Published:Updated:

மணக்கும் மல்லிகைக் கிழமைகள்! - ஜெயஶ்ரீ

ஜெயஶ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயஶ்ரீ

என் இல்லம் பசுமை இல்லம்

சிறியதும் பெரியதுமாக விதவிதமான தொட்டிகள், 500-க்கும் மேற்பட்ட செடி வகைகள் எனப் பார்க்கவே ரம்மியமாக இருக்கிறது இல்லத்தரசி ஜெயஶ்ரீயின் வீடு.

ஓ.எம்.ஆரில் உள்ள தன் வீட்டில் பத்தாண்டுகளாக மாடித்தோட்டம் வைத்துப் பராமரித்து வருகிறார். டிராகன் ஃப்ரூட், ஸ்பைஸ் செடி எனப் பல அரிய வகை செடிகளுடன் இருக்கும் அந்தத் தோட்டத்திலேயே ஜெயஶ்ரீயைச் சந்தித்தோம்.

“சொந்த ஊர் காஞ்சிபுரம். வீட்டுல தோட்டம் வெச்சு பராமரிச்சுட்டு இருந்தோம். சென்னை வந்த பிறகு அதற்கான வாய்ப்பே இல்லாமல் போச்சு. நாங்க சென்னையில் சொந்தமாக வீடு கட்ட ஆரம்பிச்ச நேரம் நிறைய பேர் மாடித்தோட்டம் பண்ணை ஆரம்பிச்சு இருந்தாங்க. எனக்கும் ஆசை வந்துருச்சு. ஆரம்பத்தில் 25 தொட்டிகளுடன் மாடியில சின்ன தோட்டம் வெச்சேன். நிறைய சந்தேகங்கள் இருந்துச்சு. விவசாயிகளையும், பயிற்சி கொடுக்கிறவங்களையும் நேரில் பார்த்துதான் ஒவ்வொரு செடியையும் எப்படி வளர்க்கிறதுன்னு கத்துக்கிட்டேன். அந்த அனுபவத்தோடு காய்கறிகள், பூச்செடிகள், பழங்கள், மூலிகைகள்னு நிறைய அரிய செடிகளை வளர்க்க ஆரம்பிச்சேன். இப்போ 45-க்கும் அதிகமான செடி வகைகள் இருக்கு. பீட்ரூட், சாத்துக்குடி, டிராகன்ஃப்ரூட் போன்ற வகைகள் நம்ம பருவநிலைக்கு செட் ஆகாதுன்னு நிறைய பேர் சொல்வாங்க. ஆனா, நான் அந்தச் செடிகளையும் என் தோட்டத்தில் வைத்து அறுவடை செய்கிறேன்.

 மணக்கும் மல்லிகைக் கிழமைகள்! - ஜெயஶ்ரீ

ஒரு நாளைக்கு அஞ்சு மணி நேரம் செடிகளோடு செலவிடுவேன்.

எல்லா வகையான செடி வகைகளும் இருப்பதால் காய்கறி கடைக்கோ, பழக்கடைக்கோ போகவேண்டிய அவசியம் இதுவரை வந்ததே இல்லை.

ஆரோக்கியமான உணவுடன் சேர்த்து ஆத்ம திருப்தியும் கிடைக்குது” என்று சொல்லும் ஜெயஶ்ரீ வீட்டிலேயே முட்டைகோஸ் வளர்க்கும் முறை பற்றி பகிர்கிறார்.

முட்டைகோஸ் வளர்க்கலாம்!

முட்டைகோஸ் வளர்க்க ஒன்றே கால் அடி அகலம், ஓர் அடி உயரம் உள்ள பைகளைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். கோஸ் வளர்க்கும் இடத்தில் நிழல் வலை இருப்பது அவசியம். ஆறு மணி நேர சூரிய ஒளியும் அவசியம்.

தென்னங்கழிவு, செம்மண், உரம் மூன்றையும் 2:1:1 என்ற விகிதத்தில் கலந்துகொள்ளவும். ஒரு கைப்பிடி அளவு களிமண் சேர்த்துக்கொண்டால் மண் குளிர்ச்சியாக இருக்கும். கோஸ் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். வேப்பம் பிண்ணாக்கு, சாணம், காய்கறிக் கழிவுகளை 100 கிராம் என்ற விகிதத்தில் எடுத்து மண் கலவையுடன் கலந்து உரமாக இட்டு மண்ணை 15 நாள்கள் வளப்படுத்தவும்.

 மணக்கும் மல்லிகைக் கிழமைகள்! - ஜெயஶ்ரீ

15 நாள்களுக்குப் பிறகு குழித்தட்டுகளில் மண் கலவையை நிரப்பி, ஆறு மணி நேரம் பஞ்சகவ்யாவில் ஊறவைத்த கோஸ் விதைகளைக் குழிக்கு ஒன்றாக விதையுங்கள்.

குழித்தட்டுகளின் மீது ஒரு பேப்பரைச் சுற்றி ஐந்து நாள்கள் நிழலில் வைத்துவிடுங்கள். பிறகு பேப்பரை எடுத்துவிட்டு மிதமான வெயில்படும் இடத்தில் வைத்துப் பராமரியுங்கள். கோஸ் விதை துளிர்விட ஆரம்பித்துவிடும்.

தினமும் தண்ணீர் தெளியுங்கள். 21-ம் நாள் நாற்று 5 செ.மீ அளவுக்கு வளர்ந்திருக்கும். இந்தப் பருவத்தில் கோஸ் நாற்றுகளைக் குழித்தட்டில் இருந்து மண் நிரப்பிய பெரிய பைகளுக்கு மாற்ற வேண்டும்.

முட்டைகோஸ் வளர்க்கும் இடங்களில் பொதுவாக கம்பளிப் பூச்சி தாக்குதல் அதிகம் இருக்கும். தினமும் ஒருமுறை செடியை சோதனை செய்து, இலையில் பூச்சி இருந்தால் அதை எடுத்துவிட வேண்டும். மற்ற பூச்சிகளின் தாக்குதலைத் தவிர்க்க வேப்பம் பிண்ணாக்கு, 3ஜி கரைசலை வாரம் ஒருமுறை தெளிக்கலாம்.

செடியை வேறு தொட்டிக்கு மாற்றிய எட்டு வாரங்களில் செடி நன்றாகச் செழித்து வளர்ந்திருக்கும். இந்தப் பருவத்தில் காய்கறிக் கழிவுகள், அரைத்த முட்டை ஓடுகள், காய்ந்த சாணத்தை உரமாக இடுவது அவசியம்.

 மணக்கும் மல்லிகைக் கிழமைகள்! - ஜெயஶ்ரீ

செடி நடவு செய்த 90-வது நாளில் செடியை அறுவடை செய்துகொள்ளலாம். ஒரு செடிக்கு ஒரு முட்டைகோஸ்!

முட்டைகோஸ் வளர்ப்பவர்கள் அதே தொட்டியில் புதினா, கொத்தமல்லி எனக் குறுகிய கால செடியையும் வளர்க்கலாம்.

அழகுக்கு மல்லிகைப்பூ!

மல்லிகைச் செடியைப் பொறுத்தவரை ஜாதி மல்லி, குண்டு மல்லி, அடுக்கு மல்லி, நித்திய மல்லி, ராமர் மல்லி, செண்டு மல்லி என்று நிறைய வகைகள் உண்டு. குண்டு மல்லி நிறைய பேருக்கு பிடித்தமான ஒன்று என்பதால் அதை வளர்ப்புக்கான தகவல்கள்...

  • குண்டு மல்லிச் செடியை அருகில் இருக்கும் நர்சரியிலிருந்து வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது மல்லிச் செடி வைத்திருப்பவர்களிடமிருந்து பதியம் செய்தும் வாங்கலாம்.

  • நீங்கள் வாங்கும் செடியில் பூக்கள் இல்லாமல் அதிக கிளைகளோடு இருப்பது போன்று பார்த்துத் தேர்வு செய்யுங்கள். வாங்கி வந்த அன்றே வேறு தொட்டிக்கு மாற்றக் கூடாது. வெயில்படும் இடத்தில் வைத்து தண்ணீர் மட்டும் தெளிக்கலாம்.

  • மூன்று நாளைக்குப் பிறகு அதைச் செம்மண், உரம், தென்னங்கழிவு நிரப்பிய தொட்டிக்கு மாற்றுங்கள். வாடியிருக்கும் இலைகளை நீக்கவும்.

 மணக்கும் மல்லிகைக் கிழமைகள்! - ஜெயஶ்ரீ
  • அதிகமான சூரிய ஒளி படரும் இடத்தில் வைத்து மல்லிச்செடியைப் பராமரிப்பது அவசியம்.

  • வாழைப்பழத் தோலை தண்ணீரில் கொதிக்க விடவும். பின் வடிகட்டி, ஆறவைத்து மல்லிச் செடியில் தினமும் தெளிப்பதன் மூலம் பூக்கள் சீக்கிரம் துளிர்விட ஆரம்பிக்கும் அல்லது காய்கறிக் கழிவுகளை அரைத்து தண்ணீரில் கலந்து தினமும் தெளிக்கலாம்.

  • பூச்சிகள் இலைகளைத் தாக்காமல் இருக்க இரண்டு நாளைக்கு ஒரு முறை வேப்ப எண்ணெயைத் தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்வது அவசியம்.

  • இலைகள் அதிகமாக இருந்து பூக்கள் பூக்கவே இல்லை எனில், சிறிது இலைகளைக் களைந்துவிடுவது நல்லது.

  • பயன்படுத்தி உலரவைத்த டீத்தூளையும் சாம்பலையும் உரமாக இடுவதன் மூலம் எல்லா பருவத்திலும் பூக்கள் பூத்துக்கொண்டே இருக்கும்.

  • முறையாகப் பராமரித்து வந்தால் ஐந்து வருடங்களைத் தாண்டியும்கூட மல்லிகைச் செடி மணக்கும்!

தொட்டிகளில் செடி வளர்ப்பவர்கள் கவனத்துக்கு...

யன்படுத்திய கடலைத்தோல்களை ஃபெவிகால் தடவி தொட்டி முழுவதும் வரிசையாக ஒட்டினால் தொட்டிகள் தனித்துவ மாக இருக்கும். முட்டை ஓடுகளை உடைத்து ஒட்டியும் வண்ணம் தீட்டிக் கொள்ளலாம்.

தொட்டிகள் வாங்க முடியாதவர்கள் காய்கறி போட்டுவைப்பதற்குப் பயன்படுத்தும் கூடைகளைக்கூட செடி வளர்க்க தேர்வு செய்யலாம். கூடை முழுவதும் செல்லோடேப் ஒட்டி ஏதேனும் ஓர் இடத்தில் மட்டும் துளையிட்டுக்கொண்டு மண் நிரப்பி, புதினா, கொத்தமல்லி, துளசி போன்ற செடிகளை வளர்க்கலாம்.

நாற்றுநட குழித்தட்டுகளைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. முட்டை ஓடு, சதைப்பகுதி எடுத்த தர்பூசணி, இளநீர் ஓடு, சிரட்டை போன்றவற்றையும் நாற்று நட உபயோகப்படுத்தலாம்.