Published:Updated:

ஏக்கருக்கு ரூ. 25,000 வேண்டும்! - மல்லிகை விவசாயிகள் கோரிக்கை!

மல்லிகை விவசாயிகள் கோரிக்கை!
பிரீமியம் ஸ்டோரி
News
மல்லிகை விவசாயிகள் கோரிக்கை!

பிரச்னை

மிழகத்துக்குப் பெருமை தேடித்தந்த புவிசார் குறியீடு பெற்ற மதுரை மல்லிகையைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அரசுத் தரப்பில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இதனால் கடந்த நான்கு மாதங்களாகப் பெரும் இழப்புக்கு ஆளாகி இருப்பதாக வேதனையுடன் சொல்கிறார்கள் விவசாயிகள்.
தெய்வேந்திரன்
தெய்வேந்திரன்

இது தொடர்பாக, நம்மிடம் பேசிய மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அடுத்த குட்லாடம்பட்டியைச் சேர்ந்த விவசாயி தெய்வேந்திரன், “நீண்டகாலமா பூ விவசாயம் செஞ்சுட்டு வர்றோம். இந்த கொரோனா ஊரடங்கு எங்க வாழ்க்கையை ரொம்பவே பாதிச்சிடுச்சு. நாலு மாசமா ரொம்ப கஷ்டம். ரெண்டு ஏக்கர் முழுக்கப் பூச்சாகுபடிதான் செய்றேன். பல்வேறு பூக்கள் இருந்தாலும், அரை ஏக்கர்ல மல்லிகை பூவும் இருக்குது. பூப்பூக்க ஆரம்பிச்சதும் வியாபாரிங்க தேடி வந்து வாங்கிட்டுப் போவாங்க. அதன் மூலம் ஓரளவு வருமானம் கிடைச்சது. கொரோனா ஊரடங்குப் போட்டதும் போக்குவரத்து இல்லை. விசேஷங்களுக்குக் கட்டுப்பாடு. அதனால பூ வாங்க ஆள் இல்லாமல் போச்சு. இதனால ரொம்ப சிரமத்துல இருக்கோம். அரசாங்க தரப்புலருந்து பூவைக் கொள்முதல் செய்ய எந்த ஏற்பாடும் செய்யல. பூக்களை மலராமல் இருப்பு வைக்க வியாபாரிகளிடமே அதற்கான வசதி இல்லை. அப்படிச் செஞ்சிருந்தா முதலுக்கு மோசம் வந்திருக்காது. இப்பல்லாம் பூச்சாகுபடி செய்யறதுக்கும் பணம் நிறைய செலவாகுது. அப்படி இருக்கும்போது ரொம்ப குறைவான விலை கிடைக்குறதுனால பறிப்புக் கூலிக்கே போத மாட்டேங்குது. இனிமே பூ சாகுபடி செய்யலாமா வேண்டாமானு யோசிச்சுகிட்டு இருக்கேன்’’ என்றார் வேதனையுடன்.

ஏக்கருக்கு ரூ. 25,000 வேண்டும்! - மல்லிகை விவசாயிகள் கோரிக்கை!

பூக்களைக் கட்டி வியாபாரம் செய்யும் ராஜா, ‘‘முன்னெல்லாம் பூ வித்தா ஒரு நாளைக்கு இருநூறு, முந்நூறு ரூபாய் கிடைக்கும். எத்தனை வகைப் பூ வித்தாலும் மல்லிகைதான் அதிகமாக வியாபாரமாகும். ஆனா, இப்ப மல்லிகையை யாரும் சீண்ட மாட்டேங்கிறாங்க. ஊரடங்குல வேற வேலைக்கும் போக முடியாத நிலையில கிடைக்கிறது கிடைக்கட்டும்னு இப்படிப் பூவை வெச்சுட்டு உக்காந்திருக்கோம்’’ என்றார்.

மல்லிச் சாகுபடி விவசாயிகளும், பூக்கடை நடத்துபவர்களும், பூக்கட்டி வியாபாரம் செய்பவர்களும் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.3000-க்கு விற்ற நிலையில் மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் ரூ.100-க்கும் குறைவான விலையில் விற்பனையாகுது. மல்லிகைப் பூவுக்கே இந்த நிலை என்றால் மற்ற பூக்களின் நிலையைச் சொல்லத் தேவையில்லை. மதுரையிலும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் 70 சதவிகித விவசாயிகள் மலர் விவசாயத்தைக் கைவிட்டு மாற்றுப் பயிர் சாகுபடி செய்யும் மனநிலையில் இருக்கிறார்கள்.

ஏக்கருக்கு ரூ. 25,000 வேண்டும்! - மல்லிகை விவசாயிகள் கோரிக்கை!

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள சென்ட் தொழிற்சாலைகளுக்கு மல்லிகையை அனுப்ப மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் அனுமதி அளித்ததால் குறிப்பிட்ட அளவு மல்லிகைப்பூ மட்டும் மதுரையிலிருந்து சென்றுள்ளது. பூ விவசாயிகளுக்குக் கொரோனா காலத்தில் நிவாரணமாகக் கர்நாடக அரசு, ஏக்கருக்கு ரூ.25,000 வழங்கியுள்ளது. அதுபோல் தமிழகத்திலும் அளிக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

ராஜா
ராஜா

மலர் விவசாயிகளின் பிரச்னை குறித்து, மதுரை மாவட்ட தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கலைச்செல்வத்திடம் பேசினோம். “இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மலர் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். அவர்கள் கஷ்டத்தை ஓரளவு தீர்க்கும் வகையில்தான் மதுரை ஆரப்பாளையத்திலும், ரேஸ்கோர்ஸிலும் தற்காலிக சந்தை அமைக்க ஏற்பாடு செய்தோம். அது மட்டுமில்லாமல் அவர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். உலக அளவில் இதற்கு இணையில்லாத பூவான மதுரை மல்லிகைக்குப் பல நாடுகளில் டிமாண்டு இருக்கிறது. ஆனால், விமானப் போக்குவரத்து இல்லாததால் அனுப்ப முடியவில்லை. மதுரையிலிருந்து அனைத்து நாடுகளுக்கும் விமானச் சேவை தொடங்கினால் மதுரை மல்லி உலகம் முழுதும் செல்லும். அதைப் பதப்படுத்தி வைக்கவும், சேமித்து வைக்கவும் வசதி இல்லை. மற்றபடி இந்த கஷ்டமான காலகட்டத்தில் மலர் விவசாயிகளுக்கு முடிந்த வகையில் உதவி செய்து கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

மலர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அரசுதான் காப்பாற்ற வேண்டும்.