Published:Updated:

இயற்கை விவசாயத்தைப் பரப்பும் கேரள திரைத்துறை!

கேரள திரைத்துறை

பக்கத்து வயல்

இயற்கை விவசாயத்தைப் பரப்பும் கேரள திரைத்துறை!

பக்கத்து வயல்

Published:Updated:
கேரள திரைத்துறை

லையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் எர்ணாகுளம் எளமக்கரையில் உள்ள தனது வீட்டில் இயற்கை முறையில் காய்கறித் தோட்டம் அமைத்திருப்பது பற்றி வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதில் பேசிய மோகன்லால், “சிறிய இடத்தில் நமக்கு அவசியமான எல்லாக் காய்கறிகளையும் விளைவிக்கலாம். அதற்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும். இடம் இல்லாதவர்கள் மொட்டைமாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கலாம்” என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தமிழ் திரைப்பட உலகில், ஒரு வெற்றிப் படம் கொடுத்துவிட்டால் அந்த நடிகரின் அரசியல் பிரவேசம் எப்போது இருக்கும் எனக் கேட்கும் நிலை உள்ளது. சில நடிகர்களின் திரைப்பட வசனங்களில் மறைமுகமாக அரசியல் கருத்துகள் இடம்பெறும். ஆனால், மலையாள திரை பிரபலங்கள் இயற்கை விவசாயம், வீட்டுத் தோட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அது கேரள மக்களுக்கும் அரசுக்கும் வழிகாட்டும் வகையில் உள்ளது. அதன் நீட்சிதான் மோகன்லால் வெளியிட்டுள்ள வீடியோ என்கிறார்கள் கேரள மக்கள்.

மோகன்லால்
மோகன்லால்

இதுபற்றிக் கேரள முன்னோடி விவசாயிகள் சிலரிடம் பேசினோம். “மோகன்லால் மட்டுமல்ல மம்முட்டி, ஶ்ரீனிவாசன், ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், அனுப் சந்திரன், கிருஷ்ண பிரசாத் போன்ற நடிகர்கள் சிறந்த விவசாயிகள்தாம். இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை முதலில் ஏற்படுத்தியது நடிகர் ஶ்ரீனிவாசன்தான். அவர் எர்ணாகுளம் கண்டநாடு பகுதியில் வாங்கிய நிலத்தில் நெல் மற்றும் காய்கறிகளை இயற்கை முறையில் பயிர் செய்தார். வீட்டில் மட்டுமல்லாது படப்பிடிப்பு தளங்களிலும் தன் நிலத்தில் விளைந்த காய்கறிகளில் சமைத்த உணவுகளையே சாப்பிட்டார். அதோடு இயற்கை முறை விவசாயம் குறித்துப் பல இடங்களிலும் பேசிவந்தார். அவர் வீட்டுத் தேவைக்கான பால் மற்றும் விவசாயத் துக்கான சாண உரத்துக்காகவும் குள்ளன் வகைப் பசுக்களை வளர்த்து வருகிறார். ஆண்டுதோறும் காசர்கோட்டில் நடக்கும் நாட்டுப் பசுமாடுகள் கண்காட்சியில் ஶ்ரீனிவாசனின் வீட்டுப் பசுமாடுகள் இடம்பெறும். 2013-ம் ஆண்டு ஶ்ரீனிவாசன் தனது வீட்டுக்கு அருகில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல் பயிரை அவரின் மனைவி விமலாவுடன் இணைந்து அறுவடை செய்த நிகழ்வு கேரளத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.

ஶ்ரீனிவாசன்
ஶ்ரீனிவாசன்

நடிகர் ஜெயராம் பெரிய பசுப் பண்ணையே வைத்திருக்கிறார். அவர் கேரள பால் வளத்துறை தூதுவராகவும் இருக்கிறார். நடிகர் ஜெயராம் தனது பண்ணையில் வளர்ப்பதற்கான பசுக்களை அவரே தேர்ந்தெடுப்பார். படப்பிடிப்பு நேரத்தைத் தவிர மற்ற சமயங்களில் அவர் பசுப் பண்ணையில்தான் இருப்பார்.

அதுபோல நடிகர் மம்முட்டிக்கு மிகவும் பிடித்தமானது பழத்தோட்டம். அவரது பழத்தோட்டத்தில் வெளிநாட்டுப் பழ வகைகள் நிறைய பயிரிட்டிருக்கிறார். பாலக்காட்டைச் சேர்ந்த நடிகர் கிருஷ்ண பிரசாத் நெல் விவசாயத்தில் ஆர்வம் மிக்கவர். ஆரம்பத்தில் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் மட்டும் விவசாயத்தைக் கவனித்து வந்தவர், இப்போது விவசாயம் போக நேரம் கிடைக்கும்போதுதான் நடிக்கிறார். இதுபோலப் பல நடிகர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். நடிகை அனுமோள் கடந்த ஆண்டு ஊரடங்கு சமயத்தில் தன் அம்மாவுடன் நெல் விவசாயத்தில் ஈடுபட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. மோகன்லால் தனது இயற்கை காய்கறி தோட்டம்பற்றிய வீடியோ வெளியிட்டதால், இயற்கை விவசாயத்தை ஒரு ‘சேலஞ்ச்’ ஆக எடுத்துச் செய்வார்கள்” என்றார்கள்.

மம்முட்டி
மம்முட்டி


திருவனந்தபுரம் தணல் அமைப்பின் இயக்குநர் உஷா கூறும்போது, “கேரளத்தில் இயற்கை விவசாய விழிப்புணர்வை நடிகர் ஶ்ரீனிவாசன்தான் ஆரம்பத்தில் ஏற்படுத்தினார். இயற்கை சார்ந்த உணவு முறையைப் பின்பற்றுபவர்தான் ஶ்ரீனிவாசன். இயற்கை விவசாயிகள், நேச்சுரோபதி ஆட்களுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இயற்கை விவசாயத்தை அவர் தொடங்கினார். 2014-ல் நடிகை மஞ்சுவாரியார் நடிப்பில் வெளியான ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ சினிமா இயற்கை விவசாயத்துக்கு ஆதரவாக மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு, இயற்கை விவசாயம், மாடித்தோட்டங்கள் அமைப்பதில் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகமானது. அரசும் மக்களின் ஆர்வத்துக்கு ஏற்ப வீட்டுத்தோட்டத்துக்கான திட்டங்களை வகுத்துள்ளது.

விழிப்புணர்வை ஏற்படுத்திய என்டோசல்பான்

கேரள விவசாயத்துறை சார்பில் ‘கிச்சன் கார்டன்’ திட்டம் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. மக்களுக்கும் நல்ல காய்கறிகள் கிடைத்தன. 2004-ம் ஆண்டு வாக்கில் இயற்கை விவசாயத்தையும் கேரள அரசு ஊக்கப்படுத்தியது. அதற்கு ‘என்டோசல்பான்’ பூச்சிக்கொல்லிக்கு எதிரான போராட்டம் முக்கியக் காரணம். அதன் பிறகு இயற்கை விவசாயக் கொள்கை கேரளத்தில் வந்தது. சிறிய குழுக்களாக இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினர். ‘நாட்டின் புறம்’ என்ற நிகழ்ச்சிமூலம் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தியது.

மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர்

அதன் தொடர்ச்சியாகப் பள்ளி வளாகம், பொது நிறுவன வளாகங்களில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன. பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து காய்கறித் தோட்டம் அமைத்து மதிய உணவுத் திட்டத்துக்கு அந்தக் காய்கறிகளைப் பயன் படுத்த தொடங்கினர். அது மாணவர்களுக்குக் கழிவு மேலாண்மை மற்றும் விவசாயத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது.

சுபிக்‌ஷா திட்டம்

2018-ம் ஆண்டு மழை வெள்ள பிரளயத்துக்குப் பிறகு, தங்களுக்கான உணவைத் தாங்களே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மக்களை ஊக்குவிக்கும் விதமாக விவசாயத்துறை சார்பில் காய்கறிச் செடி வளர்க்கும் 10 பைகளும், விதைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது. கடந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் ‘சுபிக்‌ஷா’ என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. பழங்கள், காய்கறிகளில் கேரள மாநிலம் தன்னிறைவடைய வேண்டும் என்பதே சுபிக்‌ஷா திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை எடுத்து விவசாயம் செய்பவர்களுக்காக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஜெயராம்
ஜெயராம்

இணைய வழியில் இயற்கை விவசாயம்

அரசு உற்சாகப்படுத்துவதால் நடிகர்களும், சில சமூக அமைப்புகளும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக வீடியோக்களும் கருத்துக்களும் பதிவிட்டு வருகிறன. இயற்கை விவசாயிகள், இயற்கை விவசாயம் குறித்து இலவசமாக இணைய வழி (ஆன்லைன்) பயிற்சிகளை நடத்தி வருகிறார்கள். இதெல்லாம் கேரளத்தில் இயற்கை விவசாயத்தை மேலும் அதிகரிக்கச் செய்து வருகின்றன” என்றார்.

கடந்த சில ஆண்டுகளாகவே, மலையாள திரை பிரபலங்கள் இயற்கை விவசாயம், வீட்டுத்தோட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அது கேரள மக்களுக்கும், அரசுக்கும் வழிகாட்டும் வகையில் உள்ளது. அதன் நீட்சிதான் மோகன்லால் வெளியிட்டுள்ள வீடியோ என்கிறார்கள் கேரள மக்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism