Published:Updated:

`காடை பிடிக்கும் பெதவலை... நெல் சேமிக்கும் குதிர்!' - இயற்கை விவசாயியின் `கிராம அருங்காட்சியகம்'

பழங்கால குதிருடன் வி.பி.செல்லமுத்து
பழங்கால குதிருடன் வி.பி.செல்லமுத்து ( நா.ராஜமுருகன் )

பலரையும் இயற்கை விவசாயம் பக்கம் திருப்புவதற்காகவும், நம் முன்னோர்கள் இயற்கையாக நம்மைச் சுற்றி கிடைக்கும் பொருள்களை கொண்டு, விவசாயக் கருவிகளை வடிவமைத்த தற்சார்பு வாழ்க்கையைப் பற்றி உணர்த்துவதற்கும், கடந்த ஒரு வருடமாக இந்த அருங்காட்சியத்தை நடத்தி வருகிறார்.

இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கேகூட, நம் முன்னோர்கள் விவசாயத்துக்காக பயன்படுத்திய கருவிகள், பொருள்களைப் பற்றி முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில், கடந்த 40 வருடங்களாக இயற்கை விவசாயம் மட்டுமே செய்துவரும் கரூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி வி.பி.செல்லமுத்து, தனது வீட்டில் `கிராமிய அருங்காட்சியம்' அமைத்திருக்கிறார்.

விதவிதமான கூடைகள்
விதவிதமான கூடைகள்
நா.ராஜமுருகன்

அதில், நமது முந்தைய தலைமுறையினர் விவசாயத்துக்கும், இன்னபிற விஷயங்களுக்கும் பயன்படுத்திய நமது பாரம்பர்ய கருவிகளை சேகரித்து, காட்சிப்படுத்தியிருக்கிறார். பள்ளி மாணவர்கள் தொடங்கி, விவசாயிகள், சுய உதவிக்குழு பெண்கள் என்று பலரும் இவரது அருங்காட்சியத்துக்கு வந்து, அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள பொருள்களை கண்டுகளித்து செல்கிறார்கள்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள கணக்குப்பிள்ளைப்புதூரைச் சேர்ந்தவர், வி.பி.செல்லமுத்து. இவருக்கு, 20 ஏக்கர் நிலமிருக்கிறது. அதில் குறிப்பிட்ட பகுதியில் இயற்கை முறையில் காய்கறிகள், சோளம், கடலை உள்ளிட்டவற்றைப் பயிரிட்டு விவசாயம் செய்துவருகிறார். அதேபோல், பலரையும் இயற்கை விவசாயம் பக்கம் திருப்புவதற்காகவும், நம் முன்னோர்கள் இயற்கையாக நம்மைச் சுற்றி கிடைக்கும் பொருள்களைக் கொண்டு, விவசாயக் கருவிகளை வடிவமைத்த தற்சார்பு வாழ்க்கையைப் பற்றி உணர்த்துவதற்கும், கடந்த ஒரு வருடமாக இந்த அருங்காட்சியத்தை நடத்தி வருகிறார். தனது அருங்காட்சியத்தில் இருந்த பழமையான விவசாயக் கருவிகளை துடைத்து சுத்தம் செய்துகொண்டிருந்த வி.பி.செல்லமுத்துவை சந்தித்துப் பேசினோம்.

கிராம அருங்காட்சியகம் முன்பு வி.பி.செல்லமுத்து
கிராம அருங்காட்சியகம் முன்பு வி.பி.செல்லமுத்து
நா.ராஜமுருகன்
சுற்றியும் வறட்சி; ஆனால், இவர் தோட்டம் மட்டும் சோலைவனம்... கரூர் ஆய்வாளரின் `பலே' பராமரிப்பு!

``என்னோட குடும்பம் பூர்வீகமாக விவசாயம் செய்ற குடும்பம்தான். இருந்தாலும், என்னோட அப்பா, அரசு உத்தியோகத்துக்கு அனுப்ப நினைச்சு, என்னை பி.ஏ வரலாறு படிக்க வச்சார். 1981-ம் ஆண்டு டிகிரியை முடிச்ச நான், அரசு வேலைக்குப் போக முயற்சி பண்ணலை. அப்பா பார்த்த விவசாயத்தையே கையில் எடுத்தேன். ஆரம்பத்தில் இருந்தே இயற்கை விவசாயம்தான் பார்த்துக்கிட்டு வருகிறேன். ஆனால், கடந்த 40 வருஷ அனுபவத்துல, கடந்த 20 வருஷமாதான், விவசாயம் மாறுனத பாக்றேன். அதனால, மனுஷனோட ஆரோக்கியம் கெட்டுப்போச்சு. மனித சுய நலம், இயற்கையை சீரழித்தது. இப்போ, அதனால், புயல், மழை, வெள்ளம், கொரோனா மாதிரியான நோய்கள்னு வகையாக நாம இயற்கைகிட்ட தொடர்ந்து வாங்கிகட்டிக்கிட்டு இருக்கிறோம்.

நம்மாழ்வார் மீதான பாதிப்புலயும், கார்ப்பரேட் கம்பெனிகள் தரும் பணி அழுத்தத்திலும், இயற்கை விவசாயம் பக்கம் பல இளைஞர்கள் மடைமாறி வர்றாங்க. ஆனா, அதையும் கார்ப்பரேட் செட்டப்புல பலர் பண்றதுதான் கொடுமையா இருக்கு. அதனால், விவசாயத்தை நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் செஞ்சாங்கங்கிறதை வர்ற தலைமுறைக்கும், இயற்கை விவசாயம் பக்கம் வர்றவங்களுக்கும் உணர்த்த நினைச்சேன். அதனால், நமது பாரம்பர்ய விவசாயக் கருவிகளை சேகரிச்சு, அதை காட்சிப்படுத்த நினைச்சேன். கடந்த அஞ்சு வருஷமா தமிழகம் முழுக்க பயணிச்சு, அரிய விவசாயப் பொருள்களை சேகரிச்சேன். அதைக்கொண்டு, கடந்த ஒரு வருஷத்துக்கு முன்னாடி வீட்டுக்கு அருகிலேயே இந்த கிராம அருங்காட்சியகத்தை அமைச்சேன். மாடுகள் பூட்டி கிணறுகளில் இருந்து, தண்ணி இறைக்கும், நீர் ஏற்ற வண்டியை பொள்ளாச்சியில் ஒரு விவசாயிகிட்ட இருந்து சேகரிச்சேன்.

காளை மாட்டு சவாரி வண்டி
காளை மாட்டு சவாரி வண்டி
நா.ராஜமுருகன்

அதே பகுதியில், காளை பூட்டி ஓட்டுற சவாரி வண்டியை வாங்கிகிட்டு வந்தேன். திண்டுக்கல் மாவட்டத்தில உள்ள பாளையத்துக்கு பக்கத்துல உள்ள ஒரு விவசாயிகிட்ட இருந்த பழமையான குதிரை வாங்கினேன். `நாங்க இப்போ குருதை பயன்படுத்துறது இல்லை. ஆனாலும், நாங்க ஞாபகார்த்தமா வச்சுருக்கோம். இருந்தாலும், இவ்வளவு தூரம் ஆர்வமா வந்து நீங்க கேக்குறதால, உங்களுக்கு தர்றோம்'னு சொல்லி கொடுத்தாங்க. அதே பகுதியில், முடா, பெரிய மண்குடம், ஆரிக்கல் (ஆட்டுக்கல்), குந்தாணி (உரல்) என்று பல பொருள்களை சேகரிச்சேன். கைராட்டை என்ற கிஷான் ராட்டையையும் கஷ்டப்பட்டு, தேடி அலைஞ்சு திரிஞ்சு, கண்டுபிடிச்சு கொண்டு வந்தேன்.

அந்தகாலத்துல நாடகம், கூத்து நடத்துறவங்க பயன்படுத்துற செட்லைட்டை தேடி அலைஞ்சேன். அது, சென்னை பக்கமுள்ள நெருப்பூரில் உள்ள ஜமீன் வீட்டில் இருக்குனு தெரிஞ்சுகிட்டு, அங்கே போனேன். என்னோட ஆர்வத்தை பார்த்த ஜமீன் குடும்பத்தினர், பணமே வாங்கிக்காம செட்லைட்டை கொடுத்தாங்க. கூடவே, பழைய பெட்ரோமாக்ஸ் லைட்டையும் கொடுத்து அனுப்பினாங்க. முள்ளை மொத்தமா அடுக்கி, அடுத்த காட்டுக்கு எடுத்துகிட்டு போக, கவை, சாடு கவைனு பெரிய குச்சிகளை வச்சே அமைச்சாங்க. அந்த கவைகளை, பக்கத்துல ஒரு விவசாயிகிட்ட சேகரிச்சேன். அதேபோல், சோளம், நெல்பயிர்களில் இருந்து தானியங்களை பிரித்தெடுக்க, மாடுகளை கட்டி பிணைய அடிப்பாங்க.

 தாம்பு கண்ணி
தாம்பு கண்ணி
நா.ராஜமுருகன்

அப்போது, மாடுகளை இணைக்க தாம்பு கண்ணி பயன்படுத்துவாங்க. அதோடு, அந்த மாடுகள் தானியப்பயிர்களை திங்காமல் இருக்க, அதன் வாய்ப்பகுதியில் வாய்கூடை கட்டுவாங்க. அதையும் கஷ்டப்பட்டு சேகரிச்சேன். அதேபோல், முன்னோர்கள் கயிறு திரிக்க பயன்படுத்திய பலகை, கூரையில் பனைஓலை வேய பயன்படுத்தும் குத்தூசி, சந்தனக்கட்டையை அரைக்க பயன்படும் சந்தனக்கல், தட்டைப்பயிரை அடிக்க பயன்படும் கொட்டாங்குடி, காடை, கௌதாரி பிடிக்க பயன்படுத்தும் பெதவலை, அணில் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை தடி, தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க பயன்படுத்தும் மரவல்லம், முக்காலி, அஞ்சறைப்பெட்டினு ஒவ்வொரு பொருளா ஊர் ஊராக தேடிப்போய் கஷ்டப்பட்டு சேகரிச்சேன்.

கூடைகள்ல, சாடு, மக்கிலி, கூடை, பொட்டினு நாலு வகைகளை ஆரம்பத்துல பயன்படுத்தியிருக்காங்க. வீரணம்பட்டியில் உள்ள ஒரு விவசாயி வீட்டுல இந்த நாலு வகை கூடைகளையும் கேட்டு வாங்கி, கொண்டுவந்தேன். தண்ணீர் இறைக்க பயன்படுத்தும் சால்பெரியை தேடி கண்டுபிடிச்சு வாங்கிறதுக்குள்ள எனக்கு தாவு தீர்ந்துபோச்சு. அதேபோல், உலக்கு, படி, ஏர்கலப்பை, பாரம் ஏத்த பயன்படுத்திய மொட்டை வண்டி, சாப்பாடு பரிமாற பயன்படுத்தும் தடைச்சட்டி, தெலு இறக்க பயன்படுத்தும் முட்டி, பொருள்களை நிறுத்துப்பார்க்க பயன்படுத்திய கைத்தராசு, காட்டா தராசுனு மாவட்டம் விட்டு மாவட்டம் தாண்டி பலபொருள்களை கண்டுபிடிச்சு, வாங்கி வந்தேன். கரூர்ல வசிக்கும் சாதுராஜன் என்பவர்கிட்ட, முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட வால்வு ரேடியோவை வாங்கிட்டு வந்தேன். மொத்தமா எல்லா பொருள்களையும் சேகரிக்க ஒன்றரை லட்சம் வரை செலவானுச்சு.

பெதவலை மற்றும் ஐந்தறைப்பெட்டி
பெதவலை மற்றும் ஐந்தறைப்பெட்டி
நா.ராஜமுருகன்

ஒருவருஷத்துக்கு முன்னாடி என் வீட்டு பக்கத்திலேயே அந்தப் பொருள்களை வச்சு, கிராமிய அருங்காட்சியகத்தை அமைச்சேன். இன்னொரு பக்கம், நான் சொந்தமா முயற்சி பண்ணி, மாடி வீடு, ஓட்டு வீடு, குடிசை வீடு என்று மூன்றுவிதமான வீடுகளிலும் பெய்யும் மழைநீரை சேகரிக்கும் அமைப்புகளை வடிவமைச்சேன். கூரை வீட்டின் கூரையை பாலித்தின் கவரால் மூடி, மழைநீரை சேகரிக்கலாம். ஓட்டுவீட்டில் நான் வடிவமைச்ச அமைப்பை ஏற்படுத்தி, மழைநீரை சேகரிக்கமுடியும். அதேபோல், மழைநீர், கழிவுநீர் என எல்லா நீரையும் உறிஞ்சி பூமிக்குள் அனுப்பும் உறிஞ்சியையும் வடிவமைச்சேன். 1999-ம் வருடத்தில் இருந்து இந்த முயற்சியை செஞ்சுகிட்டு வர்றேன். என் வீட்டிலும் மழைநீர் சேமிப்பை செயல்படுத்தியிருக்கிறேன்.

கூரை வீட்டில் மழைநீரை சேமிக்கும் என்னோட அமைப்பு, டெல்லியில் நடந்த கண்காட்சியில் இரண்டு முறை கலந்துகிட்டு, பலரது பாராட்டுகளைப் பெற்றது. இப்படி, நான் வடிவமைச்ச மழைநீர் சேகரிப்பு முறைகளையும், இந்த அருங்காட்சியத்தில் காட்சிக்கு வச்சுருக்கிறேன். விரும்புறவங்களுக்கு அந்த முறைகளில் அவங்க வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை அமைத்துத் தர காத்திருக்கிறேன். இந்த அருங்காட்சியகத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்து பார்த்துட்டு, `நம் முன்னோர்கள் இவ்வளவு விசயமுள்ளவர்களா?'னு வியந்து பேசிகிட்டுப் போறாங்க. அதேபோல், பல்வேறு ஊர்களில் இருந்து சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் இங்கே வர்றாங்க. தவிர, அரசின் `அட்மா' திட்டத்தில் இணைஞ்சுருக்கிற விவசாயிகள் இந்த அருங்காட்சியத்தை வந்து பார்த்துட்டுப் போறாங்க.

நீர் ஏற்ற வண்டி
நீர் ஏற்ற வண்டி
நா.ராஜமுருகன்

அதோடு, பல குடும்பங்கள் தனித்தனியாக இதை பிக்னிக் ஸ்பாட்போல வந்து பார்த்துட்டுப் போறாங்க. இயற்கை விவசாயம் மேல ஈடுபாடு காட்டும் இளைஞர்கள் பலரும் இதை ஆர்வமா வந்து பார்க்கிறாங்க. இன்னும் பல நமது பாரம்பர்ய பொருள்களைத் தேடி சேகரிக்க தொடர்ந்து பயணிச்சுக்கிட்டுதான் இருக்கிறேன். இயற்கையை அழிக்காமல், இயற்கையா கிடைக்கிற பொருள்களை கொண்டே நம் முன்னோர்கள் எப்படி கருவிகளை செஞ்சு, இயற்கைக்கும், மனித வாழ்வுக்கும் நலம் பயக்கும் விதமா விவசாயம் பார்த்தாங்கனு பலருக்கும் புரிய வைக்கிற முயற்சியாதான் இந்த அருங்காட்சியகத்தை அமைச்சிருக்கேன். இதன்மூலம், ஒரு நூறு பேரை மாற்றினா, என் முயற்சி வெற்றிபெறும். கண்டிப்பா பலரை மாற்றிக் காட்டுவேன்" என்றார் உறுதியான வார்த்தைகளில்!

அடுத்த கட்டுரைக்கு