப்ரல் வரையிலும் புதுக்கோட்டையிலிருந்து மும்பைக்கு மட்டுமே 100 டன்னுக்கும் அதிகமான பலாப்பழங்கள் விற்பனைக்காக அனுப்பப்படும். ஆனால், இந்த வருடம் மரத்திலிருந்து பழங்களைப் பறிப்பதற்கே நாதியில்லை” என்று விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

மணிவாபாலு  -ராஜீவ்
மணிவாபாலு -ராஜீவ்

கடந்த ஆண்டு கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் பலா மரங்கள் முறிந்து நாசமாகின. பலா விவசாயிகளும் வியாபாரிகளும் கடுமையாகப் பாதிக்கப் பட்டனர். இந்த வருடம் மீண்டுவிடலாம் என நினைத்திருந்தவர்களுக்கு கொரோனா ஊரடங்கால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. காய்ப்பு அதிகம் இருந்தும் அதை பணமாக்க முடியாத பரிதாபநிலை.

இதுகுறித்து சேந்தங்குடி பலா விவசாயி மணிவாபாலுவிடம் பேசினோம். ‘‘ரெண்டு ஏக்கர்ல பலா போட்டிருக்கேன். போன வருஷம் கஜா புயலால பலா விவசாயமும் கடுமையா பாதிச்சது. தென்னை மரங்களுக்கு நிவாரணம் கொடுத்த அரசு, பலா மரங்களுக்குக் கொடுக்கலை. பலா மரங்களை கவாத்து (கிளைகளை வெட்டிப் பராமரிக்கும் முறை) செய்யறதுக் காவது நிவாரணம் கிடைக்கும்னு நம்பின எங்களுக்கு ஏமாற்றம்தான் கிடைச்சது. வழக்கமா கவாத்து செய்யறதுக்கு ஆகுற செலவைவிட, கஜா புயல்ல சேதமடைஞ்ச மரங்களுக்கு கவாத்து செய்யறதுக்கு அதிக செலவாச்சு. கவாத்து, உரம்னு ஒரு மரத்துக்கு 500 ரூபாய் செலவு செஞ்சிருக்கேன். இந்த வருஷம் ஓரளவுக்கு நல்ல காய்ப்பு இருந்துச்சு. நல்ல வருமானம் கிடைக்கும்னு நம்பியிருந்த எங்களுக்கு இப்பவும் ஏமாற்றம்தான்.

மரத்திலேயே அழுகும் பழங்கள்!

மரத்துக்கு ஏத்தபடி வியாபாரிகளிடம் மொத்தமா விலைபேசி கொடுக்கிறதுதான் வழக்கம். அப்படி விலைபேசி பல விவசாயிகள் அட்வான்ஸ் வாங்கிட்டாங்க. பழங்களைப் பறிக்கப்போற நேரத்துலதான் ஊரடங்கு உத்தரவு போட்டுட்டாங்க. பழங்களை மரத்திலிருந்து பறிக்காததால மரத்துலேயே அழுகும் நிலை ஏற்பட்டிருக்கு. ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கும்னு தெரியலை. அதற்கப்புறம் போக்குவரத்து சரியாகிருச்சுன்னா, கால்வாசி பழங்களையாவது சந்தையில வித்துட லாம். இல்லைன்னா மொத்தமும் நஷ்டம்தான். எனக்கு மட்டும் ரெண்டு லட்சம் ரூபாய் வரை நஷ்டம். வியாபாரிகளிடம் வாங்கிய பணத்துக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. அரசு எங்களுக்கு குறைந்தபட்ச நிவாரணமாவது கொடுத்தாதான், அடுத்து எங்களால் பொழப்பு நடத்த முடியும்’’ என்கிறார் வேதனையுடன்.

இதுகுறித்துப் பேசிய பலா மொத்த வியாபாரி ராஜீவ், ‘‘பலாப்பழம் பறிக்கிற சீஸன் தொடங் கியதும் மரத்துக்கு இவ்வளவுன்னு விலைபேசி விவசாயிகளிடம் பணத்தைக் கொடுத்தோம். வழக்கமா நாலு கட்டங்களா அறுவடை செஞ்சு விற்பனைக்கு அனுப்புவோம். சீஸன் முடியுற வரையும் கீரமங்கலத்துல இருந்து மட்டும் தினமும் 20 டன்னுக்கும் அதிகமா பலாப் பழங்களை அனுப்புவோம். இந்த வருஷம் பழம் எல்லாம் பழுத்து ஏற்றுமதி செய்ய வேண்டிய நேரத்துல இப்படி ஆகிப்போச்சு. ஏப்ரல் ரெண்டாவது வாரத்துல மூணாவது கட்டமா பழங்களை ஏத்திக்கிட்டு இருப்போம். ஊரடங்கு உத்தரவால் இப்போ பழங்களை மரத்துல இருந்து பறிக்கக்கூட முடியலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படியே பறிச்சாலும் எப்படி ஏத்திக்கிட்டுப் போறது... கமிஷன் கடைகளுக்கு யார் வந்து வாங்குவாங்க? போன வருஷம் விவசாயிகளுக்கு முன்பணம் கொடுத்திருந்தோம். கஜா புயலால விளைச்சல் மொத்தமும் நாசமாகிருச்சு. பலா விவசாயிகளோட நிலைமை தெரிஞ்சு, அப்போ நாங்க கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்கலை. இந்த வருஷமும் விவசாயிகளுக்கு முன்பணம் கொடுத்திருக்கோம். நான் மட்டும் விவசாயிகளுக்கு 50 லட்சம் வரையிலும் முன்பணம் கொடுத் திருக்கேன். முழுசா ஒரு லட்சம் ரூபாய்க்குக்கூட இன்னும் பழங்களை ஏத்தல. என்ன செய்யுற துன்னே தெரியலை’’ என்றார் வேதனையுடன்.

மரத்திலேயே அழுகும் பழங்கள்!

இதே கதறல்கள்தான் தமிழகத்தில் பலா விவசாயம் பெருவாரியாக நடக்கும் கன்னியாகுமரி, பண்ருட்டி, சிறுமலை எனப் பல ஊர்களிலும் எதிரொலிக்கின்றன. மரங்களிலேயே அழுகித் தொங்கும் பழங்களைப் படம்பிடித்து மீடியாக் களிலும் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு கண்ணீர்வடித்தபடி உள்ளனர்

தோட்டக்கலைத் துறை இயக்குநர் சுப்பையனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ‘‘ஒவ்வொரு மாவட்டத் திலும் அந்தந்த உதவி இயக்குநர் மூலம் எவ்வளவு பரப்பளவுக்கு விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது, விவசாயிகளுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து கணக்கெடுக்கப்பட்டு, இழப்பைப் பொறுத்து நிவாரணம் வழங்க முயற்சிகள் மேற்கொண்டுவருகிறோம். பலா மரங்கள் மரத்திலேயே அழுகிப்போவதால், மரங்களுக்கு பெரிய பாதிப்பில்லை என்றாலும், அடுத்ததாக பராமரிப்பு என்பது அவசியம். மரங்கள் பராமரிப்புக்குத் தேவையான உதவிகளை தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்குச் செய்யவும் திட்டமிட்டுவருகிறோம்’’ என்றார்.

பலா விவசாயிகளின் பாரத்தை தமிழக அரசு பகிர்ந்துகொள்ள வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு