Published:Updated:

கரூரில் முருங்கை பார்க்! 3 நாள் முருங்கைக் கண்காட்சியில் அமைச்சர் அறிவிப்பு!

கண்காட்சியைத் தொடங்கி வைத்த அமைச்சர்கள் ( நா.ராஜமுருகன் )

முருங்கை குறித்து கரூரில் நடைபெறும் மூன்றுநாள் சர்வதேசக் கண்காட்சி, முருங்கை விவசாயிகள், முருங்கை சம்பந்தமான தொழில் முனைவோர்கள், கருவிகள் வடிவமைப்பவர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூரில் முருங்கை பார்க்! 3 நாள் முருங்கைக் கண்காட்சியில் அமைச்சர் அறிவிப்பு!

முருங்கை குறித்து கரூரில் நடைபெறும் மூன்றுநாள் சர்வதேசக் கண்காட்சி, முருங்கை விவசாயிகள், முருங்கை சம்பந்தமான தொழில் முனைவோர்கள், கருவிகள் வடிவமைப்பவர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கண்காட்சியைத் தொடங்கி வைத்த அமைச்சர்கள் ( நா.ராஜமுருகன் )

கரூர் பிரேம் மஹாலில் நவம்பர் 4, 5 மற்றும் 6 ஆகிய மூன்று நாள்கள் இந்த சர்வதேச முருங்கைக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்திய தொழில் கூட்டமைப்பு, கரூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து முன் எடுக்கும் இந்த சர்வதேச முருங்கை கண்காட்சியின் ஒரு பகுதியான கருத்தரங்கு, முருங்கை உற்பத்தி பெருக்குதல், பதப்படுத்தும் முறைகள், மதிப்பு கூட்டப்படும் பொருள்களைத் தயாரிக்கும் முறைகள், தயாரிப்பு எந்திரங்கள் மற்றும் கரூரில் இருந்து உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை வேளாண் மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக மாறியுள்ளது.

கண்காட்சியைத் தொடங்கி வைத்த அமைச்சர்கள்
கண்காட்சியைத் தொடங்கி வைத்த அமைச்சர்கள்
நா.ராஜமுருகன்

கரூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்கள் முருங்கை அதிகம் பயிரிடப்படும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டாலும், கரூர் மாவட்டத்தில் ஒட்டுமொத்த முருங்கை உற்பத்தியில் 50 சதவிகிதத்தை வகிக்கிறது. கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, க.பரமத்தி ஒன்றியங்களில் அதிக அளவில் முருங்கை பயிரிடப்படுகிறது. இங்குள்ள முருங்கை விவசாயிகள் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக, முருங்கை சம்பந்தப்பட்ட தொழிற்சாலை, முருங்கை குளிர்பதனக் கிடங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், அதற்கான உத்தரவாதத்தை இந்த முருங்கைக் கண்காட்சியானது ஏற்படுத்தியிருப்பதாக, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்தக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர், அரங்குகளைப் பார்வையிட்டதோடு, சர்வதேச முருங்கைக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர். கோவை வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர், கரூர் மாவட்ட ஆட்சியர், பிரேசில், ஜெபர் கஸ்பர், ஜப்பான், கொரியா, ஸ்ரீலங்கா, மலேசியா, துபாய், லெபானன், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முனைவோர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

 கலந்துகொண்ட விவசாயிகள்
கலந்துகொண்ட விவசாயிகள்
நா.ராஜமுருகன்

நூற்றுக்கணக்கான முருங்கை விவசாயிகளும் இதில் பங்கேற்றனர். இந்த சர்வதேச முருங்கைக் கண்காட்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில், `காவிரியும் அமராவதியும் கரைபுரண்டோடும் கரூர் மாவட்டத்தில் மண்வளமும் பருவநிலையும் முருங்கை சாகுபடிக்கு பொருத்தமானதாக இருப்பதால் கரூர் மாவட்டம் முருங்கை களஞ்சியமாகத் திகழ்கிறது. அதைக் கருத்தில் கொண்டே கரூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர் மற்றும் மதுரையை முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலம் என கழக அரசு அறிவித்தது.

உணவில் சுவையைக் கூட்டுவதில் மட்டுமல்ல உடலுக்கு வலு சேர்க்கக்கூடிய மருத்துவ பண்பும் முருங்கைக்கு உண்டு. காய் இலை விதை பட்டை என முருங்கையின் அனைத்திலும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது. நவம்பர் 4, 5 மற்றும் 6 ஆகிய நாள்களில் நடைபெறும் பன்னாட்டு முருங்கைக் கண்காட்சி மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

உலகெங்கும் பயன்படும் இந்த உன்னத முருங்கையின் உற்பத்தி, பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் பல்வேறு பயன்கள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை வேளாண் பெருமக்கள் அறிய, இந்தக் கண்காட்சி மிகப் பயனுள்ளதாக இருக்கும். கண்காட்சி வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள். முருங்கை உழவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்பதைத் தெரிவித்துக்கொண்டு, பன்னாட்டு முருங்கைக் கண்காட்சிக்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருக்கும் இந்திய தொழில் கூட்டமைப்புக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், வேளாண் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியபோது...
அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியபோது...
நா.ராஜமுருகன்

இந்நிலையில், இந்த முருங்கைக் கண்காட்சி பற்றி பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ``முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலத்துக்குள் முருங்கை பெருமளவில் விளையும் கரூர் மாவட்டத்தை இணைத்து முதல்வர் அறிவித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பு, கரூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து முன் எடுக்கும் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த சர்வதேச முருங்கைக் கண்காட்சியின் ஒரு பகுதியான கருத்தரங்கை முருங்கை உற்பத்தி பெருக்குதல், பதப்படுத்தும் முறைகள், மதிப்பு கூட்டப்படும் பொருள்களைத் தயாரிக்கும் முறைகள், தயாரிப்பு எந்திரங்கள் மற்றும் கரூரில் இருந்து உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை வேளாண் மக்கள் அறிந்துகொள்ளலாம். அதோடு, முருங்கை சம்பந்தப்பட்ட விவசாயிகள் பல வருடங்களாக வைத்த கோரிக்கை இப்போது நிறைவேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. சிறுகுறு தொழில்துறை அமைச்சரிடம், இங்கு முருங்கை பார்க் அமைக்க கோரிக்கை வைத்தேன். `இடம் கொடுத்தால், முருங்கை பார்க் அமைக்கப்படும்' என்று உத்தரவாதம் கொடுத்தார். இப்போது, அதற்குரிய இடம் தயாராகிவிட்டது. விரைவில் கரூரில் முருங்கை பார்க் அமைக்கப்படும்" என்றார்.

அடுத்து பேசிய, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,

``செந்தில் பாலாஜி வைத்த கோரிக்கைபடி, விரைவில் கரூரில் முருங்கை பார்க் அமைக்கப்படும். முருங்கையை வைத்து இளைஞர்கள் பலர் தொழில்முனைவோர்களாக வளர ஏதுவாக அனைத்து முயற்சிகளும் துறை சார்பில் செய்யப்படும். இந்தியாவின் மிகப்பெரிய துறையாக விளங்கும் வேளாண்துறைக்கும், விவசாயிகளின் நலனுக்கும், எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் தங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு, இன்று கரூரில் இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் முருங்கையிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிப்பதற்காக இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது. முருங்கை மரம் நமக்கு கிடைத்த பொக்கிஷம் ஆகும். இதன் இலை, காய்கள் இரும்பு சத்து நிறைந்தது. அசைவ உணவுக்கு இணையாக சைவ உணவில் சத்துள்ள ஒரு உணவு என்றால் அது முருங்கை இலை மற்றும் காய்கள் மட்டுமே. முருங்கை பூக்கள் மருத்துவ குணம் கொண்டவை. ஒரு முருங்கை மரத்தின் இலை, பூக்கள், காய்கள் என அனைத்தும் மனிதனுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

முருங்கைப் பொருள்கள் சம்பந்தப்பட்ட அரங்கு
முருங்கைப் பொருள்கள் சம்பந்தப்பட்ட அரங்கு
நா.ராஜமுருகன்

எங்கள் பகுதியான செங்கல்பட்டு - காஞ்சிபுரம் போன்ற வட மாவட்டங்களில், ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு முருங்கை மரம் தவறாமல் வளர்க்கப்படும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சத்துள்ள உணவான முருங்கையை நாம் வணிக பொருளாக பயன்படுத்துவது இல்லை. சமீபகாலமாக அந்த முருங்கை மரங்கள் வணிக ரீதியாக தமிழகத்தின் கரூர் - தேனி - திண்டுக்கல் - சிவகங்கை - திருநெல்வேலி போன்ற பல்வேறு மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. அவ்வாறு சாகுபடி செய்யப்படும் முருங்கை உணவுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை மூலப்பொருள்களாகக் கொண்டு மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி வணிக ரிதியில் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இந்த 3 நாள் கண்காட்சி நடைபெறுகிறது" என்றார்.

இறுதியாகப் பேசிய, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,

``முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவித்ததில் கரூர் மாவட்டமும் ஒன்று முருங்கையினுடைய பொருள்களை மதிப்புக் கூட்டி விற்பதற்கான வாய்ப்பை முதற்கட்டமாக இந்த மாவட்டத்தில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. குறு, சிறு தொழில் அமைச்சர் வேளாண்மைத் துறையும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க முருங்கை உற்பத்தியைப் பொறுத்தவரை தமிழகத்தில் கிட்டத்தட்ட 50,000 ஏக்கர் அளவுக்கு முருங்கை விவசாயம் செய்யப்பட அதற்கு பல திட்டங்களை இந்தக் கரூர் மாவட்டத்துக்கு மட்டும் வேளாண்மைத் துறை மூலமாக வழங்கப்படவுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
நா.ராஜமுருகன்

நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முயற்சியால் வேளாண்மை கல்லூரியின் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது உலகுக்கே மதிப்புக்கூட்டப்பட்ட முருங்கை உணவுப்பொருள்களை வழங்கும் இடமாக கரூர் மாவட்டம் அமைவதற்கு என்னுடைய வாழ்த்துகள்" என்றார்.

இந்தக் கண்காட்சியில் பேசிய வல்லுநர்கள், ``முருங்கையில் ரூ. 3,500 கோடி அளவுக்கான வர்த்தகம் உள்ளது. அதனால், இந்தக் கண்காட்சி அதற்கான வித்தை இட்டிருக்கிறது" என்றார்கள். தொடர்ந்து இந்திய தொழில்கூட்டமைப்புகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன், மூன்று அமைச்சர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.