Published:Updated:

ஒரு ஏக்கர்... ரூ.40,000... கருங்குறுவை கொடுத்த கணிசமான லாபம்!

நெல் வயல்
பிரீமியம் ஸ்டோரி
நெல் வயல் ( தே.சிலம்பரசன் )

மகசூல்

ஒரு ஏக்கர்... ரூ.40,000... கருங்குறுவை கொடுத்த கணிசமான லாபம்!

மகசூல்

Published:Updated:
நெல் வயல்
பிரீமியம் ஸ்டோரி
நெல் வயல் ( தே.சிலம்பரசன் )

பாரம்பர்ய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் நோக்கில் பலரும் பாரம்பர்ய ரகங்களைப் பயிரிட்டு வருகிறார்கள். நுகர்வோர் மத்தியிலும் பாரம்பர்ய அரிசிக்கான தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் வெங்கடேஷ், பாரம்பர்ய நெல் ரகங்களை இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார்.

விழுப்புரம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் இருக்கிறது அவரது தோட்டம். ஒரு காலை வேளையில் அங்கு சென்றோம். நகரச்சூழல் மறைந்து எங்கும் விவசாயம் நிறைந்திருக்க, மனதுக்கு அமைதியான சூழல் நிலவியது.

நெல் வயலில் வெங்கடேஷ்
நெல் வயலில் வெங்கடேஷ்

இன்முகத்தோடு வரவேற்ற வெங்கடேஷ், மகிழ்ச்சியாகப் பேசத் தொடங்கினார். “எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கு. சின்ன வயசுல இருந்தே படிக்கிறதுக்கான நேரம் போக, மற்ற நேரங்கள்ல அப்பாவோடு சேர்ந்து தோட்டத்தில சின்னச் சின்ன வேலை பார்ப்பேன். இப்ப ‘விவசாயம்தான் எல்லாமே’ங்கிற அளவுக்கு என் வாழ்வியலோடு விவசாயம் கலந்துவிட்டது. நான் 2015-ல் என்னுடைய படிப்பை முடிச்சேன். படிச்சது கட்டடவியல் துறை (சிவில் இன்ஜினீயரிங்). 2015-ம் வருஷத்துக்கு முன்பு வரை, அப்பா செயற்கை முறை விவசாயம்தான் செஞ்சிட்டு இருந்தார். ஏக்கருக்கு 35 மூட்டை வரை மகசூல் கிடைச்சது. ஆனால், வரவும் செலவும் சரியா போயிடும். முக்கியமாகப் பூச்சியையும், தண்ணீர் தட்டுப்பாட்டையும் சமாளிக்க ரொம்பச் சிரமமா இருந்துச்சு. பெருசா சொல்லிக்கிற மாதிரி லாபம் இல்ல.

நெற்பயிர்
நெற்பயிர்

இந்த நிலைமையில, என்னுடைய படிப்பு முடிஞ்சதும் எங்கயும் வேலைக்குப் போகல. இயற்கை விவசாயத்துல முழுமையா ஈடுபடத் தொடங்கிட்டேன். ஆரம்பத்துல பல தடுமாற்றங்கள் இருந்துச்சு. முதல் தடவை இயற்கை விவசாயம் செய்யும்போது, ஒரு ஏக்கருக்கு 7 மூட்டை மட்டுமே விளைஞ்சது. பிறகு, நண்பர்கள், தெரிஞ்சவங்க, அனுபவ விவசாயிகள்னு பலபேர்கிட்ட ஆலோசனைக் கேட்டேன். அதன் பிறகு, கொஞ்சம் கொஞ்சமா மகசூல் அதிகமாச்சு. இப்ப நல்ல மகசூல் கிடைச்சிட்டு இருக்குது’’ என்றவர் தனது இயற்கை விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘ஏக்கருக்கு 7 மூட்டைகள்னு இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன். இப்போ அதிகபட்சமா 35 மூட்டை (70 கிலோ) தூயமல்லி நெல்லை சம்பா பருவத்தில் மகசூலாக எடுத்திருக்கேன். தைப்பட்டத்துல நடவு செய்த கருங்குறுவை ரகத்தில் 20 மூட்டைகள் மகசூல் எடுத்திருக்கேன். 20 மூட்டைகள் மூலமா 1,400 கிலோ நெல் மகசூல். அதைத் தரமான விதையாகத் தரம் பிரிக்கும்போது சுமார் 850 கிலோ விதை நெல் கிடைக்கும். பதர்களை மாடுகளுக்குத் தவிடாக மாற்றித் தீவனமாகக் கொடுக்கிறேன். ஒரு கிலோ விதை நெல்லை சராசரியாக 90 ரூபாய் வரை விற்பனை செய்றேன்’’ என்றவர் நிறைவாக,

ஜீவாமிர்தம்
ஜீவாமிர்தம்

மனித உழைப்பே மகத்தானது

‘‘விதைத் தேவைப்படுறவங்க வீட்டுக்கே வந்து ஆர்வமா வாங்கிட்டுப் போறாங்க. விற்பனைக்காக நான் வேற எந்த நடவடிக்கையும் எடுக்குறதில்ல. பாரம்பர்ய விதை நெல்லை, சணல் சாக்கில் மட்டுமே மூட்டைப் பிடிப்பேன். பூச்சியின் தாக்கம் இல்லாமல் இருப்பதற்காக நொச்சி, நுணா, வசம்பு, வேப்பிலை மாதிரியான இலை பொடிகளைத் தூவி வைப்பேன். ஒரு ஏக்கருக்கு 35,300 ரூபாய் வரைக்கும் செலவாகுது. ஆளுங்களை விட்டுட்டு இயந்திரங்களைப் பயன்படுத்துனா செலவு ரொம்பவும் குறையும். ஆனா, அதை நான் செய்ய மாட்டேன்.

இந்த 20 மூட்டை நெல் மூலமா 76,500 ரூபாய் வருமானம் கிடைக்குது. அதுல செலவைக் கழிச்சுட்டா 41,200 ரூபாய் லாபம் கிடைக்குது. அதுவே எனக்கு மனநிறைவான லாபம்தான்” என்றார்.

தொடர்புக்கு,

வெங்கடேஷ்,

செல்போன்: 75021 30914

செலவு, வரவு கணக்கு
செலவு, வரவு கணக்கு
நெல் வயல்
நெல் வயல்

ரகத்துக்கு ஏற்ற இடைவெளி தேவை

நாற்று நடவு செய்வதற்கு 60 நாள்களுக்கு முன்பு, பலதானியம் விதைத்து, அதை நாற்று நடவு செய்வதற்கு 15 நாள்களுக்கு முன்பு, மடக்கி உழுது மட்கச் செய்ய வேண்டும். சேடை உழவு ஓட்டும்போது கூடுதலாக வேம்பு, நொச்சி, நுணா, எருக்கு இலைகளைப் நிலத்தோட வளத்துக்கு ஏற்ப போட வேண்டும். 15 முதல் 25 நாள்களுக்குள் நாற்று பறித்து நடவு செய்ய வேண்டும். நன்கு கிளைக்கும் திறன் கொண்ட நெல் ரகமாக இருந்தால், ஒற்றை நாற்று முறையிலும், குறைவாகக் கிளைக்கும் திறன் கொண்ட நெல் ரகமாக இருந்தால் மூன்று நாற்றுகளை இணைத்தும் நடவு செய்ய வேண்டும். முக்கால் அடிக்கு, அரையடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நெல் ரகத்துக்கு ஏற்றாற்போல இடைவெளியைக் கூட்டிக் குறைத்துக்கொள்ளலாம். அதிக இடைவெளியில் நடவு செய்வது நல்ல பயனைத் தரும். காற்றோட்டத்துடன் நன்கு கிளைத்து வளரும். மகசூலும் சிறப்பாக இருக்கும். ஆள்களைக் கொண்டு களை பறிப்பதற்கு முன்பு கோனோவீடர் கொண்டு களையெடுக்க வேண்டும்.

மோர் கரைசல்
மோர் கரைசல்

நடவு செய்த முதல் 10 நாள்களில் ஏக்கருக்கு 300 கிலோ கனஜீவாமிர்தமும், 10 நாள்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தமும் தரை வழியாகப் பாசன நீருடன் கொடுக்க வேண்டும். 20 நாள்களுக்குள் மீன் அமிலமும், 30 நாள்களுக்குள் பூச்சிவிரட்டியையும் தெளிக்க வேண்டும். தேவைக்கு ஏற்றாற்போல் காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதுமானது. கதிர்கள் வரும்போது மட்டும் மோர் கரைசல் தெளிக்கலாம். அதன் மூலம் நெல் மணிகள் திரட்சியாகவும், பதர்கள் அதிகமின்றி மகசூல் கிடைக்கும்.