தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மிகவும் முக்கியமானது கொடைக்கானல். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் சுற்றுலாத் துறையால் கோடைக்கால திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இவ்விழாவின் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை சார்பில் நடத்தப்படும் மலர்க்கண்காட்சி மிகவும் பிரபலமானது. தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களையும், பிறநாடுகளையும் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மலர் கண்காட்சியைக் காணத் தவறுவது இல்லை. ஆண்டுதோறும் சுமார் 4 லட்சம் சுற்றுலாப் பயணிகள் மலர்க்கண்காட்சியில் கலந்துகொண்டு வருகின்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக மலர்க் கண்காட்சி நடைபெறாமல் இருந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் கோடைக்கால மலர்க்கண்காட்சி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மலர்க்கண்காட்சியைக் காண பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் மலர்க்கண்காட்சிக்காக நடந்துவரும் முன்னேற்பாடுகள் குறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பாண்டியராஜனிடம் பேசினோம்.
``இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மலர்க்கண்காட்சி நடத்தப்படுவதால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அதன்காரணமாகக் கடந்த நவம்பர் மாதமே, சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர் ஆகிய மலர் வகைகளைப் பயிரிட்டு விட்டோம்.

இதையடுத்து ஜனவரியில் கொல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டேலியா வகை பூக்களின் நாற்றுகளை நடவு செய்தோம். பிப்ரவரியில் ரோஸ் வகைகளை நட்டுள்ளோம். பிப்ரவரி இறுதியில் ஊட்டியில் இருந்து வரவழைக்கப்பட்ட பேன்சி வகைகள், பேட்டுனியா, குட்டை ரக சால்வியா, கேலண்டுலா, பிளாக்ஸ், செல்லோசியா வகை மலர் நாற்றுகளை நடவு செய்துள்ளோம். இந்தச் செடிகள் அனைத்தும் மே முதல் வாரம் பூத்துக்குலுக்கத் தொடங்கிவிடும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
குறிப்பாக, நிகழாண்டில் புதுவரவாக நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள லில்லியம் வகையான ஏசியாடிக், ஓரியன்டல் ரகங்களை நடவு செய்துள்ளோம். இந்தப் பூக்கள் 4 நாள்கள் வரை வாடாது நல்ல நறுமணமும் தரக்கூடியது. இவ்வகை பூக்கள் பார்வையாளர்களை மிகவும் கவரும் என நம்புகிறோம்.

நாற்று நடவு முதல் பூக்கள் மலர்வது செடிகளைப் பராமரிக்க 85 பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். மூன்று லட்சம் நாற்றுகள் நடவு செய்து பராமரித்து வருகிறோம். சுமார் 21 ஏக்கர் பரப்பில் பிரையன்ட் பூங்காவில் 5 ஏக்கர் பரப்பு கொண்ட புல்வெளி மைதானப் பகுதியில் மலர்களை கண்காட்சிக்கு வைக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், நிகழாண்டில் பூங்காவில் 5 ஏக்கர் பரப்பை அதிகப்படுத்தியுள்ளோம். விரைவில் மலர்கண்காட்சிக்கான தேதி அறிவிக்கப்பட்டும்'' என்றார்.