Published:Updated:

`அணை நிரம்பி வழிஞ்சும் பாசனத்திற்கு வழியில்லையே!' - ஆதங்கத்தில் கீழ்பவானி விவசாயிகள்; காரணம் என்ன?

பவானிசாகர் அணை
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் சூழலில், விவசாயத்திற்காக வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக இருக்கிறது பவானிசாகர் அணை. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள இந்த பவானிசாகர் அணையானது 105 அடி உயரமும், 32.8 டி.எம்.சி கொள்ளளவும் கொண்டது. இதன்மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2.47 லட்ச ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகமாகியுள்ளது.

பவானிசாகர் அணை
பவானிசாகர் அணை
உடைந்த தடுப்பணை: `அன்று கொதித்த  பொன்முடி... இன்று செவிசாய்க்காத துரைமுருகன்?' -தவிப்பில் விவசாயிகள்

105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையில், அக்டோபர் மாத இறுதிவரை அணையின் பாதுகாப்பு கருதி 102 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்கின்ற விதிமுறை உள்ளது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டிய உடன், உபரிநீர் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் நேற்று மாலை அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதுடன், அணைக்கு நீர்வரத்து 2825 கன அடியாகவும் இருந்தது. அதனையடுத்து அணையிலிருந்து 2300 கனஅடி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இப்படி அணை நிரம்பி 2300 கனஅடி நீர் உபரிநீராக வெளியேற்றப்படும் சூழலிலும், இந்த அணையை நம்பியுள்ள கீழ்பவானி பாசன விவசாயிகளுக்கு, பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. சமீபத்தில் கீழ்பவானி வாய்க்காலின் 54-வது மைலில் ஏற்பட்ட உடைப்பும், அதனையொட்டி வாய்க்காலில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளும்தான் இதற்குக் காரணம்.

இதுகுறித்து கீழ்பவானி பாசன விவசாயிகள் கூறுகையில், ``வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்படும். அப்படி இந்த ஆண்டு கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர் திறந்துவிட்ட சில நாட்களிலேயே வாய்க்காலின் 54-வது மைலில் அரச்சலூர் அருகே பெரும் உடைப்பு ஏற்பட்டது.

பவானிசாகர் அணை
பவானிசாகர் அணை
மேக்கேதாட்டூ அணை: காய் நகர்த்தும் கர்நாடகா; குறட்டை விட்டுக்கொண்டிருக்கிறதா தமிழக அரசு?

இதனால் கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சமீபத்தில்தான் கான்கிரீட் கட்டுமான வேலைகள் நடந்து முடிந்தன. அந்த வேலையில் ஏற்பட்ட தரக் குறைபாடுதான், இன்றைக்கு பாசனத்திற்கு தண்ணீர் பெற முடியாத நிலையை உண்டாக்கியிருக்கிறது.

விரைவில் வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை முடித்து, வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். அணையிலிருந்து உபரிநீர். ஆர்ப்பரித்துச் செல்கின்ற நிலையில், பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தையும், நஷ்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு