Published:Updated:

`31 வகை சுரை; 13 வகை அவரை; 11 வகை வெண்டை!' - ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரின் அசத்தல் முயற்சி

தொடர்ந்து காய்க்கும் காய்ப்புகளில் ஒருபகுதியை விதைக்கு விட்டுவிட்டு, விதைப்பெருக்கமும் பண்ண இருக்கிறேன். காற்றுபோல நமது நாட்டுரக விதைகள் எங்கும் பரவணும். அதைநோக்கிதான் நான் ஒவ்வொரு அடியா எடுத்து வச்சுக்கிட்டு இருக்கிறேன்

இயற்கை சுரை சாகுபடி
இயற்கை சுரை சாகுபடி ( நா.ராஜமுருகன் )

இயற்கை விவசாயம், நஞ்சில்லா காய்கறி உற்பத்தி என்று இன்றைய இளைஞர்கள் 'இயற்கை'யைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இயற்கை சுரை சாகுபடி
இயற்கை சுரை சாகுபடி

கரூரில் கொஞ்சம் வித்தியாசமாக, ஓய்வுபெற்ற காவல்துறை ஆய்வாளர் ஒருவர் தனது தோட்டத்தில் 31 வகையான பாரம்பர்ய நாட்டுரக சுரை, 13 வகையான அவரை, 11 வகையான வெண்டை என்று பலவகையான நாட்டுரக காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்தி வருகிறார்.

`149 மாணவர்களுக்கு சுரை விதை; முதல் அறுவடையைச் செய்து பரிசு பெற்ற மாணவி' - அரசுப் பள்ளியில் அசத்தல்!

கரூரைச் சேர்ந்தவர், மனோகரன். காவல்துறை ஆய்வாளராக இருந்து, 2014, ஜனவரியில் ஓய்வுபெற்றார். இவருக்குச் சொந்தமாக 6 ஏக்கர் நிலம், க.பரமத்தி பக்கமுள்ள வேட்டையார் பாளையயத்தில் இருக்கிறது. அங்கே ஜெயகவின் என்ற பெயரில் 30 ஆண்டுகளாக, இயற்கை விவசாயம் செய்து வருகிறார். கொய்யா, சாமங்கி, நெல்லி, கீரைகள், மாமரங்கள் என்று பல பயிர்களையும் மரங்களையும் இயற்கை முறையில் இந்தப் பண்ணையில் வெள்ளாமை செய்கிறார். ஆப்பிள் மரக்கன்றைகூட இங்கே வைத்து, அதை மரமாக்கிவிட்டார். இந்நிலையில்தான், ஆறு ஏக்கர் நிலத்தின் ஒருபகுதியில் 31 வகையான சுரை, 13 வகையான அவரை மற்றும் 11 வகையான வெண்டைகளை இயற்கை முறையில் சாகுபடி செய்து, விற்பனையும் விதைப்பெருக்கமும் செய்ய இருக்கிறார்.

சுரைகளை ஆர்வமுடன் பார்க்கும் இயற்கை ஆர்வலர்கள்
சுரைகளை ஆர்வமுடன் பார்க்கும் இயற்கை ஆர்வலர்கள்

இவரது முயற்சியைப் பார்த்து வியந்த பலரும், இவரது பண்ணைக்கு வந்து, வகைவகையாகக் காய்த்துத் தொங்கும் சுரைகளைப் பார்த்து செல்கின்றனர். உச்சக்கட்டமாக, கரூர் மாவட்ட நீதிபதி ஒருவரும் இவரது பண்ணைக்கு விசிட் அடித்து, இவரது வெள்ளாமை செய்யும் பாங்கைப் பார்த்து பாராட்டிவிட்டு போயிருக்கிறார்.

'வாழ்த்துகள்' சொல்லி, ஓய்வுபெற்ற ஆய்வாளர் மனோகரனிடம் பேசினோம். ``பொதுவா காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்ற பலரும், அதுசம்பந்தமான விஷயங்களிலேயே மீதமுள்ள காலத்தையும் கழிப்பாங்க. ஆனா, நான் கொஞ்சம் மாறுதலா விவசாயம், அதுவும் இயற்கை விவசாயம் செய்றேன். வேட்டையார்பாளையத்துல எங்களுக்கு 6 ஏக்கர் விவசாய நிலமும், 19 ஏக்கர் மேய்ச்சல் நிலமும் இருக்கு. நான் காவல்துறையில் பணியாற்றிய காலத்திலிருந்தே விவசாயம் பார்த்துக்கிட்டு வந்தேன். 1990-களில் இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வாரோட அறிமுகம் கிடைச்சுச்சு.

மனோகரன்
மனோகரன்

அதன்பிறகு, இயற்கை விவசாயம் செய்யணும்கிற ஆர்வம் வந்துச்சு. அவர்கிட்ட மூணுநாள் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அவரை என் தோட்டத்துக்கு அழைச்சு வந்து, மரக்கன்றுகள் நடவச்சேன். அதன்பிறகு, இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல நட்டம்தான். ஆனா, போகப்போக லாபம் வர ஆரம்பிச்சுச்சு. 28 வருஷம் கடந்துட்டு. ஆனா, நான் இயற்கை விவசாயத்தை விடலை. இப்போ, நமது நாட்டுரக காய்கறி விதைகளை பெருக்குவதற்கு ஏதுவா, இரண்டரை மாசத்துக்கு முன்னாடி காய்கறி வெள்ளாமை பண்ணினேன்.

`55 பாரம்பர்ய நெல் ரகங்கள்; இயற்கை வேளாண் பயிற்சி!' - அசத்தப்போகும் `நெல்’ ஜெயராமன் ஆராய்ச்சி மையம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன்கிட்ட நமது பாரம்பர்ய நாட்டுவிதைகளை வாங்கிட்டு வந்து விதைச்சேன். கும்ப சுரை, பாம்பு சுரை, யானைதந்த சுரை, கட்ட சுரை, பேய்ச்சுரைனு 31 வகை சுரைகளை ஊன்றினேன். அதேபோல், தம்பட்ட அவரை, கோழி அவரை, வெல்வெட் அவரை, சீனி அவரை, பெல்ட் அவரை, குத்து அவரை, சிறகு அவரைனு 13 வகையான அவரை விதைகளை விதைத்தேன். அதேபோல், 11 வகையான நாட்டுரக வெண்டைகளையும் பயிர் செய்தேன். இந்த வருடம் போதிய மழை பெய்ததால், எல்லா விதைகளும் முளைத்து, நல்லா வளர்ந்துட்டு.

இயற்கை சுரை சாகுபடி
இயற்கை சுரை சாகுபடி

முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் முறையில்தான் வெள்ளாமை பண்ணினேன். இப்போ சுரையும் அவரையும் காய்ப்புக்கு வந்துவிட்டது. வெண்டை இன்னும் காய்க்கலை. பக்கத்துல இப்போதைக்கு இயற்கை காய்கறினு விற்பனை பண்ணிக்கிட்டு இருக்கேன். மக்களும் ஆர்வமா வாங்குறாங்க. தொடர்ந்து காய்க்கும் காய்ப்புகளில் ஒருபகுதியை விதைக்கு விட்டுவிட்டு, விதைப்பெருக்கமும் பண்ண இருக்கிறேன். காற்றுபோல நமது நாட்டுரக விதைகள் எங்கும் பரவணும். அதைநோக்கிதான் நான் ஒவ்வொரு அடியா எடுத்து வச்சுக்கிட்டு இருக்கிறேன்" என்றார் மகிழ்ச்சியாக!