Published:Updated:

டெல்டாவில் விளையும் மலைப் பயிர்கள்!

பீட்ரூட் கொய்யா, சிவப்புச் சீத்தா, லிச்சி, ரம்புட்டான், மங்குஸ்தான்...

பிரீமியம் ஸ்டோரி

மகசூல்

ந்தந்தப் பகுதியில் அதிக அளவில் பயிர் செய்யப்படும் பயிர்களைச் சாகுபடி செய்வதுதான் உலக வழக்கம். ஆனால், ஒரு சிலர் விதிவிலக்காக, உலகின் பல்வேறு பகுதிகளில் விளையக்கூடிய பயிர்களையும் தேடிப்பிடித்து, தங்கள் பகுதியில் சோதனை முயற்சியாக விளைவித்து வருகிறார்கள்.
டெல்டாவில் விளையும் மலைப் பயிர்கள்!

அந்த வகையில், திருவாரூரைச் சேர்ந்த இதயநோய் மருத்துவரும், இளம் விவசாயியுமான டாக்டர் திலீபன் செல்வராஜன், தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பல்வேறுவிதமான மலைப்பயிர்களையும் நிலப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் 70-க்கும் மேற்பட்ட பயிர்களையும் சாகுபடி செய்து, தனது தோட்டத்தைக் காடுபோல உருவாக்கியிருக்கிறார்.

டெல்டாவில் விளையும் மலைப் பயிர்கள்!

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலுள்ள மடப்புரத்தில் அமைந்திருக்கிறது இவரது தோட்டம். மொத்தம் இரண்டு ஏக்கர் நிலம் அமைந்துள்ள இடம் குடியிருப்புப் பகுதியாக இருக்கிறது. வீட்டுமனையாக மாற்றினால் பல கோடி ரூபாய் விலை மதிப்பு பெறும். ஆனாலும் விவசாயத்தின் மீதான நேசிப்பின் காரணமாக விவசாயத்தைத் தொடர்கிறார். ஒரு பகல் பொழுதில் அவரைச் சந்தித்தோம்.

“எங்க தாத்தா விவசாயி. எங்க அப்பா ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. கல்லூரியில படிக்கிற காலத்துல இருந்தே எனக்கு விவசாயத்துல ஈடுபாடு. 15 வருஷத்துக்கு முன்னாடி இந்த நிலத்தை வாங்கினோம். இதோட மொத்தப் பரப்பு ரெண்டு ஏக்கர். அப்போ இதுல காட்டுக்கருவை மண்டிக்கிடந்துச்சு. அதைச் சுத்தப்படுத்தி, முதல் கட்டமா நிலத்தடி நீரைச் சேமிக்க அரை ஏக்கர்ல குட்டை வெட்டினோம். எங்க ஊரைப் பொறுத்தவரை சில மூடநம்பிக்கைகள் இருக்கு. ‘நிலத்தின் தென்பகுதியில பள்ளம் இருந்தா விவசாயம் செழிக்காது’னு சொல்லுவாங்க. அதை முறியடிக்க, தென்பகுதியில குளம் அமைச்சோம்.

‘புதுசா நிலம் வாங்கி வெள்ளாமையைத் தொடங்கும்போது புளிப்பு வகை மரக்கன்றுகள் நடக் கூடாது’னு சொல்லுவாங்க.

அதைப் பொய்யாக்கிக் காட்டணுங்கறதுக்காகவே ஒரு நெல்லிக் கன்று நடவு செஞ்சோம்” என்றவர், தனது விவசாய அனுபவத்தை விவரிக்கத் தொடங்கினார்.

வேர்ப் பலாவுடன் திலீபன் செல்வராஜன்
வேர்ப் பலாவுடன் திலீபன் செல்வராஜன்

“ஒரேவிதமான பயிரைச் சாகுபடி செய்யக் கூடாதுங்கறதுல ஆரம்பத்துல இருந்தே நாங்க உறுதியா இருந்தோம். முதல்ல 25 தென்னங்கன்றுகளைவெச்சோம். பிறகு படிப்படியாக வாழை, மா, பலா, இலந்தை, புளி, கடம்பம், அசோக மரம், பிள்ளை, அரசு, குமிழ், ரோஸ்வுட், வேங்கை, இலுப்பை, மகோகனி, பிள்ளை மருது, மலைவேம்பு, வாதாம், கருங்காலி, கடாரங்காய், எலுமிச்சை, சப்போட்டா, செஞ்சந்தனம், சந்தனம் உள்ளிட்ட மரங்களை நடவு செஞ்சோம். இதைக் காடு மாதிரி உருவாக்கணுங்கறதுனால துல்லியமான இடைவெளி விடலை. தாவரங்கள் செழிப்பாக வளரத் தண்ணீரும், சூரிய ஒளியும் தேவை. கன்றுகள் நடவு செய்யும்போது அதிக கவனம் செலுத்தி, தண்ணீரும் சூரிய வெளிச்சமும் சரியாகக் கிடைச்சுட்டா எந்தப் பயிரையும் நம்ம மண்ணுல விளைவிக்க முடியுங்கறது என்னோட உறுதியான நம்பிக்கை.

டெல்டாவில் விளையும் மலைப் பயிர்கள்!
அதேசமயம், எது மேட்டுப்பகுதியில வளரும், எது பள்ளத்துல வளரும், எதுக்கு நிழல் தேவை, எதுக்கு நேரடியா சூரிய வெப்பம் தேவைங்கறதையெல்லாம் தெளிவா உணர்ந்து, அதன்படி கன்று நடவு செஞ்சா கண்டிப்பாக இதுல வெற்றி பெற முடியும்.

உதாரணத்துக்குச் சொல்லணும்னா நிழல்ல ஆரஞ்சு, வெயில்ல டிராகன் ஃப்ரூட், மேட்டுப்பகுதியில ஆப்பிள், பள்ளத்துல வாழை, தென்னை நடவு செய்யணும்” என்றவர், தோட்டத்துக்குள் நடந்துகொண்டே பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“இதுதான் பர்படாஸ் செர்ரி. நடவு செஞ்சு மூணு வருஷம்தான் ஆகுது. ஒரு வருஷத்துக்கு முன்னாடியே காய்ப்புக்கு வந்துடுச்சு. வருஷத்துக்கு அஞ்சு முறை காய்க்கும். இதன் பழத்தைச் சாப்பிட்டுப் பாருங்க. புளிப்புத்தன்மை அதிகமா இருக்கும். இதுல வைட்டமின் ‘சி’ அதிகம். இதை ஜூஸ் போட்டுக் குடிச்சா, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதுதான் வாட்டர் ஆப்பிள். இதுக்கும் மூணு வயசுதான் ஆகுது. காய்ப்புக்கு வந்துடுச்சு. இதை, `மலையன் ஆப்பிள்’னும் சொல்லுவாங்க. இதன் பழத்துல நீர்ச்சத்து அதிகம். இது பீட்ரூட் கொய்யா. இதுவும் காய்ப்புக்கு வந்துடுச்சு. பார்க்குறதுக்கு பீட்ரூட் நிறத்துல இருக்கும்.

டெல்டாவில் விளையும் மலைப் பயிர்கள்!

இதுவும் அதிகச் சத்தானது. அவகேடோ, மால்பிஜியன் செர்ரி, வெஸ்ட் இண்டியன்ஸ் செர்ரி, முள் சீத்தா, வயலெட் சீத்தா, டிராகன் ஃப்ரூட், ஜம்பு நாவல், பழ அத்தி இதெல்லாமே காய்ப்புக்கு வர ஆரம்பிச்சிடுச்சு. நாலு சாத்துக்குடி மரங்கள் இருக்கு. அதுல இருந்து வருஷத்துக்குச் சராசரியா 50 கிலோ பழங்கள் கிடைக்குது. ரெண்டு ஆரஞ்சு மரங்கள் இருக்கு. அதுவும் நல்லா காய்ச்சுக்கிட்டு இருக்கு. இவை தவிர 14 வகையான மா, எட்டு வகையான வாழை, பலா, கொய்யா இன்னும் பலவிதமான பழ மரங்கள் இங்கே இருக்கு. இதுல இருந்து கிடைக்கும் பழங்களை நாங்க சாப்பிடுவோம்.

டெல்டாவில் விளையும் மலைப் பயிர்கள்!

உறவினர்கள், நண்பர்கள், ஊர்க்காரங்களுக்கும் கொடுக்கிறோம். என்கிட்ட சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கும் பழங்கள் கொடுக்கிறேன். நான் எப்போ தோட்டத்துக்குப் போனாலும், ஏதாவது ஒரு பழத்தைப் பறிச்சிட்டு வரணும்னு நினைப்பேன். அது இப்போ நிறைவேறிக்கிட்டு இருக்கு.

டெல்டாவில் விளையும் மலைப் பயிர்கள்!

‘‘பழங்கள்ல சத்துகள் அதிகம். குறிப்பா, காடுகள் மற்றும் மலைப்பிரதேசங்கள்ல விளையும் பழ ரகங்கள்ல சத்துகள் கூடுதலா இருக்கும். நாம வழக்கமாகச் சாப்பிடுற பழங்களோடு சேர்த்து புதுவகையான பழங்களையும் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான அனைத்துவிதமான சத்துகளும் கிடைச்சிடும். இது குறித்து எங்க பகுதி விவசாயிகளிடம் ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தணும். இதை டெல்டாவுல விளைவிக்க முடியும்னு நிரூபிச்சுக் காட்டணும்கறதுனாலதான் இந்த முயற்சியில இறங்கினேன். அதனாலதான் மண்ணோட பாரம்பர்ய பயிர்களோடு மலைப்பிரதேசப் பயிர்களையும் சாகுபடி செஞ்சிருக்கேன்” என்றவர் நிறைவாக,

டெல்டாவில் விளையும் மலைப் பயிர்கள்!

“எட்டு வருஷத்துக்கு முன்னாடி, சாத்துக்குடி நடவு செஞ்சோம். ‘இதெல்லாம் இங்கே வளராது... இது வெப்ப மண்டல பூமி’னு சுற்றுவட்டார விவசாயிகள் சொன்னாங்க. ஆனா, அடுத்த மூணு வருஷத்துல காய்ப்புக்கு வந்துடுச்சு. அதுக்குப் பிறகு நம்பிக்கையோடு ஆரஞ்சு கன்று நடவு செஞ்சோம். அதுவும் வெற்றிகரமா காய்க்க ஆரம்பிச்சுது. அதன் தொடர்ச்சியாகத்தான் மலைப்பகுதி, காடுகள்ல விளையக்கூடிய மரம், செடி வகைகளைத் தேடித் தேடி, நடவு செய்ய ஆரம்பிச்சேன். நான் ஒரு மருத்துவர்ங்கிற முறையில இந்தப் பயிர்களின் மருத்துவ குணங்கள், இயல்புகளை இணையதளத்துல தேடிப் படிச்சுத் தெரிஞ்சிக்கிட்டேன். இந்த நிலத்துல மலைப்பிரதேசப் பயிர்கள், நமது மண்ணின் பாரம்பர்ய பயிர்கள் உட்பட 75 வகையான பயிர் ரகங்கள் இருக்கு.

மரங்கள் மற்றும் செடிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் 150-ஐ தாண்டும். நான் தினமும் காலையில தோட்டத்துக்குப் போய் பயிர்களையெல்லாம் பார்த்த பிறகுதான் மருத்துவமனைக்குப் போவேன். மற்ற நேரங்கள்ல அப்பாவும் அம்மாவும் தோட்டத்தைப் பராமரிக்கிறாங்க. இந்த வெற்றியில அவங்களோட உழைப்பும் அடங்கியிருக்கு.

இதுல நான் வருமானம் எதிர்பார்க்கலை; மனசுக்கு மகிழ்ச்சி கிடைக்குது; அதுபோதும்” என்றவர், முகம் மலர விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, டாக்டர் திலீபன் செல்வராஜன், செல்போன்: 99403 68692

வட்டவடிவக் குழிதான் நல்லது!

ன்று நடவுமுறை குறித்துப் பேசும் திலீபன், “கன்று நடவுல தனித்துவமான முறையைக் கடைப்பிடிக்கிறேன். எந்தக் கன்று நடவு செய்வதாக இருந்தாலும் வட்ட வடிவத்துலதான் குழி எடுப்போம். மூணடி ஆழம், மூணடி சுற்றளவுக்குக் குழி எடுத்து, அதன் உள்ளே பக்கவாட்டுப் பகுதிகள்ல கடப்பாறையால் ஆங்காங்கே ஏராளமான துளைகள் போடுவோம். இது தாவரங்களின் வேர்ப் பரவலுக்கும், காற்றோட்டத்துக்கும் உதவியாக இருக்கும். குழியில் முதலில் நாலு கிலோ செறிவூட்டப்பட்ட இயற்கை உரம், 20 கிலோ மட்கிய எரு ரெண்டையும் கலந்து போடுவோம். பிறகு நிலத்தோட மேல்மண்ணைப் போட்டு கன்று நடவு செய்வோம். கன்றின் வேர்ப்பகுதியில் இயற்கை இடுபொருள்கள் உட்பட எந்த இடுபொருளும் படக் கூடாது’’ என்கிறார்.

செறிவூட்டப்பட்ட இயற்கை உரம்!

50 கிலோ மட்கிய எரு, 25 கிலோ தென்னை நார்க்கழிவு, 50 கிலோ செம்மண், ஐந்து கிலோ மண்புழு உரம், தலா அரைக்கிலோ சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா விரிடி, பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நிழலில் வைத்தால், அடுத்த ஒரு வாரத்தில் செறிவூட்டப்பட்ட இயற்கை உரம் தயாராகிவிடும்.

பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி!

பயிர்ப் பாதுகாப்பு பற்றிப் பேசும் திலீபன், “மூன்று மாசத்துக்கு ஒரு தடவை ஏக்கருக்கு 45 லிட்டர் தண்ணியில ஒன்றரை லிட்டர் பஞ்சகவ்யா கலந்து எல்லா பயிர்களுக்கும் தெளிப்போம். மூணு மாசத்துக்கு ஒரு தடவை 45 லிட்டர் தண்ணியில நாலரை லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிப்போம். குறிப்பா பூ பூக்கத் தொடங்கும்போதும், பிஞ்சுகள் முதிர்ச்சி அடையத் தொடங்கும்போதும், மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிப்பதைக் கடைப்பிடிக்கிறோம். இதனால் காய்கள், பூச்சிநோய்த் தாக்குதல்கள் இல்லாமல் தரமாக உருவாகுது’’ என்கிறார்

மாடு, ஆடு, கோழி வளர்ப்பு!

மாடு
மாடு

“இயற்கை விவசாயத்துக்காகவும், எங்க வீட்டுக்கான பால், தயிர், நெய் தேவைக்காகவும் 10 மாடுகள் வளர்க்கிறோம். தினமும் 30 லிட்டர் பால் கிடைக்குது. அஞ்சு லிட்டர் பாலை எங்க தேவைக்குப் பயன்படுத்திக்கிறோம். மீதிப் பாலை விற்பனை செஞ்சுடுவோம். 10 ஆடுகள் வளர்க்கிறோம். ஆடு, மாடுகளைத் தினமும் மேய்ச்சலுக்கு விடுவோம். மீன்குட்டையைச் சுற்றிலும் கரையில பயிர் பண்ணியிருக்குற தீவனப்புல், அகத்தி, கிளிரிசீடியா, கல்யாண முருங்கை இலைகளையும் பசுந்தீவனமாகக் கொடுத்துக்கிட்டு இருக்கோம். தோட்டத்துக்குள்ள 30 நாட்டுக்கோழிகள் வளர்க்கிறோம். இரவு நேரங்கள்லகூட கொட்டகையில அடைக்கிறதில்லை. மரக்கிளைகள்ல ஏறித் தங்கிக்கும். நாலு நாய்கள் வளர்க்கிறோம். கோழிகளை அது ஒண்ணும் செய்யாது. சொல்லப்போனா, கோழிகளுக்கு நாய்கள்தான் பாதுகாப்பா இருக்கு’’ என்கிறார் திலீபன்.

மீன் குட்டை!

மீன் குட்டை
மீன் குட்டை

‘‘அரை ஏக்கர் மீன் குட்டையில கட்லா, ரோகு, மிர்கால் கலந்து 1,000 குஞ்சுகள் விடுவோம். ‘வளர்ப்புக் கெண்டை தானாகக் குஞ்சு பொரிக்காது’னு ஒரு பொதுவான கருத்து இருக்கு. ஆனா, எங்க மீன்கள் குட்டையில தானாகவே குஞ்சுகள் பொரிக்குது. தீவனத்துக்குனு பெருசா செலவு செய்யறதில்லை. முட்டைக்கோஸ் கழிவுகள், வாழை இலைகளை நறுக்கி குட்டையில போடுவோம். தினமும் 10 கிலோ ஈரச் சாணத்தைத் தண்ணீர்ல கரைச்சிவிடுவோம். வேற எந்தப் பராமரிப்பும் கிடையாது. வீட்டுத்தேவை போக வருஷத்துக்குச் சராசரியா 250 கிலோ மீன் விற்பனை செய்யறோம். தோட்டத்துக்கே வந்து வாங்கிட்டுப் போயிடுறாங்க. கிலோவுக்கு 150 முதல் 180 ரூபாய் விலை கிடைக்குது.’’ என்று சொல்கிறார் திலீபன்.

நான்கு மூலையிலும் புளியமரங்கள்!

டெல்டாவில் விளையும் மலைப் பயிர்கள்!

“தோட்டத்துல நான்கு மூலைகள்லயும் தலா ஒரு புளிய மரம் இருக்கு. இது உரிகம் புளி. இந்த மரங்களுக்கு 9 வயசு. நடவு செஞ்ச அஞ்சு வருஷத்துல காய்ப்புக்கு வந்துச்சு. ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 20 கிலோ வீதம் 80 கிலோ புளி கிடைக்குது. இது எங்க வீட்டுத் தேவைக்குப் போதுமானதாக இருக்கு’’ என்கிறார் திலீபன்.

ஒன்றரை ஏக்கர் நிலத்திலுள்ள பயிர்களின் பட்டியல்

வகேடோ, ஆரஞ்சு, லிச்சி, ரம்புட்டான், மங்குஸ்தான், துரியன், ஸ்டார் ஆப்பிள், ரோஸ் ஆப்பிள், மலபார் ஆப்பிள், செர்ரி, காபி, ஏலக்காய், பட்டை, கிராம்பு, டிராகன் ஃப்ரூட், சாத்துக்குடி, சப்போட்டா, மா, பலா, வாழை, தென்னை, லோங்கன், அத்தி, சிவப்புச் சீத்தா, வைல்டு சீத்தா, பேரீச்சை, விளாம்பழம், ஈச்சை, அபியு, ஏக் ஃப்ரூட், பீட்ரூட் கொய்யா, மிரசில் ஃப்ரூட், ஜம்பு நாவல், முள் சீத்தா, இனிப்புப் புளி, பப்ளிமாஸ், கொடுக்காப்புளி, மூக்குச்சளிப் பழம், சந்தனம், செஞ்சந்தனம், முதிரை, நீர்மருது, மலைவேம்பு, அழிஞ்சில், ரப்பர், பாட்டில் பிரஷ், இலந்தை, ரோஸ்வுட், குமிழ், பிள்ளைமருது, புரசு, அசோகம், கடம்பம், வேங்கை, இலுப்பை, வாதாம், மகோகனி, டெர்மனலியா, கருங்காலி, பாக்கு, முந்திரி, ஆச்சா, திருவாச்சி, யானை குண்டுமணி, எலுமிச்சை, கடாரங்காய், ஜாதிக்காய், சூரினாம் செர்ரி, நார்த்தங்காய், முருங்கை, நெல்லி, கிளிரிசீடியா, களாக்காய்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு