Published:Updated:

அன்று பலாப்பழங்களை விற்க முடியவில்லை; இன்று லட்சங்களில் லாபம்; ஒரு ஸ்டார்ட் அப்பின் வெற்றிக் கதை!

பலாப்பழம் வாட்ஸ்அப் குழு

மாநிலம் முழுவதுமுள்ள விவசாயிகளிடமிருந்து 10 விநியோகஸ்தர்கள் பலாப்பழங்களை மொத்தமாக சேகரிக்கின்றனர். சில பிராண்ட்களின் அட்மின்களும் எங்கள் வாட்ஸ் அப் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

அன்று பலாப்பழங்களை விற்க முடியவில்லை; இன்று லட்சங்களில் லாபம்; ஒரு ஸ்டார்ட் அப்பின் வெற்றிக் கதை!

மாநிலம் முழுவதுமுள்ள விவசாயிகளிடமிருந்து 10 விநியோகஸ்தர்கள் பலாப்பழங்களை மொத்தமாக சேகரிக்கின்றனர். சில பிராண்ட்களின் அட்மின்களும் எங்கள் வாட்ஸ் அப் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

Published:Updated:
பலாப்பழம் வாட்ஸ்அப் குழு

2019 கோடைக்காலம், கேரளாவில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் தன் நண்பர் அனில் ஜோஸுடன் வாட்ஸ்அப்பில் தகவல் பரிமாறிக்கொண்டிருந்தார்...

அப்போது ``உலகமெங்கும் சூப்பர் மார்க்கெட்டில், சந்தைகளில் பலாப்பழங்களை வாங்க மக்கள் நூற்றுக்கணக்கில் செலவு செய்கிறார்கள். ஆனால், எனது வீட்டருகே பலாப்பழங்கள் வீணாகின்றன” என்று கவலைப்பட்டார். இதைக் கேட்ட அனில் `அடுத்த ஆண்டிலிருந்து ஒரு பலாப்பழம்கூட வீணாகாது’ என்று ஆறுதலும் உறுதிமொழியும் அளித்தார். அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்.

பலாப்பழம்
பலாப்பழம்

பலாப்பழம் குறித்த செய்திகளை பரிமாற்றம் செய்ய `சக்காக் கூட்டம் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கினார். (மலையாளத்தில் `சக்கா' என்றால் பலாப்பழம், `கூட்டம்' என்றால் சமூகம்)

வீட்டுத் தோட்டத்தில் பலா மரங்கள் வளர்க்கும் நண்பர்களை அனில் வாட்ஸ்அப் குழுவில் இணைத்துக்கொண்டார்.

பலாப்பழ விரும்பிகள் மற்றும் விவசாயிகளை ஒன்றிணைப்பதும், கூட்டங்கள் மூலம் நார்ச்சத்து மிக்க பலாப்பழத்தின் வகைகள், பயன்கள் குறித்து விவாதிப்பது இந்த வாட்ஸ்அப் குழுவின் நோக்கமாக இருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேரளாவில் விளையும் மொத்த பலாப்பழங்களில் 10% மட்டுமே மக்கள் பயன்படுத்துகின்றனர். மீதம் உள்ள பலாப்பழங்கள் அனைத்துமே வீணாகின்றன என்று ஒரு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் பெரும்பாலான வீடுகளில், பலாப்பழங்கள் விளைவதால் அனைவருக்கும் தாராளமாகக் கிடைக்கின்றன. எனவே, பலாப்பழங்களை நேரடி விற்பனை செய்ய அங்கு வாய்ப்பில்லை என்பதை அறிந்த அனில் அதற்கான மாற்று முயற்சிகளில் இறங்கினார்.

பலாப்பழம்
பலாப்பழம்

வாட்ஸ்அப் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே மாநிலத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வசிக்கும் ஏராளமானோர் குழுவில் சேர்ந்ததுடன் பல்வேறு இடங்களில் கூட்டங்களையும் நடத்தினர். வியாபாரிகள், அரசு ஊழியர்கள், நிழற்படக் கலைஞர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள், விவசாயிகள் எனப் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இதில் உறுப்பினர்களாக இணைந்தனர்.

கேரள கிராமங்களிலிருந்து கொச்சிக்குக் குடிபெயர்ந்த பலரும் பலாப்பழம், மாம்பழம் பற்றிய இளமைக்கால நினைவுகளைக் கொண்டிருந்தனர். அவர்களின் ஆர்வம் இந்த வாட்ஸ்அப் குழுவுக்கு மேலும் வலு சேர்த்தது. அவர்கள் பலரையும் இவருடைய செயல்பாடுகள் ஈர்த்தன.

பலாப்பழம் வாட்ஸ்அப் குழு
பலாப்பழம் வாட்ஸ்அப் குழு

அந்தச் சமயம் கொரோனாவின் முதலாவது பொது முடக்கம் வந்தது. வாட்ஸ்அப் குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்ததுடன் சிறப்பாகவும் இயங்கியது. பலாப்பழத்துக்காக ஏங்குவோர்க்கும், ஏராளமாக அதை வளர்ப்போர்க்கும், அது குறித்த விவரங்களைப் பகிர விரும்புவோர்க்கும் இந்த வாட்ஸ் அப் குழு பெருமளவு உதவியது. குழு விரைவில் பிரபலமடையவே, இதில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் தங்கள் உற்பத்தியை இதன் மூலம் விற்பனை செய்யத் தொடங்கினர். ஊடக வெளிச்சமும் இதன் மீது பட்டது. புதிய உறுப்பினர்கள் குழுவில் இணைந்தனர்.

`சர்வதேச பலாப்பழ தினம்’ கொண்டாடப்பட்ட 2021 ஜூலை 4 அன்று குழுவின் தீவிர அங்கத்தினரும், பலாப்பழ விரும்பியும், நிழற்படக் கலைஞருமான ஆர்.அசோக், கத்தார் வானொலியில் பேசுவதற்காக அழைக்கப்பட்டார், அவரது பேச்சால் பலாப்பழ வாட்ஸ் அப் பெருமை உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பரவியது.

பலாப்பழம்
பலாப்பழம்

உணவுத் துறையில் சற்று ஏறக்குறைய 40 ஆண்டுகள் அனுபவமுள்ள விபின் குமார், சந்தையியல் துறையில் 16 ஆண்டுகள் அனுபவமுள்ள சாபூ அரவிந்த் மற்றும் மனு சந்திரன், தயாரிப்பு & உணவுத் துறைக்கான எந்திரங்கள் வடிவமைப்பில் அனுபவமுள்ள பாபின் ஜோசஃப் ஆகியோர் அசோக் மற்றும் அனிலுடன் இணைந்து `சக்காக் கூட்டம் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்’ என்னும் பலாப்பழ நிறுவனத்தைக் கூட்டாகத் தொடங்கினர். பலாப்பழத்திலிருந்து பல்வகையான மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிப்பதே இந்நிறுவனத்தின் நோக்கமாக இருந்தது.

இது குறித்து அனில் ஜோஸ் கூறும்போது, ``வாட்ஸ்அப் குழுவை எதேச்சையாக சமூகக் கூட்டமாகத் தொடங்கினோம். ஆனால், உறுப்பினர்களின் ஆர்வம் மற்றும் கடுமையான உழைப்பு இதை நிறுவனமாக மாற்றிவிட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 500-க்கும் அதிகமான உறுப்பினர்களுடன் சக்காக் கூட்டம் வாட்ஸ் அப் சுறுசுறுப்புடன் இயங்குகிறது. பலாப்பழ சிப்ஸ், மாவு, அல்வா, உலர் மற்றும் மென்மையான பலாப்பழம் என வித்தியாசமான பொருள்களை ரூ.100 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்கிறோம்.

சக்காக் கூட்டம் தயாரிக்கும் பொருள்கள் விரைவில் மின் வணிக தளங்களான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்டிலும் கிடைக்கும். எர்ணாகுளத்தில் தற்போது லுலு மற்றும் ரிலையன்ஸ் மால்களில் கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். சந்தைகள் விரிவடைந்தால் விலை குறையுமென நம்புகிறோம்’’ என்றார்.

குழுவின் மற்றொரு உறுப்பினர் அனிருத் கூறுகையில், ``லாப நோக்கில் செயல்படும் நிறுவனமாக இல்லாமல், இந்த விநோதமான பழத்தின் சுவையைக் கொண்டுடாடுவதும், விரயத்தைக் குறைப்பதும், விவசாயிகளுக்கு உதவுவதுமே நோக்கமாகும். கடந்த மாதம் அறிமுகமான நிலையில் விற்பனை இப்போதுதான் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

பலாப்பழம்
பலாப்பழம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு உறுப்பினர்கள் கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். பலாப்பழம் விரயமாவதை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தீவிர பிரசாரங்களுக்கும் திட்டமிட்டுள்ளோம்

ஒவ்வோர் ஆண்டும் கேரளத்தில் உற்பத்தியாகும் 60 கோடி பலாப்பழங்களில் 10% மட்டுமே மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றப்படுகின்றன. உற்பத்தியாகும் பலாப்பழம் அனைத்தையும் அப்படியே சாப்பிட முடியாது. மதிப்புக் கூட்டப் பட்ட பொருள்களாக மாற்றினால் மட்டுமே பலாப்பழத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதுடன், உலகெங்கும் அதன் புகழையும் பரப்ப முடியும்" என்றார் அனிருத்.

2021 அக்டோபரில் தொடங்கப்பட்ட நிறுவனத்துக்கு கொலென்சேரியில் 5,000 சதுர அடியில் தொழிற்சாலையும், சேமிப்புக் கிடங்கும் உள்ளன. தேவையான மூலப் பொருள்கள் மாநிலம் முழுவதுமுள்ள குழு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து பெறுகின்றனர். மாநிலம் முழுவதுமுள்ள விவசாயிகளிடமிருந்து 10 விநியோகஸ்தர்கள் பலாப்பழங்களைத் மொத்தமாகச் சேகரிக்கின்றனர்.

பலாப்பழம்
பலாப்பழம்

இது குறித்து அனில் மேலும் கூறும்போது, ``பலாப்பழம் பருவகாலப் பழம் என்பதால் பருவத்தே கொள்முதல் செய்து ஆண்டின் மீதிக் காலத்துக்குச் சேமிக்கிறோம். நடப்பு ஆண்டு சராசரியாக 20 டன் பலாப்பழங்கள் கொள்முதல் செய்துள்ளோம்’ பன்னாட்டுச் சந்தையை இலக்காகக் கொண்டு சக்காக் கூட்டம் இயங்குகிறது. ஏற்கெனவே பல நிறுவனங்கள் களத்தில் இருப்பதால் இதைப் புதுமையான யோசனை என்று சொல்ல முடியாது. சில பிராண்டுகளின் அட்மின்களும் எங்கள் வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். பலாப்பழங்கள் வீணாவது நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் அதைக் குறைக்கும் வழிமுறைகளில் அனைவரும் கவனம் செலுத்தி வருகிறோம்" என்றார் உற்சாகத்துடன்.

- ஜனனி ரமேஷ்