Published:Updated:

அதிகரிக்கப்பட்ட கொள்முதல் நிலையங்கள்! -காஞ்சிபுரம் விவசாயிகள் மகிழ்ச்சி

நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் நிலையம்

பருவ மழை தாமதத்தால் இன்னும் சில விவசாயிகள் அறுவடை செய்யாமல் இருக்கிறார்கள். மே மாதம் வரை அறுவடை இருக்கும் என்பதால், அதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வரும்.

காஞ்சிபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில், உலர் களங்களில் சேமித்துவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்தன. கோணிப்பை பற்றாக்குறையாலும், போதிய அளவு நேரடி கொள்முதல் நிலையங்கள் இல்லாததும்தான் நெல் மூட்டைகள் மழையில் நனைவதற்குக் காரணம் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகரிக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்மூலம் விரைவாக நெல் கொள்முதல் செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நடவடிக்கை எடுத்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விவசாய உற்பத்திப் பொருள்கள் விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுவந்தது. இந்த நிலையில், விவசாய உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் விற்பனைக்காக சில கட்டுப்பாடுகள் தமிழக அரசால் தளர்வு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, விவசாயப் பொருள்கள் கொள்முதல் விற்பனை வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் பெய்த பருவ மழையில் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஏரிகள் ஓரளவு நிரம்பின. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு கோ-61 ரக நெல் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது.

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த வருடம் 36 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன. இதன் மூலமாக 24,725 மெட்ரிக் டன் மட்டுமே விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தரகர்கள் மூலமாக தங்களின் நெல் மூட்டைகளை விற்பனை செய்தார்கள். தற்போது, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மொத்தம் 75 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில், காஞ்சிபுரத்தில் மட்டும் 36 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இதில் 22,402 மெட்ரிக் டன் கொள்முதல் செய்திருக்கிறார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் 22,761 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்திருக்கிறார்கள். மூன்று நாள்களுக்கு ஒரு முறை கோணிப்பைகள் மறுசுழற்சி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு

நெல் தரத்திற்கேற்ப குறைந்தபட்ச விலையாக 1,100 ரூபாயாகவும் அதிக பட்சம் 1,200 வரையும் நெல் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதன்மூலம் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள். நெல் கொள்முதல் செய்யப்பட்ட 3 நாள்களுக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வுசெய்துவருகிறார். பருவ மழை தாமதத்தால் இன்னும் சில விவசாயிகள் அறுவடை செய்யாமல் இருக்கிறார்கள். மே மாதம் வரை அறுவடை இருக்கும் என்பதால், அதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டுவரும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு