Published:Updated:

ஐ.பி.எஸ் வேலை வேண்டாம்; தற்சார்பு வாழ்க்கை போதும்!

ஆடுகளுடன் அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஆடுகளுடன் அண்ணாமலை

கரூர் கழனிக்கு வந்த ‘கர்நாடக சிங்கம்!’

முயற்சி

மென்பொருள் துறை, தனியார் வேலைகளில் கைநிறைய சம்பாதிக்கும் இளைஞர்கள் பலர், வேலைப்பளு தரும் மன அழுத்தம் காரணமாக, தாங்கள் பார்த்து வரும் வேலையை உதறித்தள்ளிவிட்டு, இயற்கை விவசாயம், தற்சார்பு வாழ்வியல் எனப் புதிய அவதாரம் எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்ற இளைஞரோ ஒருபடி மேலே போய், தனது ஐ.பி.எஸ் பணியையே உதறிவிட்டு, கால்நடை வளர்ப்பு, இயற்கை விவசாயம், விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணிகள் என்று மாற்றுப்பாதையில் களமிறங்கியிருக்கிறார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள தொட்டம்பட்டியைச் சேர்ந்தவர், அண்ணாமலை.

ஆடுகளை எடைபோடுதல்
ஆடுகளை எடைபோடுதல்

‘கர்நாடக சிங்கம்!’

பலருக்கும் கனவாக இருக்கும் ஐ.பி.எஸ் தேர்வைத் தனது 25 வயதிலேயே எழுதி, வெற்றி பெற்றவர். ஒன்பது வருடங்கள் கர்நாடக மாநிலத்தில் பணி. அங்கு பெரும் பிரச்னையாக இருந்த இந்து, முஸ்லீம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது, சிக்மங்களூரில் 7 முக்கிய நக்ஸலைட்டுகளைச் சரணடைய வைத்து அமைதி வாழ்க்கைக்குத் திருப்பியது, ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்ற காவல் நிலையங்களை உருவாக்கியது, சாமானியர்கள் அளிக்கும் மனுக்களுக்கு, 7 நிமிடங்களில் எஃப்.ஐ.ஆர் போட வைத்து, ஒரே வாரத்தில் பிரச்னைகளைத் தீர்க்க உத்தரவாதம் ஏற்படுத்தியது என, அங்கே இவர் சாதித்தவை ஏராளம். இதனால், இவர் அங்கே பணியாற்றிய ஏ.எஸ்.பி, எஸ்.பி, டி.சி.பி பதவிக் காலங்களில் இவர் குற்றவாளிகளிடம் காட்டிய அதிரடியைப் பார்த்து, அந்த மாநில மக்கள் ‘கர்நாடக சிங்கம்’ என்று இவருக்கு அடைமொழி கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சமூக அமைப்பு, இயற்கை விவசாயம், ஆடுகள் வளர்ப்பு, நாட்டு மாடுகளைக் காத்தல் எனத் தனிப்பாதையில் பயணிக்க, நிதானமாக அடியெடுத்து வைத்திருக்கிறார். தொட்டம்பட்டியில் உள்ள ஆட்டுப் பண்ணையில் ஆடுகளைக் கவனித்துக்கொண்டிருந்த அண்ணாமலையை, ஒரு இனிய மாலை வேளையில் சந்தித்துப் பேசினோம்.

ஆட்டுப்பண்ணை
ஆட்டுப்பண்ணை

“எங்களுடையது விவசாயக் குடும்பம்தான். முதல்ல, நல்ல இன்ஜினீயராகணும்னு சொல்லி, 2007-ம் வருடம் கோவையில் இன்ஜினீயர் படிப்பு படிச்சு முடிச்சேன். ஆனால், படிக்கிற காலத்தில், ‘இன்ஜினீயர் மூலமா மத்தவங்கிட்ட அடிமையா இருக்கக் கூடாது; சொந்தமா பிஸினஸ் பண்ணணும்’னு தோணுச்சு. அதற்காக எம்.பி.ஏ. படிக்க, லக்னோவில் இருக்க இந்திய மேலாண்மை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். 2008 முதல் 2010-ம் வருடம் வரை, அங்கேயே தங்கிப் படிச்சேன். அப்போது நான் பார்த்த ரெண்டு சம்பவங்கள், ‘பிஸினஸ் மேன்’ என்ற என் லட்சியத்தை, ‘போலீஸ் மேன்’ என்று மாற்றின. 2008-ம் ஆண்டு, மும்பை தாஜ் ஹோட்டல்ல நடந்த தீவிரவாத தாக்குதல், உ.பி.யில 5 ரூபாய்க்குக்கூட் கொலை பண்ணும் சம்பவம், இரண்டையும் பார்த்ததும், ‘சிவில் சர்வீஸ்தான் நமக்குத் தேவை’னு தோணுச்சு. உடனே, சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி எழுதினேன்.

முதல் முயற்சியிலேயே 2010-ம் ஆண்டு, ஐ.பி.எஸ் ஆகத் தேர்வானேன். கர்நாடகம் மாநிலம், கார்தலாவுல ஏ.எஸ்.பி போஸ்டிங் போட்டாங்க. ஒன்பது வருஷம் திட்டமிட்டு, அந்தத் துறையைக் காதலித்து, பல முன்முயற்சிகளைச் செய்தேன். அதனால், அந்த மாநில மக்கள் காவல்துறையைத் தங்களுக்கு நெருக்கமான துறையா உணர்ந்தாங்க. ஆனா, கடைசியா பெங்களூர்ல டி.சி.பியா பதவி உயர்வு கிடைத்தது. அதற்கு மேல், அந்த வேலையில் தொடர எனக்கு விருப்பமில்லை. மேலை நாடுகளில் ஒவ்வொரு ஐந்து வருடங்களிலும், அடுத்தடுத்த இலக்குகளை வெச்சுக்கிட்டு, அதற்கு ஏற்றவாறு மாறுவதுதான் இயல்பு. அதற்காக, உயர்பதவிகளைக்கூட அங்குள்ளவர்கள் உதறுவார்கள். அங்கே உயர்பதவிகளை ராஜினாமா செய்வது சாதாரணம். ஆனா, இங்கு நான் ஐ.பி.எஸ் பதவியைக் கடந்த வருடம் ராஜினாமா பண்ணியதைப் பலரும் ஆச்சர்யமா பேசுறாங்க. நான் ஓரிடத்தில் இருக்காமல், ஓர் ஓடைபோல இருக்க விரும்பினேன். கடந்த வருடம் கொடுத்த ராஜினாமா கடிதத்தை, இந்த வருடத் தொடக்கத்தில்தான் ஏத்துக்கிட்டாங்க.

ஆடுகளுடன் அண்ணாமலை
ஆடுகளுடன் அண்ணாமலை

காவல்துறையிலிருந்து விவசாயம்

இப்போது புதிய இலக்கை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். கோயமுத்தூர், கரூரை மையங்களா வெச்சு, ‘வீ த லீடர்’ங்கிற அமைப்பைத் தொடங்கியிருக்கிறோம்.

இந்த அமைப்பு மூலமா கல்வி, மருத்துவம், தேசிய பிரச்னைகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளின் பொருளாதாரத்தை 20 சதவிகிதம் வரை உயர்த்துவது, இயற்கை விவசாயத்தை முன்னெடுப்பதுன்னு பல விஷயங்களைச் செய்யப் போறோம். கரூர் மாவட்ட விவசாயிகளோட பொருளாதாரத்தை உயர்த்த, 1,500 விவசாயிகளை இணைச்சு, ‘உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ ஆரம்பிக்கப் போறோம். அந்தக் கம்பெனிக்கு, சம்பந்தப்பட்ட விவசாயிகள் அனைவரும் பங்குதாரர்கள். ஒவ்வொரு பகுதி விவசாயிகளாகச் சந்தித்து, அவர்களை இணைத்து வருகிறோம். இதுவரை, 400 விவசாயிகள் சம்மதம் தெரிவிச்சிருக்காங்க. விவசாயிகள், விளைய வைக்கும் பொருளுக்குரிய விலை கிடைக்காதது, தகுந்த சந்தை வசதி இல்லாமல் இருப்பது, இடைத்தரகர்களிடம் பெரும் பொருளாதாரத்தை இழப்பதுன்னு விவசாயிகள் பல பிரச்னைகளைச் சந்திக்கிறாங்க.

ஆடுகளுடன் அண்ணாமலை
ஆடுகளுடன் அண்ணாமலை

இயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்

நாங்க உருவாக்கப்போகும் கம்பெனிமூலம், அரவக்குறிச்சி பகுதியில மிகப்பெரிய சந்தையை ஏற்படுத்த போறோம். இடைத்தரகர்கள் இல்லாம விவசாயிகளே, நுகர்வோரிடம் தாங்கள் விளைவித்த பொருள்களை நேரடியா விற்பனை செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்த போறோம். இதன்மூலம், இந்தப் பகுதி விவசாயிகளின் பொருளாதாரம் 20 சதவிகிதம் வரை உயரும். அதேபோல், விவசாயிகளுக்குத் தேவையான கடன் மற்றும் அரசு வழங்கும் சலுகைகளை உடனுக்குடன் பெற்றுத் தரும் முயற்சியிலும் இறங்க இருக்கிறோம்.

அதேபோல், மண்ணுக்கும் மனிதனுக்கும் கேடு விளைவிக்காத இயற்கை விவசாயத்துக்கு விவசாயிகளைத் திருப்புவது இப்போது தேவையான ஒன்று. ஆனால், இயற்கை விவசாயிகளாக உடனடியாக மாற்ற முடியாது. காரணம், இயற்கை விவசாயத்தில் விளையுறப் பொருளை விற்பனைச் செய்ய இங்கே தகுந்த சந்தை இல்லை. அதே நேரத்துல இயற்கை விவசாயத்தில விளையுற பொருள்களை வாங்கக்கூடிய நுகர்வோரும் பெருகணும். இது நடந்தாத்தான் இயற்கை விவசாயிகள் அதிகமாவாங்க.

கொரோனா உள்ளிட்ட நோய்களைத் தாங்கும் எதிர்ப்பு சக்தி நம்ம உடலில் பெருக, இயற்கை முறையில விளையுற உணவுப் பொருள்களைச் சாப்பிடணும்னு மருத்துவர்கள் அறிவுறுத்துறாங்க. இயற்கை விவசாயம் செழிக்க வேண்டிய நேரமிது. ஆனால், அந்த மாற்றத்தை உடனடியாகக் கொண்டு வந்துட முடியாது. இயற்கை விவசாயத்தைக் கிராமங்கள்ல செய்றாங்க. ஆனால், அதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளும், இயற்கை உணவுப் பொருள்கள் விற்பனை அங்காடிகளும் மெட்ரோ சிட்டிகள்லயும், பெரிய நகரங்கள்லயும்தான் நடக்குது. உண்மையில இயற்கை விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் அதிகம் நடக்க வேண்டியது, கிராமங்கள்லதான்.

வயலில்
வயலில்

அதனால, நாங்கள் மாசத்துக்கு ஒரு சினிமா, இலக்கியம், மருத்துவம், இயற்கை, இயற்கை விவசாயம் சார்ந்த ஆளுமைகளைக் கிராமப் பகுதிகளுக்குக் கூப்பிட்டு வந்து, அவர்கள் விவசாயிககிட்ட இயற்கை விவசாயம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த போறோம். முதல் நிகழ்ச்சியாக, கவிஞர் வைரமுத்துவை அழைச்சிட்டு வந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில இருக்கிறோம்” என்றவர், வேலை ஆள்களிடம், ஆட்டுக்குட்டிகளுக்கு உணவு கொடுப்பது குறித்த தகவல்களைச் சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.

வறண்ட பூமியை வளமாக்கும் முயற்சி

“கரூர் மாவட்ட விவசாயிகளின் நலன், முன்னேற்றம் சார்ந்து செயல்படுறேன். அதேநேரம், நானும் தனிப்பட்ட முறையில் தற்சார்பு வாழ்வியலுக்குத் திரும்ப நினைக்கிறேன். எங்களுக்குச் சொந்தமாக 60 ஏக்கர் நிலமிருக்கிறது. ஒரு காலத்தில் செழிப்பான விவசாயம் நடந்த பகுதி. ஆனா, இப்ப மோசமான சூழல் கொண்ட வறண்ட பூமியாக மாறிடுச்சு. காரணம், இந்தப் பகுதியில அதிகம் கல்குவாரிகள் இயங்கி வருவதுதான். கடந்த 3 வருஷத்துல தமிழகத்திலேயே அதிகம் வெயில் அடிக்கிற பகுதியாக, எங்க ஊர் பகுதிகள் மாறிடுச்சு. நிலத்தில இருக்குற ஒரு கிணறு மூலமா கொஞ்ச இடத்தில கம்பு, சோளம், காய்கறிகள், கொள்ளு விவசாயம் செய்றோம். அதை என்னோட சகோதரி பார்த்துக்கிட்டு இருக்காங்க. இப்ப, அந்த நிலத்துல இயற்கை விவசாயம் செய்ய முடிவெடுத்திருக்கிறேன். ஒரு மண் இயற்கையாக நல்ல மண்ணாக உருவெடுக்க, அந்த மண்ணில் ஏழு வருடங்கள் தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்யணும். உலகளவு சிறந்த தரமான மண்ணா, மண் தன்மையை மாற்ற இதுதான் சிறந்த வழிமுறை. அதனால, என்னோட நிலத்தில அப்படியொரு மண் தன்மையை உருவாக்கப்போறேன். கிணறு மட்டுமல்லாமல், தண்ணி வசதிக்காக ஒரு போர்வெல் அமைச்சிருக்கேன். அது மூலமா 20 ஏக்கர் நிலத்தில நெல்லி, நாவல்னு பல வகையான மரங்களை உள்ளடக்கிய இயற்கை வனத்தை அமைக்கப்போறேன். அதோட, இன்னும் 20 ஏக்கர் நிலத்தில கம்பு, சோளம், எள், கேழ்வரகு, பாரம்பர்ய நெல் ரகங்கள்னு வெள்ளாமை பண்ணப்போறேன். நம்ம பூமியில முன்ன என்ன விளைஞ்சதோ, அதை முதல்ல விளைய வெச்சுச் சாதிச்சாப் போதும்.

புது வெள்ளாமை பண்ற முயற்சியைப் போகப்போகச் செய்யலாம். இதுதான் நான் அடிப்படையா வெச்சிருக்க இயற்கை விவசாயப் பாடம். அதே போல, அரை ஏக்கர் இடத்தில வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை விளையவைக்கப்போறேன்” என்றவர், நிறைவாக,

விவசாயிகளுடன் கலந்துரையாடல்
விவசாயிகளுடன் கலந்துரையாடல்

ரூ.3 லட்சம் லாபம்

“15 ஏக்கர் நிலத்தில, செம்மறி ஆடுகளை வளர்க்க ஆரம்பித்திருக்கிறேன். 80 குட்டிகளும் 70 ஆடுகளும் தற்போது உள்ளன. வெறுமனே ஆடுகளை வளர்த்து, அதை விற்பது என்று இல்லாமல், 3 மாசக் குட்டிகளைச் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளிடமிருந்து வாங்கி, அதை 3 மாதங்கள் வளர்த்து, 6 மாத குட்டிகளாக விற்க இருக்கிறேன். எங்க ஊரைச் சுற்றி 30 கிலோமீட்டர் பரப்பளவுல இருக்க கிராம விவசாயிககிட்ட இருந்து முதல்கட்டமா 80 குட்டிகளை வாங்கியிருக்கோம். குட்டிகளை ரூ.4,500-லிருந்து ரூ.6,000 வரைக்கும் விலைகொடுத்து வாங்கியிருக்கோம். சராசரியா 5,000 ரூபாய். அதை 3 மாசம் கழிச்சு, விற்கும்போது, குட்டி ஒன்று ரூ.10,000 வரை போகும்னு எதிர் பார்க்கிறேன். 80 குட்டிகளையும் வித்தா 8 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதுல ஆடு வாங்குனது 4 லட்சம், செலவு ஒரு லட்சம்னு 5 லட்சம் ரூபாய் போனாலும், 3 லட்சம் ரூபாய் லாபமா நிற்கும். ஆடுகளுக்குத் தேவையான பச்சை புல்லை இங்கேயே போட்டிருக்கேன். பிண்ணாக்கு, கலப்புத்தீவனம் வெளியில வாங்கிக்குறோம். அதேபோல, இந்த ஆடுகளைப் பராமரிக்க 4 வேலையாள்களை நியமிச்சிருக்கேன். இப்போதைக்கு இதை வெள்ளோட்டமாதான் செய்றேன். நினைச்சபடி இதுல வருமானம் கிடைச்சா, இந்தமுறையிலான ஆடு வளர்ப்பை இன்னும் அதிகப்படுத்துவேன். அப்ப என் வருமானம் இன்னும் பெருகும். அதேபோல, நாட்டு மாடுகளைப் பாதுகாக்கணும். அதுக்காக முதல்கட்டமா ரெண்டு காங்கேயம் பசுக்களை வாங்கியிருக்கேன். இன்னும் கூடுதலாக வாங்க ஏற்பாடு செஞ்சிட்டு இருக்கேன். இதன்மூலம், என்னோட தற்சார்பு வாழ்க்கை நடைமுறைக்கு வரும். அதேபோல, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியையும் விடாம செய்துகிட்டே இருப்பேன். விவசாயி நல்லா இருந்தாதான், நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதனும் நலமாக இருக்க முடியும். விவசாயிகள் நலமாக இருக்க, நான் அவங்களோடு கைகோர்த்துச் செயல்படப் போறேன்’’ என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, அண்ணாமலை, செல்போன்: 63836 03721

விவசாயிகளுக்கு விடிவு காலம்!

ண்ணாமலை தொடங்க இருக்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் குறித்து, நடையனூரைச் சேர்ந்த விவசாயி செங்குட்டுவனிடம் பேசினோம். “இங்குள்ள விவசாயிகள், குறிப்பா முருங்கை விவசாயிகளுக்கு இந்தக் கம்பெனி வரப்பிரசாதமா இருக்கும். நானும் அந்தக் கம்பெனியில பங்குதாரரா இணையப்போறேன். நேர்மையான முறையில, மக்கள் நலன்ல அக்கறையோடு அண்ணாமலை செயல்படுறார். 9 வருஷம் ஐ.பி.எஸ் வேலையில அவர் சம்பாதிச்சது நேர்மையை மட்டும்தான். அதனால், அவர் இந்தக் கம்பெனி விஷயத்திலும் 100 சதவிகிதம் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய வகையிலேயே செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கு. இவரைப்போலப் படிச்ச, உயர் பதவியில இருக்கிறவங்க, விவசாயிகளைப் பற்றி நினைச்சு பார்க்கிறதே அபூர்வம். இவர் பதவியைத் தூக்கிப்போட்டுட்டு வந்து, விவசாயிகளுக்காகப் பாடுபடுறார்.

இவரால இந்தப் பகுதி விவசாயிகளுக்கு விடிவு காலம் பிறக்கும்னு நம்புறோம். அதேபோல, இங்கயிருக்க முருங்கை விவசாயிகளுக்குப் பல பிரச்னைகள் இருக்கு. முருங்கை விளைச்சல் நல்லா இருக்கும்போது, விலை இருக்காது. நல்ல விலை இருக்கும்போது, போதுமான அளவுக்கு விளைச்சல் கிடைக்காது. இதனால, எங்களால இந்த விவசாயத்தில தன்னிறைவை அடைய முடியலை. நன்றாக விளையும்போது, அதைச் சேமிச்சு வெச்சு, அதை நல்ல விலைக்கு விற்பனை செய்ய இந்தச் சங்கம் பயன்படும். அதேபோல, விதைகளைக் கொடுத்து, ஆலோசனைகள் சொல்லி, தேவையான நேரத்துல கடன் வசதிகளை உருவாக்கித் தரச் சங்கம் தேவை. விளைச்சலை, இடைத்தரகர்கள் இல்லாம நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும். அதாவது, ‘தங்கம் செய்யாததைச் சங்கம் செய்யும்’னு சொல்லுவாங்க. இந்தச் சங்கம் மூலமா எங்க பகுதி முருங்கை விவசாயிகள் பலன் பெறுவாங்கனு நம்புறோம்’’ என்றார்.

நல்ல லாபம் தரும் தொழில்!

3 மாத ஆட்டுக்குட்டிகளை வாங்கி வளர்த்து விற்பனை செய்வது பற்றி், கரூர் மாவட்ட கால்நடை பராமரித்துத்துறை இணை இயக்குநர் மருத்துவர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “செம்மறி ஆட்டுக்குட்டிகளை மூன்று மாதக்குட்டிகளாக விலைக்கு வாங்கி, அதை மூன்று மாதம் வளர்த்து, ஆறுமாதக் குட்டிகளாக விற்பது உண்மையில் லாபகரமான தொழில். ஆடுகளை விற்பதில் பிரச்னையில்லை. எந்தக் காலத்திலும் ஆடுகளுக்குத் தேவை இருந்துகொண்டே இருக்கிறது. சொல்லப்போனால், ஆடுகளின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கையில், ஆடு வளர்ப்புத் தொழில் விவசாயிகளை எக்காலத்திலும் கைவிடாத சிறப்பான தொழில். அதுவும், அண்ணாமலை செய்வதுபோல், மூன்று மாதக் குட்டிகளை வாங்கி வளர்த்து, அவற்றை ஆறு மாத குட்டிகளாக விற்பனை செய்வது, உண்மையில் நல்ல லாபத்தைத் தரும். ஆட்டுக்குட்டிகளுக்குத் தடுப்பூசி உள்ளிட்ட சில பராமரிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டும் செய்தால் போதும். இதில் எந்த நஷ்டமும் ஏற்படாது” என்றார்.