Published:Updated:

காந்தி சிலையிடம் மனு அளித்த விவசாயிகள்; வேளாண் சட்டங்களை ரத்து செய்ய நூதன போராட்டம்!

``தங்கள் குடும்பங்களை இழந்து, இரவு பகல் பாராமல், போராட்டக்களத்திலேயே பல நாள்களாக இருந்து வருகிறார்கள். கடும் குளிர், கனமழை, சுட்டெரிக்கும் வெயிலிலும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களாலும் விவசாயிகளுக்கு பல வகைகளிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில்தான் காந்தி ஜெயந்தி தினத்தன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் விவசாயிகள் நடத்திய நூதன போராட்டம், பொதுமக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் பெருமளவில் கவனத்தை ஈர்த்தது.

காந்தி சிலையிடம் மனு
காந்தி சிலையிடம் மனு
வேளாண் சட்டம்: `அறிக்கை மீது நம்பிக்கை இல்லை; வாபஸ் பெறுவதே தீர்வு!' - விவசாயிகள் தொடர் போராட்டம்

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வணிகம் ஊக்குவிப்பு சட்டம், ஒப்பந்த பண்ணைய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களைத் தற்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே இந்தச் சட்டங்கள் கொண்டு வரப்படுவதாகவும் இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் எனப் பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகள், இச்சட்டங்களுக்கு, ஆரம்பநிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்ததோடு, தொடர்ச்சியாகப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் இச்சட்டங்களுக்கு வலுவான எதிர்ப்பு நிலவுகிறது. ஆர்ப்பாட்டம், பேரணி, சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில்தான் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களது குழந்தைகளோடு, கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதைத் தொடர்ந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யப் பரிந்துரை செய்யுமாறு, காந்தி சிலையிடம் மனு அளித்துவிட்டு தேசிய கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இச்சட்டங்களுக்கு எதிராகவும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினார்கள்.

சுந்தர விமலநாதன்
சுந்தர விமலநாதன்

இதுகுறித்துப் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு, பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. விவசாயிகளின் நலனைப் பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படாமல் பன்னாட்டு பெரு நிறுவனங்களிடம் விவசாயிகளை அடிமையாக்குவதற்காக இச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இச்சட்டங்களை வாபஸ் வாங்க வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக, அர்ப்பணிப்பு மிக்க போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தங்கள் குடும்பங்களை இழந்து, இரவு பகல் பாராமல், போராட்டக்களத்திலேயே பல நாள்களாக இருந்து வருகிறார்கள். கடும் குளிர், கனமழை, சுட்டெரிக்கும் வெயிலிலும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் இவர்கள் உடலளவிலும் மனதளவிலும் அடையும் துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இப்போராட்டத்தைச் சிதைக்க, பல்வேறு விதமான நயவஞ்சக நடவடிக்கைகளில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டத்தில் விவசாயிகள்
போராட்டத்தில் விவசாயிகள்
`அது கார்ப்பரேட்களுக்கே உதவியது!' - நீக்கப்பட்ட ஒப்பந்த பண்ணை தொழில் சட்டம்; விவசாயிகள் மகிழ்ச்சி

இப்போராட்டத்தை நேர்மையான வழியில் முடிவுக்குக் கொண்டு வர ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்த மறுக்கிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களையும் எந்தவித நிபந்தனையும் சமரசமும் இல்லாமல், முழுமையாக வாபஸ் வாங்கும் வரை, விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். இதில் விவசாயிகள் மிகுந்த உறுதியுடன் இருக்கிறோம். இச்சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த ஒரு சிறு நன்மையும் கிடைக்காது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரியும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு