பிரீமியம் ஸ்டோரி
‘தமிழ்நாட்டின் மாநில மரம்’ என்ற சிறப்பைப் பெற்றது பனை. உச்சி முதல் அடி வரை அனைத்து பாகங்களும் பலன் தருவதால்தான் பனைமரத்தை ‘பூலோகத்தின் கற்பகத்தரு’ என்கிறார்கள்.

தமிழகத்தில் சுமார் ஐந்து கோடி பனைமரங்கள் இருக்கின்றன. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில்தான் பனைமரங்கள் அதிகம் காணப்படுகின்றன. நேரடியாக சுமார் இரண்டு லட்சம் குடும்பங்களும், மறைமுகமாக சுமார் ஒரு லட்சம் குடும்பங்களும் பனைமரத் தொழிலை நம்பியிருக்கின்றன.

கருப்பட்டியை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்!

பதநீரைக் காய்ச்சி கருப்பட்டி, கல்கண்டு, சில்லுக்கருப்பட்டி, சுக்குக்கருப்பட்டி ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. கருப்பட்டியைப் பயன்படுத்தி கருப்பட்டி அல்வா, கருப்பட்டி பால்கோவா ஆகிய இனிப்புப் பதார்த்தங்கள் மதிப்புக்கூட்டித் தயார் செய்யப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி, அடைக்கலாபுரம், பரமன்குறிச்சி ஆகிய பகுதிகளில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனைத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

பனை சீஸன் முடிந்ததும், பனை உற்பத்திப் பொருள்களின் விலை அதிகமாவது வழக்கம்தான். ஆனால், நாளுக்குநாள் குறைந்துவரும் பனைமரங்களின் எண்ணிக்கையால் கருப்பட்டி விலை நிலையாகவே இருந்துவந்தது. தற்போதைய ஊரடங்கால் பனைத் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த பனைத்தொழில் செய்துவரும் ஆண்டோ பிரைட்டனிடம் பேசினோம்.

“எங்க பகுதியில பெரும்பாலான மக்கள் பனைத் தொழிலை நம்பித்தான் வாழுறாங்க. தாத்தா, அப்பா காலத்துல இருந்து சுமார் 50 வருஷமாவே பனைத் தொழிலை குலத்தொழிலாகச் செஞ்சுட்டு வர்றோம். எங்க பனந்தோட்டத்துல 500 பனை மரங்கள் இருக்கு.

கருப்பட்டி
கருப்பட்டி

அதுல 300 பனைகள் பலன்தரும் நிலையில இருக்கு. பனைத் தொழிலைப் பொறுத்தவரை மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்கள்தான் பனைமரத்தில் பதநீர் கிடைக்கும். தினமும் பதநீர் இறக்கி, காய்ச்சிக் கருப்பட்டியாக்குவோம். இந்த ஆறு மாசத்தை `பனை சீஸன்’னு சொல்லுவோம். மீதமுள்ள ஆறு மாசத்துல வேற ஏதாவது வேலைகளைச் செய்வோம்.

சீஸன் நேரங்கள்ல கிடைக்கும் வருமானத்தைவெச்சுதான் பிள்ளைகளின் படிப்புச் செலவு, கல்யாணம், கடன் அடைக்கறது...இதையெல்லாம் பூர்த்தி செய்வோம். மீதமுள்ள பணத்தைவெச்சுதான் அடுத்த ஆறு மாசத்தை ஓட்டுவோம். இப்போ கொரோனா ஊரடங்கால எங்க வாழ்வாதாரம் ரொம்பக் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. பனை சீஸன் ஆரம்பிச்சப்பவே ஊரடங்கும் தொடங்கிடுச்சு. உள்ளூரிலுள்ள பனைத் தொழிலாளர்கள் தவிர நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள்ல இருந்தும், கேரளாவில் இருந்தும் பனையேற ஆட்கள் வருவாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊரடங்கால அவங்களாலயும் வர முடியாத நிலையில, ஆட்கள் பற்றாக்குறையால பதநீர் இறக்க முடியலை. உள்ளூர்ல கிடைச்ச ஆட்களைவெச்சு பதநீர் இறக்கி, கருப்பட்டி காய்ச்சுறோம். சீஸன்ல தினமும் 150 கிலோவுக்கு மேல உற்பத்தி செஞ்சுக்கிட்டு இருந்தோம்; இப்போ 40 முதல் 50 கிலோ வரை மட்டுமே உற்பத்தி செய்ய முடியுது.

ஊரடங்கு தொடங்கினதுல இருந்து இப்போ வரைக்கும் என்கிட்ட ஒரு டன் கருப்பட்டி தேங்கிப் போயிருக்கு.

அப்பிடின்னா, ஒவ்வொரு கருப்பட்டி உற்பத்தியாளர்கிட்டயும் இருப்பைக் கணக்கெடுத்தா எவ்வளவு டன்கள் தேங்கிப்போயிருக்கும்?!

பனைமரம்
பனைமரம்

போக்குவரத்து பாதிப்பால, வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாததால வருமானம் இல்லாம தவிக்கிறோம்.

‘அழுதுக்கிட்டிருந்தாலும் உழுதுக்கிட்டிரு’ன்னு விவசாயியைச் சொல்லுவாங்க. அதேபோல, தொழிலை விட்டுடக் கூடாதுன்னு கடன் வாங்கி, தொழிலாளிகளுக்குக் கூலி கொடுத்து கருப்பட்டியை உற்பத்தி செஞ்சு இருப்புவெச்சுக்கிட்டு வர்றோம்.

கருப்பட்டியை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்!

தினமும் பதநீரை இறக்கி, காய்ச்சி, கருப்பட்டியாக்கி, இருப்பு பாதுகாத்தா மட்டும் போதுமா... எப்போ விற்பனை செய்யுறது... `எங்களை மாதிரி கருப்பட்டி உற்பத்தியாளர்கள்கிட்ட அரசே கருப்பட்டியைக் கொள்முதல் செஞ்சு ரேஷன் கடைகள்ல விற்பனை செய்யலாம்’னு ஏற்கெனவே அரசுக்குக் கோரிக்கைவெச்சும், எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தக் கோடையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க சாலையோரங்கள்ல பதநீர், நுங்கு விற்பனை செய்வோம். வாகனங்கள்ல பயணம் செய்யறவங்க வண்டியை ஓரம்கட்டி நிறுத்திட்டு பதநீர் குடிச்சுட்டுப் போவாங்க.

இது தவிர, பெண்களும் பஸ்ல அடுத்தடுத்த ஊர்களுக்குப் போய், பதநீர்க் குடங்களை தலையில சுமந்து வீடு வீடாக வித்துட்டு வருவாங்க. இப்போ அதுக்கும் வழியில்லாததால நுங்குகளை வெட்டாம, மரத்துலேயே விட்டுட்டோம். இதனால, நுங்கு பழமாகிப் பழுத்து கீழே விழுந்துக்கிட்டிருக்கு. 25 பனங்கிழங்குகள் உள்ள ஒரு கட்டு 125 ரூபாய்க்கு விற்பனை செஞ்சுக்கிட்டு இருந்தோம். இப்போ 70 ரூபாய்னு சொன்னாலும் யாரும் வாங்க வர மாட்டேங்கறாங்க. அதனால, கிழங்குகளைப் பிடுங்காம அப்படியே விட்டுட்டோம்” என்கிறார் வேதனையுடன்.

தொடர்புக்கு, ஆண்டோ பிரைட்டன், செல்போன்: 99765 30392

முதற்கட்டமாக அம்மா பல்பொருள் அங்காடிகளில்...

கருப்பட்டியை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்!

ருப்பட்டியை ரேஷன் கடைகளில் விற்பது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் பேசினோம், “நல்ல யோசனைதான். பனைத் தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் பேசிவிட்டு, முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன். முதற்கட்டமாகக் கூட்டுறவு மொத்த பண்டகசாலைகள், அம்மா பல்பொருள் அங்காடிகளில் விற்பனைக்காகக் கொள்முதல் செய்வது குறித்தும், தேவைப்பட்டால் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்வது குறித்தும் பரிசீலிக்கப்படும்” என்றார் அக்கறையோடு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு