Published:Updated:

`ஊரடங்கு உத்தரவு; கிராம மக்களுக்கு 1 கிலோ காய்கறி!' - நெகிழ வைத்த கரூர் இளைஞர்

கிராம மக்களுக்குக் காய்கறி வழங்கும்போது....
கிராம மக்களுக்குக் காய்கறி வழங்கும்போது.... ( நா.ராஜமுருகன் )

கடையோ, சந்தையோ பெரிதாக இல்லாத தனது கிராம மக்கள் நாளை காய்கறிகளுக்காக அல்லாடக்கூடாது என்பதற்காக, அந்த கிராம இளைஞர் ஒருவர் வீட்டுக்கு வீடு ஒரு கிலோ காய்கறி வழங்கி, மக்களை இந்த இக்கட்டான நேரத்தில் நெகிழ வைத்திருக்கிறார்.

கொரோனா பாதிப்பு காரணமாக நாளை ஒருநாள் பிரதமர் மோடி, நாட்டு மக்களை வீட்டுக்குள் இருந்து, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திகொள்ள சொல்லி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், நாளை தங்களது கிராம மக்கள் காய்கறி இன்றித் தவிக்கக்கூடாது என்பதற்காக, ஊர் மக்களுக்காக இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ என்று கொடுத்து, கிராம மக்களை நெகிழ வைத்திருக்கிறார்.

கிராம மக்களுக்குக் காய்கறி வழங்கும்போது....
கிராம மக்களுக்குக் காய்கறி வழங்கும்போது....
நா.ராஜமுருகன்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலக மக்களையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. நமது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு அதை தேசியப் பேரிடராக அறிவித்துள்ளது. அதோடு நாட்டு மக்களிடம் உரையாடிய பிரதமர், `நாளை ஒருநாள் எல்லோரும் வீட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.

சமுதாய காய்கறித் தோட்டம்
சமுதாய காய்கறித் தோட்டம்
நா.ராஜமுருகன்

இதனால், நாளை உணவுப் பொருள்களுக்காக நாட்டு மக்கள் அனைவரும் இன்றே சந்தை, கடைகளில் வாங்குவதால், எங்கும் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், கடையோ, சந்தையோ பெரிதாக இல்லாத தனது கிராம மக்கள் நாளை காய்கறிகளுக்காக அல்லாடக்கூடாது என்பதற்காக, அந்த கிராம இளைஞர் ஒருவர் வீட்டுக்கு வீடு ஒரு கிலோ காய்கறி வழங்கி, மக்களை இந்த இக்கட்டான நேரத்தில் நெகிழ வைத்திருக்கிறார்.

`கிலோ 4 ரூபாய்க்கு வாங்கக்கூட ஆள் இல்லை!' - கொரோனா தாக்கத்தால் கலங்கும் முருங்கை விவசாயிகள்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கும் வ.வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்த நரேந்திரன் கந்தசாமி என்ற இளைஞர்தான், தனது கிராம மக்களுக்குக் காய்கறி வழங்கிய அந்த அற்புத இளைஞர். அமெரிக்காவில் கணினித் தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கும் அவர், கடந்த பத்து மாதங்களாக தனது கிராமத்தின் இயற்கையை மேம்படுத்தி வருகிறார். கிராம மக்களுக்கு, 'நஞ்சில்லா உணவு; நோயில்லா வாழ்வு' என்ற தாரக மந்திரத்தோடு, ஊருக்குப் பொதுவான 10 சென்ட் இடத்தில் இயற்கை முறையில் காய்கறி விளைவித்து, அதை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இதற்கு, 'சமுதாயக் காய்கறித் தோட்டம்' என்று பெயரிட்டுள்ளார்.

கத்தரிக்காய்
கத்தரிக்காய்
நா.ராஜமுருகன்

பிரதமர் மோடி அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று இளைஞர்களைக் கொண்டு காய்கறிகளை அறுவடை செய்யச் சொல்லியிருக்கிறார். அதில் 50 கிலோ கத்தரிக்காய், வெண்பூசணி 6 கிலோ, பரங்கிக்காய் 4 கிலோ, பாகற்காய் 3 கிலோ, பீர்க்கங்காய் 2 கிலோ, தக்காளி 10 கிலோ, பச்சை மிளகாய் 15 கிலோ மற்றும் கீரை வகைகள் என்று கிடைத்திருக்கின்றன. அதைக்கொண்டு, வ,வேப்பங்குடியில் உள்ள 100 குடும்பங்களுக்குத் தலா ஒரு கிலோ வீதம் காய்கறிகளை வழங்கி, மக்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

இதுகுறித்தி, வ,வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான வேல்முருகனிடம் பேசினோம்.

"கொரோனா, 'உணவு இல்லாமல் நம்மால் வாழவே முடியாது' என்பதை உணர்த்தியிருக்கிறது. எங்க ஊர் மிகவும் பின்தங்கிய ஊர். இங்கு காய்கறிகள் வாங்குவதற்குரிய கடைகள் இல்லை. அக்கம்பக்கத்தில் உள்ள சந்தைகளும் மூடப்பட்டு வருகின்றன. நேற்று மணப்பாறை சந்தை மூடப்பட்டது. இன்று வீரணம்பட்டி சந்தை இல்லை. வெள்ளிக்கிழமை பாளையம், குளித்தலை சந்தை மூடப்பட்டன. உப்பிடமங்கலம் சந்தை இல்லை.

கிராம மக்களுக்குக் காய்கறி வழங்கும்போது....
கிராம மக்களுக்குக் காய்கறி வழங்கும்போது....
நா.ராஜமுருகன்

காணியாளம்பட்டி சந்தை இல்லை. எங்கும் உணவுக்குச் சிக்கல். நாளை சுய ஊரடங்கு உத்தரவு. யாரும் வெளியே வரவே முடியாது. காய்கறிக்கும் தட்டுப்பாடு, உணவுக்கும் தட்டுப்பாடு என்ற நிலை. எங்க ஊர் மக்களும், பல இடங்களில் காய்கறிகளுக்கு அலைந்து பார்த்துட்டு, ஏமாந்து வந்தாங்க. இந்தச் சூழலில்தான், நாங்கள் மக்களுக்காக விளைவித்த காய்கறிகளை, ஓர் ஊருக்கே காய்கறி வீடு தேடி கொடுக்க முடிவெடுத்தோம். இதனால், மக்களுக்கும் மகிழ்ச்சி; எங்க பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தினருக்கும் ஆனந்தம். எங்க ஊர் மக்கள் இயற்கைக் காய்கறிகளைச் சமைச்சு சாப்பிட்டு, புது நம்பிக்கையோடு கொரோனாவை நாளை எதிர்கொள்வார்கள்" என்றார், மகிழ்சியாக!.

அடுத்த கட்டுரைக்கு