Published:Updated:

கென்யாவில் இப்படித்தான் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தினார்கள்!

கென்யா விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
கென்யா விவசாயம்

வழிகாட்டும் வெளிநாட்டு விவசாயம்-11

கென்யாவில் இப்படித்தான் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தினார்கள்!

வழிகாட்டும் வெளிநாட்டு விவசாயம்-11

Published:Updated:
கென்யா விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
கென்யா விவசாயம்

கென்யா - கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு முக்கியமான நாடு. இந்நாடு, மண்வளம் நிறைந்தது. கடல் மட்டத்திலிருந்து ஆரம்பிக்கும் நிலப்பரப்பு, மிக உயரமான மலைப்பகுதி களையும் கொண்டிருக்கும். ஆப்பிரிக்கா வின் இரண்டாவது உயரமான மலையான, கென்யா மலை இங்குதான் உள்ளது. மலைப்பகுதிகள், பள்ளத் தாக்குகள் என விவசாயத்துக்கு ஏற்ற வளமான பூமிதான் கென்யா.

நாட்டின் பல பகுதிகளில் தட்பவெப்பநிலை சற்றே மாறுபட்டாலும், ஆண்டின் பெரும்பாலான பகுதி மிதமான வெப்பநிலையுடன், தேவையான மழைப்பொழிவு இருக்கும். குறிப்பாக, விக்டோரியா ஏரியின் வடிநிலப்பகுதி, பிளவு பள்ளத்தாக்கு (Rift Valley) மற்றும் நைவாஷா ஏரியின் வடிநிலப்பகுதி போன்றவை விவசாய உற்பத்தி யின் முக்கியமான பகுதிகள். விவசாயத்துக்கு ஏற்ற மலைப்பகுதிகளைக் கொண்டிருப்பதால், காபி மற்றும் தேயிலை கென்யாவின் முக்கியமான பயிர்களாகும்.

கொய்மலர் தேசம் கென்யா

கொய்மலர்கள் சாகுபடியிலும் கென்யாவுக்கு முக்கியப் பங்குண்டு. உலக அளவில் கொய்மலர்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளில், கென்யா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நைவாஷா ஏரி, கென்யா மலை, நைரோபி மற்றும் திக்கா ஆகியவை கொய்மலர் உற்பத்தியின் பிரதான இடங்களாகும். சுமார் 20 லட்சம் மக்கள் கொய்மலர் சாகுபடியையும் வணிகத்தையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சார்ந்து இருக்கிறார்கள். பசுமைக் குடில்களில் உற்பத்தி செய்யப்படும் கொய்மலர்கள், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை யாகும் கொய்மலர்களில் மூன்றில் ஒருபகுதி கென்யாவிலிருந்து உற்பத்தியானதாகும். உலகின் கொய்மலர் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு நெதர்லாந்து. எனவே, கென்யாவின் கொய்மலர் வணிகத்தின் பெரும்பகுதியும் டச்சுக்காரர்களைச் சார்ந்தே இருக்கிறது. கென்யாவில் உற்பத்தியாகும் கொய்மலர்களில் பிரதானமானது ரோஜா. ஆனால், ரோஜா உற்பத்தியில் மிகப்பெரிய சவாலாக இருப்பவை செம்பேன் (Red Spider Mite) மற்றும் இலைப்பேன் (Thrips).

கென்யா விவசாயம்
கென்யா விவசாயம்


கொய்மலர்களுக்கு அடுத்தபடியாக, காய்கறிகளும் (முட்டைக்கோஸ், வெங்காயம் மற்றும் பீன்ஸ்), பழங்களும் (மாம்பழங்கள்) ஏற்றுமதி நோக்கில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவையும் பெரும்பாலும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தான் ஏற்றுமதி செய்யப் படுகின்றன.

இலைப்பேன் வில்லன்

இந்தக் காய் கறிகள் மற்றும் பழங்களில், பீன்ஸ் சமீப காலங்களில் முக்கியமான இடத்தைப் பிடித் துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில், கோடைக் காலத்தில் அதாவது ஜூலை முதல் செப்டம்பர் மாதம்வரை பீன்ஸ் உற்பத்தி மட்டுமே சாத்தியம். மற்ற நேரங்களில், அவர்கள் இறக்குமதியை நம்பித்தான் இருப்பார்கள். அந்த வாய்ப்பை நம்பித்தான் கென்ய விவசாயிகள் அதிக அளவில் பீன்ஸ் பயிரிடுகின்றார்கள். ஆனால், பீன்ஸ் உற்பத்தியின் மிகப்பெரிய சவால் இலைப்பேன்கள். அவை, பீன்ஸ் பூக்கள் மற்றும் காய்களில் பெரும் சேதத்தை உருவாக்கும்.

கென்யா விவசாயம்
கென்யா விவசாயம்

செம்பேன் கொடுக்கும் சவால்

ஆக, கொய்மலர்கள் சாகுபடியிலும், பீன்ஸ் சாகுபடியிலும் மிகப்பெரிய சவாலாக இருப்பவை பூச்சித் தாக்குதல்கள். ஆரம்ப காலத்தில், அவற்றைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பெரும்பாலும் பூச்சிக் கொல்லிகளையே பயன்படுத்தி வந்தனர். அதிலும், எந்தப் பூச்சிக்கொல்லிகள் அதிக பலன்களைக் கொடுத்தனவோ, அவற்றையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தினர். ஆனால், செம்பேன்களும் சரி, இலைப்பேன்களும் சரி, மிகக் குறுகிய வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்டவை. அதாவது, ஓரிரு வாரங்களிலேயே அடுத்த தலைமுறையை உருவாக்கும் வல்லமை கொண்டவை. எனவே, அவை திரும்பத் திரும்பக் குறிப்பிட்ட பூச்சிக்கொல்லிகளையே சந்தித்து வளர்ந்ததால், அடுத்தடுத்த சந்ததிகளில் குறிப்பிட்ட பூச்சிக்கொல்லிகளுக்கு மிகுந்த எதிர்ப்புத்திறனை உருவாக்கிக் கொண்டன.

‘‘கொய்மலர்களிலும், பீன்ஸ் பயிரிலும் உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளை முன்னெடுக்கும் முனைப்புகள் தொடங்கின.’’


எனவே, ஒன்று விவசாயிகள் புதுப்புது பூச்சிக்கொல்லிகளைத் தேடித்தேடி உபயோகிக்க வேண்டும். இல்லையேல், இருக்கின்ற பூச்சிக்கொல்லிகளை இரண்டு, மூன்று மடங்குகளாக அதிகம் பயன்படுத்த வேண்டும். ஆனால், சமீபகாலமாக ஐரோப்பிய ஒன்றியம் பூச்சிக்கொல்லி பயன்பாட்டுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் மலர்கள், காய்கறிகள் மற்றும் பழங்களில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் எஞ்சிய நஞ்சுகள் இருந்தால், அவற்றை அப்படியே திருப்பி அனுப்பிவிடுவார்கள். எனவே, கென்ய விவசாயிகள், பெரும்பாலான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதே நேரத்தில், ஏற்றுமதி வணிகத்தில் கிடைக்கும் பெரும் வருவாயை இழக்கவும் முடியாது. நைரோபி சர்வதேச விமான நிலையத்தில் கொய்மலர்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதிக்காக, தனியானதொரு முனையம் இருக்கிறதென்றால், அவற்றின் வணிக முக்கியத்துவம் உங்களுக்குப் புரிந்திருக்கும். இந்த இக்கட்டான சூழலில், கென்ய விவசாயி களுக்குக் கைகொடுத்தவைதான் உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள்.

வெங்காயத்தில் இலைப்பேன்களின் தாக்குதல்
வெங்காயத்தில் இலைப்பேன்களின் தாக்குதல்


சரியான நேரத்தில் தடுப்பு நடவடிக்கை

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை, கொய்மலர்கள் சாகுபடியில் மிகப்பெரிய சவாலாக இருந்தவை செம்பேன்கள். செம்பேன்கள் பூச்சியினம் அல்ல; அவை சிலந்திகளுடன் நெருங்கிய தொடர்புடையவை. ஆனால், சிலந்திகளைப் போல மற்ற பூச்சிகளை வேட்டையாடி உண்ணாமல், தாவரங்களை உண்டு வாழும். இந்தச் செம்பேன்கள் அவ்வளவு எளிதாக நமது கண்ணுக்குப் புலப்பட்டுவிடாது. கூட்டம் கூட்டமாக வாழும். பல்கிப்பெருகி நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் உருவாகும்போதுதான் நமது கண்களில் எளிதாகத் தென்படும். ஆனால், அப்போது நமக்கான காலம் கடந்திருக்கும். ஆம், அப்போது நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், அவற்றை அவ்வளவு எளிதாகக் கட்டுப்படுத்திவிட முடியாது. கூட்டம் கூட்டமாக இலைகளிலும் பூவிதழ்களிலும், காய்களிலும் மேற்புறங்களைச் சுரண்டி சாற்றை உறிஞ்சுவதால், அந்தப் பகுதிகள் வெள்ளை மற்றும் பழுப்பு நிறத் திட்டுக்களாக மாறி, ஒருசில நாள்களிலேயே காய்ந்து, கருகிவிடும். பொதுவாக, செம்பேன்களைக் கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவற்றையும் சரியான சமயத்தில் பயன்படுத்தாவிட்டால், பூச்சிக்கொல்லிகளால் பயன் ஏதுமில்லை. காரணம், செம்பேன்களின் எண்ணிக்கை கூடக்கூட, அவை சிலந்திகளைப்போல மெல்லிய வலைகளை உருவாக்கி, இலை, பூ மற்றும் காய்களின் மேற்புறத்தை மூடிக்கொள்ளும். எனவே, நாம் உபயோகிக்கும் பூச்சிக்கொல்லிகள் வலைகளின் மேற்புரத் திலேயே தங்கிக்கொள்ளும். செம்பேன்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளிருந்துகொண்டு, தாக்குதலைத் தொடர்ந்துகொண்டிருக்கும். அதிலும், பூச்சிக்கொல்லிகளைப் பயன் படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகள் வேறு. எனவே, கென்ய விவசாயிகள் ஒருவித கையறுநிலையி லிருந்தபோது கைகொடுத்தவைதான், உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள்.

வெள்ளை பூஞ்சையால் கொல்லப்பட்ட இலைப்பேன்கள்
வெள்ளை பூஞ்சையால் கொல்லப்பட்ட இலைப்பேன்கள்


சிலந்திப்பேன் இரைவிழுங்கிகள்

எப்படித் தீமை தரும் பூச்சிகளைக் கொல்வதற்கு, இயற்கை எதிரிகளான ஒட்டுண்ணிகளையும், இரைவிழுங்கிகளையும் பயன்படுத்துகிறோமோ, அதேபோலச் செம்பேன்களைக் கட்டுப்படுத்தவும், சிலந்திப் பேன்களிலேயே இயற்கை எதிரிகளும் உண்டு. அவை பொதுவாகச் சிலந்திப்பேன் இரைவிழுங்கிகள் (Predatory Mites) என்று அழைக்கப்படும். பைட்டோசெய்லஸ் (Phytoseiulus) மற்றும் ஆம்பிலிசெயுஸ் (Amblyseius) என்ற இரண்டு சிலந்திப்பேன் இரைவிழுங்கிகளை, செம்பேன்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கென்யாவில் அறிமுகம் செய்தனர். பெரும்பாலும் கொய்மலர்கள் பசுமைக்குடில்களிலும், வலைக்குடில்களிலும் சாகுபடி செய்யப் பட்டதால், இதுபோன்ற இயற்கை எதிரிகளைப் பயன்படுத்துவது மிக எளிது. எனவே, இந்தத் தொழில்நுட்பம் மிக விரைவாகப் பரவியது.

இந்த இரண்டு இரைவிழுங்கிகளின் கரங்களையும் வலுப்படுத்தும் விதத்தில், ‘மெட்டாரைசியம் அனிசோபிலியே’ என்ற பச்சை பூஞ்சையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பூஞ்சைகள் குறிப்பிட்ட சில பூச்சிகளையும் செம்பேன்களையும் மட்டுமே பாதிக்கும். இந்தப் பூஞ்சைகளுக்குள்ளேயே, பல்வேறு திரிபுகள் (Strains) உண்டு. உதாரணத்துக்கு, அசுவினிகளைத் தாக்கும் திரிபு காய்ப் புழுக்களைத் தாக்காது; காய்ப்புழுக்களைத் தாக்குவது, செம்பேன் களைத் தாக்காது. எனவே, இந்தப் பச்சை பூஞ்சை மனிதர்களுக்கும், மற்ற விலங்கினங் களுக்கும் எவ்விதப் பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது. எனவே, அவற்றைத் தாராளமாகப் பூச்சி மற்றும் செம்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். இவ்வாறாக, சிலந்திப்பேன் இரை விழுங்கிகளும், பச்சை பூஞ்சையும் கொய்மலர் சாகுபடியின் பிரதான பிரச்னையான செம்பேன் ஒழிப்புக்கு இன்றளவும் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

முனைவர் சீனிவாசன் ராமசாமி
முனைவர் சீனிவாசன் ராமசாமி


பீன்ஸ் பயிரிலும் பிரச்னை

செம்பேன் பிரச்னை தீர்க்கப்பட்டாலும், கொய்மலர் சாகுபடியில் அடுத்து தலைதூக்கிய பிரச்னை இலைப்பேன்கள். செம்பேன்களைப் போலவே, இலைப் பேன்களையும் இரைவிழுங்கிகளையும், பூஞ்சைகளையும் கொண்டு கட்டுப்படுத்த இயலுமா என்று முயற்சி செய்தனர்.

கொய்மலர்களுக்கு அடுத்து, இலைப் பேன்களால் அதிகம் பாதிக்கப்பட்ட இன்னொரு பயிர் பீன்ஸ். இதுவும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றுத் தேவைப் பட்டது. ஆகவே, கொய்மலர்களிலும், பீன்ஸ் பயிரிலும் உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளை முன்னெடுக்கும் முனைப்புகள் தொடங்கின. ஆனால், செம்பேன்களின் கட்டுப்பாட்டைப் போல, இலைப்பேன் களின் கட்டுப்பாடு அவ்வளவு எளிதல்ல என்ற உண்மை விரைவிலேயே விளங்கிற்று. அதற்கு முதன்மையான காரணம், இலைப்பேன்களின் மறைந்து வாழும் இயல்பே.

இலைபேன்கள் குறித்து மேலும் சில தகவல்கள் இருக்கின்றன. அவற்றை அடுத்த இதழில் பார்ப்போம்.

- வளரும்