Published:Updated:

16 வயதில் இயற்கை விவசாயம்... 23 வயதில் கேரளத்தின் முன்மாதிரி இளைஞர்- சாதித்த சூரஜ்!

இயற்கை விவசாயம்: "காய்கறிகள் விற்பனையில மட்டும் மாசத்துக்கு 40 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்குது. அதிக மழை பிரச்னை இல்லாம, உரிய விலை கிடைச்சு, இதைவிட அதிக வருமானமும் எனக்கு கிடைச்சிருக்கு."

“பத்தாவது படிக்கும்போது சுயமா விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். கடந்த ஏழு வருஷத்துல என்னோட விவசாய வேலைகள்ல நிறைய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு. ‘சின்னப் பையன் விவசாயம் செய்றானா... அதெல்லாம் சரிவருமா?’ன்னு கேட்ட பலரும், ‘நீ சாதிச்சுட்டே’ன்னு மனசார பாராட்டுறாங்க. சின்னவங்களோ, பெரியவங்களோ... யாரா இருந்தாலும் விவசாயத்தை அதன் உண்மையான அர்த்தம் உணர்ந்து முறையா செஞ்சா, நிச்சயம் பலன் கிடைக்கும். வெற்றிகரமா விவசாயம் செய்றதோடு, பலருக்கும் நான் வழிகாட்டறேன். கேரள விவசாயத்துறை அமைச்சர், அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் என் தோட்டத்துக்கு வந்து பார்வையிட்டுப் பாராட்டியிருக்காங்க” – உற்சாகம் குறையாமல் பேசுகிறார், சூரஜ் புருஷோத்தமன்!

தோட்டத்தில் சூரஜ்
தோட்டத்தில் சூரஜ்
கேரளாவின் நம்பிக்கைக்குரிய இளம் விவசாயியான சூரஜ், மாநிலத்தின் பல்வேறு விவசாயிகளையும் வேளாண் அதிகாரிகளையும் தனது வெற்றிகரமான விவசாய செயல்பாடுகள் வாயிலாக நிமிர்ந்து பார்க்கச் செய்தவர். பள்ளிக் காலத்திலிருந்து விவசாயத்தில் சாதித்துவரும் இவருக்கு, தற்போது 23 வயது. காய்கறிகள் மூலமாக மட்டுமே மாதம் 40 ஆயிரம் ரூபாய்வரை லாபம் ஈட்டுகிறார். இவரது ஐந்து ஏக்கர் தோட்டம் பச்சைப்பசேலென காட்சியளிக்கிறது. தனது விவசாய ஆர்வத்தை சூரஜ் விவரிக்க, ஆச்சர்யம் கூடுகிறது.

''என் பூர்வீகம், வயநாடு மாவட்டத்திலுள்ள சுல்தான் பத்தேரிங்கிற சின்ன நகரம். விவசாயக் குடும்பம்தான். ஆனா, கேரளா மின்சார வாரியத்துல அப்பா வேலையில் இருக்கிறார். எனவே, அவரால விவசாயத்தைக் கவனிச்சுக்க முடியலை. எங்க அஞ்சு ஏக்கர் நிலம் சும்மாதான் இருந்துச்சு. அப்போ டீச்சரா இருந்த அம்மா, எங்க வீட்டுத் தோட்டத்தை சிறப்பா கவனிச்சுக்கிட்டாங்க. எட்டாவது படிக்கும்போது, நானும் அம்மாவுடன் வீட்டுத் தோட்டப் பணிகளைச் செய்தேன். அந்தத் தருணத்துல எங்க ஊரில் சுபாஷ் பாலேக்கரின் 'ஜீரோ பட்ஜெட்' இயற்கை விவசாயம் பத்தின கருத்தரங்கு நடந்துச்சு. அதுல கலந்துகிட்டேன். பாலேக்கர் மூலமாகவும், அந்தக் கூட்டத்துல கலந்துகிட்ட சில இயற்கை விவசாயிகள் வாயிலாகவும் நிறைய பயனுள்ள விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன்.

தோட்டத்தில் சூரஜ்
தோட்டத்தில் சூரஜ்

அதன் பிறகு எனக்கு விவசாய ஆர்வம் அதிகரிச்சுது. ப்ளஸ் ஒன் படிக்கிறப்போ, பராமரிப்பில்லாம இருந்த எங்களுடைய நிலத்துல விவசாயம் செய்ய ஆசைப்பட்டேன். ‘சும்மா இருக்கிற நிலத்துல விவசாயம் செய்து பழகு’ன்னு பெற்றோரும் அனுமதிச்சாங்க. அந்த நிலத்தை சுத்தம்செய்து, சமன்படுத்தினேன். சில விவசாயிகள்கிட்ட ஆலோசனை கேட்டேன். முதல்கட்டமா, ஒரு ஏக்கர்ல 'கந்தசாலா’ங்கிற பாரம்பர்ய நெல் ரகத்தைப் பயிரிட்டேன். இந்த ரகம் அதிக மணமுடையது. 'திருத்திய நெல் சாகுபடி’ முறையில, 1,800 கிலோ மகசூல் கிடைச்சுது. அது, எங்க சுற்றுவட்டாரப் பகுதியில வழக்கமா கிடைக்கும் மகசூலைவிட அதிகம்” என்று புன்னகைக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறப்பான முறையில் விவசாயம் செய்யும் மாணவருக்கு, கேரள அரசு, ‘கர்ஷக பிரதீபா’ (karshaka prathibha) என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்துகிறது. 2014-ம் ஆண்டு, இந்த விருதைப் பெற்றார் சூரஜ். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, ‘ஜெய்வ கர்ஷகா மண்டலம்’ (jaiva karshaka mandalam) என்ற திட்டத்தை கேரளா அரசு செயல்படுத்திவருகிறது. அதன் விளம்பரத் தூதராகவும் செயல்பட்டவர், கடந்த ஆட்சியில் கேரளா சட்டமன்றத்தில் முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இரண்டு முறை விவசாயம் குறித்து உரையாற்றியிருக்கிறார்.
சூரஜின் தோட்டம்
சூரஜின் தோட்டம்

“முதல் முறை கிடைச்ச வெற்றியைத் தொடர்ந்து, ஒரு ஏக்கர்ல மட்டும் நெல் பயிரிடுவதை வழக்கப்படுத்திக்கிட்டேன். இதுக்கிடையே, தலா ஒன்றரை ஏக்கர்ல 500 அவகேடா மரங்களும், 400 லிச்சி (litchi) பழ வகை மரங்களையும் நட்டேன். இவ்விரண்டு மரங்களுக்கும் இடையேயும், மீதி ஒரு ஏக்கர் நிலத்துல பலவகை காய்கறிப் பயிர்களையும் வளர்த்தேன். சனி, ஞாயிறுகளில் முழுக்கவே விவசாய வேலைகளைச் செய்வேன். மற்ற நாள்கள்ல காலையில ஸ்கூல் போகும் முன்பும், ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் விவசாய வேலைகளைக் கவனிப்பேன். அப்போ, அம்மா டீச்சர் வேலைக்குப் போகலை. நான் ஸ்கூல் போனதும், அம்மாவும் சில வேலையாட்களும் விவசாய வேலைகளைப் பார்த்துப்பாங்க.

படிப்புடன், விவசாய வேலையையும் நல்லா பார்த்துக்கிட்டேன். அனுபவ ரீதியா நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். பெற்றோருக்கு என்மேல அதிக நம்பிக்கை ஏற்பட்டுச்சு. ப்ளஸ் டூ முடிச்ச பிறகு, விடுமுறை காலத்துல எங்க நிலத்துக்குப் பக்கத்துல 15 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தோம். அதுலயும் நெல், பழங்கள், காய்கறிப் பயிர்களை வளர்த்தேன். இந்த நிலையில விவசாயத்துறையை என் எதிர்கால கரியரா தேர்ந்தெடுத்தேன். திருச்சூர் வேளாண் பல்கலைக்கழகத்துல ஹாஸ்டல்ல தங்கி பி.எஸ்ஸி அக்ரி படிச்சேன்.

தோட்டத்தில் சூரஜ்
தோட்டத்தில் சூரஜ்
`நிஜ ஆர்கானிக் பொருள்களை எப்படி கண்டுபிடிப்பது?’ - விளக்கும் இயற்கை விவசாய ஆர்வலர்

விடுமுறை நாள்கள்ல ஊருக்கு வந்து விவசாய வேலைகளைக் கவனிப்பேன். நான் இல்லாதப்போ, விவசாய வேலைகளை முறையா எப்படிச் செய்றதுனு வேலையாட்களுக்கு சொல்லிக்கொடுத்துடுவேன். பயிரில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டா, அதை போட்டோ எடுத்து எனக்கு அனுப்புவாங்க. நான் காலேஜ்ல இருந்தபடியே தீர்வு சொல்வேன். புத்தகத்துல படிக்கிறதையே, செய்முறையா என் தோட்டத்துல விவசாயம் செய்து பார்த்ததால் படிப்பு எளிமையாவும் அர்த்தமுள்ளதாகவும் இருந்துச்சு” என்பவர், கடந்த ஆண்டு படிப்பை முடித்ததும், முழுநேர விவசாயியாக மாறியிருக்கிறார்.

“15 ஏக்கர் குத்தகை விவசாய நிலம், கொஞ்சம் தாழ்வான பகுதியில இருந்துச்சு. பருவமழை வரும்போது, அந்த நிலத்துல மட்டும் தண்ணீர் அதிகம் தேங்கும். அதனால, விவசாயம் செய்றதுல சிரமங்கள் ஏற்படவே, அந்த நிலத்துல விவசாயம் செய்றதைக் கைவிட்டேன். எங்க அஞ்சு ஏக்கர் சொந்த நிலத்துல மட்டும் தற்போது விவசாயம் செய்றேன். வருஷத்துக்கு ஒரு போகத்துக்கு மட்டும் ஒரு ஏக்கர்ல நெல் பயிரிடுவேன். பிறகு, தட்டைப்பயறு செடியை வளர்ப்பேன்.

அறுவடை செய்த பழங்கள்
அறுவடை செய்த பழங்கள்

இது, நிலத்துல நைட்ரஜன் சத்தை நிலைநிறுத்தும் பணியைச் சிறப்பாகச் செய்யும். இதன் அறுவடை முடிஞ்சதும், அந்தச் செடியை அப்படியே மடக்கி உழுதுடுவேன். பின்னர், மறுபடியும் அதே நிலத்துல நெற்பயிரைப் பயிரிடும்போது, பயிரின் வளர்ச்சி சிறப்பா இருக்கும். போன வருஷம் ‘வலிசூரி’ங்கிற (valichoori) பாரம்பர்ய நெல் ரகத்தைப் பயிரிட்டேன். நாலாயிரம் கிலோ மகசூல் கிடைச்சுது. இந்த வருஷமும் அதே ரகத்தைத்தான் பயிரிட்டிருக்கேன். நடவு முடிஞ்சு 15 நாள்கள்தான் ஆகுது.

தவிர, லிச்சி, அவகேடா பழ மரங்களுக்கு இடையேயும், ஒரு ஏக்கர் நிலத்துலயும், தக்காளி, கத்திரி, வெண்டை, குடமிளகாய், பூசணி, புடலை, அவரை, பச்சைமிளகாய், வாழை உள்பட 20-க்கும் மேற்பட்ட காய்கறிகள் இப்போ விளையுது. சப்போட்டா, இஞ்சி, மஞ்சள்கூட இருக்கு. மழைக்காலம் வந்தா, சில செடிகளை நீக்கிட்டு கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், ப்ரக்கோலி மாதிரியான மலைப்பயிர்களை அதிகம் பயிரிடுவேன். இப்படிப் பருவநிலைக்கு ஏற்ப காய்கறிப் பயிர்களை மட்டும் மாத்திடுவேன்.

சூரஜின் நெல் வயல்
சூரஜின் நெல் வயல்

சுற்றுவட்டார விவசாயிகள் பலரும் ஒன்றாகச் சேர்ந்து, பாரம்பர்ய நெல் ரகங்களை அழியாம பார்த்துக்க எங்களால இயன்ற நெல் ரகங்களைத் தொடர்ந்து பயிடுறோம். அதன்மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய விதை நெல்லை சேமிச்சு வெச்சிருக்கோம். எங்களுக்குள் விதை நெல் தேவைப்பட்டா பரிமாற்றம் செஞ்சுக்குவோம். மற்ற விவசாயிகளுக்கும் கொடுப்போம். நான் இதுவரை எட்டு பாரம்பர்ய நெல் ரகங்களை மாறி மாறி பயிரிட்டிருக்கேன்.

மூணு பசு மாடுகளும், ஒரு காளை மாடும் வெச்சிருக்கேன். பால் முழுக்கவே வீட்டுத் தேவைக்குத்தான். மாட்டுச்சாணம் மூலம் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் உள்ளிட்ட சில வளர்ச்சியூக்கிகளைத் தயாரிச்சு, உரிய காலத்துல பாசன நீரில் கலந்து பயிர்களுக்கு விடுவேன். கிணத்துப் பாசனம்தான். வேலையாட்கள் தட்டுப்பாடு தவிர எந்தப் பிரச்னையும் இன்றி விவசாய வேலைகள் சிறப்பா நடக்குது. என் குடும்பத்தினர் நேரடியா விவசாய வேலைகளைச் செய்யாட்டியும், எனக்கு ரொம்பவே ஊக்கம் கொடுக்கறாங்க. அதனால, எனக்குப் பிடிச்ச விவசாய வேலையை நிறைவாகச் செய்யறேன்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

சூரஜின் தோட்டம்
சூரஜின் தோட்டம்

விற்பனை வாய்ப்புகள் குறித்துப் பேசும் சூரஜ், “சுற்றுவட்டார சூப்பர் மார்க்கெட், இயற்கை அங்காடிகளுக்கு விளை பொருள்களை விற்பனை செய்றேன். உரிய விலை கிடைக்குது. விவசாயம், விற்பனைனு எல்லா வேலைகளையும் நானேதான் பார்த்துக்கறேன். நெல் பயிரிட்டு கிடைக்கும் அரிசியை எங்க வீட்டுத் தேவைக்குப் போக, உறவினர்களுக்கு மட்டும் கொடுப்போம். நெல், அரிசி விற்பனை செய்றதில்லை. காய்கறிகள்ல ஆண்டு முழுக்க வருமானம் கிடைக்குது

மழை, வெயில் சீசனுக்கு ஏற்ப வருமானம் மாறுபடும். ஆனா, காய்கறிகள் விற்பனையில மட்டும் மாசத்துக்கு 40 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்குது. அதிக மழை பிரச்னை இல்லாம, உரிய விலை கிடைச்சு, இதைவிட அதிக வருமானமும் எனக்கு கிடைச்சிருக்கு. லிச்சி, அவகேடா மரங்கள்ல இந்த வருஷத்துல இருந்துதான் பழங்கள் கிடைக்கும். அதுல ஓரளவுக்கு வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்கறேன்.

சூரஜின் தோட்டம்
சூரஜின் தோட்டம்

அதையெல்லாம்விட, உடலுக்கும் நிலத்துக்கும் கெடுதல் இல்லாத வகையில் ஆரோக்கியமான காய்கறிகளை உற்பத்தி செய்றதில்தான் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி கிடைக்குது. என்னைப் பார்த்து சிலர் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சா, அதுதான் என்னுடைய உண்மையான வெற்றி. எதிர்கால செயல்பாடுகள் பத்தி யோசிக்கலை. ஆனா, விவசாயம் சார்ந்தும், விவசாயிகளுக்குப் பயன்கிடைக்கிற மாதிரியும்தான் நிச்சயம் செயல்படுவேன்” என்பவரின் முகத்தில் புன்னகை பிரகாசிக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு