Published:Updated:

“வேளாண்துறை அமைச்சரின் மாவட்டத்தில் வேளாண் அறிவியல் மையம் இல்லை!”

மூடப்பட்ட கே.வி.கே
பிரீமியம் ஸ்டோரி
மூடப்பட்ட கே.வி.கே

கோரிக்கை

“வேளாண்துறை அமைச்சரின் மாவட்டத்தில் வேளாண் அறிவியல் மையம் இல்லை!”

கோரிக்கை

Published:Updated:
மூடப்பட்ட கே.வி.கே
பிரீமியம் ஸ்டோரி
மூடப்பட்ட கே.வி.கே

விவசாயிகளுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்கள், கருவிகள், அவ்வப்போது விவசாயத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கான தீர்வுகள், பயிற்சிகள் ஆகியவற்றை அளிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் அறிவியல் மையம் செயல்பட்டுவருகிறது. இது, `கே.வி.கே’ (கிரிஷி விக்யான் கேந்திரா- Krishi Vigyan Kendra) என்றழைக்கப்படுகிறது.

விவசாயிகளுக்குப் பல வகைகளில் சேவையாற்றுவதற்காக இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், தன் கட்டுப்பாட்டின்கீழ் அனைத்து மாவட்டங்களிலும் கே.வி.கேயை அமைத்து, செயல்படுத்திவருகிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் பலனடைகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் முழுக்க முழுக்க விவசாய பூமியான தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக கே.விகே செயல்படவில்லை. இது விவசாயிகளைப் பெரும் ஆதங்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

வீரசேனன், சுகுமாறன்
வீரசேனன், சுகுமாறன்

இது குறித்துப் பேசிய தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி வீரசேனன், “இது விவசாய மாவட்டம். தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் சொந்த மாவட்டம். `இங்கே கே.வி.கே இல்லை’னு சொல்றது வெட்கக்கேடான விஷயம். இந்த மையம் இல்லாததனாலேயே இந்தப் பகுதியிலிருக்கும் விவசாயிகள் பல பின்னடைவுகளைச் சந்திச்சிக்கிட்டிருக்கோம். தமிழ்நாட்டுல இருக்கும் பெரும்பாலான கே.வி.கேக்கள் சிறப்பாகச் செயல்பட்டுகிட்டு இருக்கு. குறிப்பா, திருவாரூர் மாவட்டத்துல இருக்கும் நீடாமங்கலம் கே.வி.கே., நாகப்பட்டினம், சிக்கல் ஊர்ல இருக்கும் கே.வி.கே., புதுக்கோட்டை, வம்பன் பகுதியில இருக்கும் கே.வி.கே., திருச்சி, சிறுகமணி கே.வி.கே போன்றவையால் அந்தந்தப் பகுதி விவசாயிகள் பல நன்மைகளை அடைஞ்சிகிட்டு இருக்காங்க. ஆனா, தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இந்த வாய்ப்பு இல்லை. புதுசா ஒரு கே.வி.கே தொடங்கணும்னு விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டங்கள்ல தொடர்ச்சியா வலியுறுத்திக்கிட்டு இருக்கோம்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மூடப்பட்ட கே.வி.கே
மூடப்பட்ட கே.வி.கே

`இங்கு செயல்பட்டுக்கொண்டிருந்த பி.எம்.டி-கே.வி.கே (பக்தவசலம் நினைவு அறக்கட்டளை-கிரிஷி விக்யான் கேந்திரா) ஏன் முடங்கிக் கிடக்கிறது?’ என்ற விசாரணையில் இறங்கினோம். அது தொடர்பாகப் பேசிய தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன், “தனியார் அறக்கட்டளை நடத்திய பி.எம்.டி கே.வி.கே-யால விவசாயிகளுக்கு ஒரு சின்ன பலன்கூடக் கிடைக்கலை. அதுக்காக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் கொடுத்திருந்த நிதி எல்லாமே வீண் விரயம்தான்.

‘‘வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவோட சொந்த மாவட்டம். இங்க கே.வி.கே இல்லைனு சொல்றது வெட்கக்கேடான விஷயம். இதனால் இப்பகுதியிலுள்ள விவசாயிகள் பல பின்னடைவுகளைச் சந்திச்சிக்கிட்டு இருக்கோம்.’’

விவசாயிகளின் நலன் குறித்து அந்த கே.வி.கே கொஞ்சம்கூட அக்கறைப்படவே இல்லை. மற்ற மாவட்டங்கள்ல இருக்கும் கே.வி.கே-யெல்லாம் புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளை செஞ்சு அதையெல்லாம் விவசாயிகள்கிட்ட நேரடியா விளக்குறாங்க. அதைக் கண்கூடாப் பார்க்கிறோம். நிறைய பயிற்சிகள் கொடுத்துகிட்டு இருக்கிறதையும் பார்க்கிறோம். ஆனா, பி.எம்.டி கே.வி.கே எதுவுமே செய்யலை. பல ஆண்டுகளாக இது செயல்பட்டுக்கிட்டிருந்தாலும்

இப்படி ஒரு கே.வி.கே இருக்கும் விஷயம்கூடப் பல விவசாயிகளுக்குத் தெரியாது. பயிர்ல பூச்சி, நோய்த்தாக்குதல் ஏற்பட்டா வழக்கமா அந்தந்த மாவட்டங்கள்ல இருக்கும் கே.வி.கே விஞ்ஞானிகள் விவசாயிகளின் நிலத்துக்கே நேரடியா வந்து ஆய்வு செஞ்சு தீர்வு சொல்லுவாங்க. ஆனா பி.எம்.டி கே.வி.கே அது மாதிரி எதுவுமே செஞ்சதில்லை.

 துரைக்கண்ணு
துரைக்கண்ணு

வெற்றிலையில் பாதிப்பு ஏற்பட்டபோது தொடர்புகொண்டோம். பத்து வருஷங்களுக்கு முன்னால தஞ்சை மாவட்டம் முழுக்கப் பரவலா கோ-43 ரக நெல்லுல நெற்பழநோய் ஏற்பட்டபோதும் தொடர்புகொண்டோம். ஆனா, எந்தப் பலனும் இல்லை. இது மாதிரி நிறைய அனுபவங்கள். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் கொடுத்த நிதியை நேர்மையாகவும் முறையாகவும் பயன்படுத்தலை.விஞ்ஞானிகளுக்குக் குறைவான ஊதியம் கொடுத்தாங்க. `ஐ.சி.ஏ.ஆர் கொடுக்கும் நிதியை 50 ஏக்கருக்குத்தான் பயன்படுத்தணும்’கறது விதிமுறை. ஆனா இவங்க, கே.வி.கே-வுக்குச் சம்பந்தமில்லாத நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு அந்த நிதியைப் பயன்படுத்தி, தனிப்பட்ட முறையில பலன் அடைஞ்சிருக்காங்க. இது மாதிரி இன்னும் பல குற்றச்சாட்டுகளால இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக அதிகாரிகள் நேரடியா இங்கே வந்து ஆய்வு செஞ்சு இதை முடக்கிட்டாங்க. திருவாரூர், நாகப்பட்டினம் மாதிரி தஞ்சாவூர்லயும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமே நேரடியா ஒரு கே.வி.கேயைச் செயல்படுத்தணும். மற்ற மாவட்டங்கள்ல இருக்கிற மாதிரி விவசாயிகளின் போக்குவரத்துக்கு ஏற்ற இடங்கள்ல திறக்கணும்” என்றார்.

பி.எம்.டி கே.வி.கே-வின் தற்போதைய நிலையை அறிந்துகொள்ள அங்கே நேரில் சென்றோம். பிரதான வாயில் மூடப்பட்டுக் கிடந்தது. அலுவலகமும் செயல்படவில்லை. பண்ணை வளாகத்தில், வேறொரு கட்டடத்தில் புதிதாக வேளாண் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. பி.எம்.டி பண்ணையின் பொறுப்பாளர் சாரதாவிடம் பேசினோம். “இங்கே கே.வி.கே செயல்பட்டுகிட்டு இருந்தப்போ நிறைய விவசாயிகள் பலன் அடைஞ்சாங்க.

இங்கே வேலை செஞ்ச இரண்டு ஊழியர்கள் தவறான நடவடிக்கையில ஈடுபட்டுகிட்டு இருந்தாங்க. கே.வி.கே-யின் கண்ணியத்தைக் காப்பாத்துறக்காக அவங்க மேல சில நடவடிக்கைகள் எடுத்தோம். அந்தக் கோபத்துல இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துக்கு அவங்க அவதூறான, ஆதாரமற்ற புகார்களை அனுப்பிட்டாங்க. அதை உண்மைனு நம்பி, ஐ.சி.ஏ.ஆர் அதிகாரிகள் எங்க கே.வி.கே-யின் செயல்பாடுகளை முடக்கிட்டாங்க. எங்க மேல எந்தத் தவறும் இல்லை. சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாமே பொய்யானவை” என்றார்.

‘‘ `50 ஏக்கருக்குக் கொடுத்த பணத்தை 500 ஏக்கருக்கு பயன்படுத்தினோம்’னு சொல்றது, `விஞ்ஞானிகளுக்கு ஒழுங்கா ஊதியம் கொடுக்கலை’னு சொல்றது எல்லாமே பொய்யான குற்றச்சாட்டுகள். எங்க கே.வி.கே மறுபடியும் செயல்பட அனுமதிக்கணும்.’’

இது தொடர்பாக, `பி.எம்.டி’ அறக்கட்டளையின் தலைவர் ஆர்.வி.குப்புசாமியிடம் விளக்கம் கேட்டோம். “ஐ.சி.ஏ.ஆர் கொடுத்த நிதியில் நாங்க எந்த முறைகேடும் செய்யலை. அவங்க கொடுத்த நிதிக்கு மேல நாங்க எங்க சொந்தப் பணத்தைப் போட்டு செலவு பண்ணினோம். `50 ஏக்கருக்குக் கொடுத்த பணத்தை 500 ஏக்கருக்கு பயன்படுத்தினோம்’னு சொல்றது, `விஞ்ஞானிகளுக்கு ஒழுங்கா ஊதியம் கொடுக்கலை’னு சொல்றது எல்லாமே பொய்யான குற்றச்சாட்டுகள். `எங்க கே.வி.கே மறுபடியும் செயல்பட அனுமதிக்கணும்’னு நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்தோம். ஐ.சி.ஏ.ஆர் வேண்டுகோளை ஏற்று அந்த வழக்கை வாபஸ் வாங்கினோம். மறுபடியும் திறப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவோம்” என்றார்.

பிரச்னையின் தீவிரத்தையும், விவசாயிகளின் கோரிக்கையையும் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் தெரிவித்தோம். பொறுமையாகக் கேட்டவர், ‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில, தஞ்சாவூரில் புதிதாக கே.வி.கே திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.