கால்நடை
நாட்டு நடப்பு
Published:Updated:

ஆண்டுக்கு ரூ.5 லட்சம்... ஆன்லைனில் நெய் விற்பனை! காஞ்சிபுரத்தில் கலக்கும் பட்டதாரி இளைஞர்!

பிரவீன் குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரவீன் குமார்

மதிப்புக்கூட்டுதல்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள இடமச்சி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் குமார், கிர் கலப்பின மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த மாடுகள் மூலம் கிடைக்கும் பாலை அப்படியே விற்பனை செய்யாமல்... நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி என மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் நிறைவான லாபம் பார்த்து வருகிறார்.

ஒரு காலைப் பொழுதில் இவருடைய பண்ணையைப் பார்வையிடச் சென்றோம். பால் கறவை மற்றும் கொட்டகை பராமரிப்புப் பணிகளை முடித்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த பிரவீன் குமார் இன்முகத்துடன் நம்மை வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

பிரவீன் குமார்
பிரவீன் குமார்

“இந்தப் பண்ணை அமைஞ் சிருக்குற இடமச்சி கிராமம்தான் என் பூர்வீகம். பல தலைமுறையா விவசாயம்தான் எங்க குடும்பத் தொழில். நான் எம்.எஸ்ஸி முடிச்சுட்டு... டெல்லியில விலங்குகள் நலனுக்காக இயங்குற தனியார் அமைப்புல சில வருஷம் வேலை செஞ்சேன். சில காரணங்களால அந்த வேலையில என்னால தொடர முடியாமல் போனாலும்கூட, அதுதான் என் வாழ்க்கையில ஒரு முக்கியத் திருப்பு முனை ஏற்பட ஆரம்பப் புள்ளியா இருந்துச்சு. கால்நடைகள் வளர்ப்பு சார்ந்த ஒரு தொழில் செய்யணும்ங்குற ஆர்வம் அப்பதான் எனக்குள் ஏற்பட்டுச்சு. ஆனால், என்னோட விருப்பத்தை உடனடியா நிறைவேத்த முடியலை. கல்வி நிறுவனங்களுக்கான ஆலோசகரா பன்னிரண்டு வருஷம் வேலை செஞ்சேன். அந்தப் பணி தொடர்பா வெளி மாநிலங்கள்ல உள்ள பல கிராமங்களுக்கும் போகக்கூடிய வாய்ப்பு அமைஞ்சது. கால்நடை வளர்ப்புல அனுபவமுள்ள பலரையும் சந்திச்சு, நிறைய தகவல்களைத் தெரிஞ்சுகிட்டேன்.

மாட்டுடன் பிரவீன்குமார்
மாட்டுடன் பிரவீன்குமார்

மாட்டுப் பண்ணை தொடங்கணுங்கற எண்ணம் எனக்குத் தீவிரமானதுனால, இந்த நிலத்தை வாங்கிப் போட்டு 2017-ம் வருஷம் இந்தப் பண்ணையை ஆரம்பிச்சேன். ஆரம்பத் துல என்னோட அப்பா ரொம்ப அதிருப்தியில இருந்தார். ‘நல்லா படிக்கலைனா மாடு மேய்க்கத்தான் போகணும்னு சொல்லி சொல்லியே உன்னை வளர்த்தேன். ஆனா, நீ நல்லா படிச்சுட்டு மாடு மேய்க்க வந்துட்டியே’னு ஆதங்கப்பட்டார். அதுக்குப் பிறகு என்னோட தெளிவான திட்டமிடலையும் தீர்க்கமான முடிவையும் புரிஞ்சுகிட்டு என்னை ஊக்கப் படுத்த ஆரம்பிச்சுட்டாரு. இப்ப என்னோட குடும்பத்துல உள்ள எல்லாருமே எனக்குப் பக்கபலமா இருக்காங்க’’ என்று சொன்னவர், மாட்டுப் பண்ணை அனுபவத்தை விவரிக்கத் தொடங்கினார்.

மாடுகளுடன்
மாடுகளுடன்

‘‘கறவை மாடுகள் வளர்க்குறவங்க பெரும்பாலும் பால் விற்பனையில மட்டும் தான் கவனம் செலுத்துறாங்க. ஆனா, நாம பால் விற்பனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. நெய், வெண்ணெய் உட்பட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயார் பண்ணி விற்பனை செய்றதுலதான் அதிக கவனம் செலுத்தணும்னு தீர்மானிச் சேன். என்கிட்ட கிர் கலப்பினத்துல 19 பசு மாடுகளும், கிர் இனத்தைச் சேர்ந்த ஒரு காளை மாடும் இருக்கு. அடர்தீவனம், உலர்தீவனம், பசுந்தீவனம்னு போதுமான அளவு கொடுக்கிறதுனால, என்னோட மாடுகள் நல்லா ஆரோக்கியமா வளருது. பாலும் நல்ல தரமா இருக்கு.

என்னோட மாடுகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 கிலோமீட்டர் தூரம் நடக்கும். அதுக்கேத்த மாதிரி மேய்ச்சலுக்கு விடுவேன். இந்தப் பண்ணை அமைஞ்சிருக்குற அரை ஏக்கர்ல நிலத்துலயும்... பண்ணையைச் சுத்தியிருக்கிற புறம்போக்கு நிலத்துலயும் மேய்ச்சலுக்கு விட்டுக்கிட்டு இருக்கேன். இங்க களைச்செடிகளும் களைபுற்களும் நிறைய கிடைக்குறதுனால, என்னோட மாடு களுக்குத் தேவையான பசுந்தீவனம் மேய்ச்சல் மூலமே கிடைச்சுடுது.

தயிர் கடைதல்
தயிர் கடைதல்
தயிர் கடைதல்
தயிர் கடைதல்
தயிர் கடைதல்
தயிர் கடைதல்

இந்தப் பண்ணைக்குப் பக்கத்துலயே என்னோட 3 ஏக்கர் நிலம் இருக்கு. என் பண்ணையில வேலை செய்றவர், அந்த நிலத்துல இயற்கை முறையில வருஷத்துக்கு ரெண்டு போகம் நெல் சாகுபடி செஞ்சுக்குவார். அறுவடை முடிஞ்சதும் வைக்கோலை எனக்குக் கொடுத்திடுவார். தவிர, என் உறவினரோட வயல்ல இருந்தும் வைக்கோல் வந்துடும். அதனால உலர்தீவனத்துக்கு எந்தவித தட்டுப்பாடும் ஏற்பட்டதில்லை. உளுந்துப்பொட்டு, துவரம்பொட்டு, அரிசித் தவிடு, புண்ணாக்கு, தாது உப்பு... இதை யெல்லாம் கலந்து நானே அடர்தீவனம் தயாரிச்சு என்னோட மாடுகளுக்குக் கொடுக்குறேன்’’ என்றவர், கன்றுகளுடன் கொஞ்சியபடியே பேச்சை தொடர்ந்தார்...

“பண்ணையில என்னோட நேரடி கவனிப்பு ரொம்பவே அவசியம்னு நினைக் குறதுனால, இதுல முழுமையான கவனம் செலுத்துறேன். அதனால, என்னதான் முக்கியமான விஷேசங்களா இருந்தாலும் நான் வெளியூர்களுக்குப் போகுறதை இயன்ற வரைக்கும் தவிர்த்துக்கிட்டு இருக்கேன். என் பண்ணையில இருக்கிற ஒவ்வொரு மாட்டோட தனித் தனியான குணாதிசயத் தையும் உணர்வுகளையும் உள்ளார்ந்து புரிஞ்சுகிட்டு மதிப்புக் கொடுப்பேன். அதுக்கேத்த மாதிரி மாடுகளைக் கையாள் வேன். இதனால என்னோட மாடுகள் உளவியல் ரீதியாகவும் ஆரோக்கியமா வளருது. எங்க பண்ணையில வளர்ற எல்லா மாடுகளுக்கும் பெயர் வெச்சிருக்கோம். ஒவ்வொரு மாடுகிட்டயும் தினமும் கொஞ்ச நேரமாச்சும் பேச்சு கொடுப்பேன்’’ என்றவர், அங்கிருந்த ஒரு காளை மாட்டின் அருகில் சென்று, ‘‘இதோட பேரு ராம்போ... இது நல்லா திடகாத்திரமா இருக்கு பாருங்க. இதோட எடை 600 கிலோ’’ என அதைக் கொஞ்சிவிட்டு அங்கிருந்த நகர்ந்தவர், இந்தப் பண்ணையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் தன் வீட்டுக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

நெய் காய்ச்சுதல்
நெய் காய்ச்சுதல்
நெல் காய்ச்சுதல்
நெல் காய்ச்சுதல்‘‘வருஷம் முழுக்க 8 - 10 மாடுகள் கறவையில இருக்கும். தினமும் 40 – 50 லிட்டர் பால் கிடைக்குது. அதை நெய்யா காய்ச்சி விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன். கடைகளுக்கு விற்பனை செய்றதைவிட மக்கள்கிட்ட நேரடியா விற்பனை செஞ்சாதான் நியாய மான விலை கிடைக்கும்ங்கறதுனால, அதுக்கேத்த மாதிரி என்னோட விற்பனை வியூகத்தை அமைச்சுக்கிட்டேன். இந்தப் பண்ணையை ஆரம்பிக்கும்போதே ஆன்லைன் விற்பனைக்கான பயிற்சியும் எடுத்துக்கிட்டேன். தினமும் சராசரியா 45 லிட்டர் பால்ல இருந்து, ஒன்றரை கிலோ நெய் தயார் செய்றேன். ஒரு மாசத்துக்கு மொத்தம் 45 கிலோ நெய் விற்பனைச் செய்றேன். ஒரு கிலோவுக்கு 1,800 ரூபாய் வீதம் மொத்தம் 81,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. வெண்ணெய், பாலாடைக்கட்டி மூலமா 35,000 ரூபாய் கிடைக்குது. ரெண்டும் சேர்த்து 1,16,000 ரூபாய் வருமானம். மாடுகளுக்கான தீவனம், நெய் மதிப்புக் கூட்டுதலுக்கான செலவுகள் போக 42,000 ரூபாய் நிகர லாபமா கிடைச்சுகிட்டு இருக்கு. நெய்க்கான சந்தை இப்போதான் வளர்ந்து கிட்டு வருது. அது வளர வளர லாபம் இன்னும் அதிகரிக்கும். இப்ப கிடைச்சு கிட்டிருக்கிறத வெச்சு பார்த்தா, மாடுகள் வளர்ப்புமூலம், எனக்கு வருஷத்துக்கு 5,04,000 ரூபாய் லாபம் கிடைச்சுக்கிட்டு இருக்கு’’ எனச் சொல்லி முடித்தார்.தொடர்புக்கு, பிரவீன் குமார்.

செல்போன்: 99400 32341

நெய் தயாரிக்கும் செய்முறை
நெய் தயாரிக்கும் செய்முறை
நெய் தயாரிக்கும் செய்முறை
நெய் தயாரிக்கும் செய்முறை
வடிகட்டுதல்
வடிகட்டுதல்
நெய்
நெய்
பாட்டிலில் அடைத்தல்
பாட்டிலில் அடைத்தல்

நெய் தயாரிப்பில் வெற்றிலை, அஸ்வகந்தா!

‘‘காய்ச்சிய பாலை 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குக் கீழே வந்ததும் உறை ஊத்தி தயிரா மாத்துவேன். மெஷின் மூலம் வெண்ணெயைப் பிரிச்செடுத்து, மூணு முறை சுத்தமான தண்ணியில கழுவிட்டு, பிரிட்ஜ்ல வெச்சுடுவேன். மறுநாள் அதை எடுத்து மறுபடியும் மூணு முறை தண்ணியில நல்லா கழுவிட்டு, நெய் காய்ச்ச ஆரம்பிப்போம்.

மிதமான வெப்பநிலையில வெண்ணெயை காய்ச்சினாதான் நெய் தரமா இருக்கும். ஆனா, நெய் உற்பத்தியில ஈடுபடக்கூடிய பெரிய நிறுனங்கள் பலவும் செலவை குறைக்குறதுக்காகவும் உற்பத்தி விரைவா நடக்குறதுக்காகவும் 120 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில நெய் காய்ச்சுவாங்க. நாங்க வீட்டுலயேதான் நெய் காய்ச்சுறோம். பாத்திரத்துல வெண்ணெயை போட்டு, 80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குள், பல மணிநேரம் பதமா காய்ச்சுவோம். இதனால, நெய்ல இயல்பா இருக்கக்கூடிய சத்துகள் குறையாமல் தக்க வைக்கப்படுது. நெய்ல மணமும் சுவையும் அதிகமா இருக்கும். நிறத்துக்காகவோ, மணத்துக்காகவோ... நெய்ல ரசாயனங்கள் எதுவும் நாங்க சேர்க்கிறதில்லை. 45 லிட்டர் பால்ல இருந்து தயிர், வெண்ணெய்னு மாறி கடைசியா ஒன்றரை லிட்டர் நெய்தான் கிடைக்கும். அதைக் கண்ணாடி பாட்டில்ல அடைச்சுப் பேக்கிங் பண்ணிடுவோம்.

நம்மூர்ல முருங்கையிலைச் சேர்த்து நெய் காய்ச்சுற மாதிரி, கோவா மாநிலத்துல பலரும் வெற்றிலையைப் பயன்படுத்துவாங்க. அதுபோல முருங்கையிலை தவிர, வெற்றிலை, அஸ்வகந்தா, காய்ந்த மஞ்சள் கிழங்கு, கறிவேப்பிலைனு வாடிக்கையாளர்களோட விருப்பத்துக்கு ஏற்ப பல்வேறு பொருள்களைச் சேர்த்து நெய் காய்ச்சிக் கொடுக்கிறோம்’’ என்கிறார் பிரவீன் குமார்.

மாடுகளுடன் கொட்டகையில்
மாடுகளுடன் கொட்டகையில்

கொட்டகை பராமரிப்பில் கூடுதல் கவனம்

சுற்றுச்சுவர் இல்லாமல் எளிமையான முறையில் காற்றோட்ட வசதியுடனும் மாட்டுப் பண்ணையை அமைத்திருக்கிறார் பிரவீன் குமார். இது குறித்துப் பேசியவர், “பண்ணையில போதிய காற்றோட்ட வசதி இல்லைன்னா, மாட்டுச் சிறுநீர்ல உருவாகிற அமோனியாவையும், சாணத்துல உருவாகுற மீத்தேன் வாயுவையும் மாடுகள் சுவாசிக்கும்போது அதுங்களோட உடல்நிலை பாதிக்கப்படும். அதனால, வாயுக்கள் வெளியேற பண்ணையில காற்றோட்ட வசதி சரிவர இருக்கணும். எனவேதான், பண்ணைக்கு நான் சுற்றுச்சுவர் அமைக்கலை. இதனால, கொட்டகைக்குள் வெப்பம் அதிகமா தங்காது. குளிர்காலத்துல மட்டும் கொட்டகையைச் சுத்தி கோணிப்பைகளைக் கட்டிவிடுவேன். தினமும் ரெண்டு முறை கொட்டகையைச் சுத்தம் பண்ணிவிடுவோம். கால்நடைகளோட வசிப்பிடத்தைச் சுத்தமா வெச்சுக்கிட்டாலே நோய்ப் பாதிப்புகள் ஏற்படுறதைக் கூடுமானவரைத் தவிர்க்கலாம்” என்றார்.

வெண்ணெய், பாலாடைக்கட்டி

‘‘ஆர்டருக்கு ஏற்ப வெண்ணெய், பாலாடைக்கட்டியும் தயார் செஞ்சு (Cheese) விற்பனை செய்றோம். என்னோட தயாரிப்புகளை ‘Mei Organic’ங்கிற பிராண்டு பெயர்ல தமிழ்நாடு, கர்நாடகா உட்படப் பல மாநிலங்களுக்கும் விற்பனை செய்றேன். சமூக வலைதளங்கள்ல விளம்பரம் பண்ணி விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன். நெய் தயாரிப்புக்கு நான் கடைப்பிடிக்கும் முறையில செலவுகள் அதிகம். அதனால, சந்தையில விக்கப்படுற பிரபல நிறுவனங்களோட நெய் விலையை விடவும் கொஞ்சம் கூடுதலான விலைக்குத்தான் என்னோட நெய்யை விற்பனை செய்றேன். ஆனாலும் மக்கள் ரொம்ப விரும்பி வாங்குறாங்க’’ என்கிறார் பிரவீன் குமார்.

நெய் பாட்டில்கள்
நெய் பாட்டில்கள்

மாட்டுப்பண்ணை...
3 விஷயங்கள் முக்கியம்!

“விவசாயம் அல்லது கால்நடை வளர்ப்புல இறங்கணும்னு ஆசைப் படக்கூடியவங்க... ஏற்கெனவே அந்தத் தொழில்ல நல்ல அனுபவமுள்ளவங்களோடு ஆறு மாதமாச்சும் பண்ணையில தங்கி வேலை செய்யணும். நம்மால முடியும்னு நம்பிக்கை வந்த பிறகுதான் புதுசா பண்ணை ஆரம்பிக்கணும். குறிப்பா, மாட்டுப் பண்ணைத் தொழிலைத் தொடங்குறதுக்கு முன்னாடியே... பால் அல்லது பால் சார்ந்த மதிப்புக்கூட்டுப் பொருள்களை விற்பனை செய்றதுக்கான வாடிக்கையாளர்களைப் பிடிக்கணும். எல்லாக் காலத்துலயும் தீவனம் சரியா கிடைக்கிறதையும், நோய் மேலாண்மை விஷயத்துலயும் தெளிவு இருக்கணும்” என்கிறார் பிரவீன் குமார்.