Published:Updated:

மாணவர்களுக்கு இயற்கை விவசாய விழிப்புணர்வு, கல்லூரியில் 50 சென்ட் தோட்டம்... கலக்கும் தாளாளர்!

காய்கறித் தோட்டத்தில் செங்குட்டுவன்
காய்கறித் தோட்டத்தில் செங்குட்டுவன் ( நா.ராஜமுருகன் )

தனது கல்லூரில் படிக்கும் மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த புரிதல்களை ஏற்படுத்துவதற்காக, கல்லூரி வளாகத்தில் காய்கறித் தோட்டம் அமைத்திருக்கிறார் செங்குட்டுவன்.

``எங்க கல்லூரியில் படிக்கும் எத்தனையோ மாணவர்கள் நல்ல வேலைக்குப் போக, நாங்க காரணமாக இருக்கிறோம். பல மாணவர்களை, பெரிய கம்பெனிகளுக்குத் தலைமை பொறுப்புகளுக்குப் போகும் அளவுக்கு உருவாக்கியிருக்கிறோம். உலகம் முழுக்க சிறந்த சமையல் கலைஞர்களை உருவாக்கி, அனுப்பியிருக்கிறோம். ஆனால், விவசாயத்தை நேசிப்பவர்களாக, விவசாயத்தைப் பற்றி நுணுக்கமாகத் தெரிந்தவர்களாக ஒருவரையும் மாற்றவில்லை என்ற ஏக்கம் எனக்குள் இருந்தது. அதற்காகத்தான், இந்த சிறிய முயற்சி" என்று கூறி சிரிக்கிறார் செங்குட்டுவன்.

காய்கறித் தோட்டத்தில் செங்குட்டுவன்
காய்கறித் தோட்டத்தில் செங்குட்டுவன்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், கொடையூரில் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி என்ற பெயரில் தனியார் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார் செங்குட்டுவன். திருவள்ளுவரின் மீது கொண்ட அதீதப் பற்றால், இவரது கல்லூரி கட்டடத்தின் மீது பெரிய அளவில் திருவள்ளுவருக்கு சிலை வைத்திருக்கிறார். திருவள்ளுவர், தனது திருக்குறள் வாயிலாகக் கொடுத்த அரிய படிப்பினைகளை மாணவர்களுக்குத் தொடர்ந்து போதித்து வருகிறார்.

அந்த வகையில், தனது கல்லூரில் படிக்கும் மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த புரிதல்களை ஏற்படுத்துவதற்காக, கல்லூரி வளாகத்தில் காய்கறித் தோட்டம் அமைத்திருக்கிறார். 50 சென்ட் இடத்தில் அமைந்திருக்கும் இந்தக் காய்கறித் தோட்டத்தை, முழுக்க முழுக்க இயற்கை முறையில் பராமரித்து வருகிறார். அருகில் உள்ள மாணவர்கள் தினமும் வந்து இந்த காய்கறித் தோட்டத்தில் தங்களின் அன்றாடப் பொழுதுகளை செலவிட்டு, விவசாயத்தின் முக்கியத்துவத்தை அறிந்து வருகிறார்கள்.

மாணவர்களோடு செங்குட்டுவன்
மாணவர்களோடு செங்குட்டுவன்
நா.ராஜமுருகன்

அப்படி, அந்தக் காய்கறித் தோட்டத்தில், இயற்கை முறையில் எப்படிக் காய்கறிகளை விளைவிப்பது, தண்ணீர் பாய்ச்சுவது, உரமிடுவது என்று சகல நுணுக்கங்களையும் மாணவர்களுக்கு உணர்த்திக்கொண்டிருந்த செங்குட்டுவனைச் சந்தித்துப் பேசினோம்.

``15 வருஷமா இந்தக் கல்லூரியை நடத்திக்கிட்டு வருகிறேன். வெறும் பணம் சம்பாதிப்பதை மட்டும் இதில் குறிக்கோளா நான் செய்யலை. உண்மையில் மாணவர்களுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் கற்றுத்தரும் இடமா இதை மாத்தி வச்சுருக்கிறேன். வாழ்க்கையைத் தேவையான நடைமுறைகளை மாணவர்களுக்கு சொல்லித்தருகிறோம். இதுபோல், மாணவர்களுக்கு எத்தனையோ விஷயங்களைப் போதித்து வந்தேன். திருக்குறள் பற்றி நாளும் மாணவர்களுக்கு படிப்பினைகளைச் சொல்லி வந்தேன். ஆனா, விவசாயப் பகுதியான இந்தப் பகுதியில் உள்ள என் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலையேங்கிற குறை மனசை அரிச்சுக்கிட்டு இருந்துச்சு.

இயற்கை விவசாயத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி, மக்களிடம் பெரிய அளவில் அதன் தாக்கத்தை ஏற்படுத்திய நம்மாழ்வாரின் சமாதியும் கரூர் மாவட்டத்தில்தான் இருக்கு. 5 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் கரூரில் இருந்து சென்னைக்கு ஒரே ஒரு ஆம்னி பேருந்துதான் போகும். ஆனா இப்போ, 15 ஆம்னி பேருந்துகள் போய் வருது. காரணம், எல்லாரும் படித்து பெரிய வேலைக்குப் போய், சென்னை போன்ற பெருநகரங்களில் செட்டிலாகிவிட வேண்டும் என்று நினைப்பதுதான். ஆனால், `ஏர் பின்னது உலகம்'னு திருக்குறள் உழவுத்தொழிலின் மேன்மையைச் சொல்லி வச்சுருக்கார். ஆனா, இன்றைய சந்ததி, `ஐ.டி துறை பின்னது உலகம்'னு போய்க்கிட்டு இருக்கு.

காய்கறியோடு செங்குட்டுவன்
காய்கறியோடு செங்குட்டுவன்
நா.ராஜமுருகன்

அதை மாற்ற, என்னாலான முயற்சியை செய்யணும்னு நினைச்சேன். இதுபற்றி, நம்மாழ்வாரின் பெண் சீடர்களில் ஒருவரான லிங்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரோஜாகிட்ட அடிக்கடி பேசிக்கிட்டு இருப்பேன். அப்போதுதான், என் கல்லூரி வளாகத்தில் இயற்கை முறையில் காய்கறித் தோட்டம் அமைத்து, அதன்மூலம் மாணவர்களுக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்படுத்தணும்னு யோசனை தோன்றியது. சரோஜாவும், அவரின் தங்கை மகன் கார்த்திக்கும் சேர்ந்து, எனது கல்லூரி வளாகத்தில் இயற்கை காய்கறித் தோட்டம் அமைச்சு தர முன்வந்தாங்க. கடந்த ஜனவரி மாதம் அதற்கான வேலையை ஆரம்பித்தோம். முதல்கட்டமாக, 50 சென்ட் இடத்துல தோட்டம் அமைக்க நினைச்சோம். ஒருசதவிகிதம்கூட இதில் ரசாயனம் கலக்கக் கூடாதுங்கிறதுல உறுதியா இருந்தோம். நிலத்தை தகுந்த முறையில் சீரமைச்சு, இலைதழைகளைக் கொண்டு மூடாக்குப் போட்டு, அதில் காய்கறித் தோட்டத்தை அமைச்சாங்க.

அவரை, பாகை, சுரை, புடலை, பூசணி, பீர்க்கங்காய், தர்பூசணி, சிறுகீரை, புளிச்சக்கீரை, பெருகீரை, தண்டுக்கீரை, மணத்தக்காளி கீரை, வெண்டை, கொத்தவரைனு பலவகை காய்கறி, கீரை வகைகளை பயிர் செஞ்சோம். கல்லூரி வளாகத்தில் உள்ள போர்வெல்லில் இருந்து தண்ணீர் எடுத்து, சொட்டுநீர் பாசனம் முறையில் காய்கறி செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்ச ஆரம்பிச்சோம். இயற்கை உரங்களை இடுவதற்கு ஏதுவாக, 4 நாட்டு மாடுகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சோம். கோமியம் கலந்த இயற்கை பூச்சிவிரட்டிகளை மட்டுமே பயன்படுத்த ஆரம்பிச்சோம்.

மாணவிகளுக்கு விதைகள் வழங்கும் செங்குட்டுவன்
மாணவிகளுக்கு விதைகள் வழங்கும் செங்குட்டுவன்
நா.ராஜமுருகன்

இவை எல்லாவற்றையும் சரோஜா முறையாகச் சொல்லிக்கொடுத்தாங்க. இப்போ, எல்லா காய்கறிச் செடிகளும் காய்க்குது. வாரத்துக்கு 2 அல்லது 3 தடவை அறுவடை பண்ணுறோம். ஒவ்வொரு அறுவடைக்கும் 50 கிலோ வரை காய்கறி கிடைக்குது. சொந்தப் பயன்பாட்டுக்குப் போக, மீதியுள்ள காய்கறிகளை ஆசிரியர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம். இலவசமாகக் கொடுத்தால், அதோட அருமை தெரியாது என்பதால், விலை வைத்து கொடுக்கிறோம். அப்படியும் மீதியுள்ள காய்கறிகளை வெளியில் சந்தையில் விற்பனை செய்கிறோம். இதன்மூலம், மாதம் ரூ. 1,500 வருமானம் கிடைக்குது. இந்த காய்கறித் தோட்டம் அமைத்ததன் முதல் நோக்கம், இதன்மூலம் இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த கல்வியை போதிக்கத்தான்.

ஆனால், அதற்குள் கடந்த மார்ச் மாதம் கொரோனா பிரச்னை வந்து கல்லூரி இயங்காத சூழல் ஏற்பட்டது. அதனால், பெருவாரியான மாணவர்களுக்கு இதன்மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால், கல்லூரிக்கு அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், இந்தத் தோட்டம் பற்றி கேள்விப்பட்டு இங்கே வர ஆரம்பிச்சாங்க. தண்ணீர் பாய்ச்சுறது, களை எடுக்கிறது, உரமிடுவதுனு அவங்க ஆர்வமா ஈடுபட்டாங்க.

காய்கறியோடு செங்குட்டுவன்
காய்கறியோடு செங்குட்டுவன்
நா.ராஜமுருகன்

காய்கறி போடும் சரியான பட்டம், எப்படிப் பாத்தி அமைப்பது, விதைகளை ஊன்றும் முறை, மூடாக்கு அமைக்கும் வழிமுறை, எத்தனை நாளுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சுவது, நோய்த் தாக்குதல், அதற்கு மருந்து தெளிப்பது என்று பல விஷயங்களையும் நான் சொல்லிக் கொடுத்தேன். இப்போ, நிறைய மாணவர்கள் இந்த தோட்டத்தை பார்க்க வர்றாங்க. இங்கு விளையும் காய்கறிகளை மாணவர்களுக்கும் வழங்குகிறோம். அதை சாப்பிட்டுப் பார்த்த பலரும், `இயற்கையா விளைஞ்ச காய்கறிகள் அவ்வளவு ருசியா இருக்கு. நாங்களும் வீடுகள்ல இப்படி இயற்கை முறையிலான காய்கறித் தோட்டத்தை அமைக்கப்போகிறோம்'னு சொல்றாங்க. அதைக்கேட்டதும் மகிழ்ச்சியா இருக்கு.

மாணவர்கள் கேட்டால், நல்ல நாட்டுவிதைகளையும் அவங்களுக்கு நாங்க வழங்கத் தயாராக உள்ளோம். எல்லோருக்கும் சோறு போடும் விவசாயிகளின் வலியையும், விவசாயத்தின் அருமையையும் மாணவர்களுக்கு இதன்மூலம் ஒருசேர உணர்த்த முடியுது. என் கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் ஒரு நம்மாழ்வாரையாவது உருவாக்கிக் காட்டுவேன். இதோடு, நிறுத்தாமல் அடுத்தடுத்து இன்னும் கூடுதல் இடங்களில் இப்படி இயற்கை காய்கறித் தோட்டம், பழத்தோட்டம், நெல் சாகுபடி என்று செய்து, எங்க கல்லூரியில் படிக்கும் எல்லா மாணவர்களையும் விவசாயத்திலும் கெட்டிக்காரர்களாக மாற்றிக்காட்டுவேன். இயற்கை விவசாயம் குறித்த எனது இந்த வேள்வி விடாமல் தொடரும்" என்றார் உற்சாகமாக!

சந்திரகுமார்
சந்திரகுமார்
நா.ராஜமுருகன்

சந்திரகுமார் என்ற மாணவரிடம் பேசினோம்.

``விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும், விவசாயத்தின் மீது பெரிய பிடிப்பு இல்லாமல் இருந்துச்சு. ஆனால், சாரோட இந்த இயற்கை விவசாய தோட்டத்துக்கு வந்தபிறகு, நாம எவ்வளவு விஷமான சாப்பாட்டை சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம்னு புரிஞ்சுச்சு. இயற்கையான முறையில் விளைஞ்ச காய்கறிகள், உணவுபொருள்களில் தயாரிக்கப்படும் சாப்பாட்டை சாப்பிட்டாலே நோய்கள் வராதுனு புரிஞ்சுச்சு.

அதனால, சாரோட வழிகாட்டுதலின் பேரில், எங்க வீட்டுலயும் இயற்கை முறையில் காய்கறித் தோட்டம் அமைக்கப் போகிறேன். படிப்பு, வேலைனு ஒருபக்கம் பயணிச்சாலும், இன்னொருபக்கம் விவசாயம் பத்தியும் யோசிப்பேன். கிடைக்கும் நேரத்தில் எல்லாம் இப்படி இயற்கை விவசாயம் சம்பந்தமாக இயங்கிகிட்டே இருப்பேன்" என்றார்.

வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு