Published:Updated:

காய்கறிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை! - கேரள அரசின் அசத்தல் திட்டம்!

அக்கம் பக்கம்

பிரீமியம் ஸ்டோரி
சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருள்கள் வாங்கும்போது, பொருள்களின் விலை இவ்வளவு, இங்கு பொருள் வாங்கியதால் உங்களுக்கு இவ்வளவு ரூபாய் லாபம் என்ற ரீதியில் பில்லில் தனியாகப் பிரித்துக் காட்டப்பட்டிருக்கும். அதுபோல விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளுக்கு வெளி மார்க்கெட்டில் கிடைக்கும் விலையையும், அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையையும் பிரித்துப் பட்டியல் இடுகிறார்கள் கேரள வேளாண்துறை அதிகாரிகள்.

மரவள்ளிக்கிழங்கு, நேந்திரம் வாழை, அன்னாசிப் பழம், பூசணிக்காய், வெள்ளரிக்காய், பாகற்காய், புடலங்காய், தக்காளி, முட்டைக்கோஸ், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்ரூட், பூண்டு உள்ளிட்ட 16 வகையான காய்கறி, பழங்களுக்கு இப்போது குறைந்தபட்ச ஆதார விலையை (Minimum Support Price) அறிவித்துள்ளது கேரள வேளாண்மைத்துறை. தற்போதைய விலை நிலவரப்படி பீட்ரூட் வெளி மார்க்கெட்டில் ரூ.17.29-க்குக் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், அரசு நிர்ணயித்த விலை 21 ரூபாய். நேந்திரம் வாழை வெளி மார்க்கெட்டில் ரூ.25.09, அரசு நிர்ணயித்த விலை 30 ரூபாய். இப்படி அரசின் குறைந்தபட்ச ஆதார விலை வித்தியாசம் விவசாயிகளுக்குப் பட்டியலிட்டுக் காட்டப் படுகிறது. முதன்முறையாகக் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையைக் கேரள அரசு நிர்ணயம் செய்துள்ளதுதான் இதற்குக் காரணம். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் ‘ஆன்லைன் போர்ட்டல்’ வழியாகக் கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இந்தத் திட்டத்துக்குக் கேரள விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

காய்கறி
காய்கறி

இதுகுறித்துத் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன் (Committee member, ASHA-Kisan Swaraj Facilitator, Agri Insight) பேசும்போது, “குறிப்பிட்ட காய்கறிகள், பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை போட்டிருக்கிறாங்க. கவர்மென்ட் போர்ட்டல்ல நானும் பதிவு பண்ணியிருக்கிறேன். அதுல விவசாய நிலம் எவ்வளவு இருக்குன்னும், என்ன விவசாயம் செய்யப் போறோம்கிறதையும் பதிவு பண்ணணும். இப்படிப் பதிவு பண்ணிட்டா விவசாயிங்ககிட்ட இருந்து அரசு வாங்கிக்கொள்ளும்.

ஒவ்வொரு பஞ்சாயத்திலயும் ஒரு ‘கிரிஷி பவன்’ இருக்கு. வேளாண்துறையோட ஒரு பிரிவான இந்த கிரிஷி பவன்கள் உள்ளாட்சி அமைப்புகளோட சேர்ந்து வேலை பண்ணுறாங்க. போர்ட்டல்ல நாம விவசாயின்னு பதிவு பண்ணினாலும் அந்த கிரிஷி பவன்ல இருக்கிற அதிகாரிகள் நாம உண்மையான விவசாயியா, இல்லையாங்கிறதை உறுதிப்படுத்துவாங்க. அப்புறம் பதிவு பண்ணுன விவசாயிங்களுக்காக வாட்ஸ் அப்ல ஒரு குரூப் உருவாக்கியிருக்காங்க. என்கிட்ட காய்கறிகள் விற்பனைக்கு இருக்குன்னா அந்த ‘வாட்ஸ் அப்’ குரூப்ல தகவல் பதிவிடலாம். எனக்கு இப்ப 5 கிலோ வெண்டைக்காய் இருக்குன்னு நான் பதிவிட்டேனா, அவங்க அதைத் தோட்டக் கலைத்துறைகிட்ட சொல்லிடுவாங்க. உடனே அவங்க, அதை கலெக்‌ஷன் சென்டருக்கு (கொள்முதல் நிலையம்) கொண்டு வரச் சொல்வாங்க. அங்க போனதும் எடைபோட்டு அதற்கான தொகையை உடனே கொடுத்திடுவாங்க” என்றவர் இயற்கை விவசாய முறையில் விளையும் காய்கறிகளுக்காக இருக்கும் சந்தை பற்றியும் பேசினார்.

காய்கறிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை! - கேரள அரசின் அசத்தல் திட்டம்!

இயற்கைக் காய்கறிகளுக்குக் கூடுதல் விலை

“திருவனந்தபுரத்துல இயற்கை முறையில விளைவிக்கிற காய்கறிகளுக்கு மற்ற காய்கறிகளைவிடக் கொஞ்சம் கூடுதலா விலை கொடுக்கிறாங்க. இயற்கைக் காய்கறிகள் வாங்குற திட்டம் திருவனந்தபுரத்தில தொடங்கி யிருக்காங்க. மத்த மாவட்டங்கள்ல இன்னும் தொடங்கல. ஆனாலும், திருவனந்தபுரத்தில உள்ளவங்களுக்கு, மத்த மாவட்டங்கள்ல இயற்கைக் காய்கறிகள் இருந்தா, இந்த குரூப்லயே பதிவு போடுறாங்க. அதுக்கு அந்தந்த மாவட்டத்தில உள்ள அதிகாரிகளோட தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்து இங்க உள்ள அதிகாரிங்க உதவுறாங்க. திருவனந்தபுரத்தில விளையுற இயற்கைக் காய்கறிகளை வாங்குறதுல பாளையம் பகுதியில உள்ள சென்டர் நல்லா செயல்பட்டுட்டு இருக்கு. நான் உறுப்பினரா இருக்கிற ‘வாட்ஸ் அப்’ குரூப்ல உள்ள விவசாயிகள் ‘காய்கறிக்கான பணம் உடனே கிடைக்கிறது மகிழ்ச்சியான விஷயம்’னு சொல்றாங்க” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன், பொன்னம்பலம்
ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன், பொன்னம்பலம்

விவசாயிகளுக்குப் பயனளிக்கும் திட்டம்

“தோட்டக்கலைத்துறை ஏற்கெனவே பல இடங்கள்ல இருந்து காய்கறிகள் வாங்கிட்டுதான் இருக்காங்க. முக்கியமா தமிழ்நாட்டுல இருந்து தான் வாங்கினாங்க. இப்ப எங்ககிட்ட இருந்துதான் வாங்கணும்னு அவங்களுக்கு அறிவுறுத்தியிருக்காங்க. பற்றாக்குறை வந்தா தமிழ்நாட்டுல இருந்து வாங்கிக் கலாம்னு சொல்லி இருக்கிறாங்க. இந்தத் திட்டம் இப்பதான் தொடங்கப் பட்டிருக்கு. அதை எப்படியாவது வெற்றிகரமா செயல்படுத்தணும்னு அதிகாரிங்க தீவிர முயற்சி எடுக்கிறாங்க. விவசாயிகளுக்கு உண்மையிலேயே பலன் அளிக்கிற திட்டம் இது’’ என்றவர், ‘‘கேரள வேளாண்துறை அமைச்சரும் சிறப்பா செயல்படுறாங்க. அதுக்கு ஏற்றாற்போல வேளாண்துறை இயக்குநர் வாசுகியும் ஆர்வத்தோடு நிறைய திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறாங்க. சுகாதாரத் துறையோடு வேளாண்துறையும் இணைந்து ஆரோக்கியமான உணவுகளை உற்பத்திப் பண்ணணும்ங்கிற திட்டம் அதில ஒண்ணு. இதுமூலமா இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கிறாங்க” என்றார் மகிழ்ச்சி பொங்க.

தமிழக அரசும் இதைச் செய்யணும்

கேரளா வழிகாட்டியிருக்கும் இந்தத் திட்டத்தைத் தமிழகத்திலும் செயல்பட வைக்க வேண்டும் என்பதே நமது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. இதுகுறித்துக் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பொன்னம்பலத்திடம் பேசினோம், “மத்திய அரசு 23 வகையான விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்கணும்னு அறிவிச்சிருக்கு. அதுல நெல், கோதுமை மற்றும் பருப்பு வகைகள்தான் இடம்பெற்றிருக்கு. ஆனா, காய்கறிகளும் பழங்களும் இடம்பெறலைங்கிறது குறையாத்தான் இருந்துகிட்டிருக்கு. இந்த நிலையில கேரள அரசு காய்கறி, பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து வழிகாட்டியிருக்கு.

தமிழ்நாட்டுல முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்துல உழவர் சந்தை அமைச்சாங்க. அதை ஊக்கப்படுத்தி நல்லா கொண்டு போயிருக்கலாம். அதை அ.தி.மு.க அரசு செய்யல. அதே சமயம் உழவர் சந்தைக்குப் போட்டிங்கிற மாதிரி அம்மா பசுமை அங்காடியைக் கொண்டு வந்தாங்க. அம்மா பசுமை அங்காடியும் ஒருசில இடங்கள்லதான் இருக்கு. அது தமிழகம் முழுக்க இல்லை. தமிழக அரசும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிச்சு, அம்மா பசுமை அங்காடி மூலம் விவசாயிகளிடம் காய்கறிகளை வாங்கி நுகர்வோருக்குக் கொடுக்கலாம்.

தமிழ்நாட்டுல நிறைய இடங்கள்ல கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நெல் கொள்முதல் பண்ணுறாங்க. அதே மாதிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை விலைக்கு வாங்கலாம். ஒருசமயம் தக்காளி 2 ரூபாய்க்கு விக்குது. மற்றொரு சமயம் 50 ரூபாய்க்கு விக்குது. 2 ரூபாய்க்குத் தக்காளி விக்கும்போது ரோட்டுல போட்டு மிதிக்கிறாங்க. இந்த விளைபொருளுக்கு எல்லாம் விலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசாங்கத் தோட பொறுப்பு.

வெங்காயம் விலை அதிகரிச்சா அரசு இறக்குமதி செய்யுது. அதே சமயம் வெங்காயம் விலை ரொம்பக் குறையும்போது அரசு, விவசாயிகளைக் கண்டுக்கிறதே இல்லை.

தமிழ்நாட்டுல தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் அதிகமா உறுப்பினர்களா இருக்கிறாங்க. அவங்ககிட்ட இருந்து காய்கறிகளைத் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களே கொள்முதல் பண்ணி குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்க நடவடிக்கை எடுக்கணும்.

தமிழ்நாட்டுல நிறைய குளிர்சாதன கிடங்குகள் இருக்குது. அதுல பாதிக்கும் மேல செயல்படாமலேயே இருக்கு. அதையெல்லாம் இந்தத் திட்டத்திற்காகப் பயன்படுத்தலாம்” என்றார் நம்பிக்கையுடன்.

ஆர்வமுடன் பதிவு செய்யும் விவசாயிகள்

ந்தத் திட்டம் பற்றிக் கேரள வேளாண்துறை இயக்குநர் வாசுகியிடம் பேசினோம். “காய்கறிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் இணைய ஆன்லைன் போர்ட்டல் தொடங்கியிருக்கிறோம். அதில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். அந்த விவசாயி உண்மையிலேயே விவசாயம் செய்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறோம். இந்த சீஸனில் விளைவித்த காய்கறிகளை விற்பதற்காக நவம்பர் 30-ம் தேதிவரை பதிவு செய்ய நேரம் கொடுத்துள்ளோம். அதற்குப் பிறகும் பதிவு தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். இப்போது விவசாயிகள் ஆர்வமுடன் பதிவு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் விலையைக் கண்காணிக்கச் சில ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம்.

காய்கறிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை! - கேரள அரசின் அசத்தல் திட்டம்!

எங்கேயாவது விலை குறைந்தால், அந்தந்த மாவட்டக்குழு கூடி முடிவு எடுக்கும். தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களின் கடைகளிலும், வேளாண்மைத்துறை கடைகளிலும் நாங்கள் காய்கறிகளை விற்பனை செய்கிறோம். இப்போது 16 விதமான காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளோம். இதற்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது” என்றார்.

அரசு இழப்பீடு கொடுக்கும்

தி
ருவனந்தபுரத்தில் உள்ள தணல் என்ற அமைப்பின் இயக்குநரும் விவசாயியுமான உஷாவிடம் பேசினோம். “அரசு இப்போது காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்திருக்கிறது. அந்த விலையைவிடக் குறைந்த விலைக்கு வெளியில் காய்கறிகளை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த இழப்பீட்டுத் தொகையை அரசே வழங்கும். குறிப்பாகப் பாகற்காய் விலையை அரசு 30 ரூபாயென நிர்ணயம் செய்துள்ளது. அதே சமயம் வெளி மார்க்கெட்டில் 25 ரூபாய்க்குப் பாகற்காய் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டால், இழப்பீடான 5 ரூபாயை அரசு விவசாயிகளுக்கு வழங்குகிறது. இந்த இழப்பீடு பெற விவசாயிகள் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

காய்கறிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை! - கேரள அரசின் அசத்தல் திட்டம்!

ஒவ்வொரு விவசாயியும் அதிகபட்சமாக 15 ஏக்கர் நிலம்வரை இந்தத் திட்டத்தில் பதிவு செய்யலாம். அதில் என்ன பயிர் செய்கிறார்கள் என்பதையும் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் பதிவு செய்யும் நிலத்தில் எவ்வளவு காய்கறிகள் விளையும் என்பதைக் கணக்கிட்டு அதிகாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். இப்போதைய நிலையில் அரசு நிர்ணயித்த தொகையைவிட அதிக விலை வெளி மார்க்கெட்டில் கிடைப்பதால் விவசாயிகள் காய்கறிகளை வெளியில் விற்பனை செய்கிறார்கள். தோட்டக்கலைத் துறையும் ஒரு குறிப்பிட்ட அளவு கொள்முதல் செய்கிறது. இதனால் புதிதாக இளைஞர்களும் ஆர்வமுடன் விவசாயத்தில் ஈடுபட முன்வருகிறார்கள்” என்றார் உற்சாகத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு