Published:Updated:

ஒன்றரை ஏக்கரில் சமூக காய்கறித் தோட்டம்..!- சொந்த கிராம மக்களை இயற்கைக்கு திருப்பும் அமெரிக்க தமிழர்

சமூகக் காய்கறித் தோட்டம்
சமூகக் காய்கறித் தோட்டம்

`சிறுநீரகக் கல்லில் இருந்து, தைராய்டு, சர்க்கரை நோய்கள், உடல் பருமன், இருதய நோய் என்று பெரு வியாதிகாரர்களாக மாறி வரும் நிலையைப் பார்க்கிறோம். அப்படியான சூழல் இந்த இயற்கைக் காய்கறிகளால் மாறும்.'

தன் சொந்த கிராம மக்களுக்கு உடல் நலன் சிறக்க வேண்டும் என்பதற்காக, அமெரிக்காவில் வசிக்கும் இளைஞர் ஒருவர், ஊருக்குப் பொதுவாக ஒன்றரை ஏக்கரில், இயற்கை முறையில் சமூகக் காய்கறித் தோட்டம் அமைத்து, அசத்தியிருக்கிறார்.

முப்பெரும் விழா
முப்பெரும் விழா

'இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளைக் கிராம மக்கள் இலவசமாகப் பறித்துச் சமைத்துக்கொள்ளலாம்' என்று அறிவித்து, ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

Vikatan

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது, வேப்பங்குடி. இந்த கிராமத்தைச் சேர்ந்த நரேந்திரன் என்ற இளைஞர், அமெரிக்காவில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். தனது ஊரைப் பசுமையாக மாற்ற, ஊர் முழுக்க மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகிறார். அதோடு, கிராம மக்களை இயற்கைக்குத் திருப்ப நினைத்து, வீடுதோறும் பாரம்பர்ய காய்கறி விதைகளைக் கொடுத்து, அவர்களை விளைவிக்க வைத்தார்.

சமூகக் காய்கறித் தோட்டம்
சமூகக் காய்கறித் தோட்டம்

அடுத்தகட்டமாக்க, ஊருக்குப் பொதுவாக ஒன்றரை ஏக்கர் நிலத்தில், சமூகக் காய்கறித் தோட்டம் ஒன்றை அமைத்து, மக்களுக்கு அதை அர்ப்பணித்திருக்கிறார். சமூகக் காய்கறித் தோட்டம் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பள்ளிக்குக் கல்விச்சீர் வழங்குதல் என்று முப்பெரும் விழாவாக, வேப்பங்குடியில் கொண்டாடப்பட்டது.

அமெரிக்காவில் இருக்கும் நரேந்திரனிடம், வாட்ஸ் அப் வழியே பேசினோம். "உண்ணும் உணவே மருந்து என்றிருந்த காலம் போய், இப்போது 'மருந்தே உணவு' என்ற மோசமான நிலைக்கு மாறிவிட்டோம். மக்கள் அதிகமாகக் காய்கறி சமைத்து உண்பது கூட குறைந்து வருகிறது. சமைப்பது என்பதே கிராமங்களில் குறைந்து வருகிறது என்பதும் உண்மை. இந்நிலையில், இன்று பெருகி வரும் நோய்களுக்கு நாம் சாப்பிடும் உணவு முறைகள்தான் காரணம். அதை மாற்ற வேண்டும் என்பதற்காக நான் எடுத்திருக்கும் முயற்சி இது. கடந்த 3 ஆண்டுகளாக மக்களுக்கு மரபு விதைகளைக் கொடுத்து, இயற்கை காய்கறித் தோட்டம் அமைக்க வைத்தேன். அதில் விளைந்த காய்கறிகளை சமைத்துச் சாப்பிட்டுப் பார்த்துட்டு பலரும், 'நல்ல ருசியா இருக்கு நரேன்'னு சொன்னார்கள்.

 நரேந்திரன்
நரேந்திரன்

ஆனால், சிலருக்கு இது வேண்டாத வேலையாகத் தெரிந்தது. அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தும் புண்ணியமில்லை. அதனால், ஒரு மாதிரி தோட்டம் அமைத்து, அதன்மூலம் தோட்டம் பயிரிடுதல் சுலபமானது மற்றும் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடியது என்பதை மனதில் பதிய வைக்க இந்தச் சமூக காய்கறித் தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நஞ்சில்லாத உணவு கிடைக்க வழிவகை செய்யும். வீட்டுத்தோட்டம் போடும் பழக்கமே மறந்து போய்விட்டது. அதை மீட்டெடுக்கவும், சுயச்சார்பு வாழ்வியலை உணர்த்தவும் இந்த முயற்சி ஊக்கப்படுத்தும். இந்தத் தோட்டத்தைப் பராமரிக்க இளைஞர்கள் தயாராக உள்ளார்கள்.

இங்கு விளையும் காய்கறிகளைக் கிராம மக்கள் இலவசமாகப் பறித்துக்கொள்ளலாம். அதோடு, இதன் மூலம் மனிதாபிமானம், பகிர்ந்து உண்ணுதல், உறவு மேம்படுதல் என்று பல வகைகளில் சமூக மாற்றத்திற்கு உதவும். ஒரு காலத்தில் உப்பு, புளி, மிளகாய், பருப்பு இருந்தால் போதும் வீட்டில் உள்ள காய்கறி, பக்கத்து வீட்டிலிருந்து பகிர்ந்து கொண்டது என்று இருப்பதை வைத்துச் சமையல் தேவை முடியும். ஆனால், அந்தப் பகிர்ந்து கொடுத்தல் பழக்கம் போய், இன்று அனைத்திற்கும் அவர்களே செலவு செய்ய வேண்டும். அதெல்லாம் இதனால் மாறும். தவிர, இன்று நாம் உண்ணும் உணவில் உள்ள நச்சுக்களால் ஏற்படும் கழிவுகள் மூலம் பெருகி வரும் நோய்கள் ஏராளம். சிறுநீரகக் கல்லிலிருந்து, தைராய்டு, சர்க்கரை நோய்கள், உடல் பருமன், இருதய நோய் என்று பெரு வியாதிக்காரர்களாக மாறி வரும் நிலை பல இடங்களில் பார்க்கிறோம்.

மரம் நடும் விழா
மரம் நடும் விழா

அப்படியான சூழல் இந்த இயற்கை காய்கறிகளால் மாறும். எனவே, இது சாதாரண காய்கறித் தோட்டம் என்று மட்டும் இதைப் பார்க்க முடியாது. இதனால், ஒரு எதிர்கால தலைமுறையே உடல்நலம், உள நலம், மட்டுமல்லாது பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு வளமான வாழ்வை வாழ இது வழிவகுக்கும். இது போல வேறு ஊர்களில் சமூகக் காய்கறித்தோட்டம் அமைக்க நினைப்பவர்களுக்கு, நாங்கள் பயிற்சி கொடுக்கத் தயாராக இருக்கிறோம். இப்படி கிராம மக்களுக்காக சமூகக் காய்கறித் தோட்டம் அமைப்பது தமிழகத்திலேயே இதுதான் முதல்முறை" என்றார், மகிழ்ச்சி மேலோங்க!.

அடுத்த கட்டுரைக்கு