Published:Updated:

`செலவுகளைக் குறைக்கும் டூவீலர் சுமை வண்டி!’ - காஞ்சிபுரம் பட்டதாரி இளைஞர் அசத்தல்

குப்பைகளை அள்ள சுமை வண்டி
குப்பைகளை அள்ள சுமை வண்டி

சிறிய ரக வண்டிகள் கிடைத்தாலும், அதன் விலை மிக அதிகமாக இருந்தது. இதனால் பெரிய அளவில் முதலீடு செய்வதைத் தவிர்த்து பழைய பொருள்களைக்கொண்டு சிறிய அளவிலான வண்டியைத் தயாரித்திருக்கிறார்.

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் விவசாயத்திற்குத் தேவையான சிறிய ரக வண்டி ஒன்றைத் தயாரித்து, அதை இருசக்கர வாகனத்தோடு இணைத்து விவசாயத்திற்குப் பயன்படுத்தி வருகிறார். இது அப்பகுதி விவசாயிகளிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

மூட்டைகளை ஏற்றிச் செல்ல வண்டி
மூட்டைகளை ஏற்றிச் செல்ல வண்டி

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் பாரத். இவர் தன்னுடைய நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ஒருங்கிணைந்த பண்ணை முறையில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றையும் தன்னுடைய நிலத்தில் வளர்த்து வருகிறார். தோட்டத்திலிருந்து விளைபொருள்களை ஏற்றிச் செல்வதற்குத் தேவையான சிறிய ரக வண்டி அவருக்குத் தேவைப்பட்டது. சிறிய ரக வண்டிகள் கிடைத்தாலும், அதன் விலை மிக அதிகமாக இருந்தது. இதனால் பெரிய அளவில் முதலீடு செய்வதைத் தவிர்த்து பழைய பொருள்களைக் கொண்டு சிறிய அளவிலான வண்டியைத் தயாரித்திருக்கிறார். இந்த வண்டியில் காய்கறிகள், வைக்கோல், தொழுஉரம் உள்ளிட்டவற்றை ஏற்றிச் செல்ல பயன்படுத்தி வருகிறார். இவரைப் பார்த்து, அதே போல வண்டியைச் செய்ய அப்பகுதியில் உள்ள சிறு, குறு விவசாயிகள் முன்வந்துள்ளார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாரத், ``வட மாநிலங்களில் டூ வீலரில் சிறிய வண்டி ஒன்றை இணைத்துப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். அதேபோல வண்டியைச் செய்ய வேண்டும் என நினைத்தேன். நானே அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். வீடுகளில் வேண்டாம் எனத் தூக்கிப் போடும் பொருள்களைக் கொண்டு இந்த வண்டியைச் செய்ய ஆரம்பித்தேன். இதை வடிவமைக்கும் போது ஆரம்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டது. அதையெல்லாம் சரிசெய்து வண்டியை உருவாக்கி இருக்கிறேன்.

விவசாயி பாரத்
விவசாயி பாரத்

இதற்காக சுமார் 6,000 ரூபாய் செலவு செய்துள்ளேன். 10,000 ரூபாய் செலவு செய்தால் நாமே தரமான ஒரு வண்டியை உருவாக்கிக் கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் டூ வீலரில் மார்க்கெட்டுக்குக் காய்கறிகளைக் கொண்டு செல்ல வேண்டுமானால் சுமார் 80 கிலோ எடையுள்ள ஒரு மூட்டையை மட்டுமே அவர்களால் கொண்டு செல்ல முடியும். ஆனால் இந்த வண்டியை டூவீலரில் இணைத்துப் பயன்படுத்தினால் சுமார் 250 கிலோ வரையில் மூட்டைகளைக் கொண்டு செல்ல முடியும்.

எங்கள் தோட்டத்தில் நாட்டுத் தக்காளி, வெண்டை, கீரை வகைகள் போன்றவற்றைப் பயிரிட்டு வருகிறேன். இவற்றைச் சென்னையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிற்கு அனுப்பி வருகிறேன். இனி இந்த வாகனத்தில் அந்தக் காய்கறிகளை அனுப்ப முடிவு செய்துள்ளேன். இதனால் செலவு கணிசமாகக் குறையும். வாடகைக்கு வண்டி எடுப்பதை விட விவசாயிகளே தங்களுக்குத் தேவையான வண்டியை வடிவமைத்துக் கொண்டால் விவசாயத்தில் லாபத்தைக் கூட்டிக் கொள்ளலாம்.

வண்டி தயாரித்தல்
வண்டி தயாரித்தல்

சாலை ஓரங்களில் மரக் கன்றுகளை நட்டு வருகிறேன். கோடைக்காலங்களில் அந்தக் கன்றுகள் காய்ந்து விடுவதால் செடிகளுக்குத் தண்ணீர் எடுத்துச் செல்வதற்காக டேங்கர் பொருத்திய வண்டியைச் செய்ய ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் சில தினங்களில் அந்த டேங்கர் மூலமாகச் சாலை ஓரங்களில் நான் நட்டு வைத்த மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்துவிடுவேன்” என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு