Election bannerElection banner
Published:Updated:

1 ஏக்கர் 25 சென்ட்... ஆண்டுக்கு ₹54 லட்சம்... அள்ளித்தரும் அக்வாபோனிக்ஸ் தொழில்நுட்பப் பயிற்சி!

அக்வாபோனிக்ஸ்
அக்வாபோனிக்ஸ்

அதனால 1 லட்சம் லிட்டர் கொள்ளவுள்ள மீன் தொட்டி அமைச்சேன். அதுக்கு மேல 500 முதல் 1,000 காய்கறிகள், பூக்கள்னு செடிகளை பிளாஸ்டிக் பக்கெட்கள்ல வெச்சு வளர்த்துப் பார்த்தோம். நல்ல வருமானம் கிடைச்சது.

'நிலமிருக்கும் இடத்தில் நீர் இல்லை; நீரிருக்கும் இடத்தில் நிலமில்லை’ என்பதுதான் பெரும்பாலான விவசாயிகளின் புலம்பலாக இருக்கிறது. இந்நிலையில், ஆராய்ச்சி மற்றும் புதுப்புது யுக்திகளின் மூலமாக இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியும் என்பது குறித்த ஆராய்ச்சிகளும் அதன் முடிவுகளும் அவ்வப்போது வந்தவண்ணம் உள்ளன. அவற்றையெல்லாம் பயன்படுத்தி வெற்றிகாண்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். அந்த வகையில், `அக்வாபோனிக்ஸ்’ என்கிற பெயரில் ஒருங்கிணைந்த நவீன விவசாய முறையைக் கையில் எடுத்து அசத்தி வருகிறார் ஜெகன் வின்சென்ட்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் வின்சென்ட். அமெரிக்க உள்ளிட்ட மேலைநாடுகளில் பிரபலமான அக்வாபோனிக்ஸ் தொழில்நுட்பத்தில் தொட்டியில் மீன், மேல் பகுதியில் காய்கறி விவசாயம் செய்து வருகிறார். ஒரு ஏக்கர் 25 சென்ட் நிலத்தில் அமைந்துள்ள நவீன ஒருங்கிணைந்த பண்ணை மூலமாக ஆண்டுக்கு 54 லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்த்து வருகிறார். அவரது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், அக்வாபோனிக்ஸ் தொடர்பான பயிற்சியும் அளிக்க இருக்கிறார்.

ஜெகன் வின்சென்ட்
ஜெகன் வின்சென்ட்

அக்வாபோனிக்ஸ் பற்றி பேசிய ஜெகன் வின்சென்ட், ``2003-ம் வருஷம் அமெரிக்காவுல மென்பொருள் துறையில வேலை செய்துகிட்டிருந்தேன். அமெரிக்க விவசாயிகள் கொஞ்ச நிலம் இருந்தாலும், அதுல அதிகமான பயிர்கள், மீன் வளர்ப்புனு தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்தி விவசாயம் செய்துகிட்டிருந்தாங்க. எனக்கு அது ஆச்சர்யத்தையும், தொழில்நுட்பத்தைக் கத்துக்கணும் னுங்கற ஆர்வத்தையும் கொடுத்துச்சு. குறிப்பிட்டு சொல்லணும்னா வீட்டுக்குப் பின்னால இருந்த குறைவான நிலங்கள்லயும் அவங்க விவசாயம் செஞ்சதைப் பார்க்க முடிஞ்சது. அங்க வருஷத்துக்கு 5, 6 பருவங்கள் மாறிக்கிட்டே இருக்கும்.

சில நேரங்கள்ல பயிர் கைகொடுக் காதப்போ மீன் வளர்ப்பு கைகொடுக்கும். மீன் வருமானம் இல்லாதப்போ பயிர்கள் கைகொடுக்கும்னு ஒரு புதுவிதமான தொழில்நுட்பத்தைப் பார்க்க முடிஞ்சது. அதை ஏன் நாம இந்தியாவுல பண்ணக் கூடாதுனு தோணுச்சு. இதுக்கான தேடல்ல இறங்கி கத்துக்க ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துக்கு மேல நம்ம வேலையோட சேர்த்து விவசாயமும் செய்யணும்னு முடிவு பண்ணி இந்தியா வந்துட்டேன். அப்புறமா இந்த நிலத்தை வாங்குனேன். மொத்தமா 1 ஏக்கர் 25 சென்ட். வாங்கும்போதே ஹைட்ரோபோனிக்ஸ், அக்வாபோனிக்ஸ் தொழில்நுட்பங் களைத்தான் பயன்படுத்தணும்னு முடிவு பண்ணிட்டேன். எடுத்தவுடனே அகலக்கால் வெச்சிடக் கூடாதுங்குறதுல தெளிவா இருந்தேன்.

அதனால 1 லட்சம் லிட்டர் கொள்ளவுள்ள மீன் தொட்டி அமைச்சேன். அதுக்கு மேல 500 முதல் 1,000 காய்கறிகள், பூக்கள்னு செடிகளை பிளாஸ்டிக் பக்கெட்கள்ல வெச்சு வளர்த்துப் பார்த்தோம். நல்ல வருமானம் கிடைச்சது. பிறகு, படிப்படியா மீன் தொட்டிகளையும் அதிகப்படுத்தி, செடிகளை அதிகரிச்சோம். இப்போ 70 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியா விரிவாகியிருக்கு. இந்தப் பண்ணையை ஆரம்பிச்சு, கடந்த 5 வருஷமா வெற்றிகரமா நடத்திட்டு இருக்கேன்.

அக்வாபோனிக்ஸ்
அக்வாபோனிக்ஸ்

அக்வாபோனிக்ஸை பெரிய அளவுல செய்ய வேண்டாம். முதல்ல சின்ன அளவுல செஞ்சு, நல்லா இருந்தா விரிவுபடுத்தலாம். நான் இதற்குச் செய்த முதலீடுகள் ரொம்பவே அதிகம். நிலம் வாங்கியது இல்லாம, 35 லட்சம் ரூபாய் செலவு பண்ணியிருக்கேன். இப்ப வருஷா வருஷம் அதைவிட அதிக வருமானம் எடுத்துக்கிட்டு இருக்கேன். 7 ஏக்கர் நிலத்துல எவ்ளோ பயிர்களை உற்பத்தி செய்ய முடியுமோ அதை இந்த ஒரு ஏக்கர்ல பண்ண முடியுமானு முயற்சி செய்துகிட்டிருக்கேன். ஆர்வம் இருக்குறவங்க முழு மனசோட அக்வா போனிக்ஸ்ல இறங்கலாம். இது சம்பந்தமான பயிற்சிகளையும் நான் கொடுத்துகிட்டு வர்றேன். அந்த வரிசையில வர்ற ஏப்ரல் 10-ம் தேதி காலை 9 மணி முதல் 10.30 வரைக்கும் என்னோட பண்ணையை பத்தி நேரலையில பயிற்சி கொடுக்க போறேன். நீங்களும் அதில் கலந்துகிட்டு பலன் பெறலாம்.”


இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்து கொள்ளவும். இந்த லிங்க்கை https://bit.ly/2PiILO7 க்ளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ளவும் அல்லது க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு