Published:Updated:

கரூர்: `15 வருஷத்துக்குப் பிறகு தண்ணீர் தேக்கப்போறோம்!' - மராமத்து பணியில் இளைஞர்கள்

தூர் வாரும் மக்கள்
தூர் வாரும் மக்கள் ( நா.ராஜமுருகன் )

புதர் மண்டிக் கிடக்கும் துணை வாய்க்காலை தூர்வாருவதற்கு வெள்ளியணை பகுதியில் உள்ள இளைஞர்களும் பொதுமக்களும் கடந்த மூன்று நாள்களாகத் தன்னார்வலர்களை இணைத்துக்கொண்டு, ஆர்வமுடன் தூர்வாரி வருகின்றனர்.

15 வருடங்களுக்குப் பிறகு, குடகனாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரூர் வெள்ளியணை பெரிய குளத்துக்கு தண்ணீர் நிரப்ப ஏதுவா இருக்க வேண்டுமென்று இளைஞர்களும் பொதுமக்களும் இணைந்து வாய்க்காலை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூர் வாரும் மக்கள்
தூர் வாரும் மக்கள்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளியணை பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு மழைக்காலங்களில் பயனளிக்கும் பெரியகுளம் வறண்டு போனதால், நாளடைவில் விவசாயமும் வறண்ட பூமியானது. இதற்கு பிரதான காரணம், வெள்ளியணை பெரியகுளம் குடகனாறு அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படாதது தான். குடகனாறு ஆற்றிலிருந்து துணை வாய்க்கால் கடந்த 15 ஆண்டுகளாகத் தண்ணீர் வராததால் புதர்மண்டிக் கிடக்கிறது.

கரூர்: `பாதிப்புகளை இன்னும் கணக்கெடுக்கவே இல்லை!' - ஆட்சியர் அலுவலகத்தில் கூடிய விவசாயிகள்

குடகனாறு அணை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அழகாபுரி அருகே உள்ள கூம்பூர் பகுதியில் அமைந்துள்ளது. குடகனாறு கூம்பூர் பகுதியில் தொடங்கி, ஈசநத்தம், ஆர்.வெள்ளோடு, தம்மநாயக்கன்பட்டி வழியாக பாகநத்தம், சின்னமூக்கனாங்குறிச்சி, பிச்சம்பட்டி, ஆர்.புதுக்கோட்டை, டி.கூடலூர் பகுதியைக் கடந்து கரூர் மாவட்டத்தில் நுழைகிறது.

தண்ணீர் திறக்கப்பட்டபோது
தண்ணீர் திறக்கப்பட்டபோது
நா.ராஜமுருகன்

இறுதியாக, வெள்ளியணை பகுதியைக் கடைமடையாகத் துணை வாய்க்கால் வந்தடைகிறது. திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் விவசாயம் செழிப்பாக இருக்க குடகனாறு ஆறு மிக முக்கிய பங்காற்றி வந்த நிலையில் தற்போதுதான் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, துணை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், புதர் மண்டிக் கிடக்கும் துணை வாய்க்காலை தூர் வாருவதற்கு வெள்ளியணை பகுதியில் உள்ள இளைஞர்களும் பொதுமக்களும் கடந்த மூன்று நாள்களாகத் தன்னார்வலர்களை இணைத்துக்கொண்டு, ஆர்வமுடன் தூர்வாரி வருகின்றனர்.

தற்போது, 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள், விவசாயிகள் தன்னார்வ இளைஞர்கள் என்று பலர் தினம்தோறும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதிபலன் இன்றி வெள்ளியணை கடைமடை பெரிய குளத்துக்குத் தண்ணீர் நிரப்புவதற்கு தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

இதுகுறித்து, வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலரிடம் பேசினோம், "இன்னும் மூன்று நாள்களில் முழுமையாக வாய்க்கால் தூர்வாரப்பட்டு, கடைமடைக்கு குடகனாறு ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் இங்கு கொண்டு வந்து சேர்க்கப்படும். வெள்ளியணை ஊராட்சிமன்றத் தலைவரும் முழு ஆர்வத்தோடு பொதுமக்களுக்கு ஒத்துழைத்து வருவதால், இது சாத்தியமாயிற்று.

தூர் வாரும் மக்கள்
தூர் வாரும் மக்கள்
நா.ராஜமுருகன்

உழவுக்கு உயிரூட்டு என்பதற்கு உதாரணமாய், ஊர்கூடி தேர் இழுப்போம் என்ற பழமொழியை உண்மையாக்கி தண்ணீருக்காகக் கிராமமே ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம். வறண்டு கிடக்கும் வெள்ளியணை பெரிய குளத்தில் 15 வருடங்களுக்குப் பிறகு தண்ணீரைத் தேக்கி, அழகு பார்க்கப் போகிறோம்" என்றார்கள் உற்சாகமாக!

அடுத்த கட்டுரைக்கு