ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
Published:Updated:

ஒரு ஏக்கரில் 2,500 மரங்கள்; பலவிதமான காய்கறிகள், கீரைகள்; அதி உயர் அடர் நடவு முறை!

தோட்டத்தில் குருமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
தோட்டத்தில் குருமூர்த்தி

அசத்தும் கோவை மருத்துவர்!

மகசூல்

கோயம்புத்தூர் ஜி.வி ரெசிடென்ஸி பகுதியில் வசிப்பவர் மருத்துவர் குருமூர்த்தி. இவர் தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் 2,500 மரங்கள், ஏராளமான காய்கறிகள், மூலிகைகளைப் பயிர் செய்து, ஏசியன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்டு, இந்தியன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்டு ஆகிய சாதனை புத்தகங்களில் இடம்பெற்றுள்ளார்.

கோவை மாவட்டம், வடசித்தூர் பனப்பட்டி அருகே உள்ள காட்டம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது இவருடைய தோட்டம். வெயிலும் மழையும் மாறி மாறி வந்துகொண்டிருந்த ஓர் காலை நேரத்தில் இத்தோட்டத் துக்குச் சென்றோம். மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்ற குருமூர்த்தி, தோட்டத்தின் உள்ளே நம்மை அழைத்துச் சென்றார்.

தோட்டத்தில் குருமூர்த்தி
தோட்டத்தில் குருமூர்த்தி

மா, பலா, வாழை, நெல்லி, கொய்யா, சப்போட்டோ, நாவல், மாதுளை, எலுமிச்சை, முள்சீத்தா, நோனி, அவகோடா, துரியன், ரம்பூட்டன், லெமன் ஆரஞ்சு, பீட்ரூட் பட்டர், மங்குஸ்தான், சந்தனம், செம்மரம், தேக்கு, மாகோகனி, முருங்கை, தென்னை என பல வகையான மரங்கள் அதிக எண்ணிக்கையில் அடர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது இத்தோட்டம்.

இதுகுறித்து நம்மிடம் மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கிய மருத்துவர் குருமூர்த்தி ‘‘ஒரு ஏக்கர்ல 2,500 மரங்கள் பயிர் செய்றது சாத்தியமானு பலரும் கேள்வி எழுப்புறாங்க. என்னோட தோட்டத்தை நேர்ல பார்த்தா, அந்தக் கேள்விக்கு விடை கிடைச்சுடும். இங்கவுள்ள மரங்களுக்கு 2 - 4 அடிதான் இடைவெளி விட்டுருக்கேன். குறைவான பரப்புல நல்ல அடர்த்தியா அதிக மரங்களை வளர்க்கணுங்கறதுதான் என்னோட நோக்கம். காடு மாதிரி ஒரு தோட்டத்தை உருவாக்கணும்னு ஆசைப்பட்டேன். அது நிறைவேறிடுச்சு.

பண்ணையில் வளரும் மரங்கள்
பண்ணையில் வளரும் மரங்கள்

பொதுவா, மரம் வளர்ப்புனு சொன்னாலே, அதிக இடைவெளி தேவைங்கற ஒரு கருத்து உண்டு. மரப்பயிர்கள் சாகுபடி செஞ்சு, அதுமூலமா அதிக வருமானம் எடுக்கணும்னு நினைக்குறவங்களுக்கு அந்தக் கருத்து சரி. ஆனா, நான் லாபத்தைப் பெருசா எதிர் பார்க்கலை. அமேசான் காடு பத்தின ஒரு வீடியோவை யூடியூப்ல பார்த்தேன். கொஞ்சம் கூட இடைவெளியே இல்லாம, ஏராளமான மரங்கள் தொடர்ச்சியா வளர்ந்துருந்துச்சு. அந்த மரங்கள் எல்லாம் தானா இயற்கையா உருவான மரங்கள். ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் அதிக இடைவெளி இல்லாமலேயே அந்த மரங்கள் எல்லாமே நல்ல செழிப்பா இருக்கு. அதைப் பார்த்த பிறகுதான் அதி உயர் அடர் நடவு முறையில நாமலும் ஒரு சின்னக் காட்டை உருவாக் கணும்னு ஆசைப்பட்டேன். சுற்றுச்சூழலுக்கு நம்மால முடிஞ்ச ஒரு பங்களிப்பு செய்யணும். இங்க நிறைய பறவைகள் வந்து இளைப் பாறணும். அதுங்களுக்குத் தேவையான உணவு என்னோட தோட்டத்துல கிடைக் கணும்னு ஆசைப்பட்டேன். அதோடு, எங்க குடும்பத்துக்குத் தேவையான ஆரோக்கிய மான பழங்கள், காய்கறிகள், கீரைகள் இந்தத் தோட்டத்துல கிடைச்சா கூடுதல் சந்தோஷம்னு நினைச்சேன்’’ என்று சொன்னவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துக்கொள்ளத் தொடங்கினார்.

மலர்கள்
மலர்கள்
மலர்கள்
மலர்கள்
வெள்ளை செம்பருத்தி
வெள்ளை செம்பருத்தி

“என்னோட பூர்வீகம், காரமடை பக்கத்துல உள்ள வெள்ளியங்காடு. நாங்க விவசாயக் குடும்பம். அதனால சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வம் அதிகம். ஏர் உழுவுறதுல இருந்து அறுவடை வரைக்கும் எல்லா வேலைகளுமே எனக்குத் தெரியும். ஆனாலும்கூட நான் மருத்துவப் பட்டப் படிப்புப் படிச்சு, மருத்துவராகணும்னு என்னோட பெற்றோர்கள் ஆசைப்பட்டாங்க. அவங்க ஆசைப்பட்டது மாதிரி நான் மருத்துவம் படிச்சு, தனியார் மருத்துவமனையில சிறுநீரகச் சிறப்பு மருத்துவரா பல வருஷம் பணிபுரிஞ்சேன். இப்ப எனக்கு 60 வயசாகுது. தனியார் மருத்துவமனையில நான் பார்த்துக்கிட்டு இருந்த மருத்துவப் பணியில இருந்து விலகி, சமூகச் சேவை செய்யக்கூடிய ஒரு அறக்கட்டளையில இணைஞ்சு, மருத்துவச் சேவை செஞ்சிகிட்டு இருக்கேன். இந்தச் சூழ்ல்நிலையிலதான் சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம் சார்ந்த செயல்பாடுகள்ல இறங்கணும்னு முடிவெடுத்து, ஏழு வருஷத்துக்கு முன்னாடி, இந்த ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி, அதி உயர் அடர் நடவு முறையில 2,500 மரக்கன்றுகளை நடவு செஞ்சேன்.

பண்ணையில் வளரும் மரங்கள்
பண்ணையில் வளரும் மரங்கள்
சிவப்பு செம்பருத்தி
சிவப்பு செம்பருத்தி

75 வகையான பழ மரங்கள்

மா, பலா, சாத்துக்குடி, லெமன் ஆரஞ்சு, எலுமிச்சை, டிராகன், செர்ரி, அத்தி, பிளம்ஸ், அவகடோ, மங்குஸ்தான், சப்போட்டா, நோனி, பீநட் பட்டர், லிச்சி, கொய்யா, சைனீஸ் கொய்யா, மாதுளை, முள் சீத்தா, சுரினோ, ஸ்டார், வாட்டர் ஆப்பிள், நெல்லி, பலா உட்பட 75 வகையான பழ மரங்கள் 300-க்கும் அதிகமான எண்ணிக்கையில இருக்கு. 700 பாக்கு மரங்கள், 250 முருங்கை, 400 வாழை, 45 தென்னை இருக்கு. சந்தனம், செம்மரம், மகோகனி உட்பட மர வேலைப்பாடுகளுக்கான மரங்கள் சுமார் 800 இருக்கு.

பண்ணையில் வளரும் மரங்கள்
பண்ணையில் வளரும் மரங்கள்
வாட்டர் ஆப்பிள்
வாட்டர் ஆப்பிள்

பராமரிப்பு

வேறோர் இடத்துல பால் பண்ணை நடத்திக்கிட்டு இருக்கேன். அங்க 40 மாடுகள் இருக்கு. அதோட கழிவுகளை இந்தத் தோட்டத்துக்குத் தாராளமா பயன் படுத்திக்குறேன். 15 நாள்களுக்கு ஒரு தடவை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசனநீர்ல கலந்து விடுவேன். 6 மாசத்துக்கு ஒரு தடவை, ஒரு மரத்துக்கு 5 கிலோ வீதம் எரு கொடுப் பேன். ஆறு மாசத்துக்கு ஒரு தடவை 400 லிட்டர் தண்ணீர்ல 6 லிட்டர் கடற்பாசி திரவம் சின்ன மரங்களுக்கும் காய்கறிச் செடிகள், மூலிகைப் பயிர்களுக்கும் தெளிப் பேன். பெரிய மரங்களுக்கு ஒரு மரத்துக்கு 100 மி.லி வீதம் கடற்பாசி திரவத்தை வேர் பகுதியில ஊத்தி, தண்ணீர் பாய்ச்சுறேன். இதைத் தவிர, வேற எந்த இடுபொருளும் கொடுக்குறதில்லை. கடற்பாசி திரவம் பயன் படுத்துறதுக்கு ஒரு வருஷத்துக்கு 15,000 ரூபாய்தான் செலவாகுது.

பண்ணையில் வளரும் மரங்கள்
பண்ணையில் வளரும் மரங்கள்

வருமானம்

120 மாமரங்கள்ல இருந்து, ஒரு வருஷத்துக்கு 750 - 1,000 கிலோ காய்கள் மகசூல் கிடைக்குது. ஒரு கிலோவுக்குச் சரசாரியா 75 ரூபாய் வீதம் வருமானம் கிடைக்குது. 15 மலைநெல்லி மரங்கள்ல இருக்கு. இதுல வருஷத்துக்கு 50 கிலோ காய்கள் மகசூல் கிடைக்குது. ஒரு கிலோவுக்கு 50 ரூபாய் வீதம் விலை கிடைக்குது. ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படக்கூடிய மருத்துவ நெல்லி 15 இருக்கு. இதுல 100 கிலோ காய்கள் மகசூல் கிடைக்குது. இந்தக் காய்கள் ரொம்பக் கசப்பும் புளிப்பும் கலந்து இருக்கும். இதைச் சாப்பிட முடியாது. ஆயுர்வேத மருந்து தயாரிக்குற நிறுவனங்கள், இந்த நெல்லிக்காய்க்கு ஒரு கிலோவுக்கு 100 ரூபாய் வீதம் விலை கொடுக்குறாங்க. 100 சப்போட்டா மரங்கள் மூலம் வருஷத்துக்கு 2,500 கிலோ பழங்கள் கிடைக்குது. ஒரு கிலோவுக்கு 45 ரூபாய் வீதம் விலை கிடைக்குது. 250 முருங்கை மரங்கள் மூலம் வருஷத்துக்கு 15,000 காய்கள் கிடைக்குது. ஒரு காய்க்கு சராசரியா 7 ரூபாய் வீதம் விலை கிடைக்கும்.

இது தவிர வாழை, தென்னை உள்ளிட்ட இன்னும் சில பயிர்கள் மூலமாவும் கணிசமான வருமானம் கிடைச்சுக்கிட்டு இருக்கு. இந்தத் தோட்டத்தோட பராமரிப்பு செலவுகளை ஈடு செய்ற அளவுக்கு வருமானம் கிடைச்சாலே போதும்னு நான் எதிர்பார்த்தேன். ஆனா, அதுக்கு மேலயே வருமானம் கிடைச்சுக்கிட்டு இருக்கு’’ எனச் சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, குருமூர்த்தி,

செல்போன்: 99444 14351

தண்ணீர்
தண்ணீர்

மழைநீர் சேகரிப்பு 24 மணி நேரமும் பாசனம்!

‘‘இது ரொம்ப வறட்சியான பகுதி. நிலத்தடி நீர் அதலபாதாளத்துல கிடக்கும். சுற்றுவட்டார பகுதிகள்ல உள்ள தோட்டங்கள்ல 1,500 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறுகள் அமைச்சும்கூட போதுமான தண்ணி கிடைக்கலைன்னு விவசாயிங்க வேதனைப்படுறாங்க. ஆனா, இதெல்லாம் தெரிஞ்சுதான், இந்தப் பகுதியில நிலம் வாங்கினேன். நான் நிலம் வங்கணும்னு முடிவு பண்ணி அதுக்கான தேடல்ல இருந்தப்ப, தொண்டாமுத்தூர் மாதிரியான பகுதிகள்ல எனக்கு நிலங்கள் அமைஞ்சது. அங்க நீர்வளம் நல்லா இருக்கும்னு சொன்னாங்க. ஆனா, எனக்கு அங்க நிலம் வாங்கித் தோட்டம் அமைக்குறதுல உடன்பாடு இல்லை. காரணம் ஏற்கெனவே செழிப்பா உள்ள அந்தப் பகுதியில பசுமை பரப்பை உருவாக்குறதுல எந்த ஒரு சவாலும் இல்லை.

வறட்சியான பகுதியிலதான் மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டணுங்கறதுல ரொம்பவே உறுதியா இருந்தேன். 1,500 அடி ஆழத்துக்குப் போர்வெல் அமைச்சாலும் போதுமான தண்ணி கிடைக்காதுனு பலரும் சொன்னதால, ஆரம்பத்துலயே மழைநீர் சேகரிப்பு முறையைக் கையில எடுத்தோம்.

பழங்கள்
பழங்கள்
நெல்லி
நெல்லி

எங்க நிலத்துக்குப் பக்கத்துல உள்ள சாலையில, மழைக்காலங்கள்ல ஓடக்கூடிய தண்ணியை, குழாய் மூலம் எங்க தோட்டத்துல உள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குக் கொண்டு வர்றதுக்கான அமைப்பை உருவாக்கினோம். ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி 15 அடி நீளம், 15 அடி அகலம், 15 அடி ஆழத்துக்குக் குழி எடுத்து மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்கினோம். இது மூலமா ஆழ்துளைக் கிணற்றுல மழைநீர் சேகரமாகிக்கிட்டே இருக்கு. இதனால எங்களோட ஆழ்துளைக் கிணற்றுல 24 மணி நேரமும் எவ்வளவு வேணும்னாலும் தண்ணி எடுத்து பாசனத்துக்குப் பயன்படுத்த முடியுது. ஆனாலும்கூட ரொம்ப சிக்கனமாதான் தண்ணி பாய்ச்சுறேன். சொட்டுநீர் பாசனம் அமைச்சிருக்கேன். மண்ணு ரொம்பக் காய்ச்சலா தெரிஞ்சா மட்டும்தான் தண்ணி பாய்ச்சுவேன்’’ என்கிறார் குருமூர்த்தி.

பண்ணையில்
பண்ணையில்
எலுமிச்சை
எலுமிச்சை

வாழையில் 12 ரகங்கள்

‘‘வாழையில 15 ரகங்கள் இருக்கு. குறிப்பா, கொடைக் கானல் மாதிரியான மலைப்பிரதேசங்கள்ல அதிகம் விளையக்கூடிய விருப்பாச்சி ரக வாழையைப் பயிர் பண்ணியிருக்கிறேன். சமவெளிப் பகுதிகள்ல விளையுற பூவன், ரஸ்தாலி, பச்சைநாடன் மாதிரியான வழக்கமான ரகங்களுக்கு நிகரா, விருப்பாச்சியும் நல்லா செழிப்பா விளைஞ்சிக்கிட்டு இருக்கு” என்கிறார் குருமூர்த்தி.

விஷேச நாள்கள்ல இங்கதான் இருப்போம்

‘‘என்னை மாதிரியே என்னோட மனைவிக்கும், மரம், செடி, கொடிகள் மேல நேசிப்பு அதிகம். இந்தத் தோட்டம் உருவானதுல அவங்களும் பங்களிச்சிருக்காங்க. எங்களோட வீடு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில இருக்கு. அங்கிருந்து இந்தத் தோட்டம் 30 கி.மீ தூரத்துல இருக்கு. இந்தத் தோட்டத்தைக் கவனிச்சிக்க ஒரு பணியாளரை நியமனம் பண்ணியிருக்கோம். வாரத்துல நாலு நாள்களாவது நானும் என்னோட மனைவியும் இந்தத் தோட்டத்துக்கு வந்துடுவோம். குறிப்பா, பண்டிகை நாள்கள்ல அவசியம் இங்க வந்துடுவோம்.

சப்போட்டா
சப்போட்டா
எலுமிச்சை
எலுமிச்சை

கொரோனா காலகட்டம்

கொரோனா காலகட்டத்துல, என்னோட தோட்டத்துல விளைஞ்ச எந்தப் பொருளையும் நான் விற்பனை செய்யலை. முடிஞ்ச வரைக்கும் சாலையோரங்கள்ல வசிக்குற ஏழை மக்களுக்கு இலவசமாகக் கொடுத்தோம்’’ என்கிறார் குருமூர்த்தி.

காய்கறிகள்

“வெண்டை, கத்திரி, அவரை, பீர்க்கன், புடலை, பாகல், பூசணி, தக்காளி, செங்காம்பு கறிவேப்பிலை, இஞ்சி, மஞ்சள், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஜாதிக்காய் உட்பட வீட்டுச் சமையலுக்குத் தேவையான எல்லா விளைபொருள்களையும் இந்தத் தோட்டத்துல உற்பத்தி செஞ்சிருக்குறேன். மாசத்துக்குக் குறைந்தபட்சம் 50 கிலோ காய்கறிகள் கிடைக்கும். எங்களோட தேவைக்குப் போக மீதியுள்ளதை நண்பர்கள், உறவினர்களுக்குக் கொடுப்போம்’’ என்கிறார் குருமூர்த்தி.

பழங்கள்
பழங்கள்
நுணா
நுணா

கீரைகள்

மணத்தக்காளி, வல்லாரை, பொன்னாங் கண்ணி, முருங்கை, சிறுகீரை, அகத்திக்கீரை, தண்டுக்கீரை உட்பட இன்னும் சில கீரைகள் பயிர் பண்ணிக்கிட்டு இருக்கேன். வாரத்துக்கு மூணு நாள்கள் கீரைகள் அறுவடை செய்வேன். மற்ற கீரைகளைவிட மணத்தக்காளியில செழிப்பான விளைச்சல் கிடைக்குது. மாசத்துக்கு 180 கட்டுகள் கிடைக்குது. ஒரு கட்டு 20 ரூபாய்னு விற்பனை செஞ்சிகிட்டு இருக்கேன். மற்ற வகைக் கீரைகளை எங்களோட சொந்த பயன்பாட்டுக்கு வச்சிக்குறோம்’’ என்கிறார் குருமூர்த்தி.