Published:Updated:

50 மாணவர்கள்; 116 மரங்கள்; அரசுப்பள்ளியில் மாணவர்களே உருவாக்கிய பழத்தோட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
 பழங்களோடு மாணவர்கள்
பழங்களோடு மாணவர்கள் ( நா.ராஜமுருகன் )

கரூர் மாவட்டம், அய்யம்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் பயிற்றுவிப்பதில்லை. கூடவே, இயற்கை காய்கறித் தோட்டம், பழத்தோட்டம் என்று மாணவர்களுக்கு உடல்சார்ந்த நலனிலும் கவனம் செலுத்த வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

`அரசுப் பள்ளி என்றால், கடமைக்கு பாடம் நடத்துவார்கள்; புதிதாக மாணவர்களுக்கு எதையும் கற்றுத்தர மாட்டார்கள்' என்று பொதுவாக விமர்சனம் வைக்கப்படுவதுண்டு. ஆனால், பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளைத் தாண்டி பல விஷயங்களைக் கற்றுத் தருகிறார்கள். அந்த வகையில், கரூர் மாவட்டம், அய்யம்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் பயிற்றுவிப்பதில்லை.

தண்ணீர் பாய்ச்சும் மாணவர்கள்
தண்ணீர் பாய்ச்சும் மாணவர்கள்
நா.ராஜமுருகன்

கூடவே, இயற்கை காய்கறித் தோட்டம், பழத்தோட்டம் என்று மாணவர்களுக்கு உடல்சார்ந்த நலனிலும் கவனம் செலுத்த வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பள்ளியில் விளைந்த சீத்தா பழங்களை மாணவர்களைக் கொண்டே அறுவடை செய்ய வைத்து, அவற்றை அரிசியில் வைத்து பழுக்க வைத்து, அவர்களுக்கு உண்ணக் கொடுத்திருக்கிறார்கள்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது அய்யம்பாளையம். இந்தத் தொடக்கப்பள்ளியில், 50 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக குமரவேலுவும், உதவி ஆசிரியராக மதுசூதனன் என்று இரண்டே இரண்டு ஆசிரியர்கள்தான் பணியாற்றி வருகின்றனர். மிகவும் பின்தங்கிய பகுதியான இந்தக் கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்.

பழத்தை உண்ணும் மாணவர்கள்
பழத்தை உண்ணும் மாணவர்கள்
நா.ராஜமுருகன்
அரசுப்பள்ளி டு ஐ.ஐ.டி: கூலி வேலை செய்யும் குடும்பம்; வறுமையிலும் சாதித்த அருண் குமாரின் கதை!

அதனால், அவர்களின் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த ஆசிரியர்கள் மெனக்கெட்டு வருகிறார்கள். ஸ்பான்ஸர்களைப் பிடித்து வகுப்பறையை ஸ்மார்ட் கிளாஸ் ரூமாக மாற்றியிருக்கிறார்கள். அதோடு, பள்ளியில் ஒரு போர்வெல் அமைத்து, அதன்மூலம் பள்ளி வளாகத்தில் உள்ள இடங்களில் இயற்கை முறையில் பல்வேறு காய்கறிச் செடிகளை வளர்த்து வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில் விளையும் காய்கறிகளை வைத்துதான், மாணவர்களுக்கு மதியம் சத்தான உணவு சமைத்துத் தரப்படுகிறது. இதற்கிடையில், 2018-ம் ஆண்டே, பள்ளி வளாகத்தில் சிறு நெல்லி, பெருநெல்லி, சீத்தா, சப்போட்டா, நாவல், மாதுளை, எலுமிச்சை, நார்த்தை, மா, வாழை, கொய்யா என்று 50-க்கும் மேற்பட்ட பழ மரக்கன்றுகளை வைத்து, மாணவர்களைக் கொண்டு அவற்றை வளர்த்து வந்தனர்.

சீத்தா பழம் பறிக்கும் மாணவர்கள்
சீத்தா பழம் பறிக்கும் மாணவர்கள்
நா.ராஜமுருகன்
`டிவியில் பாடம், வாட்ஸ்அப்பில் அசைன்மென்ட், பிறகு பரிசு!' - அரசுப்பள்ளி ஆசிரியர்களின் புது முயற்சி

அதோடு, நிழல் தரக்கூடிய வேம்பு, புங்கை, சரக்கொன்றை, புங்கன், பூவரசு, பன்னீர், பாதாம் மரம், தென்னை, முருங்கை என்று 116 மரக்கன்றுகளை வைத்து, வளர்த்து வந்தனர். அப்படி வைக்கப்பட்ட பழமரக்கன்றுகளில் பள்ளி வளாகத்தில் உள்ள 2 சீத்தா மரங்களில் காய்கள் காய்க்க ஆரம்பிக்க, அதை மாணவர்கள் பறித்து, அரிசியில் வைத்து பழுக்க வைத்து, அனைவரும் உண்டு மகிழ்ந்திருக்கின்றனர்.

இதுகுறித்து, அந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மேகலா மற்றும் பிரவினிடம் பேசினோம்.

``எங்களுக்கு வீட்டில் உண்பதற்கு பழங்களெல்லாம் வாங்கித் தர மாட்டாங்க. அதேபோல், ரசாயனம் தெளிக்கப்பட்டு விளைவிக்கப்பட்ட காய்கறிகளைக் கொண்டுதான் வீட்டுல உணவு சமைச்சு தருவாங்க. ஆனால், குமரவேல் சார், கடந்த மூணு வருஷத்துக்கு முன்னாடி எங்ககிட்ட, `பள்ளியில் பயன்பாடில்லாம இருக்கும் இடங்கள்ல இயற்கை காய்கறித் தோட்டம், பழத்தோட்டம் அமைப்போமா?'னு கேட்டார். ஆனால், அப்போ எங்களுக்கு அதுல பெருசா ஆர்வம் இல்லை. அதனால், வேண்டா வெறுப்பாதான் சம்மதம் சொன்னோம்.

சீத்தா பழங்கள்
சீத்தா பழங்கள்
நா.ராஜமுருகன்

ஆனால், குமரவேல் சாரும், மதுசூதனன் சாரும் எங்களை உற்சாகப்படுத்துனாங்க. காய்கறித் தோட்டத்துல, கத்திரி, வெண்டை, கொத்தவரை, சுரை, பரங்கிக்காய், புடலை, பச்சை மிளகாய், கீரைகள்னு பல காய்கறிகளை பயிர் செஞ்சோம். பழ மரக்கன்றுகளை நட்டு வளர்த்தோம். கொஞ்சம் கொஞ்சமா எங்களுக்கு அதுல ஆர்வம் வந்துச்சு. இயற்கையா விளைந்த காய்கறிகளை சாப்பிட்டபோது, அதுவரை நாங்க சாப்பிடாத அளவுக்கு சுவையா இருந்துச்சு.

அதனால், பள்ளி விடுமுறை, கோடை விடுமுறை நாள்களிலும் காய்கறி, பழத்தோட்டங்களுக்கு தொடர்ச்சியா தண்ணீர் பாய்ச்சினோம். கொரோனா விடுமுறை காலத்திலும் குமரவேல் சார் உதவியோடு தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி, இந்தத் தோட்டங்களை வளர்த்தெடுத்தோம். இப்போது, பழ மரங்களில் சீத்தா பழ மரம் மட்டும் காய்களை காய்க்கத் தொடங்கியிருக்கு. இதுவரை, 60 சீத்தா பழங்கள் வரை அறுவடை பண்ணியிருக்கிறோம். அவற்றைப் பாத்திரத்தில் அரிசியைக் கொட்டி, அதற்குள் வைத்து இயற்கை முறையில் பழுக்க வைத்தோம்.

சீத்தா பழத்தைப் பழுக்க வைக்கும் மாணவர்கள்
சீத்தா பழத்தைப் பழுக்க வைக்கும் மாணவர்கள்
நா.ராஜமுருகன்
ஏசி வசதி, ஸ்மார்ட் வகுப்பறை; தனியார் பள்ளிகளிலிருந்து வந்து குவியும் அட்மிஷன்; அசத்தும் அரசுப்பள்ளி!

பழுத்த பழங்களை மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பங்கிட்டு உண்டோம். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு, இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டதால், அவற்றின் ருசி அவ்வளவு அற்புதமா இருந்துச்சு. மீதமுள்ள மரங்களும் இன்னும் இரண்டு வருடங்களில் காய்ப்புக்கு வந்துரும்னு குமரவேல் சார் சொல்லியிருக்கிறார்" என்றார்கள்.

தொடர்ந்து பேசிய, பள்ளியின் தலைமை ஆசிரியரான குமரவேல்,

``மாணவர்களுக்கு வெறும் ஏட்டுக்கல்வி மட்டும் கிடைத்தால் போதாது. இயற்கை சார்ந்த சூழலியல் கல்வியும் அவர்களுக்கு அவசியம். அதோடு, இன்று மாறிய உணவுப் பழக்கத்தால், மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்த விழிப்புணர்வும் அவர்களுக்குத் தேவை. அதனால்தான், அவர்களுக்கு இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், பழங்களை உண்ணக் கொடுப்பதன் மூலம், சிறுபிராயத்திலேயே அவர்களுக்கு நல்ல உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்தோம். அதற்காகத்தான், அவர்களைக் கொண்டே இயற்கை காய்கறித்தோட்டம், பழத்தோட்டத்தை பள்ளி வளாகத்தைச் சுற்றி அமைத்திருக்கிறோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாணவர்கள் அந்த இடங்களில், அதீத விருப்பத்துடன் உலா வர்றாங்க. அதுவும், உணவுப் பட்டியலில் அரிசி சாதத்தைவிட, பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்க்கச் சொல்றாங்க.

குமரவேல்
குமரவேல்
நா.ராஜமுருகன்

கொரோனா காலத்தில் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு முக்கியம் என்பது தெரிய வந்துச்சு. இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், பழங்களை உண்ணும்போது, மனிதர்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். அதேபோல், நம் முன்னோர்கள் இயற்கையாக விளைந்த காய்களை அரிசிப் பானைக்குள் வைத்து பழுக்க வைப்பார்கள். அந்தப் பழைமையும் மாணவர்களுக்குத் தெரிய வேண்டும் என்று நினைத்து, அவர்களை அதற்குத் தயார்படுத்துகிறோம். அந்த வகையில், எங்கள் பள்ளி பிள்ளைகளுக்கு நல்ல கல்வியும், நல்ல உணவும் கிடைக்க வழிவகை செய்திருக்கிறோம் என்பதில், ஆசிரியர்களான எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி" என்றார்.

நல்ல மாற்றம்; மாணவர்களுக்கான ஏற்றம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு