Published:Updated:

கமிஷனுக்காக இடம் மாற்றப்பட்டதா தடுப்பணை? - குமுறும் காஞ்சிபுரம் விவசாயிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விவசாயிகள் பாலாற்றில் தடுப்பணை கட்ட சொல்லும் இடங்கள்...
விவசாயிகள் பாலாற்றில் தடுப்பணை கட்ட சொல்லும் இடங்கள்...

பிரச்னை

பிரீமியம் ஸ்டோரி
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே பாலாற்றின் குறுக்கே பினாயூர்- உள்ளாவூர் இடையே தடுப்பணை கட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த சில மாதங்களுக்கு முன் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். உள்ளாவூர் பாலாற்றங்கரையில் அதற்கான பூமி பூஜையும் போடப்பட்டது.

ஆனால், பூமி பூஜை போடப்பட்ட இடத்தில் தடுப்பணையைக் கட்டாமல் அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பே பழைய சீவரம் - பழவேரி இடையே தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் முன் தொடங்கப் பட்டு வேலைகள் வேகமெடுத்துள்ளன. இது காஞ்சிபுரம் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமிஷனுக்காக இடம் மாற்றப்பட்டதா தடுப்பணை? - குமுறும் காஞ்சிபுரம் விவசாயிகள்!

இதற்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் பாலாற்றுப் பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதனிடம் பேசினோம், “பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் 50 ஆண்டுக்காலக் கோரிக்கை. 2017-ம் ஆண்டு, முதல்வரை சந்தித்துத் தடுப்பணைக்காக மனு கொடுத்தோம். அதே ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், ‘பாலாற்றில் ஏழு இடங்களில் தடுப்பணை கட்டப்படும்’ என்று அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த ஏழு தடுப்பணை களில் ஒன்றுதான் பினாயூர்- உள்ளாவூர் இடையேயான தடுப்பணை.

2020 ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி, காணொளிமூலம் உள்ளாவூரில் தடுப்பணை அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர். பல ஆண்டுக்கால எங்கள் கனவு நிறைவேறப் போகிறதென நாங்கள் மகிழ்ச்சியில் இருந்தோம். ஆனால், அடுத்த சில நாள்களிலேயே பொதுப்பணித்துறையினர், முதல்வர் அடிக்கல் நாட்டிய இடத்தில் தடுப்பணையைக் கட்டாமல் சுமார் 2 கிலோமீட்டருக்கு முன்னால் பழைய சீவரம் - பழவேரி பகுதியில் தடுப்பணை கட்டும் பணியை ஆரம்பித்தனர். அந்த இடத்தில் இருபுறமும் மலை இருக்கிறது. மலைக்கு வெளியேதான் கிராமங்கள் இருக்கின்றன. மலையைக் கடந்து பினாயூர்- உள்ளாவூர் பகுதியில் தடுப்பணை கட்டினால்தான் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் ஊரும். காரணம் அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில் 30 அடி ஆழம் வரை பாறைகள்தான். மேல் ஊற்று நீரில்தான் அங்கே விவசாயம் நடக்கிறது.

கமிஷனுக்காக இடம் மாற்றப்பட்டதா தடுப்பணை? - குமுறும் காஞ்சிபுரம் விவசாயிகள்!

அப்படி இருக்கையில், நீர் ஊற்றை அதிகப்படுத்தி விவசாயத்தைச் செழிக்கச் செய்ய வேண்டுமென்றால் உள்ளாவூரில்தான் அணை கட்ட வேண்டும். அதைவிடுத்துப் பழவேரியில் தடுப்பணையைக் கட்டுவது விவசாயிகளுக்கு முழுமையாகப் பலன் அளிக்காது. இவ்வளவையும் ஆதாரபூர்வமாக எடுத்துச் சொல்லியும் இந்தப் பணிகளை ஆரம்பித்து வைத்த கலெக்டர் பொன்னையா எங்களது குரலுக்குச் செவி சாய்க்க வில்லை’’ என்றார் ஆதங்கத்துடன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சண்முகமோ, ‘‘இந்தத் திட்டத்தின் மதிப்பு 42 கோடி என்கிறார்கள். உள்ளாவூர்-பினாயூர் இடையே தடுப்பணை கட்டினால் அதிகச் செலவாகும். பெரியளவில் கமிஷன் அடிக்க முடியாது என்பதற்காகத்தான் திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றியுள்ளார்கள். தங்களது சுய நலனுக்காக ஒரு சிலர் அதற்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். நாங்கள் நடத்த விருந்த விளக்கப் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுத்தார்கள். ஆனாலும் நாங்கள் விடுவதாக இல்லை. விவசாயிகளை அணிதிரட்டி தடுப்பணை கட்டும் இடத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். செப்டம்பர் முதல் அக்டோபர் வரை தடுப்பணை பணியை நிறுத்தி வைத்திருந் தார்கள். இப்போது பணியை ஆரம்பித் துள்ளார்கள். பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பலன் இல்லை. எனவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறோம்” என்றார் ஆவேசமாக.

அமுதன், நேரு, மகேஸ்வரி
அமுதன், நேரு, மகேஸ்வரி

பழைய சீவரம் - பழவேரி இடையே தடுப்பணை கட்டலாம் என்று அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் நேருவிடம் பேசினோம். “விவசாயிகள் கேட்கும் இடத்தில் தடுப்பணையை அமைத்தால் 110 கோடி ரூபாய்த் தேவைப்படும். கிட்டதட்ட மூன்று மடங்குச் செலவு அதிகமாகும். ‘தடுப்பணையை உள்ளாவூரில் கட்டினால் என்ன நன்மை? பழவேரி யில் கட்டினால் என்ன நன்மை?’ என 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளைக் கூட்டி கலெக்டர் பொன்னையா விளக்கிப் படமெல்லாம் போட்டுக் காண்பித்தார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், ‘அரசாங்கம் தடுப்பணையை எங்கு கட்டச் சொல்கிறதோ அங்கேயே கட்டுங்கள்” என்றுதான் சொன்னார்கள். நான் மட்டும் சொல்லவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து வரும் இந்தத் திட்டத்தை நான் வரவேற்கிறேன்’ என்றார்.

விவசாயிகள் பாலாற்றில் தடுப்பணை கட்ட சொல்லும் இடங்கள்...
விவசாயிகள் பாலாற்றில் தடுப்பணை கட்ட சொல்லும் இடங்கள்...

இது தொடர்பாகக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியிடம் பேசினோம். அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்டவர், “கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சிய ராகப் பொறுப்பேற்றுள்ளேன். இதுதொடர் பான விஷயங்களைச் சம்பந்தப் பட்ட அதிகாரிகளோடு கலந்தாலோசித்துவிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்கிறேன்” என்று உறுதியளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு