Published:Updated:

வெள்ளை ஈக்களை விரட்டும் ஜீவாமிர்தம்! - தெம்பூட்டும் தென்னை விவசாயி

ஜீவாமிர்தக் கரைசல்களுடன் கோபால்
பிரீமியம் ஸ்டோரி
ஜீவாமிர்தக் கரைசல்களுடன் கோபால்

தீர்வு

வெள்ளை ஈக்களை விரட்டும் ஜீவாமிர்தம்! - தெம்பூட்டும் தென்னை விவசாயி

தீர்வு

Published:Updated:
ஜீவாமிர்தக் கரைசல்களுடன் கோபால்
பிரீமியம் ஸ்டோரி
ஜீவாமிர்தக் கரைசல்களுடன் கோபால்

தென்னை விவசாயிகளுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது வெள்ளை சுருள் ஈக்களின் தாக்குதல். ரசாயன மருந்துகளால் இதற்குத் தீர்வு காண முடியாமல் தவிக்கிறார்கள் விவசாயிகள். ஆனால், ‘சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலை இயற்கை விவசாயத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும்’ என்கிறார் முன்னோடி இயற்கை விவசாயி கோபால்.

ஜீவாமிர்தத்தில் பராமரிக்கப்படும் தென்னை மரங்கள்
ஜீவாமிர்தத்தில் பராமரிக்கப்படும் தென்னை மரங்கள்

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் இருக்கிறது இவரது தென்னை மரச்சோலை. கொலுசு கட்டிய குமரிப்பெண்போல் சலசலத்து ஓடும் ஆழியாறு. அதில் எட்டி முகம் பார்க்கின்றன இருகரையிலும் உள்ள தென்னை மரங்கள். ஆற்றுத்தண்ணீர் தொட்டு விளையாடும் சாலைப் பாலம் என இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இருக்கிறது இவரது தென்னந்தோப்பு.

வான்நோக்கி வளர்ந்து நிற்கும் தென்னந்தோப்பின் மத்தியில் அழகிய பண்ணை வீடு. பண்ணை வீட்டை ஒட்டி பத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்பசுக்களைக் கொண்ட மாட்டுத்தொழுவம்.வேலையாள் ஒருவருடன் தொழுவத்தில் ஜீவாமிர்தம் தயாரித்துக்கொண்டிருந்த கோபாலைச் சந்தித்தோம்.

‘‘உடுமலைப்பேட்டைக்குப் பக்கத்துல இருக்கிற நீலம்பூர் கிராமம்தான் எனக்குப் பூர்வீகம். படிச்சு முடிச்சதும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்துல வளர்ச்சி அதிகாரி வேலை கிடைச்சது. வேலைக்காகக் கோயம்புத்தூர் போயிட்டேன். நாப்பது வருஷமா அங்கதான் வசிக்கிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜீவாமிர்தத்தைத் தெளிக்குறதால, என்னோட தோப்புல சுருள் வெள்ளை ஈ தாக்குதலே இல்லை.

நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்ங்கிறதால விவசாயத்துல ரொம்ப ஆர்வம். சொந்தமா ஒரு தோட்டம் வாங்கலாம்னு தேடிக்கிட்டு இருந்தேன். அப்பத்தான் இந்தத் தோப்பு விலைக்கு வந்துச்சு. தோப்பும் பிடிச்சது. விலையும் தோதா அமைஞ்சதால வாங்கிட்டேன். தோப்போட பரப்பு 22 ஏக்கர். மொத்தம் 1,540 தென்னை மரங்கள் இருக்குது. இதை வாங்கி 12 வருஷமாச்சு. ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான் செஞ்சேன். அதை மாத்தி என்னை இயற்கை விவசாயம் பக்கம் கொண்டு வந்தது சுபாஷ் பாலேக்கர்தான்.

ஜீவாமிர்தம் தயாரிக்கும் டிரம்கள், ஜீவாமிர்தம் சேகரமாகும் இடம்
ஜீவாமிர்தம் தயாரிக்கும் டிரம்கள், ஜீவாமிர்தம் சேகரமாகும் இடம்

