Published:Updated:

`படிப்பது இன்ஜினீயரிங்; பார்ட் டைமாக விவசாயமும் கத்துக்குறேன்!' - தென்னை மரமேறும் கரூர் இளைஞர்

தென்னை மரம் ஏறும் விமல்குமார்
தென்னை மரம் ஏறும் விமல்குமார் ( நா.ராஜமுருகன் )

``நல்ல ஐ.டி கம்பெனிக்கு வேலைக்குப் போய், நிறைய சம்பாதிக்கணும் என்பதுதான் லட்சியம். இருந்தாலும், எங்களுக்கு சோறு போடும் விவசாயத்தையும் விட மனசில்லை." - விமல்குமார்

மெத்த படித்த, ஐ.டி உள்ளிட்ட துறைகளில் கைநிறைய சம்பாதிக்கும் பலரும், `நான் விவசாயம் செய்யப் போகிறேன்' என்று கூறி, சேற்றில் கால்வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். `விவசாயம்தான் நமது ஆதி தொழில். நமது நாட்டின் முதுகெலும்பும் விவசாயம்தான்' என்ற புரிதலின் வெளிப்பாடே இத்தகைய மாற்றத்துக்கான காரணி.

 தென்னை மரம் ஏறும் விமல்குமார்
தென்னை மரம் ஏறும் விமல்குமார்
நா.ராஜமுருகன்
வாய்க்கால் வெட்டிய தொழிலாளர்களுக்கு சிலை வைத்த காமராஜர்; சுவாரஸ்ய நிகழ்வும், தற்போதைய சோக நிலையும்!

நம்மாழ்வார் உள்ளிட்ட ஆளுமைகளின் பாதிப்பும், இப்போது பலரையும் விவசாயம் நோக்கி மடைமாற்றிவிட்டிருக்கிறது. அந்த வகையில், சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கணினி பொறியியல் படித்து வரும் இளைஞர் விமல்குமார், பார்ட் டைமாகத் தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். தென்னை மரமேறும் கருவியை இயக்க பயிற்சி பெற்று, 50 அடி உயர தென்னை மரத்திலும் அநாயாசமாக ஏறி, தேங்காய் பறித்து வருகிறார்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் இருக்கும் காளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் விமல்குமார். இவரின் தந்தை, ஃபைனான்ஸ் தொழில் பார்ப்பதோடு, சொந்த ஊரில் விவசாயமும் பார்த்து வருகிறார். தான் பெரிதாகப் படிக்கவில்லை என்றாலும், தன் மகன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று நினைத்து, விமல்குமாரை பொறியியல் படிப்பு படிக்க வைத்திருக்கிறார். இருந்தாலும், `பொறியியல் படிப்போடு, மண்ணையும் படிக்க நினைக்கிறேன்' என்று, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதுபோல், படிப்போடு விவசாயத்தையும் செய்து வருகிறார் விமல்குமார். தனது தோட்டத்தில் உள்ள 40 அடி தென்னை மரத்தில் சரவரவென கருவி துணைகொண்டு ஏறிய விமல்குமார், வீட்டுக்குத் தேவையான தேங்காய்களைப் பறித்துப் போட்டார். தொடர்ந்து, தன் தம்பியும் தங்கையும் அருந்துவதற்காக இளநீர் காய்களைப் பறித்துப் போட்டார். பிறகு, அதே வேகத்தோடு கீழே இறங்கி வந்தவரிடம் பேசினோம்.

இளநீர் காய்களோடு விமல்குமார்
இளநீர் காய்களோடு விமல்குமார்
நா.ராஜமுருகன்

``எங்கப்பா ஃபைனான்ஸ் தொழில் பண்ணினாலும், எங்களுக்கு பூர்வீகத் தொழில் விவசாயம் தான். எங்களுக்கு 25 ஏக்கர் நிலமிருக்கு. ஆனால், அனைத்தும் வறட்சியான பூமி. மழைப்பொழிவு குறைவான பகுதி. தமிழகத்திலேயே கடந்த மூன்று வருடங்களாக அதிகமாக வெயில் அடிக்கும் பகுதியாக எங்க கிராமத்தை உள்ளடக்கிய க.பரமத்தி பகுதி மாறியிருக்கிறது. இதனால், இங்கு பசுமையா விவசாயம் பார்க்க முடியாது. எங்க நிலம் அனைத்து மானாவாரி நிலம்தான். இரண்டு பாசனக் கிணறுகள் இருக்கு. மழை பேஞ்சா, அதுல தண்ணீர் இருக்கும். அப்போ, கடலை, சோளம்னு மானாவாரி பயிர்களை வெள்ளாமை செய்வாங்க.

தவிர, எங்க நிலத்துல 40 தென்னை மரங்கள் இருக்கு. அதோடு, வீட்டுக்குத் தேவையான புடலை, வெண்டை, மிளகாய், பீர்க்கங்காய், தக்காளினு காய்கறிகளையும் பயிர் செய்வாங்க. விவசாயக் குடும்பம்னாலும், எனக்கு ஆரம்பத்துல விவசாயத்து மேல பெரிய ஈடுபாடு இல்லை. அப்பாவும் என்னை படிப்புமேல மட்டும் கவனம் செலுத்துறமாதிரிதான் வளர்த்தார். அதனால், நல்லா படிச்சேன். இந்த நிலையில், தொழில் விசயமாக மூணு வருஷத்துக்கு முன்னாடி கேரளாவுக்குப் போன எங்கப்பா, வீட்டுத் தேவைக்கு பயன்படுமே என்று இந்த தென்னை மரமேற பயன்படும் கருவியை வாங்கிட்டு வந்தார். இங்குள்ள வேலை ஆள்களை அதுல ஏற பழக்கலாம்னு நினைத்தார்.

பனை மரம் ஏறும் விமல்குமார்
பனை மரம் ஏறும் விமல்குமார்
நா.ராஜமுருகன்
`மொட்டை மாடியில் குறைவான இடத்தில் 350 கோழிகள் வளர்க்கலாம்!' - கலக்கும் சென்னை இளைஞர்

ஆனால், அதைப் பார்த்ததும், `நான் இந்தக் கருவி மூலம் மரமேற பழகுறேன் அப்பா'னு கேட்டேன். அதுக்கு அவர், `படிக்கிற பய உனக்கு எதுக்கு இந்த ஆசை? கருவி மூலமா மரமேறினாலும், அவ்வளவு உயர தென்னை மரத்துல ஏறுறதுக்கு மரமேற தெரிஞ்சவங்களாலதான் முடியும். படிக்குற சோலிய மட்டும் பாரு'னு சொன்னார். ஆனா, நான் விடாப்பிடியா, `நமக்கு நினைச்ச நேரத்துல தென்னை மரத்துல ஏறணும். தேங்காய் தேவைப்படும் நேரத்தில் எல்லாம் மரமேற ஆள் வேணும். அந்த நேரத்துல வேலை ஆள்களைத் தேடிக்கிட்டு இருக்க முடியாது. அதனால், நான் ஏற பழக்கிகிட்டா, அந்த நேரத்துல பெரும் உதவியா இருக்கும்'னு சொன்னேன்.

அதன்பிறகு, அப்பா ஒத்துக்கிட்டார். எனக்கு கருவியைக் கொண்டு மரமேறக் கத்துக்கொடுத்தார். ஆனால், ஆரம்பத்துல அதுமூலமாக மரமேற ரொம்ப சிரமமா இருந்துச்சு. கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாதான் மரமேறக் கத்துக்கிட்டேன். உயரமான மரத்துல ஏறி நின்னதும், முதல்ல தலை சுத்திடுச்சு. அதன்பிறகு, பழகப்பழக உயரத்தைப் பார்த்து பயம் போயிடுச்சு. இப்போ சரசரவென மரமேறும் அளவுக்கு இதுல பழகிட்டேன். வீட்டுக்குத் தேவைப்படும்போதெல்லாம் இதுமூலமா மரமேறி தேங்காய்களை பறிக்க ஆரம்பிச்சேன்.

தென்னை மரம் ஏறும் விமல்குமார்
தென்னை மரம் ஏறும் விமல்குமார்
நா.ராஜமுருகன்

அதோடு, மொத்தமா தேங்காய்களை வெட்டும்போது, எல்லா மரத்திலயும் ஏற வேண்டியிருக்கும். அப்போ, தினமும் அதிகப்பட்சம் 10 மரம் வரைக்கும் ஏறி தேங்காய் வெட்டியிருக்கேன். தவிர, வீட்டுக்கும் வரும் விருந்தாளிகள் மற்றும் நண்பர்களின் தாகம் தணிக்க, இளநீர் பறிக்கவும் மரமேறுவேன். அதைப் பார்த்துட்டு, அவங்க என்னை உற்சாகப்படுத்துவாங்க. கடந்த ஒன்றரை வருஷமா கொரோனா பிரச்னையால வீட்டுல இருந்து ஆன்லைன் மூலமாதான் கிளாஸை அட்டென்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

அதனால், ஆன்லைன் கிளாஸ் மற்றும் லாக்டௌனால ஏற்படுற மன அழுத்தத்தைப் போக்க, அடிக்கடி மரமேறுவேன். இந்தக் கருவி மூலமா பனைமரத்திலும் ஏறுவேன். ஒருதடவை ஏறி இறங்கினா, உடம்பும் மனமும் அவ்வளவு புத்துணர்ச்சியா மாறிடும். அதேபோல், வீட்டுல இருக்கக்கூடிய சூழல் வந்ததால், அப்பா செய்யும் விவசாயத்துலயும் அவருக்கு ஒத்தாசை பண்ணுறேன். இதன்மூலமா, விவசாயம் செய்ய கத்துக்க ஆரம்பிச்சுருக்கேன். நல்ல ஐ.டி கம்பெனிக்கு வேலைக்குப் போய், நிறைய சம்பாதிக்கணும் என்பதுதான் லட்சியம். இருந்தாலும், எங்களுக்கு சோறு போடும் விவசாயத்தையும் விட மனசில்லை.

தென்னை மரம் ஏறும் விமல்குமார்
தென்னை மரம் ஏறும் விமல்குமார்
நா.ராஜமுருகன்
`ஊரைச் சுற்றி 700 மரக்கன்றுகள்; தொடர் பராமரிப்பு!' - கிராமத்தைப் பசுமையாக்கும் கரூர் இளைஞர்கள்

அதனால், பார்ட் டைமா விவசாயத்தைக் கத்துக்கிட்டு இருக்கேன். பணம் சம்பாதிக்க இன்ஜினீயரிங் படிப்பு. மன திருப்திக்கு விவசாயம் என்று இரட்டைக் குதிரை சவாரி பண்ணிக்கிட்டு இருக்கேன். எல்லாத்துக்கும் மேல, `நான் நல்ல இன்ஜினீயர் என்று பெயர் வாங்குவதைவிட, விவசாயத்தை முழுசா தெரிஞ்சவன்' என்று பேர் வாங்கவே விருப்பம். அதனால்தான், விவசாய வேலைகளையும் ஒவ்வொண்ணா பழகிக்கிட்டு இருக்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு