சமூகம்
Published:Updated:

டெல்டாவுக்கு கைகொடுக்கும் ‘கைஃபா!’

டெல்டாவுக்கு கைகொடுக்கும் ‘கைஃபா!’
பிரீமியம் ஸ்டோரி
News
டெல்டாவுக்கு கைகொடுக்கும் ‘கைஃபா!’

கஜா கொடுத்த படிப்பினை...

இரண்டாம் உலகப்போரால் நிலைகுலைந்த ஜப்பான் மக்கள், அதன் பிறகுதான் தன்னெழுச்சியுடன் எழுந்து பொருளாதாரத்தில் பெரும்வளர்ச்சி கண்டார்கள். கஜா புயலால் பேரழிவைச் சந்தித்த காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதி மக்கள், அதுபோல் பெரும் திருப்புமுனைக் கான பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

கடைமடைப் பகுதிகளுக்கு சரிவர காவிரி நீர் வந்து சேர்வதில்லை என்பதால், பல ஆண்டுகளாகவே சிக்கல் நீடிக்கிறது. அத்துடன், இருக்கின்ற நீர்நிலைகளைச் சீரமைக்காமல் அரசாங்கம் கைவிட்டதால் அவையும் கேட்பாரற்றுப்போயின. கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. இந்த நிலையில் கஜா புயலால் அனைத்தையும் இழந்த அந்தப் பகுதி மக்கள், அழிவிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். கோமா நிலையில் கிடக்கும் நீர்நிலைகளுக்கு உயிர்கொடுத்தால் மட்டுமே வளமான எதிர்காலத்தை உருவாக்க இயலும் என்ற சிந்தனையுடன் ‘கைஃபா’ (KAIFA- Kadaimadai Area Farmers Association) என்கிற கூட்டியக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள் டெல்டா மக்கள். தஞ்சை மாவட்டம் பேராவூரணி, பட்டுக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆலங்குடி உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இணைந்து இதை உருவாக்கியுள்ளனர். இதில் வணிகர்கள், திரைப்படத் துறையினர், விவசாயிகள், வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள் என பல்வேறு தரப்பினரும் இடம்பெற்றுள்ளனர்.

முதல்கட்டமாக, பேராவூரணியில் பெரியகுளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது கூட்டியக்கம். இந்தக் குளத்தின் மொத்த பரப்பளவு 564 ஏக்கர். இந்தப் பகுதியைச் சேர்ந்த கைஃபா உறுப்பினர் தங்க.கண்ணன் கூறுகையில், ‘‘இந்தக் குளம் 20 ஆண்டுகளுக்கு முன்பு நல்ல நிலையில் இருந்தது. நீண்ட காலமாக மராமத்துப் பணிகள் நடைபெறாததால், சிதிலமடைந்துவிட்டது. காலப்போக்கில் கழிவுகள் கொட்டப்பட்டு, குளமே கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. இதை தூர்வாரி, முழுமையாக நீரைத் தேக்கினால், 7,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். குடிநீர்ப் பஞ்சமும் தீரும்.

டெல்டாவுக்கு கைகொடுக்கும் ‘கைஃபா!’

கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டபோதுகூட இந்தக் குளத்தைச் சீரமைக்க, யாரும் முயற்சி எடுக்கவில்லை. கஜா புயல், எங்களுக்கு பாடம் கற்பித்துவிட்டது. அரசாங்கத்தை மட்டுமே நம்பியிருந்தால், விடிவு கிடைக்காது. மக்களாக முன்வந்து நீர்நிலைகளை மீட்டெடுத்தால்தான் பழைய நிலைக்குத் திரும்ப முடியும். ஒட்டங்காடு, சேந்தன்குடி, ஆவுடையாணி, மேற்பனைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் கைஃபா இறங்கியிருக்கிறது” என்றார் நம்பிக்கையுடன்.

கைஃபா துணைத் தலைவரான நிமல் ராகவன், ‘‘இந்த அமைப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பண உதவி, உடல் உழைப்பு என்று தங்களால் எது முடியுமோ அதைச் செய்கிறார்கள். டிராக்டர், ஜே.சி.பி இயந்திரங்கள் வைத்திருப்போர் அதைத் தருகிறார்கள். தூர்வாரும் பணியில் ஈடுபடும் தன்னார்வலர் களுக்கு, கிராம மக்கள் உணவு சமைத்துத் தருகிறார்கள். புதுமணத் தம்பதிகளும், குழந்தைகளின் பிறந்த நாளைக் கொண்டாடுபவர்களும் நீர்நிலை மீட்புக்கு நிதி கொடுக்கிறார்கள். இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்பவர்களும் பணம் அனுப்பியிருக்கிறார்கள்.

பேராவூரணி பெரியகுளத்தைத் தூர்வார மட்டுமே இதுவரை 20 லட்சம் ரூபாய்க்கும்மேல் செலவாகியிருக்கிறது. இன்னும் பல லட்சம் ரூபாய் தேவைப்படும். இந்தக் கணக்குகளையெல்லாம் ஒளிவுமறைவு இல்லாமல், வெளிப்படையாக மக்கள் பார்வைக்கு வைக்கிறோம். ‘கைஃபா’ பெயரில் வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி, அதில் தினம்தோறும் வரவு செலவுக் கணக்குகளைப் பதிவுசெய்கிறோம். கடைமடைப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான நீர்நிலைகள் சிதிலமடைந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் தூர்வார, சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதி தேவை. அதற்கான வழிகாட்டுதல்களையும் கைஃபா மேற்கொள்கிறது.

தூர்வாரும்போது எடுக்கப்படும் மண்ணைக்கொண்டு அந்தந்தக் குளங்களின் நடுவில் மண் திட்டுகள் அமைக்கிறோம். அங்கு காடுகள் வளர்க்கப்படும். குளத்தின் கரைகளை பலப்படுத்தி, அங்கும் மரங்கள் வளர்க்கப்படும். கஜா புயலில் நாங்கள் இழந்த லட்சக்கணக்கான மரங்களை இதுபோன்ற செயல்களால்தான் ஈடுசெய்ய இயலும். சமீபத்தில் தமிழக அரசின் குடிமராமத்துப் பணிகளை ஆய்வுசெய்ய வந்த மத்திய குழுவினர், எங்கள் பணிகளைப் பார்த்துவிட்டுப் பாராட்டினார்கள். தூர்வாரும் பணிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என்று அவர்களிடம் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். விரைவில் நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் கடைமடைப் பகுதிகள் செழிப்பாக மாறும். இது எங்கள் லட்சியம்’’ என்றார் வைராக்கியத்துடன்!

கஜா புயலால் உருக்குலைந்த பூமி, மீண்டும் கம்பீரமாக எழுந்து நடைபோட நாமும் வாழ்த்துவோம்!