Published:Updated:

பலாவில் சிறந்த ரகம் எது?

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

பலாவில் சிறந்த ரகம் எது?

நீங்கள் கேட்டவை

Published:Updated:
புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

“பலா சாகுபடி செய்ய விரும்புகிறோம். எந்த ரகம் ஏற்றது?’’

ஆர்.மகாலிங்கம், கணக்கன்பட்டி.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த முன்னோடி பலா விவசாயியும் வேளாண் துறையில் ஓய்வுபெற்ற உதவி இயக்குநருமான பி.ஹரிதாஸ் பதில் சொல்கிறார்.

“பலா மரங்கள் எங்கு நன்றாக வளர்ந்துள்ளனவோ, அந்த இடத்தில் மண்வளம் சிறப்பாக உள்ளது என்று அர்த்தம். வடிகால் வசதியுள்ள நிலங்களில் பலா நன்றாக வளரும். தமிழ்நாட்டில் பாலூர்-1, பாலூர்-2, பேச்சிப்பாறை-1, கல்லார்-1, சிங்கப்பூர் பலா, ஒட்டு பலா ஆகிய ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. 25 அடி இடைவெளியில் ஏக்கருக்கு 75 மரங்கள் சாகுபடி செய்யலாம். கொஞ்சம் நெருக்கி நடவு செய்தால், 100 மரங்களைக்கூடச் சாகுபடி செய்ய முடியும். தனிப்பயிர் செய்ய இட வசதியில்லை என்றாலும் வருத்தப்பட வேண்டாம்.

பலா
பலா

மா, கொய்யா, தென்னை... போன்ற பயிர்களுடன் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். வரப்பு பயிராகவும்கூடச் சாகுபடி செய்ய முடியும். உதாரணத்துக்கு 5 ஏக்கர் கொண்ட நிலத்தின் வரப்பில் சுமார் 50 மரங்கள் வரை சாகுபடி செய்ய முடியும். நான் வேளாண்மைத் துறையில் பணியாற்றிய போது, பல பண்ணைகளுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் மூலம் பல வகையான பலா மரங்களை என் நிலத்தில் சாகுபடி செய்து மாதிரி பண்ணையை உருவாக்கியுள்ளேன். இந்தப் பண்ணையில் உள்ள ஒரு மரத்தைத் தாய் மரமாகக் கொண்டுதான் பாலூர்-2 என்ற சிறந்த பலா ரகத்தைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். நல்ல சுவையும் சிறந்த மணமும் கொண்டது இந்த ரகம். ஆனால், ஆண்டுக்கு ஒருமுறைதான் காய்க்கும். மற்ற ரகங்கள் ஆண்டுக்கு 2 முறை காய்க்கும். முதல் பருவம் டிசம்பர்-ஜூன் வரையிலும் இரண்டாம் பருவம் ஜூலை-நவம்பர் வரையிலும் காய்க்கும். பூ வைத்து அறுவடைக்கு வர 120 (4 மாதங்கள்) நாள்கள் பிடிக்கும். அனைத்து மரங்களும் ஒரே நேரத்தில் பூ வைக்காது என்பதால் டிசம்பர்-ஜூன் வரை பருவம் நீடிக்கிறது.

பலாவின் அருமையை உணர்ந்துகொண்ட கேரளா, கர்நாடக விவசாயிகள் பண்ருட்டி பகுதிக்கு வந்து, சாகுபடி பாடங்களைக் கேட்டுச் செல்கிறார்கள். பலாவைப் பழமாக மட்டுமல்ல, விதவிதமாக மதிப்புக்கூட்டிய உணவு பொருள்களாகவும் மாற்ற முடியும். பலா சிப்ஸ், பலா அல்வா, பலா ஐஸ்க்ரீம், காப்பிக்குப் பதிலாகப் பலாகொட்டையை அரைத்துப் பயன்படுத்தலாம். கோகோவுக்கு மாற்றாகவும்கூடப் பலாக்கொட்டையைப் பயன்படுத்த முடியும். பலாப்பழக் கொட்டையிலிருந்து 325 பொருள்களைக் கேரளாவில் உற்பத்தி செய்கிறார்கள். நானும் மதிப்புக்கூட்டல் செய்கிறேன். இதனால் ஊரடங்கின்போது பழங்கள் விற்பனையில் பாதிப்பு ஏற்படவில்லை. எனவே, பலா சாகுபடி செய்தவுடன் மதிப்புக் கூட்டல் நுட்பங்களைக் கட்டாயம் கற்றுக்கொள்ளுங்கள். தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இதற்கான பயிற்சிக் கொடுக்கிறார்கள்.’’

தொடர்புக்கு, செல்போன்: 86108 81046

ஹரிதாஸ், கலைச்செல்வன்
ஹரிதாஸ், கலைச்செல்வன்


மல்லிச் சாகுபடி செய்யவுள்ளோம். இதில், கவனிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றிச் சொல்லுங்கள். குறிப்பாக, மொட்டுப்புழு வரும் என்கிறார்கள். இதைக் கட்டுப் படுத்துவது எப்படி?’’

ஆர்.வைதேகி, வீரபாண்டி.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கலைச்செல்வன் பதில் சொல்கிறார்.

‘‘மல்லிகை நடவுக்கு ஆடி, தை பட்டங்கள் ஏற்றவை. தைப்பட்டமென்றால், தாராள தண்ணீர் வசதி தேவை. ஆனால், ஆடிப் பட்டத்தில் நடவு செய்தால், மழை யிலேயே நன்கு வேர் பிடித்து, சித்திரையில் அறுவடை ஆரம்பிக்கும் அளவுக்கு வளர்ந்துவிடும். நடவுக்கு முன்பாக நிலத்தை 4 சால் உழவு ஓட்டி மண்ணைப் பொலபொலப்பாக்கி, 4 டன் எருவைக் கொட்டி, நிலம் முழுவதும் பரப்பிவிட வேண்டும். வரிசைக்கு வரிசை 4 அடி, செடிக்கு செடி 4 அடி இடைவெளி இருக்குமாறு அரை அடி ஆழத்துக்கு குழிகள் எடுக்க வேண்டும் (ஏக்கருக்கு 2,722 குழிகள் வரை எடுக்க முடியும்). மட்கிய எரு 100 கிலோவில், தலா 2 கிலோ சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றை முதல் நாளே நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள், இந்தக் கலவையை குழிக்கு 2 கைப்பிடி வீதம் வைத்து, இரண்டு நாற்றுகளை வைத்து, மண் அணைத்துத் தண்ணீர் விட வேண்டும். நடவு செய்து ஒரு வாரம் கழித்து, தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் கொடுத்து வர வேண்டும்.

மல்லி
மல்லி


15-வது நாளில் முதல் களையெடுத்து, பாசன நீரில் 100 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்துவிடலாம். அல்லது 10 கிலோ பச்சைச் சாணத்துடன் 150 மி.லி பஞ்சகவ்யாவைக் கலந்து, சணல் கோணியில் வைத்துக் கட்டி, பாசனநீர் செல்லும் கால்வாயில் போட்டுவிட வேண்டும். இதை 15 நாள்களுக்கு ஒரு தடவை செய்ய வேண்டும். இதேபோல, 10 லிட்டர் தண்ணீருக்கு, 100 மி.லி பஞ்சகவ்யா வீதம் தெளித்து வர வேண்டும்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 60 கிலோ மட்கிய எரு, 10 கிலோ மண்புழு உரம், தலா 2 கிலோ கடலை, வேம்பு, ஆமணக்கு, எள் பிண்ணாக்குகளுடன், பயோ உரக்கலவை (தலா 1 கிலோ பாஸ்போ-பாக்டீரியா, அசோஸ்பைரில்லம், ரைசோபியம், சூடோ மோனஸ் கலந்தது) ஆகியவற்றை நன்றாகக் கலந்து, செடிக்கு 2 கைப்பிடி வீதம் கொடுத்து, தண்ணீர் கட்டி வர வேண்டும். 10-வது மாதத்தில் (ஏப்ரல்) பூ அறுவடைக்கு வரும். இனிதான், நீங்கள் கேட்ட மொட்டுப்புழு பிரச்னை எட்டிப்பார்க்கும். மல்லிச் செடிகளில் நீர் சிம்பு உருவாகும். இதைக் கழித்துவிட வேண்டும். இதன் மூலம்தான் பூச்சித்தாக்குதல் அதிகரிக்கும். என் மலர் தோட்டத்திலும் இந்தப் பிரச்னை இருந்தது. நீர் சிம்புகளைக் கழித்துவிட்டேன். 15 நாள்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் பெவேரியா பேசியானா என்ற உயிர் பூஞ்சணக் கொல்லியைக் கலந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 15 மஞ்சள் ஒட்டுப்பொறியைக் கட்டி வைத்தும் மொட்டுப்புழுத் தாக்குதலைக் கட்டுப் படுத்தலாம்.’’

தொடர்புக்கு, செல்போன்: 97877 87432.

புறா பாண்டி
புறா பாண்டி

‘‘சிறுதானிய ஐஸ் க்ரீம் தயாரிக்க விரும்புகிறோம். இதற்கான பயிற்சி எங்கு கிடைக்கும்?’’

கே.பாலகிருஷ்ணன், மதுராந்தகம்.

‘‘சென்னை, கொடுவெளியில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின், உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இங்குள்ள மாநில உணவுப் பதப்படுத்துதல் தொழில் நுட்பப் பயிற்சி மையத்தில், சிறுதானிய ஐஸ்க்ரீம் உள்ளிட்ட பால் பொருள்கள் தயாரிப்பு, மீன், இறைச்சிப் பதப்படுத்துதல், தரக்கட்டுப்பாடு... போன்றவை குறித்த பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.’’

தொடர்புக்கு:

முதல்வர்,

உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, கொடுவெளி, அலமாதி அஞ்சல்,

சென்னை - 600052

தொலைபேசி: 044 27680218, 27680214.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism