Published:Updated:

``இயற்கை விவசாய லாபத்துல பி.எம்.டபிள்யூ கார் வாங்குவேன்!'' கரூர் இன்ஜினீயரின் நம்பிக்கை

மரபு கட்டடம் முன்பு பிரதீப்குமார் ( நா.ராஜமுருகன் )

`இயற்கை விவசாயம் செய்தால், லாபம் இல்லை'னு பலரும் சொல்றாங்க. முதல்ல அவங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தணும்னு நினைக்கிறேன். அதனால், `இயற்கை விவசாயம் செய்து, அந்த லாபத்துல பி.எம்.டபிள்யூ கார் வாங்கணும் என்பதுதான் என் லட்சியம்."

``இயற்கை விவசாய லாபத்துல பி.எம்.டபிள்யூ கார் வாங்குவேன்!'' கரூர் இன்ஜினீயரின் நம்பிக்கை

`இயற்கை விவசாயம் செய்தால், லாபம் இல்லை'னு பலரும் சொல்றாங்க. முதல்ல அவங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தணும்னு நினைக்கிறேன். அதனால், `இயற்கை விவசாயம் செய்து, அந்த லாபத்துல பி.எம்.டபிள்யூ கார் வாங்கணும் என்பதுதான் என் லட்சியம்."

Published:Updated:
மரபு கட்டடம் முன்பு பிரதீப்குமார் ( நா.ராஜமுருகன் )

விவசாயத்தின் மீதான ஆர்வம் காரணமாக இன்றைய இளைஞர்கள் பலர், லட்சம் ரூபாய் சம்பளம் தரும் வேலையைக்கூட உதறிவிட்டு, `இயற்கை விவசாயம் பார்க்கிறேன்' என்று கிராமத்துக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். அம்மாதிரியான இளைஞர்களில் ஒருவர்தான், பிரதீப்குமார் மாணிக்கம்.

பெங்களூரில் உள்ள ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் இரண்டு லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால், கூடவே சொந்த கிராமத்தில், இயற்கை விவசாயமும் செய்கிறார். நம்மாழ்வார் காட்டிய வழியில் அங்கு விளையும் உணவுப் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்கிறார்.

விதைகள் உள்ள அலமாரி முன்பு பிரதீப்குமார்
விதைகள் உள்ள அலமாரி முன்பு பிரதீப்குமார்
நா.ராஜமுருகன்

100 சதவிகிதம் இயற்கை கட்டுமானப் பொருள்களைக் கொண்டு வீடு, கிராம விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்குத் திருப்புவதற்காக விதை வங்கி... என்று இவரின் செயல்பாடு ஒவ்வொன்றும், பாரம்பர்ய வாழ்வியல் மீதான அவரது அதீத ஆர்வத்தைக் காட்டுகிறது. அதோடு, இவரது நிலத்தில் பல கல்லூரி, பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இன்டன்ஷிப்புக்காக வரும் அளவுக்கு, இவர் தற்சார்பு வாழ்வியலைக் கண்முன் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள வெள்ளையம்பட்டிதான் பிரதீப்குமாருக்குச் சொந்த ஊர். அங்கே உள்ள பூர்வீக நிலம் 2 ஏக்கரில் இயற்கை முறையில் விவசாயம் செய்துவருகிறார். அவரைச் சந்தித்து, பேசினோம்.

``அப்பா மாணிக்கமும், அம்மா இந்திராவும் கல்லூரி பேராசிரியர்களாக இருந்து ஓய்வுபெற்றவர்கள். தங்கச்சி, டாக்டராக இருக்காங்க. என்னையும் பொறியியல் படிப்பு படிக்க வைத்தார்கள். ஆனால், சின்ன வயதிலிருந்தே எனக்கு விவசாயம் மீது ஆர்வம். ஆனா, அதுக்கான வாய்ப்பு இல்லை. எங்க குடும்பத்தைப் பொறுத்தவரை, என் தாத்தா காலத்திலேயே விவசாயம் முடிவுக்கு வந்துடுச்சு. எங்களுக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலம் சும்மாதான் கிடந்தது. அதேபோல், எங்க அம்மா வழி தாத்தாவுக்கும் சிறுமலையில் எஸ்டேட்டுகூட இருந்திருக்கு. அவங்க தரப்புலேயும் விவசாயம் குறைந்துப்போச்சு. விவசாயத்தின் மீது அளவில்லாத ஆர்வம் எனக்கு இருந்துச்சு. அதுக்கான வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். இந்தச் சூழலில்தான், கடந்த 2003-ம் ஆண்டு பொறியியல் படிப்பை முடிச்சுட்டு, பெங்களூருல ஒரு கம்பெனியில் 12,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன். இப்போ மூணாவது கம்பெனியில் வேலை பார்க்கிறேன். இப்போ மாதம் எனக்கு இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம். கடந்த 2011-லேயே எனக்கு திருமணமானது.

பிரதீப்குமார்
பிரதீப்குமார்
நா.ராஜமுருகன்

கல்யாணத்துக்குப் பிறகு, ஊர்ல உள்ள நிலத்துல விவசாயம் பார்க்கணும்னு ஆசை வந்துச்சு. `உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை'னு வீட்டுல தடுத்தாங்க. ஆனால், என் கண் முன்னாடியே வேலை ஸ்ட்ரஸ்ல மூணு பேர் அப்படியே வேலை பார்த்துக்கிட்டு இருக்கும்போதே ஹார்ட் அட்டாக்குல இறந்துபோனாங்க. `லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்தாலும், நாம வாழுறது நல்ல வாழ்க்கையா?'னு என்னை நானே கேள்வி கேட்டுக்கிட்டேன். உடனே, `ஊர்ல உள்ள இடத்துல விவசாயம் பார்ப்பது, படிப்படியா அதுல முன்னேறி நாலைந்து வருடங்கள்ல இந்த வேலையை விடுறது'னு முடிவு பண்ணினேன். மறுபடியும் வீட்டுல எதிர்த்தாங்க. நான் அவங்ககிட்ட, `நீங்க என்னை ஊர்ல விவசாயம் பார்க்க விடலன்னா, பெங்களூர், ஓசூர் பக்கம் நிலம் வாங்கி விவசாயம் பண்ணுவேன்'னு சொன்னேன். அதனால், `கெடுறதுனு முடிவாச்சு, அதை ஊர்ல பண்ணியே கெட்டுப்போ'னு தண்ணித் தெளிச்சு விட்டாங்க.

உடனே, முதல்ல 2015-ம் ஆண்டின் ஆரம்பத்துல, ஒரு ஏக்கர் நிலத்துல இயற்கை விவசாயம் பார்க்க முயற்சி பண்ணினேன். கிணறு இருந்ததால், அதைக் கொண்டு வெள்ளாமை பார்த்தேன். ஆனால், `இது கம்ப்யூட்டர் தட்டுற வேலையில்லை. உன்னால இதுல ஜெயிக்க முடியாது'னு சொந்தக்காரங்களே டிஸ்கரேஜ் பண்ணினாங்க. அதனால, அதைச் சவாலா எடுத்துக்கிட்டேன். 30 சென்ட் நிலத்துல வெங்காயம், கடலை, சம்பா மிளகாய்னு பயிர் செய்தேன். பஞ்சகவ்யா மட்டும் வெளியில் வாங்கித் தெளித்தேன். இயற்கை குப்பைகளைப் போட்டேன். ஆனால், பக்கத்துக் காடுகள்ல பலரும் செய்திருந்த வெள்ளாமையில் கடுமையான பூச்சித்தாக்குதல் ஏற்பட்டது. ஆனால், என் வயலில் பூச்சித்தாக்குதலே இல்லை. பதினாலரை மூட்டை நிலக்கடலை கிடைத்தது. கடலையை எண்ணெய்யாக ஆட்டி விற்றேன்.

மரபு கட்டடத்தின் ஹால்
மரபு கட்டடத்தின் ஹால்
நா.ராஜமுருகன்

கடலை ஓடுகளையும், புண்ணாக்கையும் உரமாகப் பயன்படுத்திக்கிட்டேன். ஓரளவு நம்பிக்கை கொடுத்தது. உடனே, `ரங்கமலை ஆர்கானிக் பண்ணை'னு ஒரு கம்பெனியை உருவாக்கினேன். என்னோட உற்பத்தி பொருள்களுக்கு, `மண்வாசனை'னு ப்ராண்ட் நேம் உருவாக்கி விற்றேன். எங்களது வறட்சிப் பகுதி என்பதால், நீர்ப்பற்றாக்குறையைத் தவிர்க்க சொட்டுநீர் பாசன வசதியை ஏற்படுத்தினேன். ஒன்றரை ஏக்கர் இடத்துல பழமரங்களை நட்டேன். தொடர்ந்து, 2016-ம் வருடம் நாட்டுக் காய்கறி விதைகளை மீட்டெடுக்க நினைத்து, 150 வகையான காய்கறி விதைகளை வீட்டுக்குப் பின்னாடி உள்ள 20 சென்ட் இடத்துல விதைத்து, அதிலேருந்து விதைப்பெருக்கம் செய்தேன்.

தக்காளி மட்டுமே 100 கிலோ வரை காய்த்தது. அந்த விதைகளை வீட்டுத்தோட்டம் போட நினைக்குற விவசாயிகளுக்குக் கொடுத்தேன். மலைக்கோவிலூர் அருகே 12 ஏக்கர் நிலத்தை ஒத்திக்குப் பிடித்து, 21 வகையான கத்திரிகளைப் பயிரிட்டு, விதைப்பெருக்கம் செய்தேன். எட்டு வகையான பாரம்பர்ய நெல் ரகங்களை விதைத்து, அதையும் விதைப்பெருக்கம் செய்தேன். எல்லாப் பல்கலைக்கழகத்திலும் இயற்கை விவசாயம் சார்ந்த நமது பாரம்பர்ய விவசாய முறையைப் பற்றி பாடமா இருக்கிறதேயொழிய, ஆவணமா இல்லை. அதனால், நாங்க செய்ற ஒவ்வொரு முயற்சியையும் போட்டோ, வீடியோவாக ஆவணப்படுத்திக்கிட்டோம். தொடர்ந்து, குறைந்த இடங்களில் 75 வகையான காய்கறிகளைப் போட்டு, அதை ஆன்லைன் மூலமா விற்பனை செய்ய ஆரம்பித்தோம்.

பூமிக்குள் விதை பதப்படுத்தும் அமைப்பு
பூமிக்குள் விதை பதப்படுத்தும் அமைப்பு
நா.ராஜமுருகன்

அதேபோல், இயற்கை முறையிலான குளியல் ஷாம்பூ, பற்பொடி, உணவுப் பொருள்கள், அரிசி, முருங்கை எண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், அரைப்புப்பொடி, சோப்பு, விதைகள், உரங்கள்னு பல பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தோம். நல்ல வரவேற்பு. கோவை வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மாணவர்கள் எங்கள் பண்ணைக்கு இன்டன்ஷிப்புக்காக வரும் அளவுக்கு முன்னேறினோம்.

கடந்த இரண்டு வருஷத்துல இந்தியா முழுக்க இப்படி 22 மாணவர்கள் வந்திருக்காங்க. இப்போது அமெரிக்காவைச் சேர்ந்த ரெண்டு பேர் எங்க பண்ணைக்கு இன்டன்ஷிப்புக்காக வர அனுமதி கேட்டு விண்ணப்பிச்சிருக்காங்க. `நாம இயற்கை விவசாயத்துல ஜெயித்தாலும், ஊர்ல உள்ள ஒருத்தரைக்கூட இயற்கை விவசாயியா மாத்தமுடியலையே'னு ஏக்கம் வந்துச்சு. அவங்களை இயற்கை விவசாயிகளாக மாற்ற வசதியா, ஒரு விதை வங்கியை என் பண்ணையில் உருவாக்க நினைச்சேன்.

மரபு வீட்டு மாடியில் பிரதீப்குமார்
மரபு வீட்டு மாடியில் பிரதீப்குமார்
நா.ராஜமுருகன்

அந்த விதை வங்கி செயல்படும் கட்டடத்தை முழுக்க முழுக்க 100 சதவிகிதம் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு அமைக்க முடிவு பண்ணினேன். அதைக் கட்டத் தெரிந்த வேலையாட்கள் யாரும் கிடைக்கவில்லை. அப்போதுதான், திருவண்ணாமலையைச் சேர்ந்த `தனல்' அமைப்பு அதுக்கு கைகொடுத்தாங்க. அவங்க எனக்கு அதுசம்பந்தமாகப் பயிற்சி கொடுத்ததோடு, அவங்க அமைப்பைச் சேர்ந்த 50 பேர் வந்து எனக்கு இயற்கை மரபு கட்டடத்தை அமைக்க உதவுனாங்க. 2018 ஜூன்ல கட்ட ஆரம்பித்தோம்.

மணல், சிமென்ட், கம்பி, பெயின்ட் உள்ளிட்ட பொருள்களை ஒரு சதவிகிதம்கூட பயன்படுத்தாமல் கட்ட ஆரம்பித்தோம். கடுக்காய் பொடி, கருப்பட்டி, வெல்லம், முட்டையின் வெள்ளைக் கரு, சோற்றுக்கற்றாழை, மூங்கில், பனைமரம், செம்மண், சுண்ணாம்பு, பண்ணையில் உள்ள மரக்கட்டைகள் உள்ளிட்ட பொருள்களை மட்டும் பயன்படுத்தினோம். மாடியை அமைக்க பனைமரத்தையும், மூங்கிலையும் பயன்படுத்தினோம். சுண்ணாம்பில் மஞ்சள், கடுக்காய் பொடி உள்ளிட்டப் பொருள்களை தனித்தனியாக கலந்தால் கிடைக்கும் இயற்கை வண்ணங்களைக் கொண்டு, சுவர்களுக்கு பெயின்ட் செய்தோம்.

சுவர்களில் இயற்கை முறையிலான வர்ணங்கள்
சுவர்களில் இயற்கை முறையிலான வர்ணங்கள்
நா.ராஜமுருகன்

அதேபோல், அந்தக் கட்டடத்தில் விதைகளை நமது பாரம்பர்ய முறைகளில் பதப்படுத்தி சேமிக்கும் அமைப்புகளை ஏற்படுத்தினோம். சுவர்களுக்குள் பானைகளை அமைத்து, அதன் வாய்ப் பகுதியை வெளியே தெரியும்படி அமைப்பது, குதிர், தரைக்குள் விதை சேமிக்கும் அமைப்பு, அடுக்குப்பானை அமைப்பு, விதைக் களஞ்சியம்னு பல அமைப்புகளை உருவாக்கினோம். இந்த விதை வங்கியில் இதுவரை, கத்திரியில் 40 வகை, தக்காளியில் 6, சுரையில் 12, நெல் ரகத்தில் 12னு 200 வகையான பாரம்பர்ய விதைகளை வைத்திருக்கிறோம்.

எங்க ஊரில் உள்ள அனைவரையும் இயற்கை விவசாயத்துக்கு திருப்புவதே இந்த விதை வங்கி ஆரம்பித்திருப்பதன் நோக்கம். இப்போதைக்கு, மாதம் ரூ.35,000 ரூபாய் வரை லாபம் கிடைக்குது. இது இன்னும் அதிகமாகும். `இயற்கை விவசாயம் செய்தால், லாபம் இல்லை'னு பலரும் சொல்றாங்க. முதல்ல அவங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தணும்னு நினைக்கிறேன். அதனால், `இயற்கை விவசாயம் செய்து, அந்த லாபத்துல பி.எம்.டபிள்யூ கார் வாங்கணும் என்பதே என் லட்சியம்.

பானையில் விதை சேமிக்கும் முறை
பானையில் விதை சேமிக்கும் முறை
நா.ராஜமுருகன்

இப்போதைக்கு, ஆன்லைன் மூலமா எனக்கு 400 ரெகுலர் கஸ்டமர்கள் இருக்காங்க. பெங்களூரில் உள்ள 30 அப்பார்ட்மென்ட்களில் வசிப்பவர்கள் எங்க கம்பெனி உணவுப் பொருள்களை வாங்குறாங்க. இப்போதைக்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்கள்ல மட்டும், ஊருக்கு வந்து விவசாயம் பார்க்கிறேன். விரைவில் எனது வேலையை ரிசைன் பண்ணிட்டு, முழுநேர விவசாயியா மாறப்போறேன். அப்போது, என்னோட இயற்கை விவசாய முன்னெடுப்புகள் பலமடங்கு ஸ்பீடாகும்" என்று நம்பிக்கையுடன் பகிர்ந்துகொள்கிறார்.

வாழ்த்துகள்!