Published:Updated:

அரை ஏக்கரில் 72 கேழ்வரகு ரகங்கள்; கர்நாடகா விவசாயியின் அசத்தல் சாகுபடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கேழ்வரகு வயலில் ஈஸ்வர கவுடா
கேழ்வரகு வயலில் ஈஸ்வர கவுடா

``கேழ்வரகுச் சாகுபடியில் கர்நாடகத்தைப் போலவே தமிழகமும் சிறப்பு வாய்ந்தது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் கேழ்வரகுச் சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிக மழை, வறட்சி போன்ற சூழல்களிலும் கேழ்வரகு தாக்குப்பிடித்து வளரும். "

பாரம்பர்ய நெல் ரகங்கள் பற்றி அதிகம் பேசுகிறோம். ஆனால், அதே பாரம்பர்யத்தைக் கொண்ட கேழ்வரகு பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. ஏழைகளின் உணவு என்று எள்ளி நகையாடப்பட்ட கேழ்வரகுக் களி இன்று பணக்கார வீடுகளிலுள்ள தட்டுகளிலும் தடம் பதித்திருக்கின்றன. சிறுதானியங்களில் முக்கிய தானியமாக விளங்கும் கேழ்வரகு, தமிழகத்தில் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று கர்நாடக மாநிலத்தின் முக்கிய உணவுப் பயிராகவும் இருந்து வருகிறது. பசுமைப் புரட்சிக்குப் பின் பணப்பயிர்களின் வருகையால் அங்கேயும் கேழ்வரகுச் சாகுபடி குறைந்து வந்து கொண்டிருக்கிறது. அதை மீட்டெடுக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் 72 கேழ்வரகு ரகங்களைச் சாகுபடி செய்து அசத்தி இருக்கிறார் ஈஸ்வர கவுடா பாட்டீல் என்கிற விவசாயி. தார்வாட் மாவட்டம், குண்டகொல் தாலுக்கா, மட்டிகட்டி என்ற கிராமத்தில், வயலில் அறுவடைக்குத் தயாராக இருந்த 72 கேழ்வரகு ரகங்களையும் பார்வையிடும் `கேழ்வரகு கள விழா’ கடந்த நவம்பர் 9-ம் தேதி நடைபெற்றது.

கேழ்வரகு களை விழாவில்
கேழ்வரகு களை விழாவில்

நிகழ்வு குறித்து `சஹஜ சம்ருதா’ அமைப்பின் நிறுவனர் கிருஷ்ணபிரசாத்திடம் பேசியபோது, ``கேழ்வரகின் பூர்வீகம் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டா. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்கு வந்துவிட்டது. இந்தியாவில் கேழ்வரகு அதிகம் சாகுபடி செய்யப்படும் மாநிலம் கர்நாடகா. அதற்கடுத்து தமிழ்நாடு, ஆந்திரா, கேரள மாநிலங்கள் உள்ளன. கர்நாடகாவில் நிறைய கேழ்வரகு ரகங்கள் இருந்தன. முதன்முதலில் கேழ்வரகுச் சாகுபடியின் உன்னதத்தைத் தென்னிந்தியர்களுக்கு உணர்த்தியவர் `டாக்டர்.பிரான்சிஸ் புச்சனன்’ என்ற தாவரவியலாளர். இவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1800-ம் ஆண்டு மைசூருவிலிருந்து மலபார் பகுதிக்குப் பயணம் செய்தார். அப்போது மானவாரி பகுதிகளில் அதிகம் சாகுபடி செய்யப்படும் பயிராகக் கேழ்வரகு இருந்திருக்கிறது. கேழ்வரகோடு அவரை, துவரை, சோளம் என 10 வகையான பயிர்கள் சாகுபடி செய்வதையும், அதில் கிடைக்கும் மகசூல் அளவையும் பற்றிக் குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறார். அதை வைத்துதான் எங்கள் மாநிலத்தில் கேழ்வரகின் முக்கியத்துவத்தை உணர்ந்தோம்.

ஒவ்வொரு பகுதியின் மண், தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வெவ்வேறு கேழ்வரகு ரகங்கள் இருக்கின்றன. குறிப்பாகத் தென் கர்நாடகப் பகுதிகளில் நிறைய கேழ்வரகு ரகங்கள் இருந்திருக்கின்றன. `கேழ்வரகு களி, நல்ல தூக்கம்’ என்ற பழமொழியே கன்னடத்தில் உண்டு. அந்தளவுக்குக் கேழ்வரகுச் சாகுபடி கன்னட மக்களின் விவசாயத்தில் இரண்டற கலந்தது. இன்றைக்கும் கேழ்வரகுச் சாகுபடியில் 56 சதவிகித பங்களிப்பைக் கர்நாடக மாநிலம் வழங்கி வருகிறது.

1973-ம் ஆண்டு பெங்களூரு பல்கலைக்கழகம் `இண்டஃப்’ என்ற அதிக மகசூல் கொடுக்கும் கேழ்வரகு ரகத்தை அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு, நாட்டுக் கேழ்வரகு ரகங்களைச் சாகுபடி செய்வது வெகுவாகக் குறைந்துவிட்டது. இதோடு மக்காச்சோளம், பருத்தி, கரும்பு போன்ற பணப்பயிர்கள் நுழையக் கேழ்வரகின் சாகுபடி மேலும் குறைந்தது.

விழாவில்
விழாவில்
குறைந்த செலவில் நெல் சாகுபடி; `டிரம் ஷீடர்' இயந்திரம் மூலம் அசத்தும் விவசாயி!

இன்றைக்கெல்லாம் பயிர் காப்பீடு பற்றி விவசாயிகள் பேசுகிறார்கள். ஒரே பயிரைச் சாகுபடி செய்யும்போதுதான் காப்பீடு தேவை வருகிறது. பல பயிர்களைக் கலந்து சாகுபடி செய்யும்போது இந்தப் பிரச்னை இருக்காது. கேழ்வரகு பயிரிடும்போது அதோடு அவரை, துவரை, சோளம், கடுகு, கொள்ளு பயிர் செய்வது வழக்கம். கேழ்வரகுச் சாகுபடி பாதிக்கப்பட்டாலும் மற்ற பயிர்கள் காப்பாற்றிவிடும். இந்த முறை தொன்றுதொட்டு இருந்து வந்தது. சமீபத்திய பருவநிலை மாற்றத்தால் அதிக மழைப் பொழிவு காரணமாகப் பணப் பயிர்களெல்லாம் தாக்குப்பிடிப்பதில்லை. விவசாயிகளுக்கு நஷ்டத்தைத் தருகின்றன. இது போன்ற காலங்களில் நாம் கேழ்வரகைத் தாராளமாகக் கையில் எடுக்கலாம். அதற்கு முத்தாய்ப்பாகத்தான் இந்தக் கேழ்வரகு கள விழா நடத்தப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாகத் தென் கர்நாடகாவை ஒப்பிடும்போது வட கர்நாடகாவில் கேழ்வரகுச் சாகுபடி குறைவு. அந்தப் பகுதியில் விழிப்புணர்வு பெருக வேண்டும் என்ற நோக்கிலேயே தார்வாட் மாவட்டத்தில் இந்தக் கேழ்வரகு ரகங்களைப் பயிர் செய்யச் சொன்னோம். ஈஸ்வர கவுடா சிறுதானியச் சாகுபடியில் மிகவும் ஆர்வமுள்ளவர். அவர் இருக்கும் பகுதியில் முதன்முதலாகக் வரகைப் பயிரிட்டு, நல்ல விளைச்சல் எடுத்தார். அது அந்தப் பகுதி விவசாயிகளுக்கு உத்வேகம் அளித்தது.

கேழ்வரகு
கேழ்வரகு
விவசாயி டு வாடிக்கையாளர்... உணவுப் பொருள் சந்தையில் புதிய வியூகம்!

அதன் விளைவாக 39 நாட்டுக் கேழ்வரகு ரகங்களை எங்கள் அமைப்பின் சார்பாக வழங்கினோம். 40 கேழ்வரகு ரகங்களை ஹைதராபாத்தில் உள்ள இந்தியச் சிறுதானிய ஆராய்ச்சி மையம் வழங்கியது. 1 ரகம் டெல்லியில் உள்ள விதை வங்கியிலிருந்து வழங்கப்பட்டது. மொத்தம் 80 ரகங்களை நாற்று விட்டார். அதில் 8 ரகங்கள் சரியாக முளைக்கவில்லை. மீதி 72 ரகங்கள் நன்றாக முளைத்தன. அவற்றைப் பறித்து அரை ஏக்கரில் நடவு செய்தார். ஜூலை மாதத்தில் நடவு செய்தார். அக்டோபர் மாதத்திலேயே அறுவடைக்கு வந்துவிட்டது. கேழ்வரகின் சாகுபடி காலம் 90 நாள்கள். இதை விழாவாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக வயலிலேயே சில நாள்கள் விட்டு அறுவடை செய்யப்பட்டது.

இங்கு சாகுபடி செய்ததில் பார்வையாளர்களை அதிகம் ஈர்த்தது தேன்கூடு ராகி, யுகாண்டா ராகி, தொட்டா ராகி, போண்டா ராகி ஆகியவை. தேன்கூடு ராகியில் சமைக்கப்படும் உணவு அதிகச் சுவை கொண்டது. கேழ்வரகு களி சமைப்பதற்கு இந்த ரகத்தை அதிகம் தேர்வு செய்வார்கள். யுகாண்டா ராகி ரகத்தின் கதிர் பெரியதாக இருக்கும். அதே போன்று தொட்டா ராகி, போண்டா ராகியும் உருவத்தில் பெரியது. சன்ன பத்தா ராகி என்ற ஒரு ரகம் இருக்கிறது. இது கேழ்வரகின் தாள்களுக்காகவே அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. தீவனத்துக்காகப் பயிர் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ரகத்தைத் தேர்ந்தெடுக்கலாம். கேழ்வரகு தானியம் ஊதா, சிவப்பு, ஆரஞ்சு நிறத்தில் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். வெள்ளை நிறத்திலும் கேழ்வரகு ரகங்கள் இருக்கின்றன. ஒன்று மஜ்ஜிகே, பெலி ஆகியவையாகும். எருமை கொம்பு ராகி என்ற ஒரு ரகம் இருக்கிறது. இதன் கதிர்கள் நீண்டதாக இருக்கும். விளைச்சலும் அதிகமாகக் கிடைக்கும். இப்படி ஒவ்வொரு கேழ்வரகு ரகத்தைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு விஷயங்கள் கேழ்வரகில் இருக்கின்றன.

உகாண்டா கேழ்வரகு
உகாண்டா கேழ்வரகு

ஆந்திர மாநிலத்திலிருந்து வந்திருந்த ராமப்பண்ணா என்ற விவசாயி, ``இந்தத் தேன்கூடு கேழ்வரகைச் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். திரும்பவும் இப்போதுதான் பார்க்கிறேன். அதிக விளைச்சல் ரகங்கள் வந்தபிறகு பாரம்பர்ய ரகங்களை மறந்துவிட்டேன். கண்டிப்பாக இதன் விதைகள் எங்களுக்கு வேண்டும்" என்று சொன்னார். பல விவசாயிகளும் கேழ்வரகு ரகங்களைப் பார்த்தபோது இப்படித்தான் அங்கலாய்த்தார்கள்.

கேழ்வரகுச் சாகுபடியில் கர்நாடகத்தைப் போலவே தமிழகமும் சிறப்பு வாய்ந்தது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் கேழ்வரகுச் சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிக மழை, வறட்சி போன்ற சூழல்களிலும் கேழ்வரகு தாக்குப்பிடித்து வளரும். கடுமையான உடலுழைப்பை மேற்கொள்பவர்களுக்கு கேழ்வரகுக் களி சிறந்த உணவு. இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்தது. சத்துகள் அளவிலும் `பாலிஷ்’ செய்த அரிசியைவிட அதிகச் சத்துகள் கொண்டது. கேழ்வரகு விதைகள் தேவைப்படுவோர் எங்கள் அமைப்பை அணுகலாம். குறைந்தளவு விதை தருவோம். அதைக் கொண்டு பெருக்கிக்கொள்ள வேண்டும்” என்றார்.

கிருஷ்ண பிரசாத்
கிருஷ்ண பிரசாத்

ஹைதராபாத்தில் உள்ள இந்தியச் சிறுதானிய ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி இளங்கோவனிடம் பேசினோம். ``ஐம்பதராயித்துக்கும் மேற்பட்ட சிறுதானிய ரகங்களைச் சேமித்து வைத்திருக்கிறோம். அதில் கேழ்வரகு ரகங்களும் அடக்கம். நாட்டு ரகம், ஆராய்ச்சி ரகங்கள் எனப் பல ரகங்களைச் சேமித்து வைத்திருக்கிறோம். சிறுதானியத்தை விதைத்து, அது சம்பந்தமான ஆராய்ச்சிகள் செய்ய நினைப்பவர்களுக்கு விதைகளைக் கொடுக்கிறோம். அந்த வகையில்தான் கர்நாடகாவில் உள்ள ஈஸ்வர கவுடா விவசாயிக்கும் வழங்கப்பட்டது. இது போன்ற தேவைகளுக்கு எங்கள் மையத்தை அணுகலாம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு