Election bannerElection banner
Published:Updated:

ட்ரோன் மூலம் நெற்பயிர்களுக்கு உரம் தெளிப்பு... கும்பகோணம் இளைஞரின் வித்தியாச முயற்சி!

வயலில் உரம் தெளிக்கும் ட்ரோன்
வயலில் உரம் தெளிக்கும் ட்ரோன் ( ம.அரவிந்த் )

ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை ஒவ்வொரு விவசாயியும் தேவைகேற்ற வகையிலான ட்ரோனை வாங்கி பயன்படுத்தலாம். இதனை அரசு ஊக்குவிப்பதுடன் ட்ரோன் வாங்குவதற்கு மானியம் அளித்தால் விரைவிலேயே விவசாயிகள் அனைவரிடமும் இது சென்று சேரும்

கும்பகோணம் அருகே இளைஞர் ஒருவர் தனக்கு சொந்தமான வயலில் நெற்பயிருக்கு ட்ரோன் பயன்படுத்தி உரம் தெளித்துள்ளார். ஆட்கள் பற்றாக்குறையை போக்குவதற்கும், செலவை குறைப்பதற்கும் ட்ரோன் சிறந்த மாற்று எனவும் இதனை அனைத்து விவசாயிகள் எளிய முறையில் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

ட்ரோனுடன் வெங்கட்ராமன்
ட்ரோனுடன் வெங்கட்ராமன்

கும்பகோணம் அருகே உள்ள கடிச்சம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன். பொறியியல் பட்டதாரியான இவர் வெளிநாட்டில் தனியார் கம்பெனி ஒன்றில் சீப் இன்ஜீனியராக பணிபுரிந்து வந்தார். நிறைவான வருமானம் கிடைத்தும் சொந்த ஊருக்கு வந்து விவசாயம் செய்ய வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டிருந்தார். அதன்படி வெளி நாட்டிலிருந்து வந்தவர் மூன்று வருடங்களுக்கு மேலாக தனக்கு சொந்தமான வயலில் விவசாயம் செய்து வருகிறார்.

`தற்போது 20 ஏக்கர் நிலத்தில் கோடை நெல் நடவு செய்துள்ளார். சமீப காலமாக விவசாய பணிகளுக்கு குறித்த நேரத்தில் ஆள் கிடைப்பதில்லை. ஆட்களின் கூலியும் உயர்ந்து விட்டது. ஒவ்வொரு பயிரின் சாகுபடிக்கான செலவும் அதிகரித்து விட்டது. அத்துடன் விவசாய பணிகளுக்கான நேரமும் அதிகம் பிடிக்கிறது' என கூறும் வெங்கட்ராமன் முதற்கட்டமாக நெற்பயிர்களுக்கு ட்ரோன் மூலம் உரம் தெளிப்பதற்கான பணியினை முன்னெடுத்து அசத்தியிருக்கிறார்.

வயலில் விவசாயிகள்
வயலில் விவசாயிகள்

இது குறித்து வெங்கட்ராமனிடன் பேசினோம். ``வெளிநாடுகளில் ஆளில்லா விமானம் எனப்படும் ட்ரோன்கள் மூலம் பயிர்களுக்கு உரம் மற்றும் பூச்சிகொல்லிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ட்ரோன் பயன்படுத்துவது என்பது மிக குறைவாக உள்ளது என்பதால் ட்ரோன் பயன்படுத்தி உரம் தெளித்தால் என்னவென்ற யோசனை தோன்றியது.

இதற்காக ட்ரோன் செட் செய்வதற்கான உபகரணங்களை வாங்கி நானே செட் செய்தேன். இதற்கு மொத்தம் ரூ. 4.5 லட்சம் வரை செலவானது. பேட்டரியில் இயங்கக் கூடியது என்பதால் கூடுதலாக பேட்டரி மற்றும் சார்ஜர் என வேலையின் நேரத்தை அதிக்கபடுத்தும் நோக்கத்துடன் அதற்கு ஏற்றார் போல் பெரிய அளவில் தோற்றம் கொண்ட ட்ரோன் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கூடுதல் முதலீடு செய்து ட்ரோன் வாங்கினேன்.

வயலில் உரம் தெளிக்கும் ட்ரோன்
வயலில் உரம் தெளிக்கும் ட்ரோன்

இந்த ட்ரோனின் மேலுள்ள கேன்களில் திரவ வடிவிலான இயற்கை உரமான பஞ்சகவ்யா மற்றும் பூச்சி மருந்துகள் ஊற்ற வேண்டும். பின்னர் உரம் தெளிக்கப்பட வேண்டிய வயலில் ட்ரோன்கள் பறக்கவிட்டு ரிமோட் மூலம் ஆக்டிவேட் செய்து தெளிக்கும் பணியினை மேற்கொள்ளலாம். நவீன ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் இதனை ஆக்டிவேட் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் முன்னிலையில் என்னுடைய வயலில் ட்ரோன் மூலம் நெற்பயிர்களுக்கு உரம் தெளித்தேன்.பொதுவாக ஒரு ஏக்கருக்கு மருந்து தெளிக்க வேண்டும் என்றால் இரண்டு நாட்கள் ஆகும். ஆனால் இந்த ட்ரோன் மருந்து ஊற்றுவதில் தொடங்கி லேண்ட் மார்க் குறிப்பது வரை என மொத்தம் 15 நிமிடத்தில் ஒரு ஏக்கருக்கான உரத்தை தெளித்து விடுகிறது. வயல்களில் தேவைக்கேற்ப பறக்க வைத்து உரத்தினை தெளிக்கலாம். இயற்கை மற்றும் ரசாயனம் என எந்த உரமாக இருந்தாலும் ட்ரோன் மூலம் தெளிக்கலாம்.

ட்ரோன்
ட்ரோன்

இதை பயன்படுத்துவதன் மூலம் செலவு குறைகிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் ரசாயனம் உரம் தேவைப்பட்டால் ட்ரோனில் தெளித்தால் அரை லிட்டர் மருந்து மட்டுமே போதுமானது. உரம் மட்டுமில்லாமல் எள்,உளுந்து உள்ளிட்ட சிறுதானியங்களை விதைக்கவும் பயன்படுத்தலாம். என்னுடைய பயன்பாட்டிற்கு மட்டுமில்லாமல் மற்ற விவசாயிகளுக்கும் இதனை பயன்படுத்த இருக்கிறேன். இதற்காக ஒரு ஏக்கருக்கு ரூ.500 மட்டும் வாடகை வசூலிக்க இருக்கிறேன்.

ஆட்களை வைத்து செய்யும் வேலையை விட இதில் செலவு நிச்சயம் குறையும். மேலும் ஆட்கள் பற்றாக்குறை என்பது விவசாயிகளை பெரிய அளவில் சோர்வடைய வைப்பதாக உள்ளது. அதிலிருந்து காக்கவும் ட்ரோன் பெரிய அளவில் பயன்படும். ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை ஒவ்வொரு விவசாயியும் தேவைகேற்ற வகையிலான ட்ரோனை வாங்கி பயன்படுத்தலாம். இதனை அரசு ஊக்குவிப்பதுடன் ட்ரோன் வாங்குவதற்கு மானியம் அளித்தால் விரைவிலேயே விவசாயிகள் அனைவரிடமும் இது சென்று சேரும்'' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு