Published:Updated:

நிரம்பாத ஏரிகள்… தாமதமாகும் விவசாயப் பணிகள்!- மழைக்காக காத்திருக்கும் காஞ்சிபுரம் விவசாயிகள்

அரபிக் கடலில் உருவான `கியார்’ மற்றும் `மஹா’ புயல்களால் தமிழகத்துக்கு மழை கிடைக்கவில்லை. இதனால் காற்றின் ஈரப்பதமும் குறைந்து மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மீண்டும் புயல் ஏற்பட்டால் மட்டுமே மழைக்கு வாய்ப்புள்ளது.

நிரம்பாத ஏரிகள், விவசாயி
நிரம்பாத ஏரிகள், விவசாயி

காஞ்சிபுரம் மாவட்டத்தை ஏரிகள் மாவட்டம் என அழைப்பார்கள். ஏரி நீரை நம்பியே பெரும்பகுதி விவசாயம் நடைபெறுகிறது. கடந்த சில தினங்களாகப் பெய்துவந்த வடகிழக்குப் பருவமழை திடீரென நின்று போனதால் விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் கடந்த ஆண்டு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் வறட்சியைச் சந்தித்தன. குறிப்பாக வட தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் பெரிய அளவில் வறட்சியைச் சந்தித்தன. பாலாற்றில் ஆழ்துளைக் கிணறுகள் மூலமும், திருப்போரூர், ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளில் இருந்து விவசாயக் கிணறுகள் மூலமாகவும் சென்னைக்கு லாரிகளில் தண்ணீரைக் கொண்டுசென்றனர். இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மேலும் உள்ளே சென்றது.

ஏரி
ஏரி

தென்னை போன்ற மரங்கள் காய்ந்து போயின. இந்த வருடத்துக்கான தென்மேற்குப் பருவமழை ஓரளவு பெய்ததால் குடிநீர் பிரச்னை ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தது. கடந்த சிலதினங்களாக வடகிழக்குப் பருவமழை பெய்யத் தொடங்கிய நிலையில் ஏரிகளுக்குத் தண்ணீர் வரத் தொடங்கியது. அரபிக் கடலில் உருவான `கியார்’ மற்றும் `மஹா’ புயல்களால் தமிழகத்துக்கு மழை கிடைக்கவில்லை. இதனால் காற்றின் ஈரப்பதமும் குறைந்து மீண்டும் வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ளது. மீண்டும் புயல் ஏற்பட்டால் மட்டுமே மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள ஏரிகளிலும் தண்ணீர் குறையத் தொடங்கியுள்ளது. பொதுப்பணித்துறை வசம் உள்ள 909 ஏரிகளில் 61 ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன. 101 ஏரிகள் 75 சதவிகிதத்துக்கு மேலாகவும், 149 ஏரிகள் 50 சதவிகிதத்துக்கு மேலாகவும், 340 ஏரிகள் 25 சதவிகித்துக்கு மேலாகவும், 225 ஏரிகள் 25 சதவிகித்துக்கு குறைவாகவும் நிரம்பியுள்ளன.

அரபிக் கடலில் உருவான `கியார்’ மற்றும் `மஹா’ புயல்களால் தமிழகத்துக்கு மழை கிடைக்கவில்லை. இதனால் காற்றின் ஈரப்பதமும் குறைந்து மீண்டும் வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளான தாமல், தென்னேரி, உத்திரமேரூர், கொளவாய், பாலூர், மதுராந்தகம், பல்லவன் குளம், தையூர், கொண்டங்கி, பொன்விளைந்த களத்தூர் உள்ளிட்ட ஏரிகள் பாதியளவுகூட நிரம்பவில்லை. இதனால் இந்த வருடமாவது பருவமழை பெய்யுமா என எதிர்பார்ப்போடு விவசாயிகள் காத்திருக்கிறார்கள். பருவமழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்பதால் கலக்கத்தில் இருக்கிறார்கள் காஞ்சிபுரம் விவசாயிகள்.