நாட்டு நடப்பு
Published:Updated:

கறையான் புற்றுமண் கிலோ ரூ.100... முருங்கை பிசின் கிலோ ரூ.600... ஆன்லைனில் கலக்கும் கரூர் இளைஞர்!

கறையான் புற்று மண்
பிரீமியம் ஸ்டோரி
News
கறையான் புற்று மண்

வர்த்தகம்

ஆன்லைன் வர்த்தகம் என்பது பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலை தற்போது மாறி வருகிறது. கிராமப்புற இளைஞர்களும் இதில் அசத்தி வருகிறார்கள். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கறையான் புற்றுமண் தொடங்கி, முருங்கை பிசின் வரை பல பொருள்களையும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து, நிறைவான வருமானம் ஈட்டி வருகிறார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகில் உள்ள இடையப்பட்டியில் வசித்து வருபவர் கார்த்திக். பொறியியல் பட்டதாரியான இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் மிகவும் குறைவான சம்பளத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், இவருடைய வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியிருக் கிறது, இயற்கை விவசாயம் சார்ந்த ஆன்லைன் வர்த்தகம்.

கார்த்திக்
கார்த்திக்

இவரைச் சந்திக்க ஒரு மாலைப்பொழுதில் இவருடைய வீட்டுக்குச் சென்றோம். சிறு தானியங்களை பேக்கிங் செய்துகொண்டிருந்த கார்த்திக் மிகுந்த உற்சாகத்தோடு நம்மை வரவேற்றார். “விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனா, படிக்கிற காலம் வரைக்கும் விவசாயத்துல நாட்டம் இல்லாம தான் இருந்தேன். 2015-ம் வருஷம் பி.இ முடிச்சுட்டு, பாண்டிச்சேரியில உள்ள ஒரு கம்பெனியில வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன்.

குறைஞ்ச சம்பளம், அதிக வேலைப்பளுனு அந்த வேலை எனக்கு மனஅழுத்தத்தைக் கொடுத்துச்சு. அதனால், ‘வேலையை உதறிட்டு, சொந்தமா தொழில் தொடங் கலாமா’னு யோசிச்சேன். ஆனா, என்ன பண்றதுனு தெரியலை. நம்மாழ்வார் ஐயாவோட கருத்துகளால ஈர்க்கப்பட்ட என்னோட பெரியம்மா சரோஜா, இயற்கை விவசாயம், தற்சார்பு வாழ்வியல்னு செயல்பட்டுக்கிட்டு இருந்தார். அவரைப் பார்த்து எனக்கும், அதுல ஆர்வம் ஏற்பட்டச்சு.

ஆவாரம்பூ
ஆவாரம்பூ

பாண்டிச்சேரியில தனியார் நிறுவனத்துல நான் பார்த் துக்கிட்டு இருந்த வேலையை விட்டுட்டு, பள்ளப்பட்டியில இயற்கை உணவு அங்காடி ஆரம்பிச்சேன். நாட்டுமாட்டுப் பாலும் விற்பனை செஞ்சேன். அந்தத் தொழிலை நான் வெற்றிகரமா செஞ்சுகிட்டு இருந்த அதேசயமத்துலதான், நான் பெரிய அளவுல வருமானம் ஈட்டுறதுக்கான வேற ஓர் அருமையான வாய்ப்பு தொடக்கப்புள்ளியா அமைஞ்சது.

கரூர் முருங்கை மற்றும் காய்கறி உற்பத்தியாளர் நிறுவனத்துல இணைஞ்சு, எங்க பெரியம்மா செயல் பட்டுக்கிட்டு இருந்ததால, அந்த நிறுவனத்தோட தலைமை செயல் அலுவலர் பொறுப்பு எனக்குக் கிடைச்சது. மாதம் 30,000 ரூபாய் சம்பளம் கிடைச்சது. அதைக்கூட நான் பெருசா நினைக்கல. அந்த நிறுவனத் துல எனக்குக் கிடைச்ச தொழில் அனுபவமும், இயற்கை விவசாயம் சார்ந்த நபர்களோட பரவலான தொடர்புகளும் என்னோட வாழ்க்கையில பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துச்சு. இயற்கை விவசாய விளைபொருள்களை மதிப்புக்கூட்டி ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கினேன்.

உலர் முருங்கை
உலர் முருங்கை

பிரண்டை தொக்கு, பிரண்டை சாதப்பொடி

2016-ம் வருஷம் ஆன்லைன் வர்த்தகத்தை ஆரம்பிச் சேன். அது சம்பந்தமா, சமூகவலைதளங்கள் மூலம் பரவலா விளம்பரம் பண்ணினேன். யதார்த்தத்தைச் சொல்லணும்னா, அப்போ ஆறு மாசம் வரைக்கும் வாடிக்கையாளர்களே கிடைக்கலை. ஆனா, அதுக்குப் பிறகு, படிப்படியா வாடிக்கையாளர்களோட எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பிச்சது. பிரண்டையில மதிப்புக்கூட்டி, தொக்கு, ஊறுகாய், பிரண்டை பொடி, பிரண்டை சாதப்பொடினு விதவிதமா தயாரிச்சு விற்பனை செஞ்சிகிட்டு இருக்கேன்,

முருங்கையில் மதிப்புக்கூட்டல்

முருங்கையில தொக்கு, சூப் மிக்ஸ், முருங்கைக்கீரை சாதப் பொடி, முருங்கைப்பூ பொடி, தேன் முருங்கைப் பூ... இது மாதிரி உடம்புக்கு சத்தான இன்னும் நிறைய பொருள்கள் தயாரிச்சு ஆன்லைன்ல விற்பனை செய்றேன்.

கறையான் புற்று மண்
கறையான் புற்று மண்

50 வகையான மூலிகை தேநீர் தூள்

பூழப்பூ, ஆவாரம்பூ, தும்பைப்பூ, கறிவேப்பிலை, எலுமிச்சை, துத்தி இலை, கீழாநெல்லி, செம்பருத்திப் பூ, ரோஜா, அத்தி, துளசினு 50 வகை யான மூலிகை தேநீர் தூள் தயாரிச்சு, விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன். இதுக்கும் நல்ல வரவேற்பு இருக்கு. பனங்கொட்டைகளை எங்களோட வயலில் விதைச்சு, பனங்கிழங்கு எடுத்து, அதை அவிச்சு காய வச்சு, அரைச்சு மாவா விற்பனை செய்றேன். இந்த மாவை கூழா காய்ச்சிக் குடிக்கலாம். உடம்புக்கு அவ்வளவு நல்லது. ஆரம்பத்துல இந்தப் பொருள்களை எல்லாம், தமிழ்நாட்டுல உள்ள ஆன்லைன் வாடிக்கையாளர்கள் மட்டும்தான் ரொம்பவே விரும்பி வாங்கிக்கிட்டு இருந்தாங்க. நாளடைவுல இந்தியா முழுக்க வாடிக்கையாளர்கள் கிடைச்சாங்க. இந்த நிலையில் தான், சென்னையைச் சேர்ந்த ஒரு மருத்துவர், ‘கறையான் புத்து மண் கிடைக்குமா?’னு கேட்டார். எங்கப் பகுதியில அது நிறைய இருந்துச்சு. உடனே, அவர் கேட்ட அளவுக்கு அனுப்பினேன். முகத்துல உள்ள அழுக்குகளை நீக்கி அழகு படுத்துறக்கும் (ஃபேசியல்), மண்குளியல் எடுக்கவும், எலும்பு முறிவுக்குக் கட்டு போடுறதுக்கும் இதைப் பயன்படுத்துறாங்க.

துளசி
துளசி

கறையான் புற்று மண் நன்மைகளைப் பத்தி விவரிச்சு, சமூகவலைதளங்கள்ல பரவலா விளம்பரம் பண்ணினேன். பலரும் ஆர்வமா வாங்க ஆரம்பிச்சாங்க. ஒரு கிலோ 100 ரூபாய்னு விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன்.

முருங்கை பிசின்

முருங்கைப் பிசினுக்கும் வாடிக்கையாளர் கள்கிட்ட அதிக வரவேற்பு இருக்கு. முருங்கை பிசினை முதல்நாள் இரவு தண்ணியில ஊற வச்சு, மறுநாள் அப்படியே எடுத்து சாப்பிட்டா... மூட்டுத் தேய்மானப் பிரச்னை, ஜவ்வு தேய்மானப் பிரச்னை, மூட்டு வலி பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.

தமிழ்நாட்டிலேயே முருங்கை உற்பத்தி அரவக்குறிச்சிப் பகுதியில்தான் அதிக அளவுல நடக்குது. அதனால், இங்கே முருங்கை பிசின் தாராளமா கிடைக்குது. இதுவரை, 100 கிலோவரை விற்பனை பண்ணிட்டேன். இப்போ, ஒரு கிலோ 600 ரூபாய்னு விலை போகுது. இதுவரைக்கும் ஆன்லைன்ல 200 விதமான பொருள்கள் விற்பனை பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்போதைக்கு என்கிட்ட 1,000 வாடிக்கை யாளர்கள் இருக்காங்க. எல்லா செலவுகளும் போக, எனக்கு மாசம் சுமார் 45,000 ரூபாய் கிடைச்சுக்கிட்டு இருக்கு.

மூலிகைகள்
மூலிகைகள்

இன்னும் அதிகமான பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யணும், அதிகமான வாடிக்கையாளர் களைப் பிடிக்கணும், இதைப் பெரிய நிறுவனமா உருவாக்கணும்ங்கற லட்சியத் தோடவும் கனவோடவும் உழைச்சுக்கிட்டு இருக்கேன்.

இன்ஜினீயரிங் படிச்சுட்டு, நல்ல வேலைக் குப் போகாம, இப்படிப் புத்திகெட்டு திரி யிறியே’னு ஆரம்பத்துல என்னை விமர்சனம் பண்ணினவங்க எல்லாம், இப்ப ஆச்சர்யமா பார்க்குறாங்க. ‘பரவாயில்லையே, ஏதோ வித்தியாசமா பண்றியே’னு பாராட்டுறாங்க. வீட்லேயே வேலை... கைநிறைய வருமானம்... உடம்பை பாதிக்காக வீட்டு சாப்பாடு... கயித்துக் கட்டில்ல தூக்கம்னு வாழ்க்கையை நிம்மதியா வாழமுடியுது.

முருங்கை தொக்கு
முருங்கை தொக்கு

எனக்கு இதெல்லாம் கிடைக்கக் காரணமா இருந்த இயற்கை சார்ந்த வாழ்வியலுக்கும் நம்மாழ்வாருக்கும் எங்க பெரியம்மாவுக்கும் நன்றி சொல்லிக்கிறேன்” என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

தொடர்புக்கு,

கார்த்திக், செல்போன்: 89408 82992

பொருள்
பொருள்

தேன் முருங்கைப் பூ

“‘தேன் முருங்கைப் பூ’ங்கறது தேன்ல முருங்கைப்பூவை ஊற வச்சு தயார் செய்யக்கூடியது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டா, ஊட்டச்சத்து குறைபாடே வராது. நைஜீரியாவுல உள்ள இலோரின் பல்கலைக்கழகமும் தென்ஆப்பிரிக்காவுல உள்ள டர்பன் யுனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி’ங்கற பல்கலைக்கழகமும் இது சம்பந்தமா ஆய்வுகள் பண்ணி கட்டுரை வெளியிட்டுருக்காங்க’’ என்கிறார் கார்த்திக்.