Published:Updated:

கரூர்: `பாதிப்புகளை இன்னும் கணக்கெடுக்கவே இல்லை!' - ஆட்சியர் அலுவலகத்தில் கூடிய விவசாயிகள்

மழையால் பாதித்த பயிருடன் விவசாயிகள்
மழையால் பாதித்த பயிருடன் விவசாயிகள்

மழையால் சேதமான பயிர்களை கையில் பிடித்தபடி, மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் குமுறலை கரூர் மாவட்ட விவசாயிகள் வெளிப்படுத்தினார்கள்.

தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, பருவம் கடந்தும் தொடர் மழை பெய்தது. இதனால், தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையான பாதிப்புக்குள்ளானது. அதேபோல், வறட்சியான மாவட்டமான கரூர் மாவட்டம்கூட, இந்த மழையால் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. இங்கு பல ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் செய்யப்பட்ட சாகுபடிகள், கடும் பாதிப்புக்குள்ளானதாக விவசாயிகள் தெரிவித்து வருகிறார்கள்.

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள்
ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள்

தங்கள் பகுதியில் இன்னும் பாதிப்புக் கணக்கைத் தொடங்கவில்லை என்று கூறி இன்று மாவட்டம் முழுவதிலுமிருந்து விவசாயிகள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழுமினார்கள். மழையால் சேதமான பயிர்களை கையில் பிடித்தபடி, மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினார்கள். 'எல்லா இடங்களிலும் கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டு, உரிய நிவாரணம் அனைவருக்கும் காலத்தோடு வழங்கப்படும்' என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்தார்.

உயிர்வேலி, தடுப்பணை, உணவு பழக்காடு... `ஒருங்கிணைந்த பண்ணை' முயற்சியில் கரூர் இன்ஜினீயர்

மேலும் அவர், "தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஓரிரு நாள்களுக்குள் மாவட்டம் முழுவதும் கணக்கெடுக்கும் பணிகள் முழுமையாக செய்து முடிக்கப்படும். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களைக் கணக்கெடுக்கும் பணியில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது வரை 30 சதவிகித கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்துள்ளன. இதுவரை 2,006 விவசாயிகளின் 1,536 ஹெக்டேர் நிலங்கள் கள ஆய்வு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

மழையால் பாதித்த பயிருடன் விவசாயிகள்
மழையால் பாதித்த பயிருடன் விவசாயிகள்

இதில், நெல், உளுந்து, துவரை, வெங்காயம், மரவள்ளி, தக்காளி, மிளகாய் உள்ளிட்டவை பயிர் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பகுதிகளிலும், பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தொடர்ந்து கள ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்னும் ஓரிரு தினங்களுக்குள், மாவட்டம் முழுமையும் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்கள் கணக்கெடுப்பு செய்து முடிக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு