Published:Updated:

`கார்ப்பரேட்' மோடிக்கு... அவர் பாணியிலேயே பதிலடி... உண்மைகளை உரித்துக்காட்டும் `பூமி'!

பூமி
பூமி

`ஜெயம்' ரவி நடிப்பில் இந்த உழவர் திருநாளில் ஓடிடி திரையில் வெளியாகியிருக்கும் பூமி எப்படி இருக்கிறது? பசுமை விகடனின் பார்வையில்...

பொதுவாகவே, `விவசாயம் சார்ந்த திரைப்படம்' என்று பேசப்பட்டாலே கொஞ்சம் பயம் எட்டிப்பார்க்கும். `என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க' என்பதுதான் படத்தை முடித்துவிட்டு வெளியில் வரும்போது நம்முடைய மனக்குமுறலாக இருக்கும். ஊறுகாய் போலத்தான் விவசாயத்தைத் தொட்டிருப்பார்கள். ஒன்றிரண்டு வீர வசனங்களைப் பேசிவிட்டு, வழக்கம்போல பாட்டு, ஆட்டம், சண்டை என்று மசாலாக்களை அள்ளித் தூவி `அல்லு' கிளப்புவார்கள். ஆனால், `ஜெயம்' ரவி நடிப்பில் இந்த உழவர் திருநாளில் ஓடிடி திரையில் வெளியாகியிருக்கும் பூமி... முழுக்க முழுக்க விவசாயம் பேசுகிறது. தான் எடுத்துக்கொண்ட மையக் கருத்திலிருந்து கொஞ்சம்கூட விலகாமல், கடைசி வரையிலும் விவசாயம் பேசியிருக்கிறது என்பதற்காகவே முதலிலேயே பாராட்டத் தோன்றுகிறது.

பூமி
பூமி

ஆரம்பத்தில் 20 நிமிடங்கள் வரையில் வழக்கமான சினிமா போல காதல், குடும்பம் என்பதையெல்லாம் காட்டி போரடிக்கத்தான் செய்கின்றனர். அதன்பிறகு, கதை கொஞ்சமும் பாதையைவிட்டு விலகாமல் பயணிக்கிறது. அதேசமயம், படத்தில் லாஜிக் மீறல்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால், கொஞ்சம்கூட லாஜிக்கே இல்லாமல் சட்டம், ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், கவர்ச்சி அறிவிப்புகள் என அனைத்தையும் சேர்த்துக் கொண்டு, ஒட்டுமொத்த தேசத்தையே நிஜத்திலேயே சூறையாட நினைக்கின்ற கார்ப்பரேட்களுக்கு எதிராக மட்டுமே மொத்தப் படமும் சமர்ப்பணம் எனும்போது, லாஜிக்காவது... கீஜிக்காவது என்றே சொல்லத் தோன்றுகிறது.

66 வயது கிழவர், 16 வயதினிலே பெண்ணுடன் ஓடிவிளையாடி காதல் செய்யும்போதும்... 70 வயது கிழவர், 18 வயது பெண்ணைத் தூக்கிக் கொண்டு ஆடிப்பாடும்போதும், சும்மா சுத்திச்சுத்தி... பறந்துபறந்து அடிக்கும்போதும் லாஜிக்கா பார்க்கிறோம்.

சரி, கதைக்குள் செல்வோம். (Spoiler Alert)

விடுமுறையில், தமிழகத்தில் இருக்கும் சொந்தக் கிராமத்துக்கு வரும் அமெரிக்க விண்வெளி நிலையமான நாசாவின் விஞ்ஞானி பூமிநாதன், இங்கே விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளைக் கொண்டு கொந்தளிக்கிறார். விவசாயிகள், கடன் தொல்லையில் சிக்கித் தவிக்கிறார்கள். அதிகாரிகளோ, அரசுப்பிரதிநிதிகளோ அவர்களை துச்சமாகத் துரத்தும் சூழலில், ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார். இதைக் கண்டு குமுறும் பூமிநாதன், செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் வாய்ப்பைத் தூக்கி வீசிவிட்டு, விவசாயத்தில் கால் பதிக்கிறார். மரபணு மாற்றப்பட்ட விதைகள், வீரிய விதைகள், உரம், பூச்சிக்கொல்லி போன்றவைதான் விவசாயிகளின் பிரச்னைகளுக்குக் காரணம் என்பதை உணர்ந்து, அவை அனைத்துக்கும் விடைகொடுத்துவிட்டு, தற்சார்பு விவசாயமான இயற்கை விவசாயத்தைக் கையில் எடுக்கிறார்.

பூமி
பூமி

கார்ப்பரேட்கள் தூக்கி வீசும் எலும்புத்துண்டுக்காக வேலை பார்க்கும் அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளின் கூட்டணி அதிர்ந்துபோகிறது. சர்வதேச கார்ப்பரேட் முதலாளியின் கட்டளைகளை அடுத்தடுத்து நிறைவேற்றுகிறார்கள். பூமிநாதன் நடத்தும் இயற்கை விவசாயத் திருவிழாவின்போது விவசாயிகள் சிலருக்கு வைரஸைப் பரப்பி பிரச்னை கிளப்புகிறார்கள். இயற்கை விவசாயத்துக்காகப் பூமிநாதன் தயாரித்த இடுபொருள்களிலிருந்துதான் வைரஸ் உருவாகி, 26 விவசாயிகளின் பார்வையைப் பறித்துவிட்டது என்று சொல்லி, விவசாய பண்ணையையே அழிக்கிறார்கள். பூமிநாதனைக் கைது செய்து, கார்ப்பரேட் முதலாளி முன் நிறுத்துகிறார்கள்.

``உங்க நாடே எனக்கு அடிமை... நீங்களெல்லாம் எனக்கு அடிமை. இந்த உலகமே 13 கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தான் சொந்தம். காலையில எழுந்ததிலிருந்து, தூங்கற வரைக்கும் நீங்க என்னென்ன செய்யணும், எது எதைப் பார்க்கணும், எது எதை சாப்பிடணும்னு எல்லாத்தையுமே நாங்கதான் தீர்மானிக்கிறோம். உங்களால எதையுமே மாத்த முடியாது. செவ்வாய் கிரகத்துக்குப் போயிருந்தா, உலகமே உன்ன கொண்டாடியிருக்கும். ஆனா, இப்ப ஜெயிலுக்குப் போகப்போறே. இன்னும் 50 வருஷத்துக்கு உள்ளயே இருந்து, நாங்க நடத்தற எல்லாத்தையும் உள்ள இருக்கிற டிவியில பார்த்துப் பார்த்து செத்துப்போ. அதுக்காவே இப்ப நான் உன்ன கொல்லாம விடறேன்'' என்று டயலாக் பேசுகிறார்.

``என்ன இப்பவே கொன்னுடு... இல்லாட்டி, இந்த நாட்டை விட்டே உன்னை நான் துரத்திடுவேன்'' என்று பூமிநாதன் பேசும் வசனத்தை அசட்டை செய்தபடி சிரித்துக்கொண்டே அடுத்த நாட்டுக்குப் பறக்கிறார் கார்ப்பரேட் முதலாளி.

இதைத் தொடர்ந்து, பூமிநாதன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்பதும், ஒவ்வொன்றாக கார்ப்பரேட் முதலாளி தகர்த்துக்கொண்டே வருவதும்... நேற்றைய, இன்றைய, நாளைய நிஜங்களே. ஆம், நேற்றைய பசுமைப் புரட்சி, இன்றைய மரபணு மாற்று விதைகள், நாளைய கார்ப்பரேட் சந்தை அனைத்தும் நாம் அனுபவித்து வரும் நிஜங்கள்தானே!

பூமி
பூமி

மலைக்கிராமங்களில் இயற்கையாக சேகரிக்கப்பட்டு பயன்பாட்டிலிருக்கும் இயற்கை விதைகளைக் கொண்டுவந்து விவசாயிகளுக்குக் கொடுப்பது, ஒற்றை நாற்று, பஞ்சகவ்யா, நாட்டுக்கோழி, நாட்டுமாடு, நாட்டு ஆடு, அசோலா.... என்று கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக விவசாயிகளால் மீண்டும் கையிலெடுக்கப்பட்டுவரும் பாரம்பர்ய விவசாய நுணுக்கங்கள் அனைத்தையும் தூக்கிப் பிடிக்கிறார்.

கடைசி கட்டத்தில் இயற்கை விவசாய விளைபொருள்களின் விற்பனையை ஒழிப்பதற்காக, சிறுகடைகள் தொடங்கி, சூப்பர் மார்க்கெட், ஹைப்பர் மார்க்கெட் வரை வியாபித்திருக்கும் கார்ப்பரேட் தயாரிப்புப் பொருள்களையெல்லாம் ஆஃபர் என்கிற பெயரில் ஜப்தி ரேட்டுக்கு அள்ளிவிடுகிறார் கார்ப்பரேட் முதலாளி. மக்கள் கூட்டம் நொடிகளில் அந்தக் கடைகளை ஆக்கிரமித்து பூரித்தபடி அள்ளிக் கொண்டு போகின்றன. இதைப் பார்த்து பூமிநாதனும் அவருடன் தோளுக்குத் தோளாக நின்று இயற்கை விவசாயத்தைத் தூக்கிப் பிடித்தவர்களும் துவண்டு போகிறார்கள்.

கார்ப்பரேட்களிடம் தோற்றிருந்தால்கூட பரவாயில்லை... சொந்த மக்களிடமே தோற்றுவிட்டேனே.... என்று பூமிநாதன் நொந்துபோகும் நிலையில்... மோடியின் தாரக மந்திரத்தைக் கையில் எடுப்பது, சூப்பர் க்ளைமாக்ஸ்.

பசுமைப்புரட்சியின் பாதிப்பு, மரபணு மாற்றப்பட்ட விதைகள், தக்காளியில் தவளையின் மரபணு, மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் தயாரிக்கும் நிறுவனம், துணைபோகும் அதிகாரவர்க்கம் என்று கிடைத்த இடங்களிலெல்லாம் துணிச்சலாக அடித்து துவம்சம் செய்திருக்கிறார்கள்.

கோலா கம்பெனிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிருந்த குளிர்பான நிறுவனங்களை ஒழித்துக்கட்டுவதற்காக, உள்ளூர் நிறுவனங்களின் பாட்டில்களை விலைக்கு வாங்கி உடைத்துப்போட்டது தொடங்கி, இன்று வேளாண் சட்டங்கள் மூலமாகவும் கால் பதிப்பதற்காக ஜெகஜ்ஜால கில்லாடி வேலைகள் செய்வது வரை அனைத்தையும் ஒன்றுவிடாமல் படம்பிடித்துள்ளனர்.

கார்ப்பரேட்கள் நினைத்தால், எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்; எந்த எல்லைக்கும் செல்லமுடியும்; அரசாங்கத்தையே விலைக்கு வாங்கமுடியும் என்பதெல்லாம் நிஜத்தில் நடந்துகொண்டிருக்கும் உண்மை. இது அத்தனையையும் இத்தனை தைரியமாகத் தோலுரித்துக் காட்டியிருப்பதற்கே படக்குழுவுக்கு சபாஷ் போடவேண்டும்.

பூமி
பூமி
சினிமா விகடன்: டைட்டில் வச்சதே ‘ஜெயம்’ ரவிதான்!

கோயில் கோபுர, விமானக் கலசங்களில் வைக்கப்பட்டிருப்பது நாட்டுவிதைகள்தான். விதைச் சேமிப்புக்காக பாரம்பர்யமாக நாம் கடைபிடித்துவரும் வழக்கங்களில் ஒன்றுதான் இதுவும் என்பதை வலியுறுத்துகிறார்கள். அந்த விதைகளை எடுத்துப் பயன்படுத்தலாம் என்று கிளம்பும்போது, மதவாத அரசியல்கட்சிகள் போர்க்கொடி தூக்கி இடைஞ்சல் கொடுக்கின்றன. அரசியல் மற்றும் மதம் என்கிற பெயரில் கார்ப்பரேட்களுக்கு துணை நிற்பதையும் இதன்மூலமாக பட்டவர்த்தனமாக உரித்துக்காட்டியுள்ளனர்.

படத்தில் லாஜிக் ஓட்டை, நீளம், தேவையில்லாத காட்சிகள் என்று பலவும் இருந்தாலும்... இப்படியொரு சப்ஜெக்ட்டை துணிச்சலாகத் தொட்டதற்காகவே போற்றிப்பாடுவோம் `பூமி'யை. ஆம், இது பசுமை பூமி!

பின்குறிப்பு:

கதைத் திருட்டு என்று சர்ச்சையில் சிக்கிய படம்தான் இது. கார்ப்பரேட்களின் திருட்டு பற்றிப் பேசுபவர்கள், இப்படிக் கதைத் திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டாமே என்கிற குரல்களும் கேட்காமல் இல்லை. இந்தக் குரல்களைப் பதிவு செய்யாமல் இருப்பதும் நியாயமில்லை. ஆனால், அந்தக் கதாசிரியருடன் சமரசம் செய்துகொள்ளப்பட்டுவிட்டது என்பதையும் படத்தின் ஆரம்பத்திலேயே வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சேர்த்தே பதிவுசெய்கிறோம்.

- ஜூனியர் கோவணாண்டி
அடுத்த கட்டுரைக்கு