கோயம்புத்தூர் கொடிசியாவுல ஜீரோ பட்ஜெட் கருத்தரங்கு நடந்திச்சு. அதுல நானும் கலந்துகிட்டேன். நாட்டுப்பசுவோட மகிமை, அதோட கழிவுகளை வெச்சு இடுபொருள் தயாரிக்குற முறை, அதைப் பயிர் வாரியா பயன்படுத்துறது எப்படின்னு விளக்கமா அவர் பேசுனது எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு’’ என்றவர், தொடர்ந்து ஜீரோபட்ஜெட் விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘கருத்தரங்கு முடிஞ்சு வந்ததும் உடனே சுபாஷ் பாலேக்கரின் இயற்கை வேளாண்மை முறைக்கு மாறினேன். 10 நாட்டுப்பசுக்களை வாங்கிட்டு வந்து தொழுவத்தில் கட்டினேன். தொடர்ந்து ஜீவாமிர்தக் கரைசல் தயாரிக்குற வேலையை ஆரம்பிச்சேன். சொட்டுநீர்க் குழாய் வழியா ஜீவாமிர்தக் கரைசல், பாசன தண்ணியோடு கலந்து போற மாதிரி 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்களை வரிசையா அமைச்சு, அதுல ஜீவாமிர்தம் தயாரிக்கத் தொடங்குனேன். டிரம்முல நிறையுற கரைசல் இணைப்புக்குழாய்கள் மூலமா கொண்டு போய், வடிகட்டித் தொட்டியில நிரப்புறேன். அங்க வடிகட்டிய ஜீவாமிர்தக் கரைசலைச் சொட்டுநீர்க் குழாய்கள் வழியே வாரம் ரெண்டு தடவை, தென்னை மரங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சேன்.

அப்ப என்னோட தென்னை மரங்கள்ல ஈரியோபைட் தாக்குதல் இருந்துச்சு. தென்னை மரங்களைச் சேதப்படுத்தி, தேங்காய்களையும் சேதப்படுத்திட்டு இருந்துச்சு. ஜீவாமிர்தம் கொடுக்க ஆரம்பிச்சதும் அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கிடுச்சு. அதேபோல, இப்ப தென்னை விவசாயத்துல பெரிய பிரச்னையா இருக்குது சுருள் வெள்ளை ஈ. இது கீற்றுக்கள்ல இருக்கிறப் பச்சையத்தை உறிஞ்சி, ஓலைகளைக் கறுப்பு நிறமாக்கி, மட்டைகளைச் சரிய வெச்சு, தென்னை மரங்களைக் காலி பண்ணிடுது.

பொள்ளாச்சியில ஆரம்பிச்சி பட்டுக்கோட்டை வரைக்கும் இருக்கிற லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சுருள் வெள்ளை ஈத்தாக்குதல்ல நிலை குலைஞ்சு போச்சு. விவசாயிகளும் பண்ணாத பண்டுதமெல்லாம் பண்ணிப் பார்த்தும் வெள்ளை ஈக்களை விரட்ட முடியலை. அதே நேரத்துல இயற்கை விவசாயம் நடக்குற தோப்புக்கள்ல மட்டும் வெள்ளை ஈ தாக்குதல் அதிகமா இல்லை. என்னோட தோப்புல 100 சதவிகிதம் வெள்ளை ஈ தாக்குதல் இல்லை. பாலேக்கர் கத்துக்கொடுத்த பாடம்தான் அதுக்குக் காரணம்.

குறிப்பா மூடாக்கு பத்தி பாலேக்கர் தெளிவா சொல்லியிருக்காரு. விவசாய நெலத்தில முளைக்குற களைகளைப் பயறு மூடாக்கு மூலம் கட்டுப்படுத்த முடியும். வெள்ளாமை காட்டுல ஊடுபயிரா கொள்ளுப் பயறை விதைச்சுவிட்டாப் போதும். களைச்செடிகள் முளைக்காது. அதேபோல என்னோட தோப்புல முளைக்குற புல், பூண்டுகளைக் களைக்கொல்லி தெளிச்சு அழிக்குறதில்லை. அதுக்குப் பதிலா மாடுகளைத் தோப்பு முழுக்க மேய விட்டுறுவேன். மாடுகளுக்கு எட்டாத உயரத்துல கீற்றுகள் இருக்கிறதால பிரச்னை இல்லை. இளம் தென்னை வெச்சிருக்கிறவங்க, தோப்புக்குள்ள மாடுகளை மேயவிடக் கூடாது. மாடுகள் கீற்றுகளை மேய்ஞ்சு காலி செஞ்சிடும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஜீவாமிர்தக் கரைசல்களுடன் கோபால்
ஜீவாமிர்தக் கரைசல்களுடன் கோபால்

தோப்புல வளர்ந்து கிடக்குற புல்பூண்டுகளை அடியோடு அழிக்கும்போது, அதுல வசிக்குற பூச்சிகளுக்கு உணவு கிடைக்கிறதில்லை. அதனால, கூட்டம் கூட்டமாகப் பறந்து போய்த் தென்னை மரங்கள்ல உட்கார்ந்து சேதப்படுத்துற வேலையைச் செய்யுது. வெள்ளை ஈக்களும் அப்படித்தான். களைக்கொல்லி தெளிக்காத தோட்டங்கள்ல கீழேயே சாப்பாடு கிடைச்சிடுது. அதனால 50 சதவிகிதம் வெள்ளை ஈக்கள் தாக்குதல் குறையுது. இருந்தாலும் ஏற்கெனவே மரத்தில இருந்து, பெருகிவர்ற வெள்ளை ஈக்களைக் கட்டுபடுத்த 15 நாளுக்கு ஒரு தடவை ஜீவாமிர்த கரைசலை, ஓலைகள் நனையுற மாதிரி, கருவிமூலம் பீச்சி அடிக்கணும். நான் ஜீவாமிர்தத்தை அப்படித்தான் தெளிக்குறேன். அதனால என்னோட தோப்புல சுருள் வெள்ளை ஈ தாக்குதலே இல்லை.ஊர்ல இருக்கிற எல்லாத் தோப்புகள்லயும் களைக்கொல்லியைத் தெளிக்காம, ஜீவாமிர்தம் தெளிச்சா போதும். வெள்ளை ஈக்களை ஊரைவிட்டே ஓட ஓட விரட்ட முடியும். அதற்கான விழிப்பு உணர்வை இந்தப் பகுதி விவசாயிகளுக்குக் கொடுத்துட்டு இருக்கேன்.

தோட்டத்தில் மாடுகள், தோட்டத்தில்
தோட்டத்தில் மாடுகள், தோட்டத்தில்

ஜீவாமிர்தம் கொடுக்குறதோடு, தென்னை மரக்கழிவுகள், புல், பூண்டுகள்னு மட்குற பொருள்களை வெச்சு, மரங்களைச் சுத்தி மூடாக்கு அமைச்சிருக்கேன். மூடாக்கு, மண்ணோட ஈரபதத்தைக் காப்பாத்துறதோடு, மட்கி எருவா மாறி, தென்னை மரங்களோட வேர்களுக்கு ஊட்டம் கொடுக்குற வேலையும் செய்யுது.

13 ரூபாய்னு வெச்சுகிட்டாலும் ஆண்டுக்கு 4,00,400 ரூபாய் கூடுதல் லாபம் கிடைக்குது.

வழக்கமா, நல்லா வளர்ந்த நாட்டு மரம் ஒன்றிலிருந்து வருஷம் 140 தேங்காய்கள் வரைதான் பறிக்க முடியும். ஆனால், சுபாஷ் பாலேக்கரின் இயற்கை விவசாயத்தில் மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்கு 160 தரமான காய்கள் எனக்குக் கிடைக்குது. சராசரி விளைச்சலை விட மரம் ஒன்றுக்கு 20 தேங்காய்கள் கூடுதலாகக் கிடைக்குது. மொத்தமிருக்கிற 1,540 மரங்கள்ல இருந்து 30,800 தேங்காய்கள் அதிகமா கிடைக்குது. ஒரு தேங்காய் 13 ரூபாய்னு வெச்சுகிட்டாலும் வருஷத்துக்கு 4,00,400 ரூபாய் கூடுதல் லாபம் கிடைக்குது’’ என்ற கோபால், நிறைவாக, ‘‘10 வருஷமா ஜீவாமிர்தம், மூடாக்கு தவிர வேறு எந்த உரமும் தென்னைக்கு நான் கொடுக்கலை. மண்புழுக்களும் நுண்ணுயிரிகளும் நிறைஞ்ச வளமான மண் உள்ள நெலமா என்னோட தோப்பு மாறிடுச்சு. அதனால, தரமான, திடமான, பிழிதிறன் அதிகமா இருக்கிற தேங்காய் என்னோட தோப்புல விளையுது. அதனால, என்னோட தேங்காய்க்கு மத்தவங்க காய் விலையைவிட 1 ரூபாய் கூடுதல் விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கிட்டுப் போறாங்க. ரசாயன விவசாயம் செஞ்சப்ப ஏக்கருக்கு 18,000 ரூபாய் உரத்துக்கும், 2,000 ரூபாய் களைக்கொல்லிக்கும் செலவு செய்வேன். பாலேக்கரின் இயற்கை விவசாயத்தைக் கையில் எடுத்தபிறகு 4 லட்சம் ரூபாய் ரசாயன இடுபொருள் செலவு மிச்சமாகிடுச்சு.

இப்ப தென்னையில ஊடுபயிரா, 800 பாக்கு கன்றுகளைப் போதுமான இடைவெளியில நடவு செஞ்சிருக்கேன். இன்னும் ரெண்டு வருஷத்துல வருமானம் கொடுக்க ஆரம்பிச்சிடும். ஆரம்பக் கட்டத்துல ஒரு மரத்துல இருந்து 5,000 ரூபாய் லாபம் எதிர்பாக்குறேன்’’ என்றவர் ஜீவாமிர்த கரைசலை தென்னை மரங்களுக்குத் திறந்து விட்டபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, கோபால், செல்போன்: 93456 45405.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism