Published:Updated:

‘சொல்லி’ அடிக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா!

அறுவடை செய்த நெல்லுடன் கர்ணன் தம்பதி...
பிரீமியம் ஸ்டோரி
அறுவடை செய்த நெல்லுடன் கர்ணன் தம்பதி...

ஒரு ஏக்கர்... 140 நாள்கள்... ரூ. 84,700 வருமானம்…

‘சொல்லி’ அடிக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா!

ஒரு ஏக்கர்... 140 நாள்கள்... ரூ. 84,700 வருமானம்…

Published:Updated:
அறுவடை செய்த நெல்லுடன் கர்ணன் தம்பதி...
பிரீமியம் ஸ்டோரி
அறுவடை செய்த நெல்லுடன் கர்ணன் தம்பதி...

மகசூல்

ருத்துவ குணம்மிக்கப் பாரம்பர்ய நெல் ரகங்களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்துச் சாகுபடி செய்துவருகிறார்கள் விவசாயிகள். அந்த வகையில், இயற்கை முறையில் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா நெல் ரகத்தைச் சாகுபடி செய்து, அரிசியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்து கூடுதல் வருமானம் பார்த்துவருகிறார் இயற்கை விவசாயி கர்ணன்.

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியிலிருந்து 2 கி.மீ தொலைவில், புலியூர்குறிச்சி கிராமத்திலிருக்கிறது கர்ணனின் தோட்டம். ஒரு காலைவேளையில் அவரைச் சந்திக்கச் சென்றோம். பிளாஸ்டிக் டிரம்மில் பஞ்சகவ்யாவைக் கலக்கிக் கொண்டிருந்தவர் நம்மிடம் இயல்பாகப் பேச ஆரம்பித்தார்... ‘‘எங்களுக்கு நெல்லும் வாழையும்தான் முக்கிய விவசாயம். அஞ்சாம் வகுப்பு வரைக்கும்தான் படிச்சேன்.

அறுவடை செய்த நெல்லுடன் கர்ணன் தம்பதி...
அறுவடை செய்த நெல்லுடன் கர்ணன் தம்பதி...

அதுக்குப் பிறகு அப்பாவுடன் சேர்ந்து விவசாய வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். ஆரம்பத்துல மடை திறக்கறது, களை எடுக்கறதுன்னு சின்ன சின்ன வேலைகளைச் செஞ்சேன். பிறகு உழவு ஓட்டுறதுல ஆரம்பிச்சு எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பிச்சேன். முதல்ல தொழுவுரத்தை மட்டும் பயன்படுத்திச் சாகுபடி செஞ்சுட்டிருந்தோம். பசுமைப் புரட்சிக்குப் பிறகு ஊருல இருக்கிற எல்லா விவசாயிகளும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லினு பயன்படுத்த ஆரம்பிச்சதுனால நாங்களும் மாறிட்டோம். ஐ.ஆர்-8, ஐ.ஆர்-50, கட்டாக், அம்பை-16, சிங்கப்பூர் சம்பா, கொட்டாரம் சம்பானு ஒட்டுரக நெல் ரகங்களைச் சாகுபடி செஞ்சோம். ஆரம்பத்துல வளர்ச்சி வேகமா இருந்துச்சு. மகசூலும் அதிகமாகக் கிடைச்சுது. அப்புறம் மகசூல் குறைய ஆரம்பிச்சுது. பூச்சித் தாக்குதலும், நோய்த் தாக்குதலும் அதிகமாகிடுச்சு. வயல் வரப்பு நடுவுல துணிப்பந்தம் வெச்சோம். ஒரு கட்டத்துல எந்த ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துக்கும் பூச்சிகள் கட்டுப்படலை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதே நேரத்துல ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளுக்கான செலவும் அதிகமானது. ஆனாலும், விவசாயத்தை விட்டுடக் கூடாதுனு தொடர்ந்து செஞ்சோம். அதிகப்படியான ரசாயன உரத்தைப் பயன்படுத்தினதுனால, நிலம் சிமென்ட் தரைபோல மாறிடுச்சு. 10 வருஷங்களுக்கு முன்னால விளைச்சல் இல்லாம ரொம்ப நஷ்டம் ஆகிடுச்சு. அந்த நேரத்துல `அட்மா திட்ட’ முகாம்ல இயற்கை விவசாயம் பத்திச் சொன்னாங்க. அதுக்குப் பிறகு ரசாயன விவசாயத்தைக் கைவிட்டுட்டு பாரம்பர்ய முறைபடியே விவசாயத்தைச் செய்யலாம்னு முடிவெடுத்தேன். பல தானிய விதைப்பு மூலமா மண்ணை வளப்படுத்தினேன். தொடர்ந்து அடியுரமா தொழுவுரத்தையும் வேப்பம் பிண்ணாக்கையும், பூச்சி, நோய்த் தாக்குதலுக்கு வேப்பங்கொட்டைக் கரைசலையும் பயன்படுத்தினேன். பெரிய அளவுல மகசூல் கிடைக்கலைன்னாலும், நஞ்சில்லாத நிறைவான மகசூல் கிடைச்சது. அதுக்குப் பிறகு சில இயற்கை விவசாயிகளைச் சந்திச்சு, இடுபொருள்கள் தயாரிப்பு முறையைத் தெரிஞ்சுகிட்டேன். அவங்க மூலமாகத்தான் ‘பசுமை விகட’னும் எனக்கு அறிமுகமாச்சு. அஞ்சு வருஷமா ஒட்டுரக நெல்லைத்தான் இயற்கை முறையில் சாகுபடி செஞ்சுட்டு வந்தேன். இப்போ நாலு வருஷமாத்தான் பாரம்பர்ய ரக நெல்லை சாகுபடி செய்யறேன். இது மொத்தம் அஞ்சு ஏக்கர் நிலம். கிணத்துல தண்ணீர்ப் பற்றாக்குறையால இந்த வருஷம் ஒரு ஏக்கர்லதான் ஆத்தூர் கிச்சிலிச் சம்பாவைச் சாகுபடி செஞ்சு அறுவடையை முடிச்சிருக்கேன்’’ என்றவர், நிறைவாக வருமானம் மற்றும் விற்பனை வாய்ப்புக் குறித்துப் பேசத் தொடங்கினார்.

இதை அரிசியாக மதிப்புக்கூட்டியதில் 1,210 கிலோ அரிசி கிடைச்சது. நாலு வருஷமா பாரம்பர்ய ரக நெல்லைச் சாகுபடி செஞ்சிட்டு வர்றேன்.

“நாற்றங்கால் அமைச்சு நாத்து நடுறதால கூடுதலா விதைநெல் தேவையும், நடவுக்கூலியும் ஆகும். அதனால, இந்த வருஷம் இயந்திர முறையிலயே விதைச்சுட்டேன். இதனால விதை, நாற்றங்கல், நடவுச் செலவு மிச்சமானது. முதல்ல அப்படியே நெல்லாகத்தான் விற்பனை செஞ்சுட்டுவந்தேன். இப்போ நாலு வருஷமாத்தான் அரிசியா மதிப்புக்கூட்டி விற்பனை செய்யறேன். ஒரு ஏக்கர்ல ஆத்தூர் கிச்சிலிச் சம்பா அறுவடையில, மொத்தம் 1,650 (22 மூட்டை X 75 கிலோ) கிலோ நெல் கிடைச்சது. இதை நல்ல பதமா மதிப்புக்கூட்டினா 1,210 கிலோ அரிசி கிடைக்கும். ஏர்வாடியைச் சுற்றியிருக்கும் சில கடைகளுக்கும் நண்பர்களுக்குமே விற்பனை செஞ்சுடுவேன். அதனால எனக்கு விற்பனைக்கு வில்லங்கமில்லை.

சிலர் கிலோ 60 ரூபாய்க்குக்கூட விற்பனை செய்யறாங்க. ஆனா, நான் ஒரு கிலோ அரிசி 70 ரூபாய்னு விற்பனை செய்றேன். அந்த வகையில, 1,210 கிலோ அரிசி விற்பனை மூலமா, 84,700 ரூபாய் வருமானமாகக் கிடைச்சுடும். இதுல, உழவு முதல் அறுவடை வரை மொத்தச் செலவுகள் 36,980 ரூபாயைக் கழிச்சா, மீதமுள்ள 47,720‬ ரூபாய் எனக்கு லாபம்தான்’’ என்றார் மகிழ்ச்சி பொங்க.

தொடர்புக்கு, கர்ணன், செல்போன்: 98942 90240.

‘சொல்லி’ அடிக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பஞ்சகவ்யாக் கரைசல்

ரு ஏக்கருக்கு 3 லிட்டர் பஞ்சகவ்யா, 1 கிலோ சூடோமொனஸ், வேப்பிலைச் சாறு 500 மி.லி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கலந்தால் பஞ்சகவ்யா கலவைக் கரைசல் தயார். இதை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ரு ஏக்கர் பரப்பளவில் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா சாகுபடி குறித்து கர்ணன் கூறும் தகவல்கள் பாடமாக இங்கே...

‘சொல்லி’ அடிக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா!

ஆத்தூர் கிச்சிலிச் சம்பா நடவுசெய்ய, சம்பா (கார்த்திகை) பட்டம் ஏற்றது. ஆனால், கார் (வைகாசி) பட்டத்திலும் சில பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. வயது 140 நாள்கள். எந்தப் பட்டத்தில் நடவு செய்கிறோமோ, அந்தப் பட்டத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் உழவுப் பணிகளைத் தொடங்கிவிட வேண்டும். 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். முதல் உழவின்போதே ஏக்கருக்கு நான்கு டிராக்டர் மட்கிய தொழுவுரத்தைக் கொட்டி, அதைத் தூவிவிட்டு உழவுசெய்ய வேண்டும். நாற்று நடுபவர்கள், உழவின்போதே நாற்றங்கால் தயாரிப்பைத் தொடங்கலாம். நாற்று நடும் முறையைப் பின்பற்றினால், ஏக்கருக்கு 20 கிலோ வரை விதைநெல் தேவை. இயந்திரம் (டிரம் சீடர்) மூலம் விதைப்பதாக இருந்தால் 12 கிலோ விதைநெல் போதுமானது.

விதைப்புக்கு முந்தைய நாள், ஏக்கருக்கு 120 கிலோ வேப்பம் பிண்ணாக்கை வயல் முழுவதும் பரவலாகத் தூவ வேண்டும். விதைப்பு நாளன்று 12 கிலோ விதைநெல்லுடன், ஒரு கிலோ சூடோமொனஸைக் கலந்து, அதன்மீது ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவைத் தெளித்து, நிழலில் 15 நிமிடங்கள் வரை உலரவைத்து விதைக்க வேண்டும். இதனால், வேர் தொடர்பான நோய்கள் ஏற்படாது. 8 முதல் 10 நாள்களில் முளைப்புத் தென்படும். 15 முதல் 18-ம் நாளில் முதல் களை எடுக்க வேண்டும். அன்றே 10 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி பசுமாட்டுச் சிறுநீர் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். இதேபோல 40 மற்றும் 60-ம் நாளில் என இரண்டு களைகள் எடுத்தால் போதுமானது.

25-வது நாளில் 200 கிலோ தொழுவுரத்துடன் 120 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 1 கிலோ சூடோமொனஸ் ஆகியவற்றைக் கலந்து வயலில் பரவலாகத் தூவ வேண்டும். இதனால், நாற்றின் வளர்ச்சி சீராக இருக்கும். இதேபோல், 50 மற்றும் 70-வது நாளிலும் செய்ய வேண்டும். 30-ம் நாள் முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கரைசலைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 90-ம் நாளுக்கு மேல் கதிர்விடும். 100-ம் நாளுக்கு மேல் பால் பிடிக்கும். 110-வது நாளுக்கு மேல் முற்றத் துவங்கும். 135-140-ம் நாள்களில் அறுவடை செய்யலாம்.

மயில் தாக்குதலுக்கு மஞ்சள்தூள்

`நெல் பயிர்களை மயில்கள் அதிகம் சேதப்படுத்துகின்றன’ என்று சொல்லும் கர்ணன், அதைத் தவிர்க்கும் முறை பற்றிப் பேசும்போது, “கதிர் பிடிக்கத் தொடங்கிய நேரத்தில் மயில்களின் தாக்குதல் இருக்கும். இதைத் தவிர்க்க 10 நாள்களுக்கு ஒரு முறை, காலை நேரத்தில் ஏக்கருக்கு 3 கிலோ மஞ்சள்தூளைப் பரவலாகத் தூவிவிட வேண்டும். காலை நேரத்து ஈரப்பசையில் மஞ்சள்தூள் ஒட்டிக்கொள்வதால் இதன் வாசனைக்கு மயில்கள் அருகில் வருவதில்லை’’ என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism