Published:Updated:

கரூர்: `விளைச்சல் அமோகம்... ஆனால், நிலையான விலை இல்லை!' - கவலையில் வெற்றிலை விவசாயிகள்

வெற்றிலைச் சாகுபடி
வெற்றிலைச் சாகுபடி

கரூர் மாவட்டத்தில் வெற்றிலை உற்பத்தியும், அதன் விளைச்சலும் அமோகமாக இருந்தாலும் நிலையில்லாத விலையால் தாங்கள் பாதிக்கப்படுவதாக குமுறுகிறார்கள் விவசாயிகள்.

கரூர் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள வெற்றிலை விவசாயத்தில் விளைச்சல் நன்றாக இருந்தாலும், கொரோனா பிரச்னையால் ஏற்பட்டுள்ள நிலையில்லாத விலை தன்மையால், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்ணீர் வடிக்கிறார்கள், வெற்றிலை பயிரிட்டுள்ள விவசாயிகள்.

வெற்றிலை சாகுபடி
வெற்றிலை சாகுபடி
உயிர்வேலி, தடுப்பணை, உணவு பழக்காடு... `ஒருங்கிணைந்த பண்ணை' முயற்சியில் கரூர் இன்ஜினீயர்

கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், புகழூர், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் வெற்றிலைச் சாகுபடி நடந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் வெற்றிலை, பல வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கு வெற்றிலையை அனுப்புவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தன. மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் வாரச்சந்தைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது, வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்ல வெற்றிலை அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள வாரச் சந்தைகளும் ஒவ்வொன்றாக செயல்பட அனுமதியளிக்கப்பட்டு வருவதால் வெற்றிலையின் தேவை அதிகரித்துள்ளது. அதற்கேற்றவாறு, கரூர் மாவட்டத்திலும் வெற்றிலை உற்பத்தியும், அதன் விளைச்சலும் அமோகமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். இருந்தாலும், நிலையில்லாத விலை தங்களை வதைப்பதாகக் குமுறுகிறார்கள்.

வெற்றிலை சாகுபடி
வெற்றிலை சாகுபடி

இதுகுறித்து, கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்த வெற்றிலை விவசாயி நல்லேந்திரன், ``வெற்றிலை விவசாயம் இங்கே சிறப்பா இருக்கு. ஆனா, வெற்றிலை விலைதான் சிக்கல். கடந்த மாதத் தொடக்கத்தில் 104 கவுளிகள் கொண்ட ஒரு சுமை வெள்ளைக் கொடி வெற்றிலைக்கு ரூபாய் 5,000 வரை ஏலத்தில் விலை கிடைத்தது. கற்பூர வெற்றிலை 104 கவுளி கொண்ட சுமை ரூ.3,500 முதல் ரூ. 4,000 வரை ஏலம் சென்றது. தற்போது 2,500 முதல் 3000 வரை மட்டுமே ஏலத்தில் விலை போவதால், நல்ல விளைச்சல் உள்ள சூழ்நிலையில் வெற்றிலை விலை சரிவடைந்து உள்ளது.

இதனால், வெற்றிலையைப் பயிரிட்டுள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம். இதில், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு, எங்களுக்கு நிலையான விலை கிடைக்க வழிவகை செய்யணும்" என்று கோரிக்கை விடுத்தார்.

அடுத்த கட்டுரைக்கு