Published:Updated:

`80,000 ஏக்கர்...50,000 குடும்பங்கள்!' - அழுகும் வாழையால் தவிக்கும் விவசாயிகள்

அழுகும் வாழைத்தார்கள்
அழுகும் வாழைத்தார்கள் ( நா.ராஜமுருகன் )

அறுவடைக்கு ஆள் கிடைக்காததாலும், வியாபாரிகள் வாழைத் தார்களை வெட்ட வராததாலும், வாழை வயல்களிலேயே வாழைத்தார்களில் பழங்கள் பழுத்து, அழுகிப்போய் கொட்ட ஆரம்பித்துவிட்டன. மயில், குருவி, அணில் கூட்டம் கூட்டமாக வந்து பழங்களைத் தின்று வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று நோய் எதிரொலியால், கரூர் மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட வாழை விவசாயத்தில், வாழைத்தார்களை வியாபாரிகள் வாங்க வராததால், வாழைத்தார்கள் வயலிலேயே பழம் பழுத்து வீணாவதாக விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகிறார்கள். வழக்கமாக, ரூ.500 முதல் ரூ.600 ரூபாய் வரை விற்கக்கூடிய வாழைத்தார்கள் இப்போது ரூ.50 ரூபாய்க்குக் கூட விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனையோடு தெரிவிக்கிறார்கள்.

அழுகும் வாழைத்தார்கள்
அழுகும் வாழைத்தார்கள்
நா.ராஜமுருகன்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் தொடர் ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பல தொழில்கள் அல்லாட்டத்தில் இருக்கின்றன. கரூர் மாவட்டத்தில் வாழை விவசாயம் செய்திருக்கும் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.

`கிலோ 4 ரூபாய்க்கு வாங்கக்கூட ஆள் இல்லை!' - கொரோனா தாக்கத்தால் கலங்கும் முருங்கை விவசாயிகள்

கரூர் விவசாயம் சார்ந்த மாவட்டம். இதில் கிருஷ்ணராயபுரம், வேலாயுதம்பாளையம், வாங்கல், திருக்காம்புலியூர், லாலாபேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, குளித்தலை, நச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை விவசாயம் செய்து வருகின்றனர். காவிரி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள இந்தப் பகுதிகளில், பாசன வாய்க்கால் மூலம் கிடைக்கும் தண்ணீரைக்கொண்டு, பூவம் பழம், கற்பூரம், ரஸ்தாளி, ஏல அரிசி, பச்ச நாடன் உள்ளிட்ட வாழைப் பல வாழை ரகங்கள் பயிரிடப்படுகின்றன.

அழுகும் வாழைத்தார்கள்
அழுகும் வாழைத்தார்கள்
நா.ராஜமுருகன்

இந்த விவசாயத்தை நம்பி சிறு மற்றும் குறு விவசாயிகள், அதைச் சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்து வருகின்றன. கடந்த வைகாசி மாதம் நடவு செய்யப்பட்டு, தற்போது அறுவடைக்கு வாழைத்தார்கள் தயாராக உள்ளது. இங்கு விளையக்கூடிய வாழைத்தார்களை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள். இந்த நிலையில், கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க அரசு சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அறுவடைக்கு ஆள் கிடைக்காததாலும், வியாபாரிகள் வாழைத்தார்களை வெட்ட வராததாலும், வாழை வயல்களிலேயே வாழைத்தார்களில் பழங்கள் பழுத்து, அழுகிப்போய் கொட்ட ஆரம்பித்துவிட்டன. மேலும், மயில், குருவி, அணில் கூட்டம் கூட்டமாக வந்து பழங்களைத் தின்று வருகின்றன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வாழை சாகுபடி செய்திருக்கும் விவசாயிகள் சிலர்,``தற்போது விவசாய விளைப் பொருள்களை எடுத்துச் செல்ல அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு தினங்களுக்கு முன்பாகவே வியாபாரிகள் வந்து வெட்டிச் சென்று இருந்தால் எங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்காது. அந்த நேரத்தில் வெட்டி இருந்தால் ரூ.500 ரூபாய் முதல் ரூ.600 ரூபாய் வரை விலை போகக்கூடிய வாழைத்தார்கள், தற்போது ரூ.50 ரூபாய்க்குக் கூட வாங்க வியாபாரிகள் வரவில்லை. ஆகையால் வாழைத் தார்கள் வீணாகி, நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

அழுகும் வாழைத்தாரைக் காண்பிக்கும் விவசாயி
அழுகும் வாழைத்தாரைக் காண்பிக்கும் விவசாயி
நா.ராஜமுருகன்

ஒரு ஏக்கருக்கு சுமார் இரண்டரை லட்சம் வரை செலவு செய்து, ஒரு ரூபாய் கூட வருமானம் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை நம்பி பல லட்சம் அளவுக்குக் கடன் வாங்கி விவசாயம் செய்து அறுவடை நேரத்தில், கொரோனா வைரஸ் நடவடிக்கையால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு