Published:Updated:

புளியம்பழ அறுவட… விதைப் பிரிப்பு… புளி ஊறுகாய் தயாரிப்பு…அசத்தலான மூன்று கருவிகள்!

கருவி
பிரீமியம் ஸ்டோரி
கருவி

கருவி

புளியம்பழ அறுவட… விதைப் பிரிப்பு… புளி ஊறுகாய் தயாரிப்பு…அசத்தலான மூன்று கருவிகள்!

கருவி

Published:Updated:
கருவி
பிரீமியம் ஸ்டோரி
கருவி

‘தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்’ என்று சொல்வார்கள். அதுவும் சவால்கள் நிறைந்த விவசாயத்தில் தினம் தினம் புதிய கண்டுபிடிப்புகளின் தேவை இருந்துகொண்டே இருக்கிறது. அந்தக் கண்டுபிடிப்புகளைப் பற்றிப் பேசுகிறது இந்தத் தொடர்.

தான் இருக்கும் நிலம் சார்ந்த அறிவையும் புரிதலையும் கொண்டு தன் வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் பிரச்னைகளைச் சரிசெய்பவர்களை ‘இருப்பிட ஞானம்’ (Native Wisdom) உள்ளவர்கள் என்று சொல்வார்கள். இது போன்றவர்கள், தன்னை மீட்பதற்கு ஒரு மீட்பர் வருவார் என்று காத்திருப்பதில்லை. திடீரென வீட்டில் மின்சாரம் தடைபட்டுப் போனாலும், குடிநீர் வராமல் போனாலும் அதைச் சரி செய்வதற்குக் கையைப் பிசைந்து கொண்டு நிற்காமல், தங்கள் முயற்சியால் சரிசெய்ய முயலும்போது புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவெடுக்கின்றன. இப்படிப் பலரும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

புளியிலிருந்து விதைகளைப் பிரித்தெடுக்கும் கருவி
புளியிலிருந்து விதைகளைப் பிரித்தெடுக்கும் கருவி

அந்த வரிசையில் இந்த முறை, புளியமரத்திலிருந்து புளியம்பழத்தை உதிர்த்து எடுப்பதற்கும், உதிர்த்து எடுத்த பழத்திலிருந்து புளியைத் தனியாகவும் கொட்டைகளைத் தனியாகவும் பிரித்து எடுக்கக்கூடிய கருவியைக் கண்டுபிடித்தவரைத்தான் நாம் பார்க்கப்போகிறோம். அவருடைய பெயர் அப்துல்காதர் நடகாட்டின் (Abdul Khader Nadakattin). சமீபத்தில் இவருக்கு இந்திய அரசின் ‘பத்’ விருது வழங்கப்பட்டிருக்கிறது.

அப்துல்காதர், கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டத்தில் உள்ள அன்னிகெரி என்ற ஊரைச் சேர்ந்தவர். பரம்பரை விவசாயக் குடும்பம். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவருக்கு 60 ஏக்கர் நிலம் வந்துசேர்ந்தது. அதில் மா, சப்போட்டா, மிளகாய் எனச் சில பயிர்களைச் சாகுபடி செய்து பார்த்தார். சரியான மழை கிடைக் காததாலும், தண்ணீர் வசதி இல்லாததாலும், வறட்சியான பகுதி என்பதாலும் மா, சப்போட்டா காய்ந்துவிட்டன.

புளியமரங்கள்
புளியமரங்கள்


இப்படிப்பட்ட சூழ்நிலையில் 60 ஏக்கர் நிலத்தில் என்ன பண்ணலாம் எனப் பலரிடமும் யோசனை கேட்டார். பல இடங் களுக்கும் பயணம் போனார். ஏராளமான தோட்டங்களை நேரில் போய்ப் பார்த்தார். பிறகு, அவருக்கு ஒரு யோசனை வந்தது. இந்த 60 ஏக்கர் நிலத்தில் நாம் ஏன் புளியமரச் சாகுபடி செய்யக் கூடாது? என்ற சிந்தனை அவர் மனதில் உருவானது.

60 ஏக்கர் நிலப்பரப்பில் 2,000 புளியமரக் கன்றுகளை வாங்கிவந்து நடவு செய்தார். நீர் பாய்ச்சுவதற்கு 15 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்தார். அதற்காக 4 லட்ச ரூபாய் வரை செலவு செய்தார். ஆழ்துளைக் கிணறுகளில் சில ஆண்டுகள்தான் தண்ணீர் கிடைத்தது. மீண்டும் தண்ணீர் பிரச்னை. புளியமரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்காக நிலத்தில் பண்ணைக் குட்டைகளை ஆங்காங்கே வெட்டி வைக்கத் தொடங்கினார். அதில் தண்ணீர் சேகரமானதும், ‘பம்ப்’ வைத்துத் தண்ணீர் எடுத்துப் புளியங்கன்றுகளுக்குப் பாய்ச்சினார். தண்ணீர் பிரச்னை ஓரளவுக்குத் தீர்ந்தது. அதன் பிறகு, புளியமரங்கள் வளர்ந்து காய் காய்க்கத் தொடங்கின.

‘‘எந்த ஒரு திட்ட முன்வரைவும் இல்லாமல், தொழில்நுட்ப வழிகாட்டுதலும் இல்லாமல் தன்னுடைய சுய சிந்தனையைப் பயன்படுத்தி 24 வகையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார் அப்துல்காதர்.’’

அப்படிப் பெருமளவில் காய்த்துக் கொத்துக்கொத்தாக இருந்த புளியம்பழங்களைப் பறித்தார். ஆனால், 60 ஏக்கரில் அறுவடையான புளியம்பழங்களை ஓடு நீக்கி உடனடியாக விற்க முடியாத சூழல். புளி எளிதில் கெடாத பொருள்தான். ஆனால், வெளியில் காற்று படும்படி வைத்திருந்தால் கெட்டுப்போக வாய்ப்புண்டு. அதேசமயம் புளியில் இருக்கும் புளிப்புச் சுவையிலும் மாற்றம் தெரிய ஆரம்பித்துவிடும். எனவே, கெட்டுப்போகாமல் இருப்பதற்கும், புளிப்புச் சுவை மாறாமல் இருப்பதற்கும், அதை மண்ணுக்கடியில் பதுங்குக்குழிகளைப் போல் புளி சேமிப்புக் கிடங்குகளை உருவாக்கி அதில் பாதுகாத்து வைத்தார்.

இப்படி மண்ணுக்கடியில் விளைபொருள்களை வைத்துப் பாதுகாப்பது நம்முடைய பாரம்பர்ய வழிமுறைகளில் ஒன்றாக இருக்கிறது. அது எப்படியோ அப்துல்காதருக்கும் தெரிந்திருக்கிறது. அந்த வகையில் புளியமரத்தில் காய்க்கும் புளியை எல்லாம் எடுத்துப் பத்திரப்படுத்தி, விலை கிடைக்கும்போது விற்பனை செய்திருக்கிறார்.

காட்சிக்கூடம்
காட்சிக்கூடம்

எப்படி வெளிநாடுகளில் திராட்சைப்பழத்தை நீண்ட நாள்கள் மண்ணில் புதைத்து வைத்துக் கெட்டுப்போகாமல் ஒயின் தயாரிக் கிறார்களோ அது போன்றதுதான் இது. பிறகு, புளியை அறுவடை செய்வதற்கும், பழத்திலிருந்து புளியையும் கொட்டைகளையும் தனித்தனியாகப் பிரித்தெடுப்பதற்கும், புளியை அரைத்து ஊறுகாய் தயாரிப்பதற்கும் என மூன்று விதமான கருவிகளைக் கண்டறிந்தார். இவருடைய கண்டுபிடிப்புகளுக்குக் கர்நாடக அரசாங்கம் மிகுந்த உற்சாகமும் ஊக்கமும் அளித்துக் கௌரவப்படுத்தி இருக்கிறது. இவருடைய கண்டுபிடிப்பு, அங்குள்ள புளிச் சாகுபடி செய்யும் பல விவசாயிகளுக்கும் உதவிக்கரமாக இருந்து வருகிறது. இனி நாம் அந்தக் கருவிகள் எப்படிச் செயல்படுகின்றன என்பது பற்றிப் பார்ப்போம்.

கருவி
கருவி


புளியம்பழத்திலிருந்து புளியையும், கொட்டைகளையும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கும் கருவியை 1994-ம் ஆண்டுக் கண்டு பிடித்திருப்பதாகக் கூறுகிறார். அதைத்தான் ‘இன்னோவேஷன் பவுண்டேஷன்’ நிறுவனத்தினர் பதிவு செய்து ஆவணப்படுத்தி யிருக்கிறார்கள். இயந்திரத்தில் இரண்டு சல்லடைகள் இருக்கின்றன. அந்தச் சல்லடைகள் முன்னும் பின்னும் அடிக்கும் போது விதைகள் தனியாகவும் புளி தனியாகவும் பிரித்தெடுக்கப்படுகிறது. புளியங்கொட்டை விதைகள் கீழே விழுந்து விடுகின்றன. மேலே தங்கும் புளியைத் தனியாக எடுத்துச் சேகரிக்கலாம். ‘எங்கெல் லாம் புளியமரம் அதிகமாக இருக்கிறதோ அந்தப் பகுதிகளுக்கெல்லாம் இந்த இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

காட்சிக்கூடம்
காட்சிக்கூடம்


‘புளியிலிருந்து ஊறுகாய் தயாரிப்பதற்கும் ஓர் இயந்திரத்தை இவர் கண்டுபிடித் திருக்கிறார். ஒரு மணி நேரத்தில் 2.5 குவிண்டால் புளியை அரைக்கிறது’ என்று ஆணவப்படுத்தியிருக்கிறார்கள். ‘எந்த அளவில் புளி ஊறுகாய் வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த அளவில் அந்த இயந்திரம் புளியை அரைத்துத் தந்துவிடும்’ என்கிறார் அப்துல்காதர்.

மனிதர் அதோடு நிற்கவில்லை. மற்றொரு இயந்திரத்தையும் கண்டுபிடித்திருக்கிறார். புளியமரத்திலிருந்து புளியைப் பறிப்பதற்கு ஓர் அற்புதமான இயந்திரத்தையும் அவர் கண்டுபிடித்து இருக்கிறார். இன்றைக்குப் புளியமரத்திலிருந்து பழங்களைப் பறிப்பதற்கு ஆள்கள் கிடைப்பது பெரும்பாடாக இருக்கிறது. தற்போது புளியம்பழ அறுவடைக் காலம். புளியம்பழப் பறிப்புக்கு இந்தக் கருவி மிகவும் உதவியாக இருக்கும். ‘பல நாள்கள் செய்யும் வேலையை ஒரே நாளில் இந்த இயந்திரத்தின் உதவி கொண்டு செய்து முடித்துவிடலாம்’ மேலும், ‘புளியம்பழத்திலிருந்து ஓடுகளைப் பிரிக்கும் கருவியை உருவாக்கும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறேன்’’ என்கிறார் அப்துல்காதர்.

கருவி
கருவி


இந்த இயந்திரத்தை அவர் 1990-ம் ஆண்டுப் பதிவு செய்து வைத்திருக்கிறார். ஆனால், அப்போது அவர் எதிர்பார்த்த அளவுக்கு இந்த இயந்திரம் வெற்றிகரமானதாக அமையவில்லை. இதைத் தயாரிப்பதற்காக 5 லட்சம் ரூபாய் வரை செலவானது. செலவானாலும் பரவாயில்லை என மனம் தளராமல் இதைக் கண்டுபிடித்தார். இதைத் தவிர்த்து விதைகளை விதைப்பதற்கும் ஒரு கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார். ‘நடகாட்டின் சிட்ரல்’ என்று அந்தக் கருவிக்குப் பெயர் வைத்திருக்கிறார். அந்தக் கருவியைக் கொண்டு விதைகளைத் தகுந்த இடைவெளியில் விதைக்கலாம். உரத்தை இடலாம்.

பத்ம விருது பெறும் அப்துல்காதர் நடகாட்டின்
பத்ம விருது பெறும் அப்துல்காதர் நடகாட்டின்

எந்த ஒரு திட்ட முன்வரைவும் இல்லாமல், தொழில்நுட்ப வழிகாட்டுதலும் இல்லாமல் தன்னுடைய சுய சிந்தனையைப் பயன் படுத்தி 24 வகையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார் அப்துல்காதர். இது பாராட்டுக்குரியது. இவருடைய ‘விஷ்வ சாந்தி அக்ரிகல்ச்சர் ரிசர்ச் சென்டர்’ தார்வாட் மாவட்டம், அன்னிகெரியில் உள்ளது. இந்த மையத்தில் விதை போடும் கருவி, உரம் இடும் கருவி, களை எடுக்கும் கருவி எனப் பலவிதமான இயந்திரங்களைக் காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்திருக்கிறார். ஒருமுறை நேரடியாகச் சென்று பாருங்கள். கருவிகள் குறித்துப் புதிய அனுபவம் கிடைக்கும்.

எம்.ஜே.பிரபு
எம்.ஜே.பிரபுதொடர்புக்கு

Vishwashanti Agriculture Industrial Development Research Centre,

836/1B Hubsur Road,

Horacker,

ANNIGERI - 582201,

Navalgund Taluk,

Dharwad Dist,

Karnataka.

+91-9448786350

nadakattin678@gmail.com

-கண்டுபிடிப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism