Published:Updated:

வீட்டுமனைகளான விவசாய நிலங்கள்; புதிய உத்தரவு மூலம் `செக்' வைத்த ஆட்சியர்!

பிளாட்டுகள் ஆகும் விளை நிலங்கள்
பிளாட்டுகள் ஆகும் விளை நிலங்கள்

`நஞ்சை நிலங்களில் ஏதேனும் மேம்பாடுகள் செய்வதில் விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க விரும்பினால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ஐ தொடர்புகொள்ளலாம்' என குமரி கலெக்டர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் எந்த அனுமதியும் இன்றி ரியல் எஸ்டேட்டாக மாற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலெக்டர் தலைமையில் மாதந்தோறும் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் கூறுவது வாடிக்கை. ஆனாலும், விளை நிலங்களில் மண் கொட்டி வீட்டு மனைகளாக மாற்றுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாது விவசாயம் செய்ய வாய்ப்புகள் இருந்தும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்யாமல் விளைநிலம் தரிசாக போடப்படுகிறது. பின்னர் அது தரிசு நிலம் என அதிகாரிகளிடம் சான்று வாங்கி பிளாட்டு போட்டு விற்பனை செய்கின்றனர். இதற்கெல்லாம் கடிவாளம் போடும் விதமாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ``விவசாய நன்செய் நிலங்களில் விவசாயம் அல்லாத மேம்பாடுகள், வீடு மற்றும் கட்டடம் கட்ட மாவட்ட கலெக்டரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்ற பின்னரே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி கோரி நில உரிமைதாரர்கள் மனு செய்ய வேண்டும். வேளாண்மை நன்செய் நிலங்களில் மாவட்ட கலெக்டர் அனுமதி பெறாமல் மண் நிரப்புதல் மற்றும் கட்டடங்கள் கட்டுதல் கூடாது. அவ்வாறு நஞ்சை நிலங்களில் மண்நிரப்புதல் மற்றும் கட்டடங்கள் கட்டுபவர்கள் மீது அரசு விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கன்னியாகுமரி கலெக்டர் அரவிந்த்
கன்னியாகுமரி கலெக்டர் அரவிந்த்
Vikatan

வேளாண்மை நன்செய் நிலங்களில் மாவட்ட கலெக்டரின் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டட வரைபட அங்கீகாரம் மற்றும் குடிநீர் இணைப்பு மற்றும் மின்சார வாரியம் மூலம் மின் இணைப்பு வழங்கப்படாது. மேலும், அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப் பட்டுள்ள இடங்களில் நீர்நிலைகளான வாய்க்கால், கால்வாய், குளம், ஏரி, ஆறு, புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங்கள், வக்ஃப் சொத்துகள் மற்றும் சமய அறக்கட்டளை நிறுவனத்தின் நிலங்கள், பொதுச் சாலை அல்லது தெருக்கள் அல்லது விண்ணப்பதாரருக்கு உரிமையில்லாத பிற நிலங்கள் ஆகியவை ஆக்கிரமிப்பு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்ட இடமானது பிற்காலங்களில் விவசாயம் செய்ய மார்க்கமில்லை என்பதை உறுதி செய்தும், அந்த இடமானது பாசன வசதி அற்று காணப்படுகிறது என்பதை உறுதி செய்த பின்னரே, விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஏற்கெனவே அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்ளாட்சி துறையினரால் விவசாயம் அல்லாத மேம்பாடுகள், வீடு மற்றும் கட்டடம் கட்ட அனுமதி வழங்கும்போது மாவட்ட கலெக்டரிடமிருந்து அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்துக்கு தடையின்மை சான்று பெறப்பட்டுள்ளதா என்பதையும், நகர உள்ளூர் திட்டக் குழுமத்தின் விதிமுறைகளை நிறைவுசெய்கிறதா என்பதையும் ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்கப்பட வேண்டும்.

அழிவின் விழிம்பில் விவசாய நிலங்கள்
அழிவின் விழிம்பில் விவசாய நிலங்கள்
தரங்கம்பாடி: `தடையை மீறி 4 வழிச்சாலை பணி; பாழான விளைநிலம்!’ - கொந்தளித்த விவசாயிகள்

இது சம்பந்தமாக ஏற்கெனவே அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்கள் நஞ்சை நிலங்களில் ஏதேனும் மேம்பாடுகள் செய்வதில் விதிமீறல் தொடர்பாக புகார் தெரிவிக்க விரும்பினால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077- ஐ தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோவிடம் பேசினோம், ``கன்னியாகுமரி கலெக்டர் அறிவித்துள்ள விதிமுறைகள் ஏற்கெனவே இருக்கும் நடைமுறைதான். இங்கு உள்ள விதிமுறைகள்தான் கேரள மாநிலத்திலும் உள்ளன. அங்கு இந்த விதிமுறைகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. விவசாய நிலத்துக்கு தண்ணீர் செல்லாமல் இருந்தால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள். அதுபோல தண்ணீர் செல்லும் வசதி இருந்தும் நிலத்தைத் தரிசாகப் போட்டாலும் கேரள அரசு நடவடிக்கை எடுக்கிறது.

வின்ஸ் ஆன்றோ
வின்ஸ் ஆன்றோ

விதிமுறைகளை அதிகாரிகள் செயல்படுத்தினால்தான் அதற்கு மதிப்பு இருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் வீட்டுமனை ஆக்கப்பட்டுள்ளன. நான்கு வழிச்சாலை, இரட்டை ரயில்பாதை ஆகியவற்றுக்காக விளை நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, விளைநிலங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு